89) யாருக்கும் எந்த ஆற்றலும் கிடையாது என்பதால்..
89) யாருக்கும் எந்த ஆற்றலும் கிடையாது என்பதால்
இணை கற்பிக்க நியாயம் இல்லை
மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ் என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்? என்று நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்;அறிந்தவன்.
உங்கள் செவிப் புலனையும், பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு, உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத (வேறு) கடவுள் யாரேனும் உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! எனக் கேட்பீராக! சான்றுகளை எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும், பின்னர் அவர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக
எங்களுக்கு நன்மையும், தீங்கும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போமா? அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் வந்த வழியே திருப்பப்படுவோமா? (அவ்வாறு திரும்பினால்) எங்களிடம் வந்து விடு என நேர் வழிக்கு அழைக்கும் நண்பர்கள் இருந்தும், பூமியில் ஷைத்தான்கள் வழி கெடுத்து குழப்பத்தில் தள்ளி விட்டவனைப் போல் ஆகி விடுவோம் எனக் கூறுவீராக! அல்லாஹ்வின் வழியே நேர் வழி. அகிலத்தின் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளோம் என்றும் கூறுவீராக!
அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்?அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும்,மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக! இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான் (என்றும் கூறுவீராக!) அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!
அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.
வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்? என்று (முஹம்மதே!) கேட்டு,அல்லாஹ் என்று கூறுவீராக! அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள் என்று கூறுவீராக! குருடனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா?இருள்களும், ஒளியும் சமமாகுமா? என்று கேட்பீராக! அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்து விட்டார்களா? அவர்கள் அல்லாஹ் படைத்ததைப் போல் படைத்து, அதன் காரணமாக படைத்தது யார்? என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன் என்று கூறுவீராக!
வானங்களிலும், பூமியிலும் இவர்களுக்கான உணவில் சிறிதளவும் கைவசம் வைத்திராதவர்களையும், சக்தியற்றோரையும் அவர்கள் அல்லாஹ்வையன்றி வணங்குகின்றனர்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது என்று கூறுவீராக! இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.
இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார். என் தந்தையே! செவியுறாத, பார்க்காத,உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்? என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
இரவிலும், பகலிலும் அளவற்ற அருளாளனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்? என்று கேட்பீராக! எனினும் அவர்கள் தமது இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கின்றனர். நம்மை விட்டும் அவர்களைக் காப்பாற்றும் கடவுள்கள் அவர்களுக்கு உள்ளனரா? அவர்கள் தமக்கே உதவிட இயலாது. அவர்கள் நம்மிடமிருந்து காக்கப்படவும் மாட்டார்கள்.
விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால் தலை கீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நஷ்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நஷ்டம். அல்லாஹ்வையன்றி தனக்குத் தீங்கிழைக்காததையும், பயன் தராததையும் பிரார்த்திக்கிறான். இதுவே தூரமான வழி கேடாகும்
அவனையன்றி கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். தமக்கே தீங்கும், நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது. வாழ்வதற்கோ, மரணிப்பதற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை.
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏக இறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்.
அவர்களிடம் இப்ராஹீமின் வரலாறைக் கூறுவீராக! எதை வணங்குகிறீர்கள்? என்று தமது தந்தையிடமும், தமது சமுதாயத்தினரிடமும் அவர் கேட்ட போது நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் உறுதியாக இருக்கிறோம் என்றனர். நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா? என்று அவர் கேட்டார்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். இவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லை என்று கூறுவீராக! யாருக்கு அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது. முடிவில் அவர்களின் உள்ளங்களிலிருந்து நடுக்கம் நீங்கியதும் உங்கள் இறைவன் என்ன கூறினான்? எனக் கேட்டுக் கொள்வார்கள். உண்மையையே (கூறினான்.) அவன் உயர்ந்தவன்; பெரியவன் என்று கூறுவார்கள்.
அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும்,சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!
அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும்,விளங்காதும் இருந்தாலுமா? என்று கேட்பீராக! பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும்,நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக!