01) முன்னுரை

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

1) முன்னுரை

உலக மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் வழங்கப்பட்ட புனித இஸ்லாம் மார்க்கம் இன்று உலகின் பல பாகங்களிலும் வியாபித்து வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். இதற்குக் காரணம் இஸ்லாத்தின் வேதமாகிய திருமறைக் குர்ஆனும், அதன் விளக்கவுரையாக வாழ்ந்து காட்டிய நபி (ஸல்) அவர்களின் கருத்துக்களும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் தாக்கமாகும். எந்தவொரு முரண்பாடும் அற்ற வேதத்தைத் தந்த இறைவன் அதனை விளக்குவதற்காக தேர்ந்தெடுத்த நபி (ஸல்) அவர்களையும் முரண்பாடுகள் அற்ற தூய செய்தியைக் கூறக் கூடியவராகவே தேர்ந்தெடுத்தான்.

53:2  مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰى‌ۚ

53:3  وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰىؕ

53:4  اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰىۙ‏

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை. அவர் மனோஇச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 53:1-3) 

நபி (ஸல்) அவர்கள் மார்க்கமாக எதனைப் பேசினாலும் அது இறைவன் தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் வஹீ – இறைச் செய்தியாகத் தான் இருக்குமே தவிர, அவர்கள் மனோஇச்சைப்படி பேசியதாக இருக்காது என்பதற்கு
மேற்கண்ட திருமறைக் குர்ஆன் வசனம் ஆதாரமாகத் திகழ்கின்றது. முரண்பாடுகள் அற்ற இத்தகைய தெளிவான வழிகாட்டலை இவ்வுலகுக்கு வழங்கிச் சென்ற நபியவர்களின் பெயரால் அல்குர்ஆனுக்கு மாற்றமான கருத்துக்கள் “ஹதீஸ்கள்” என்ற பெயரில் நுழைவிக்கப்பட்டிருக்கின்றன.

அத்தகைய “அல்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள்” தொடர்பாகவே “வஹியில் முரண்பாடா?” என்ற இந்நூல் ஆராய்கின்றது. அல்குர்ஆனுக்கு முரணான செய்திகள் இஸ்லாமிய மார்க்கத்தின் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்ற விதிக்கிணங்க இது போன்ற நிலையில் இருக்கும் செய்திகளை மறுத்து ஒதுக்கிவிட வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்து வருகின்றது. இந்தப் பிரச்சாரத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வரும் சிலர்,

“தவ்ஹீத் ஜமாஅத் முஃதஸிலாக்களின் வழியில் பயணிக்கின்றது என்றும், குர்ஆன் மட்டும் போதும் என்ற அஹ்லுல் குர்ஆன் சிந்தனையை தவ்ஹீத் ஜமாஅத் விதைக்கின்றது என்றும், இவர்கள் சொல்லும் இந்த விதி ஹதீஸ் கலையில் இல்லை, இவர்கள் தான் புதிதாக இதனைக் கூறுகின்றார்கள்,  என்றும் பல விதமான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றார்கள்.

யார் எந்தக் கருத்தை இஸ்லாத்தின் பெயரால் கூறினாலும் அது அல்குர்ஆன், மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு உடன்படுகின்றதா? என்பதைத் தான் பார்க்க வேண்டுமே தவிர எங்கள் மனது இதனை ஏற்றுக் கொள்ளவில்லை, காலா காலமாக நாங்கள் இதனைத் தான் நம்பி வருகின்றோம். ஆகவே இதனை மாற்றிக் கொள்ள முடியாது என்று மனமுரண்டு பிடிப்பது ஒரு முஃமினின் பண்பாக இருக்க முடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

“அல்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது” என்ற விதிப் பிரகாரம் புனித அல்குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக நபியவர்களின் பெயரால் இட்டுக் கட்டப்பட்டுள்ள செய்திகளையும் அது பற்றிய விளக்கங்களையும் அடக்கியதாகவே இந்நூல் அமையப் பெற்றிருக்கின்றது. அல்குர்ஆனையும், அல்குர்ஆனுக்கு முரணில்லாத ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மாத்திரம் பின்பற்றி வாழ்ந்து இம்மை, மறுமை வாழ்வில் வெற்றியடைவோமாக!

அன்புடன்

F.M ரஸ்மின் Misc