82) அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது
83) அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும்,நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை என்று கூறுவீராக! கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன் எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!
வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும்,ப் இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.
மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால் (எனக்குக் கவலையில்லை.) அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவோரை வணங்க மாட்டேன். மாறாக உங்களைக் கைப்பற்றவுள்ள அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கை கொண்டவனாக இருக்கக் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! உண்மை வழியில் நின்று இம்மார்க்கத்தை நோக்கி உமது கவனத்தைத் திருப்புவீராக! இணை கற்பிப்பவராக ஆகி விடாதீர்! அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
(முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் உமக்கு அருளப்பட்டதில் மகிழ்ச்சியடைகின்றனர். அதில் சிலவற்றை மறுப்போரும் அக்கூட்டங்களில் உள்ளனர். அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். மீளுதலும் அவனிடமே உள்ளது என்று கூறுவீராக!
அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்ட பின்னர் அதை விட்டும் உம்மை (எதுவும்) தடுத்திட வேண்டாம்! உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்! அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும்,நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக!