85) இணை கற்பிக்கப்பட்டவர்கள் கற்பித்தவர்களைக் கை கழுவுவார்கள்
86) இணை கற்பிக்கப்பட்டவர்கள் கற்பித்தவர்களைக் கை கழுவுவார்கள்
உங்களுக்கு நாம் வழங்கியவற்றையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் விட்டு விட்டு உங்களை ஆரம்பத்தில் நாம் படைத்தது போல் தன்னந்தனியாக நம்மிடம் வந்து விட்டீர்கள்! தெய்வங்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்த, உங்கள் பரிந்துரையாளர்களை நாம் உங்களுடன் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்) முறிந்து விட்டன. நீங்கள் கற்பனை செய்தவை உங்களை விட்டும் மறைந்து விட்டன (என்று கூறப்படும்.)
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே? என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள். அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர் என அவர்கள் கூறுவார்கள். நாங்கள் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.
அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தவர்களை நோக்கி நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்! என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். நீங்கள் எங்களை வணங்கவே இல்லை என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள்.
பின்னர் கியாமத் நாளில் அவர்களை இழிவுபடுத்துவான். நீங்கள் எனக்கு இணையாகக் கருதி தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே? என்று அவன் கேட்பான். இன்றைய தினம் இழிவும், கேடும் (ஏக இறைவனை) மறுப்போர்க்கே என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறுவார்கள்.
எனக்கு இணையாகக் கருதப்பட்டோரை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறும் நாளில் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலேதும் கூற மாட்டார்கள். அவர்களுக்கிடையே அழிவிடத்தை ஏற்படுத்துவோம்.
தங்களுக்கு உதவுவார்கள் என அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவ்வாறு இல்லை. தங்களை இவர்கள் வணங்கியதை அவர்கள் மறுத்து இவர்களுக்கு எதிராவார்கள்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே? அவர்கள் உங்களுக்கு உதவுவார்களா? அல்லது தமக்குத் தாமே உதவிக் கொள்வார்களா? என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்களும், வழி கெட்டவர்களும், இப்லீஸின் படையினர் அனைவரும் அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள்.
அவன், அவர்களை அழைக்கும் நாளில் எனக்கு இணையாக நீங்கள் கருதியோர் எங்கே? என்று கேட்பான். எங்கள் இறைவா! இவர்களையே வழி கெடுத்தோம். நாங்கள் வழி கெட்டது போலவே அவர்களையும் வழி கெடுத்தோம். அதிலிருந்து விலகி உன்னை நோக்கித் திரும்புகிறோம். அவர்கள் எங்களை வணங்கவில்லை என்று யாருக்கு எதிராக வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள் கூறுவார்கள்
அவர்களை அவன் அழைக்கும் நாளில் எனக்கு இணையாக நீங்கள் கருதியோர் எங்கே? என்று கேட்பான்.
இவ்வுலக வாழ்வில் உங்களுக்கிடையே உள்ள நேசத்தின் காரணமாகவே அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். பின்னர் கியாமத் நாளில் உங்களில் ஒருவர் மற்றவரை மறுப்பார். உங்களில் ஒருவர் மற்றவரைச் சபிப்பார். உங்கள் தங்குமிடம் நரகமாகும். உங்களுக்கு உதவி செய்வோர் இல்லை.
அவர்களின் தெய்வங்களில் அவர்களுக்காகப் பரிந்து பேசுவோர் இருக்க மாட்டார்கள். அவர்கள் தம் தெய்வங்களையும் மறுப்பார்கள்.
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
அல்லாஹ்வையன்றி நீங்கள் இணை கற்பித்தவை எங்கே என்று பின்னர் அவர்களிடம் கேட்கப்படும். எங்களை விட்டும் மறைந்து விட்டன. இல்லை! இதற்கு முன் எதையும் நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கவில்லை என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வாறே (தன்னை) மறுப்போரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான்.
(உலகம் அழியும்) அந்த நேரம் பற்றிய அறிவு அவனிடமே திருப்பப்படும். அவனுக்குத் தெரியாமல் கிளைகளிலிருந்து கனிகள் வெளிப்படுவதோ, எந்தப் பெண்ணும் கர்ப்பமடைவதோ, பிரசவிப்பதோ இல்லை. எனக்கு இணையாகக் கருதப்பட்டோர் எங்கே? என்று அவர்களை அவன் அழைக்கும் நாளில் எங்களில் சாட்சி கூறுவோர் யாரும் இல்லை என்பதை உன்னிடம் ஒப்புக் கொள்கிறோம் என அவர்கள் கூறுவார்கள். இதற்கு முன் அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும். தமக்கு எந்தப் புகலிடமும் இல்லை என்று உறுதி கொள்வார்கள்.
கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.