05) ஹதீஸ் கலையில் இல்லாத புது விதியை தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம் செய்கிறதா?

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

5) ஹதீஸ் கலையில் இல்லாத புது விதியை

தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம் செய்கிறதா?

அல்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்கள் தொடர்பான நமது நிலைபாட்டை நாம் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கின்ற போது, அதற்கு மாற்றுக் கருத்துக் கொண்டுள்ள உலமாக்கள் நமது வாதங்களுக்குரிய ஆதாரபூர்வமான பதில்களைத் தருவதை விடுத்து, அர்த்தமற்ற விமர்சனங்களையே முன்வைத்து வருகின்றார்கள். இவர்களின் விமர்சனங்களில் மிக முக்கியமானதொரு விமர்சனம் தான் முரண்படும் செய்திகள் பற்றிய ஹதீஸ் கலை விதி தொடர்பான விமர்சனமாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூறுவது போல் ஹதீஸ் கலையில் இப்படி ஒரு விதி இல்லை. இவர்கள் தான் புதிதாக இதைக் கூறுகிறார்கள் என்பது தான் இவர்களிடம் இருக்கும் ஒரே பதில். எனவே இது பற்றியும் நாம் விளக்க வேண்டியுள்ளது. நாம் கூறுவது போல் விதி உள்ளது. அதை எடுத்துக் காட்டுவதற்கு முன்னால் அதை விட முக்கியமான ஒரு விஷயத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

ஹதீஸ் கலை விதிகள் என்பது அல்லாஹ்வும், அவனது தூதரும் வகுத்துத் தந்தது அல்ல. மாறாக ஒரு செய்தியை ஏற்பதற்கு எத்தகைய வழிகளைக் கடைப் பிடிக்கலாம் என்று திருக்குர்ஆன் அடிப்படையிலும், ஹதீஸ்கள் அடிப்படையிலும், அறிவுப்பூர்வமான வாதங்களின் அடிப்படையிலும் அறிஞர்கள் ஆய்வு செய்து விதிகளை வகுத்தார்கள். அந்த விதிகள் அனைத்தும் ஒரே நாளில் வகுக்கப்பட்டவை அல்ல.

ஒரே நபராலும் வகுக்கப்பட்டவை அல்ல. அவ்வப்போது அறிஞர் ஒருவர் ஒரு விதியைக் கூறுவார். அது குறித்து வாதப்பிரதிவாதங்கள் நடக்கும். அந்த விதியை குர்ஆன் அடிப்படையிலோ, ஹதீஸ் அடிப்படையிலோ உடைக்க முடியாமல் இருந்தால் அது விதியாக ஆகிவிடும். யாராலும் உடைக்க முடியாத நிலையில் அது இருந்ததால் தான் அது விதியாக ஆனது. எத்தனையோ அறிஞர்கள் வகுத்த விதிகள் நிராகரிக்கப்பட்டு விட்டன. காரணம் அவை உடைக்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது தான்.

எனவே ஒரு வாதத்திற்கு ஹதீஸ் கலையில் இப்படி ஒரு விதி இல்லை என்று வைத்துக் கொண்டாலும் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு ஆண்டுகள் பலவாகியும் ஒருவருக்கும் பதில் சொல்ல முடியவில்லை என்றால் இதை ஹதீஸ் கலை விதியில் புதிதாகச் சேர்த்துக் கொள்ள வேண்டியது தானே? யாராலும் பதில் சொல்ல முடியாவிட்டால் அது சரியானதாக உள்ளது என்பது பொருள். அது சரியானது என்றால் அது புது விதியாக ஆவதற்கு என்ன தடை இருக்க முடியும்?

ஹதீஸ் கலையில் இப்போது உள்ள விதிகளில் நாம் ஏற்றுக் கொள்ளும் எந்த விதியாக இருந்தாலும் அதை உடைக்கும் வகையில் யார் கேள்வி கேட்டாலும் அதற்கு முன்னரே பதில் சொல்லப்பட்டிருக்கும். அல்லது நம்மால் அதற்குப் பதில் சொல்லும் வகையில் அறிவுப்பூர்வமாக அமைந்திருக்கும். அறிஞர்கள் கூறிய விதிகளில் எந்த விதிகளுக்கு எதிராகக் கேள்வி கேட்கப்படும் போது முன்பே பதில் சொல்லப்படாமல் உள்ளதோ, அல்லது அந்தக் கேள்விகளுக்கு இப்போது ஒருவராலும் பதில் சொல்ல முடியாமல் உள்ளதோ அது தவறான விதி என்று நிராகரித்து விட வேண்டும்.

ஆய்வு செய்து எடுக்கப்படும் சட்ட திட்டங்களை எவ்வாறு சிந்தித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமோ அது போல் ஹதீஸ் கலை விதியும் சிந்தித்து ஏற்றுக் கொள்ளப்படுபவை என்பதை உசூல் (?) பேசுவோர் உணரவில்லை. அது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டிய ஒன்று என நினைக்கின்றனர். (உசூல்) விதி உள்ளதா என்று இதனடிப்படையில் தான் கேட்கின்றனர். ஒரு வாதத்துக்கு இப்படி ஒரு விதி இது வரை கூறப்படாவிட்டால் கூட நாம் கூறுவது சரியானது என்றால் அது விதியாகக் கருதப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கத் தக்க பதிலைக் கூறி மறுக்க வேண்டும்.

அடுத்து இன்னொரு அடிப்படையையும் நாம் விளக்கியாக வேண்டும். ஹதீஸ்களாக இருந்தாலும் ஆய்வு செய்யத் தக்க வேறு எந்த நூலாக இருந்தாலும் அதில் பல துறையினருக்கு வேலை இருக்கும். ஒவ்வொரு துறையினரும் தத்தமது வட்டத்துக்குள் நின்று ஆய்வு மேற்கொள்வார்கள். உதாரணமாக ஒரு மனிதனின் உடல் நலம் குறித்து பல துறையினர் சோதனை மேற்கொள்வார்கள். பல் மருத்துவர் ஒரு மனிதனைத் தமது துறை தொடர்பான ஆய்வு செய்து இவருக்கு நோய் இல்லை என்று கூறினால் அவருக்கு எந்த நோயும் இல்லை என்று புரிந்து கொள்ள மாட்டோம். பல்லுடன் தொடர்புபட்ட நோய்கள் இல்லை என்றே முடிவு செய்வோம்.

இதய நோய் மருத்துவர் ஒரு மனிதனைப் பற்றி இவருக்கு நோய் இல்லை என்று கூறி விட்ட பிறகு அவருக்குப் புற்று நோய் இருக்கலாம். இதனால் அந்த மருத்துவர் சரியாகச் சோதிக்கவில்லை என்று யாரும் கருத மாட்டோம். இது போல் தான் ஹதீஸ்களிலும் பல துறையினருக்கு வேலை உண்டு. ஒரு இலக்கிய ஆர்வம் உள்ளவர் ஹதீஸில் ஆய்வு செய்தால் அவர் பார்வை இலக்கியம் குறித்ததாகத் தான் இருக்கும். ஆஹா அற்புதம் என்று இலக்கிய மேதை நற்சான்று அளிக்கும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டதாக இருக்கலாம். ஏனெனில் அவர் அறிவிப்பாளர் குறித்து ஆய்வு செய்ய மாட்டார்.

அது போல் தான் அறிவிப்பாளர் தொடர்பாக மட்டும் ஆய்வு செய்வதே ஹதீஸ் துறையினரின் ஒரே பணி. அவர்கள் ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்கள் குறித்து ஆய்வு செய்து பார்த்து விட்டு இது சரியான செய்தி என்று கூறினால் அதன் பொருள் என்ன? இதை அறிவிக்கும் ஆட்கள் குறித்து எங்களிடம் உள்ள தகவல்களை வைத்து ஆய்வு செய்ததில் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று தெரிகிறது என்பது தான் இதன் பொருள். இதன் கருத்து சரியானது என்பது அதன் பொருள் அல்ல. ஏனெனில் அவர்கள் கருத்தைக் குறித்து ஆய்வு செய்யவில்லை. அது அந்தத் துறையின் வரம்புக்குள் வரக் கூடியதுமல்ல.

சரியான ஹதீஸின் இலக்கணம் கூறும் போது அது குர்ஆனுக்கு முரணாக இருக்கக் கூடாது என்று இவர்கள் கூற மாட்டார்கள். அவர்களின் துறையுடன் இது தொடர்பற்றது. சட்ட வல்லுனர்கள் தான் கருத்துக்களில் கவனம் செலுத்தி மற்ற ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து கருத்து சரியானதா என்று தீர்மானிப்பவர்கள். குர்ஆனுக்கு முரணாக இருப்பவையும், நடைமுறை உண்மைக்கு முரணாக இருப்பவையும் அறிவிப்பாளர் சரியாக இருந்தாலும் அவை சரியான செய்தி அல்ல என்று இவர்கள் முடிவு செய்வார்கள்.

எனவே எந்த ஹதீஸாக இருந்தாலும் அது ஸஹீஹானது என்று ஹதீஸ் துறையினர் கூறினால் அறிவிப்பாளர்கள் சரியாக உள்ளனர் என்பதைத் தான் கூறுகிறார்கள். கருத்து சரியானது என்பதைக் கூறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை எதிர்ப்பவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கலாமா? என்று கேட்பதற்கு இது குறித்த அறியாமை தான் காரணமாக உள்ளது. இது தெளிவாக ஹதீஸ் துறை நூல்களில் தெளிவுபடுத்தப்பட்ட உண்மையாகும்.

சில அறிஞர்கள் ஒரு துறையில் சிறந்து விளங்கினால் மற்றும் சிலர் இன்னொரு துறையில் சிறந்து விளங்குவார்கள். ஆனால் சில அறிஞர்கள் இரு துறையிலும் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்கள் சரியான ஹதீஸுக்கு இலக்கணம் கூறும்போது இரண்டையும் இணைத்துக் கூறுவார்கள். அதாவது அறிவிப்பாளரும் சரியானவர்களாக இருக்க வேண்டும். கருத்தும் சரியாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் அது சரியான ஹதீஸ் என்று கூறுவார்கள்.