07) “ஷாத்” வகை ஹதீஸ்கள் பற்றிய தெளிவு
7) “ஷாத்” வகை ஹதீஸ்கள் பற்றிய தெளிவு
பலவீனமான ஹதீஸ்களின் வகைகளில் ஒன்றாக கருதப்படும் “ஷாத்” வகை தொடர்பில் நாம் மிகவும் தெளிவாக இங்கு அறிந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். அல்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது அவை மறுக்கப்பட வேண்டியவை என்று நாம் கூறும் போது, நம்மைப் பார்த்து வழிகேடர்கள் முஃதஸிலாக்கள் என்றெல்லாம் விமர்சனம் செய்பவர்கள் ஹதீஸ் கலையில் “ஷாத்” என்று கூறி ஹதீஸ்களை மறுப்பதை மாத்திரம் ஏற்றுக் கொள்கின்றார்கள்.
புனித குர்ஆனுக்கு மாற்றமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசமாட்டார்கள் என்ற விதியை தவறு என்று வாதிடுபவர்கள் “ஷாத்” என்ற விதியை மாத்திரம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்பதுதான் நமது கேள்வியாகும். இந்தக் கேள்வியை இன்னும் தெளிவாக அறிந்து கொள்வதற்காக முதலில் ஹதீஸ் கலையில் “ஷாத்” என்றால் என்னவென்பதை நாம் இங்கு அறிந்து கொள்வது முக்கியமானதாகும்.
ஷாத் என்பது பலவீனமான ஹதீஸ்களின் வகைகளில் ஒன்றாகும். அரிதானது என்பது இதன் பொருள். ஒரு ஆசிரியரிடம் பல மாணவர்கள் ஒரு ஹதீஸைச் செவியுறுகின்றனர். பத்து மாணவர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தப் பத்து பேரும் தாம் கேட்ட ஹதீஸைப் பலருக்கும் அறிவிக்கன்றார்கள். ஒன்பது பேர் அறிவிப்பது ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் ஒருவர் அறிவிப்பது மட்டும் ஒன்பது பேர் அறிவிப்பதற்கு முரணாகவுள்ளது.
இப்படி அமைந்த அறிவிப்பைத் தான் ஷாத் என்று கூறுவர். தொழுகையில் நான்கு தடவை நபி (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தினார்கள் என்ற ஹதீஸை எடுத்துக் கொள்வோம். இப்னு உமர் (ரலி) மூலம் ஸாலிம், நாஃபிவு, முஹாரிப் ஆகியோர் அறிவித்துள்ளனர். அதே இப்னு உமர் (ரலி) மூலம் முஜாஹித் அறிவிக்கும் போது முதல் தக்பீரில் தவிர கைகளை உயர்த்தவில்லை என்கிறார். நால்வருமே நம்பகமானவர்கள் தான்.
ஆனாலும் மூவருக்கு மாற்றமாக ஒருவர் அறிவிக்கும் போது அது “ஷாத்” எனும் நிலையை அடைகிறது. இங்கே இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று நேர் முரணானவையாக உள்ளன. இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும்? மூன்று பேர் தவறுதலாக கூறுவதை விட ஒருவர் தவறாகக் கூறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே மூவர் கூறுவதை ஏற்றுக் கொண்டு ஒருவர் கூறுவதை விட்டு விட வேண்டும். நபித்தோழரிடம் கேட்டவர்களுக்கிடையே தான் இந்த நிலை ஏற்படும் என்று கருதக் கூடாது. அறிவிப்பாளர் வரிசையில் எந்த இடத்திலும் இந்த நிலை ஏற்படும்.
உதாரணமாக குதைபா என்ற அறிவிப்பாளரை எடுத்துக் கொள்வோம். இவரிடம் ஏராளமானவர்கள் ஹதீஸ்களைக் கற்றுள்ளனர். புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவுத்,நஸயீ, மூஸா பின் ஹாரூன், ஹஸன் பின் சுஃப்யான் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். எல்லோரும் அறிவிப்பதற்கு மாற்றமாக நஸயீ மட்டும் வேறு விதமாக அறிவித்தால் அதுவும் ஷாத் என்ற வகையில் சேரும்.
ஷாத் என்பது ஹதீஸின் வாசகத்திலும் ஏற்படலாம். அறிவிப்பாளர் பெயரைப் பயன்படுத்துவதிலும் ஏற்படலாம். ஒரு ஹதீஸை ஒரு ஆசிரியர் வழியாக நான்கு பேர் அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளர் பெயர் இஸ்மாயீல் பின் முஹம்மத் என்று மூன்று பேர் குறிப்பிடுகின்றனர். ஒருவர் மட்டும் இஸ்மாயீல் பின் மூஸா என்று குறிப்பிடுகின்றார். ஒரே ஆசிரியரிடம் இருந்து அறிவிக்கும் இந்த பெயர்ப் பட்டியலில் மூவர் குறிப்பிட்ட பெயருக்கு மாற்றமாக ஒருவர் குறிப்பிடுவதால் இதுவும் ஷாத் என்ற வகையைச் சேர்ந்தது தான். மூவர் குறிப்பிடக்கூடிய பெயர் தான் சரியானதாக இருப்பதற்கு அதிகச் சாத்தியம் உள்ளது.
அதாவது மூன்றாவது அறிவிப்பாளராகக் குறிப்பிட்ட இஸ்மாயீல் பின் முஹம்மத் பலவீனமானவராக உள்ளார். ஆனால் இஸ்மாயீல் பின் மூஸா பலவீனமானவர் இல்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த இடத்தில் தான் அறிவிப்பாளர் வரிசையிலும் ஷாத் ஏற்படுத்தும் விளைவைப் புரிந்து கொள்ள இயலும். இஸ்மாயீல் பின் முஹம்மத் நம்பகமானவரா? இஸ்மாயீல் பின் மூஸா நம்பகமானவரா? என்பதை விட வேறொரு விஷயத்தைத் தான் நாம் கவனிக்க வேண்டும்.
அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பவரைத் தான் மூன்று பேர் கூறுகின்றனர். எனவே இவர்களின் ஆசிரியர் இந்தப் பெயரைத் தான் குறிப்பிட்டிருப்பார். இஸ்மாயீல் பின் மூஸா என்று ஒருவர் கூறுவதால் அந்த அறிவிப்பு ஷாத் என்ற நிலைக்கு வந்து விடும். இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பது தான் சரியானது என்று நாம் நினைக்கும் போது அந்த ஹதீஸ் பலவீனமானதாக ஆகி விடுகின்றது.
ஏனெனில் இஸ்மாயீல் பின் முஹம்மத் பலவீனமானவராக உள்ளார். அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்ற பெயரைக் குறிப்பிட்டது தான் சரி என்பது வேறு. பலவீனராக உள்ளதால் இந்த அறிவிப்பைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது வேறு. இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவிக்கும் ஐந்து பேரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக, முரணாக ஒருவர் அறிவிப்பது தான் ஷாத். நால்வர் கூறாத ஒரு விஷயத்தைச் சேர்த்துக் கூறினால் அது ஷாத் அல்ல. அதை நாம் ஏற்கலாம். ஏற்க வேண்டும்.
“முதல் ரக் அத்தில் இக்லாஸ் அத்தியாயம் ஓதினார்கள் என்று ஒரு ஆசிரியரின் நான்கு மாணவர்கள் கூறுகின்றனர். முதல் ரக்அத்தில் இக்லாசும், இரண்டாம் ரக்அத்தில் நாஸ் அத்தியாயமும் ஓதினார்கள்” என்று அதே ஆசிரியரின் ஒரு மாணவர் அறிவிக்கின்றார். இது ஷாத் எனும் வகையில் சேராது. ஏனெனில் நால்வர் கூறியதை இது மறுக்கவில்லை. மாறாக அதை ஒப்புக் கொள்வதுடன் மேலும் அதிகமான ஒரு செய்தியைக் கூறுகின்றது. இவரும் நம்பகமானவராக உள்ளதால் இந்த அறிவிப்பையும் நாம் ஏற்க வேண்டும். பல பேர் கூறாமல் விட்டு விட்டதை ஒரே ஒருவர் மட்டும் கூறுவது சர்வ சாதாரணமான நிகழ்வு தான். இது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விளக்கமாகும்.
ஒரு ஆசிரியர் வழியாக இல்லாமல் வெவ்வேறு ஆசிரியர் வழியாகப் பலரும் பலவிதமாக அறிவித்தால் ஷாத் என்ற பேச்சு அங்கே எழாது. நான்கு பேர் ஹன்னாத் வழியாக ஒரு செய்தியை அறிவிக்கின்றனர். ஆனால் குதைபா வழியாக அதற்கு மாற்றமாக ஒருவர் அறிவிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் ஒருவர் அறிவிப்பது தவறு. நால்வர் அறிவிப்பது சரி என்று கூற முடியாது. ஏனெனில் உண்மையில் இவர்கள் முரண்படவில்லை. இவர்கள் யாரிடம் செவியுற்றார்களோ அவரிடம் தான் முரண்பாடு உள்ளது.
இந்த ஒருவர் தனது ஆசிரியரிடம் தான் கேட்டதை அறிவிக்கின்றார். அந்த நால்வர் தங்களது ஆசிரியர்களிடம் கேட்டதை அறிவிக்கின்றார்கள். எனவே இதை ஷாத் என்று கூற முடியாது. முரண்பாடாகக் கூறிய இவர்களது இரு ஆசிரியர்களின் தகுதிகளையும் இன்ன பிற அம்சங்களையும் கவனத்தில் கொண்டு எது சரியானது? என்ற முடிவுக்கு வர வேண்டும். ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவிக்கும் போது பலர் ஒரு விதமாகவும். ஒருவர் அதற்கு முரணாகவும் அறிவித்து இருந்தால் அதை ஷாத் என்கிறோம்.
முரணாக ஒருவர் அறிவிப்பது ஷாத் என்றால் இதற்கு மாற்றமாகப் பலர் அறிவிப்பதற்கு தனிப் பெயர் உண்டா என்றால் உண்டு. இதை மஹ்பூள் என்று கூறுவார்கள். ஒரு ஹதீஸ் பற்றி மஹ்பூள் என்று கூறப்பட்டால் எதிராக ஷாத் எனும் அறிவிப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மஹ்பூள் என்பது ஆதாரமாகக் கொள்ளத் தக்கதாகும். இதுதான் “ஷாத்” வகை அறிவிப்பு பற்றிய விபரமாகும்.
இந்த வகை அறிவிப்புக்களில் ஒரு ஆசிரியரிடமிருந்து 04 மாணவர்கள் ஒரு செய்தியை கேட்கின்றார்கள், அதில் 03 பேர் ஒரு விதமாகவும் ஒருவர் மாத்திரம் அதற்கு மாற்றமாகவும் அறிவித்தால் அதனை எடுக்கக் கூடாது என்பது ஹதீஸ் கலை விதி. ஆனால் அந்த ஒருவர் அறிவித்தது பொய்யானது என்பற்காக குறித்த செய்தி மறுக்கப்படுவதில்லை. 03 பேர் சொல்வதற்கு மாற்றமாக சொல்கின்றார். ஒருவர் சொல்வதை விட 03 பேர் சொல்வது அதிகம் உறுதியானது என்ற 40 41 அடிப்படையில் தான் மறுக்கப்படுகின்றது.
ஆகவே குறித்த செய்தியில் பெரும்பான்மை கருத்திற் கொள்ளப்பட்டுத்தான் முடிவெடுக்கப்படுகின்றதே தவிர, அறிவிப்பாளர் தொடர் தவறு அல்லது பலவீனமான அறிவிப்பாளர் குறித்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் இருக்கின்றார் என்பதற்காகவெல்லாம் இது மறுக்கப்படவில்லை.
ஒரு செய்தியை அறிவிப்பவர்களில் 03 பேருக்கு மாற்றமாக ஒருவர் அறிவிக்கின்றார் என்பதற்காக பெரும்பான்மையைக் கருத்திற்கொண்டு ஒருவர் அறிவிக்கும் செய்தியை மறுக்க முடியும் என்றால், இதுதான் குர்ஆன் என்று பல்லாயிரம் நபித்தோழர்கள் அறிமுகப்படுத்தியதற்கு முரணாக ஓரிருவர் அறிவிப்பதை எப்படி ஏற்கமுடியும்? இது ஷாத் வகையை விட பல ஆயிரம் மடங்கு தரத்தில் குறைந்த்தில்லையா?
அல்லாஹ் கூறிய செய்திக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் கூறமாட்டார்கள் என்று குர்ஆனுக்கு முரணாக வரும் செய்திகளை நாம் மறுப்பதை எப்படி வழிகேடு என்று இவர்கள் கூற முடியும்? ஆகவே, ஹதீஸ் கலை அடிப்படையில் “அல்குர்ஆனுக்கு முரண்படும் செய்தியை மறுக்க வேண்டும்” என்ற அடிப்படையை விதியை இவர்கள் வீம்புக்கு மறுக்கின்றார்களே தவிர மார்க்க அடிப்பைடையில் மறுக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.