04) ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கிறோமா?

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

4) ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கிறோமா?

திருக்குர்ஆனும் நபிவழியுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள். இதை தக்க வாதங்களோடும் தெளிவான சான்றுகளோடும் எண்பதுகளிலிருந்து தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்து வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப் பிரச்சாரத்தால் அதிக அளவில் மக்கள் ஈர்க்கப்பட்டார்கள். விளைவு ஊருக்கு நாலைந்து பேர் என்ற நிலை மாறி சத்தியக் கொள்கையில் கூட்டம் கூட்டமாக மக்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

17:81 وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُ‌ؕ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا‏

“சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும்”

(அல்குர்ஆன்: 17:81)

என்ற  இறைவாக்கின் அடிப்படையில் அசத்தியவாதிகளின் கூடாரம் காலியாகத் துவங்கியது அவர்களுக்குக் கிலியை உண்டாக்கியது. சத்தியவாதிகளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த அவர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் பலனில்லை. நமது வாதங்களுக்குத் தக்க பதிலும் அசத்தியவாதிகளிடம் இல்லை.

ஆகவே தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும் சத்தியத்தை நோக்கிப் படை திரண்டு வரும் மக்கள் திரளைத் தடுத்து நிறுத்தவும் அவர்கள் பொய்ப் பிரச்சாரத்தைக் கையிலெடுக்கலானார்கள். தங்களிடம் பதில் இல்லை எனும் போது பொய்ப்பிரச்சாரத்தைக் கையிலெடுப்பது தான் நபிமார்கள் காலத்திலிருந்தே அசத்தியவாதிகளின் அணுகுமுறையாக இருந்தது. இறைத்தூதர்கள் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் வேளையில் அதற்குப் பதிலளிக்க இயலாத எதிரிகள் நபிமார்களை பைத்தியக்காரன், கவிஞன், சூனியக்காரன் என்று பொய் கூறியே மக்கள் கூட்டம் சத்தியத்தை ஏற்பதை விட்டும் தடுக்க எண்ணினார்கள்.

அல்லாஹ் அவர்களை மண்ணைக் கவ்வ வைத்தான் என்பது தனி விஷயம். அது போன்று தான் எதைச் சொன்னால் மக்கள் பாரதூரமாகக் கருதி நம்மை விட்டும் விலகுவார்களோ அது போன்ற பொய்யான, அவதூறான பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்ல ஆரம்பித்தார்கள். இவர்கள் நபி மீது ஸலவாத் சொல்ல மறுக்கிறார்கள். இவர்கள் அவ்லியாக்களை திட்டுகிறார்கள். இமாம்களை திட்டுகிறார்கள்.

என்றெல்லாம் பல்வேறு அவதூறுகளைக் கூறினார்கள். இவற்றில் எதுவுமே உண்மையல்ல. அனைத்துமே உண்மைக்கு புறம்பான, மக்களை நம்மை விட்டும் அப்புறப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுகள். மேற்சொல்லப்பட்டவற்றில் எந்த ஒன்றையாவது எந்தக் காலகட்டத்திலாவது நாம் சொல்லியிருக்கிறோமோ? என்றால் கிடையாது.

பாங்கு சொல்வதற்கு முன் ஸலவாத் ஓதும் நடைமுறை பரவலாகக் காணப்பட்டது. இது நபிவழிக்கு மாற்றமானது, பாங்கிற்குப் பிறகே ஸலவாத் ஓத வேண்டும்: அதுவே நபிவழி என்று மக்களிடம் நாம் சத்தியப்பிரச்சாரம் செய்ததை திரித்து நபி மீது ஸலவாத் ஓத மறுக்கிறார்கள் என்று கூறலானார்கள். இறந்த மனிதர்களை அவ்லியாக்கள் என்கிறீர்களே! அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு, குழந்தை தரும் ஆற்றல் உண்டு என்றெல்லாம் சொல்கிறீர்களே இது இணைவைப்பு அல்லவா? என்று பிரச்சாரம் செய்தோம்.

அது மட்டுமின்றி யானை, குரங்கு போன்றவற்றையும் கஞ்சா அடிப்பவர்களையும், பீடி குடிப்பவர்களையும் இறைநேசர் என்கிறீர்களே! இது முறையா என்று பிரச்சாரம் செய்தோம். இதைத்தான் திரித்து, மறைத்து “அவ்லியாக்களைத் திட்டுகிறார்கள்’ என்று மக்களிடம் கொண்டு சென்று மக்களை நம்மை விட்டும் தூரமாக்கும் இழிச்செயலைச் செய்தார்கள். அனைவரும் குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்றுங்கள்: இமாம்களையோ, ஸஹாபாக்களையோ பின்பற்றாதீர்கள் என்று கூறியதை இமாம்களையும், “ஸஹாபாக்களையும் திட்டுகிறார்கள்” என்று பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள்.

இப்படி சத்தியத்தை நோக்கி அலை அலையாய் ஆர்ப்பரித்து வரும் மக்கள் திரளைத் தடுத்து நிறுத்த எத்தனையோ பொய்ப்பிரச்சாரங்களைக் கையிலெடுத்தார்கள். அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அவர்களின் அனைத்து சதிகளையும் முறியடித்து இன்று மிகப் பெரும் வளர்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் 2022 அடைந்திருக்கின்றது. இறை உதவியோடு அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து இன்றைய வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நம்மிடம் இருக்கும் சத்தியமே என்பதில் துளியும் சந்தேகமில்லை. சத்தியத்திற்கு முன் அசத்தியவாதிகள் வாயடைத்து மௌனிகளாகி விடுவார்கள் என்பதே வரலாறு. அதற்கு இப்றாஹீம் நபியின் நிகழ்வு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

2:258 اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ‌ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُ‌ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْ

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்: மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்: மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 2:258)

ஸலஃபுக் கும்பலும் ஹதீஸ் மறுப்புக் கொள்கை குற்றச்சாட்டும்

நமது வாதங்களுக்குப் பதிலளிக்க இயலாத தரீக்காவாதிகள், மத்ஹபுவாதிகள் எடுத்த அதே பொய்ப்பிரச்சாரம் எனும் ஆயுதத்தை இன்று தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் அல்லது தவ்ஹீத் முகமூடி அணிந்துள்ள சிலர் கையிலெடுத்துள்ளார்கள்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ், சூனியம் போன்ற விவகாரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து வைக்கும் வாதங்களுக்குத் தகுந்த பதிலளிக்க இயலாத இந்த பலவீனர்கள் நம்மைப் பார்த்து, “இவர்கள் ஹதீஸை மறுப்பவர்கள்’ என்று ஓலமிடுகின்றார்கள். நவீன முஃதஸிலாக்கள், கவாரிஜ்கள், ஹதீஸ் மறுப்புக் கொள்கை கொண்டவர்கள் இதுவெல்லாம் மனோ இச்சைவாதிகள் நமக்குச் சூட்டியுள்ள அடைமொழிகள். இவர்களை மனோஇச்சைவாதிகள் என்று நாம் கூறுவதற்கு காரணம், எழுப்பப்படும் வாதங்களுக்குத் தகுந்த பதில் அளிக்காதவர்களை குர்ஆன் அவ்வாறு தான் வர்ணிக்கின்றது.

28:50  فَاِنْ لَّمْ يَسْتَجِيْبُوْا لَكَ فَاعْلَمْ اَنَّمَا يَـتَّبِعُوْنَ اَهْوَآءَهُمْ‌ ؕ وَمَنْ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوٰٮهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْ

அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழிகெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 28:50)

உண்மையில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஹதீஸ் மறுப்புக் கொள்கையைக் கொண்டவர்களா? இந்தக் கேள்விக்கான பதிலை தவ்ஹீத் வரலாற்றை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். குர்ஆனும் ஹதீஸும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை எந்த இயக்கமும் சொல்லாத அளவிற்கு தவ்ஹீத் ஜமாஅத் அழுத்தமாகச் சொல்லி வருகிறது.

22:40 اۨلَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ يَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ‌ ؕ

“எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்” (22:40) என்று அல்லாஹ் கூறியதற்கேற்ப குர்ஆனும் ஹதீஸும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்ற கொள்கையைப் பிரச்சாரம் செய்த காரணத்தாலேயே ஊர் நீக்கம், அடி உதை, அரிவாள் வெட்டு என பல துன்பங்களை தவ்ஹீத் ஜமாஅத் தன் பிரச்சாரப் பயணத்தின் துவக்கத்தில் சந்தித்துள்ளது.

பல பகுதிகளிலும் இந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த தவ்ஹீத் ஜமாஅத்தார்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இந்தக் கொள்கையில் இறந்து போனவர்களது உடல் மையவாடியில் அடக்கம் செய்ய மறுக்கப்பட்டது. மனோஇச்சைவாதிகள் கூறுவதைப் போன்று ஹதீஸ் மறுப்புக் கொள்கை என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக இருந்திருந்தால் ஹதீஸைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னதற்காக அவ்வளவு துன்பங்களையும் அடி உதைகளையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே! கொள்கையில் கொஞ்சம் வளைந்து கொடுத்திருந்தால் போதும் ஊர் ஜமாஅத்தார்கள் இந்த ஜமாஅத்திற்கு பட்டுக் கம்பளம் விரித்திருப்பார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் குர்ஆன், ஹதீஸ் தான் இஸ்லாம் என்பதை நெஞ்சு நிமிர்த்திப் பிர்ச்சாரம் செய்த, செய்து வருகின்ற அமைப்பு இந்த தவ்ஹீத் ஜமாஅத். குர்ஆன் மட்டும் போதும், நபிவழி தேவையில்லை என்று ஒருவன் சொன்னால் அவன் முஸ்லிமல்ல என்பதை ஆணித்தரமாக தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்து வருவது மட்டுமல்ல: அந்த வழிகெட்ட கொள்கையில் உள்ளவர்களோடு பல விவாதக் களங்களைச் சந்தித்துள்ளது. அவர்களுக்கு எதிராக நூல்களையும் எழுதி உள்ளது.

குர்ஆன் மட்டும் போதுமா என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள நூலைப் படிப்பவர்கள் இதனைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். இந்த ஜமாஅத் நபிமொழிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அறிய இந்த ஒரு நூல் மிகச்சிறந்த சான்று. குர்ஆனும் நபிமொழியும் முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கே. நபிமொழிகளில் ஒன்று சொல்லப்பட்டு விட்டால் அதை எப்பாடு பட்டாவது கடைபிடிக்க வேண்டும், எத்தகைய துன்பத்தைச் சந்தித்தாலும் மக்களிடையே அதை நிலைநாட்ட வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டு செயல்படும் அமைப்பு இது.

தொழுகையில் விரலசைத்தல்

அதற்கு ஒரு சிறிய உதாரணம் தான் தொழுகையில் விரலசைப்பது. தொழுகையில் கையை நெஞ்சின் மீது கட்ட வேண்டும், அத்தஹிய்யாத்தின் போது விரலை அசைக்க வேண்டும் என்பது நபிமொழி தான். இந்த நபிமொழிகளை அறிந்திராத காலகட்டத்தில் முஸ்லிம்கள் அனைவரும் இந்த நபிமொழிகளுக்கு மாற்றமாகவே தங்கள் தொழுகை முறையை அமைத்திருந்தார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் இந்த நபிமொழிகளை அறிந்ததும் அதை அமுலுக்குக் கொண்டு வந்தது. விளைவு ஊர் முழுவதிலும் எதிர்ப்பலைகள். நபிமொழிகளைப் பின்பற்றி நெஞ்சின் மீது கை கட்டி தொழுபவர்கள் அடிக்கப்பட்டார்கள். விரல் அசைப்பவர்களது விரல்கள் தொழுகையிலேயே ஒடிக்கப்பட்டன. தொழுது கொண்டிருக்கும் போதே செங்குத்தாக தூக்கி ஹவ்ஸில் (ஒழு செய்யுமிடத்தில்) தூக்கி போடப்பட்டனர்.

விரலை அசைத்துத் தொழுபவர்களுக்கு பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று அடித்து விரட்டப்பட்டனர். நபிவழி அடிப்படையில் இறைவனை வணங்குவதற்குப் பள்ளியில்லாமல் அலைக்கழிக்கப்பட்டனர். ஹதீஸ் மறுப்பை கொள்கையாகக் கொண்டிருந்தால், அஹ்மதில் இடம்பெறும் விரலசைத்தல் ஹதீஸை அமுல்படுத்துவதற்கு இத்துனை துன்பங்களை ஏன் அனுபவிக்க வேண்டும்?

ஒன்று நபிமொழி என்று உறுதியாகி விட்டால் அது எந்த நூலில் இருந்தாலும் அதை அமுல்படுத்த இந்த ஜமாஅத் தயங்காது. அதற்காக வரும் பிரச்சனைகளைக் கண்டு அஞ்சாது என்பதே வரலாற்று உண்மை. இத்தகைய ஜமாஅத் ஹதீஸ் மறுப்புக் கொள்கையைக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டுவது எத்தகைய கடைந்தெடுத்த பொய்யாக இருக்க வேண்டும்?

எளிய திருமணம்

இன்றைக்கு தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி, அது சொல்லும் சத்தியத்திற்காக பெருந்திரளான மக்கள் படையெடுத்து வந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் குர்ஆன் ஹதீஸிற்கு உட்பட்ட சில நிலைப்பாடுகளால் இன்னும் பல மக்கள் ஆதரவை இந்த ஜமாஅத் இழக்கவே செய்கிறது. அது போன்ற நிலைகளை இந்த ஜமாஅத் தளர்த்தினால் இன்னும் அதிக மக்களை வென்றெடுக்க முடியும்.

உதாரணத்திற்கு, திருமணத்தை ஆடம்பரமின்றி எளிமையான முறையில் நடத்த வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது. பெரியளவில் விருந்து வைத்து மண்டபங்களில் திருமணத்தை நடத்தினால் கூட அது ஆடம்பரமாக ஆகும் என்று ஜமாஅத் பிரச்சாரம் செய்கிறது. அந்த திருமணங்களைத் தவிர்க்கின்றது. இது மனோஇச்சை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவல்ல. நபிமொழியே இத்தகைய நிலைப்பாட்டை எடுக்க எங்களைத் தூண்டியது.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது

(அஹ்மத்: 24529)

இந்த நபிமொழி அடிப்படையிலும், நம் சமுதாயம் திருமணத்திற்காக பணத்தை வாரி இறைத்து விரையம் செய்வதைக் கவனத்தில் கொண்டும் எளிமையான முறையில் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மண்டபம், பெரிய அளவில் விருந்தளித்தல் ஹராமல்ல என்றாலும் மேற்கண்ட நபிமொழி அடிப்படையிலும் சமூக நிர்ப்பந்தத்தைத் தவிர்க்கும் வகையிலும் திருமணத்தை எளிமைப்படுத்துவதே சிறந்தது என்பதே ஜமாஅத்தின் நிலை.

இதனடிப்படையில் மண்டபம், பெரிய அளவிலான விருந்து போன்றவற்றை இந்த ஜமாஅத் தவிர்க்கும் போது அதற்காகவே சில மக்கள் இந்த ஜமாஅத்திற்கு வராமல் இருக்கிறார்கள். அல்லது ஜமாஅத்தில் இருக்கிற சில நபர்களும் திருமண விவகாரம் வரும் போது ஜமாஅத்திலிருந்து விலகி விடுகிறார்கள். இப்படி ஒரு வகையினரை திருமண நிலைப்பாட்டால் இந்த ஜமாஅத் இழக்கவே நேரிடுகிறது. எனினும் இந்த ஜமாஅத் இந்த நிலைப்பாட்டைத் தொடர்வதற்கு மேற்கண்ட நபிமொழியே காரணம். இதை குறிப்பிடுவதற்குக் காரணம், ஹதீஸை மறுப்பவர்களது செயல்பாடுகள் இப்படி இருக்குமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மக்கள் ஆதரவை இழந்தாலும் பரவாயில்லை நபிமொழி என்ன சொல்கிறதோ அதைச் செய்வோம் என்ற நிலைப்பாட்டில் தான் ஹதீஸை மறுப்பவர்கள் இருப்பார்களா? உண்மையில் ஹதீஸ் மறுப்புக் கொள்கை ஜமாஅத்தின் கொள்கையாக இருந்தால் இந்த ஹதீஸை அல்லவா மறுத்திருக்க வேண்டும். பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று இதை மறுத்து மக்கள் ஆதரவைத் திரட்டி இயக்கத்தின் மக்கள் சக்தியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.

சொல்லப்போனால் எதிர்க்கூடாரத்தில் இருந்த சில சாப்பாட்டுப் பிரியர்கள் இந்த ஹதீஸை பலவீனம் என்று கூக்குரலிட்ட போதும் அது தவறு, இந்த ஹதீஸ் சரியானதே என்று ஆய்வு செய்து மறுப்புக் கட்டுரை வெளியிட்டது இந்த ஜமாஅத். மக்கள் கூட்டம் எங்களுக்கு முக்கியமில்லை. நபிமொழியைப் பின்பற்றுவதே முக்கியம் என்பதை கொள்கையாகக் கொண்டது இந்த ஜமாஅத் என்பதற்கு இது ஓர் சான்று.

இது போன்று திடல் தொழுகை, ஸஹர் பாங்கு, ஜனாஸா தொழுகையை குடும்பத்தார் தொழுவிப்பது போன்ற எண்ணற்ற நபிமொழிகளை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து அதை உயிர்ப்பிக்கும் விதமாக நடைமுறைக்கு கொண்டு வந்ததால் பல எதிர்ப்பலைகளையும் விமர்சனங்களையும் இந்த ஜமாஅத் சந்தித்துள்ளது.

இத்தகைய ஜமாஅத்தை நோக்கி ஹதீஸை மறுப்பவர்கள் என்று கூறும் குற்றச்சாட்டு உண்மையா? என்பதை சிந்தனையுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். குர்ஆன் மட்டும் போதும் என்று ஒரு கூட்டம் கொக்கரித்த போது அமைதி காத்து தங்கள் நபிமொழிப் பற்றை வெளிப்படுத்திய ஹதீஸ் காப்பாளார்கள் (?) நம்மைப் பார்த்து ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் என்று விமர்சிப்பது சந்தேகமற வியப்பின் சரித்திரக் குறியீடே!

நாங்கள் சொல்வது என்ன?

குர்ஆனும் நபிவழியும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்றாலும் பாதுகாக்கப்படும் முறைகளில் இரண்டும் சமமானவை அல்ல. இது குறித்து பி.ஜே அவர்கள் திருக்குர்ஆன் தர்ஜூமாவில் எழுதிய சிறு விளக்கத்தை இங்கே அறியத்தருகிறோம் நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. குர்ஆனைப் பொறுத்த வரை அனைத்து நபித்தோழர்களும் அது இறைவேதம் என்பதற்கு சாட்சிகளாக உள்ளனர்.

குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி “இது என் இறைவனிடமிருந்து வந்தது” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழார்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர். ஹதீஸ்களைப் பொறுத்த வரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார். ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும் ஒருவரே சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது. எவ்வளவு தான் நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) இப்படிச் சொல்லியிருப்பார்களா என்ற கடுகளவு கூட குர்ஆன் விசயத்தில் சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொறுத்த வரை இந்த நிலை கிடையாது. ஆனாலும் நபித் தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை. குர்ஆனுடன் மோதும் போது “இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது” என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பது தான் முறையாகும்.

“ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை: திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது: இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது” என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பது தான் நேர்மையான பார்வையாகும்.

இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டு விட வேண்டும். இத்தகைய ஹதீஸ்கள் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான். இது தான் திருக்குர்ஆன் தர்ஜூமாவில் இடம்பெற்றுள்ள அந்த விளக்கம். எந்த வகையிலும் இணைத்து விளக்கம் அளிக்க முடியாதபடி குர்ஆனுக்கு முரண்பட்டால் குர்ஆனுக்கு முன்னுரிமை அளித்து முரண்படும் செய்திகளை இது நபிமொழியே அல்ல என்று நிராகரித்து விட வேண்டும் என்று கூறுகிறோம்.

ஒரு செய்தி குர்ஆனுடன் தெளிவாக மோதும் போது இது குர்ஆனுடன் மோதுகிறது: எனவே நபிகள் நாயகம் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்று கூறி மறுப்பது ஹதீஸை மறுப்பதாகுமா? இது ஹதீஸ் மறுப்புக் கொள்கையா? அப்படியெனில் நபிகள் நாயகம் கூறியதாக உமர், இப்னு உமர், அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கும் செய்திகளை குர்ஆனுக்கு மாற்றமாக நபிகள் நாயகம் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அன்னை ஆயிஷா (ரலி) மறுத்தார்களே? அன்னை ஆயிஷா அவர்களும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் தான் இருக்கிறார்களா?

(முஸ்லிம்: 1694, 1697, 1693),(அஹ்மத்: 24115, 24894)

இது போன்று ஃபாத்திமா பின் கைஸ் (ரலி) என்ற பெண்மணி நபிகள் நாயகம் கூறியதாக ஒரு செய்தியைக் கூறியதை உமர் (ரலி) அறிந்த போது, குர்ஆனுக்கு மாற்றமாக நபியவர்கள் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்று மறுத்தார்களே, உமர் (ரலி) அவர்களும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் தான் இருந்தார்களா?

(முஸ்லிம்: 2963)

இன்னும் பல அறிஞர்கள் இந்த வழிமுறையைக் கடைபிடித்தார்களே! அவர்கள் அனைவரும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் தான் இருந்தார்களா? என்பதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டும். குர்ஆனுக்கு இந்தச் செய்தி முரண்படுகிறது: எனவே நபிகள் நாயகம் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் சில செய்திகளை மறுத்தால் அது எப்படி ஹதீஸ் நிராகரிப்புக் கொள்கையாகும்?

ஹதீஸில் பலவீனமானது, இட்டுக்கட்டப்பட்டது, ஷாத் வகையைச் சார்ந்தது என்று பல வகைகள் உள்ளதும் அவை அனைத்தும் மறுக்கப்பட வேண்டியது என்பதும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. இந்த வகை ஹதீஸ்களை எதிர்த்தரப்பாளர்களும் மறுக்கத்தான் செய்கிறார்கள். எனவே அவர்களும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் தான் உள்ளார்களா?

இத்தனைக்கும் ஷாத் வகை ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் சரியானதாக இருந்தும் அதை மறுக்கத்தான் செய்கிறார்கள். இதனால் ஹதீஸ் கலை அறிஞர்களோ இவர்களோ ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் இருக்கிறார்கள் என்றாகிவிடுமா? குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற அடிப்படையில் இது பொய், நபிகள் நாயகம் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்று மறுப்பது ஒரு போதும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையாகாது. எனவே சத்தியத்தை அழிக்க எத்துனை பொய்ப்பிரச்சாரங்கள் செய்யப்பட்டாலும் சத்தியத்திற்கு முன் அவை ஒரு போதும் நிலைத்து நிற்காது. சத்தியம் எடுத்துரைக்கப்படும் போது அசத்தியம் தகர்ந்து, தரைமட்டமாகிப் போகும்.

21:18 بَلْ نَـقْذِفُ بِالْحَـقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ‌

உண்மையை பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.

(அல்குர்ஆன்: 21:18)