72) மறைவானவை ஆதம் நபிக்குத் தெரியாது
72) மறைவானவை ஆதம் நபிக்குத் தெரியாது
அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும்,வசதியும் உள்ளன என்றும் கூறினோம்.
அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை என்று கூறினான்.
நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே என்று அவர்களிடம் சத்தியம் செய்தான். அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறியிருக்கவில்லையா எனக் கேட்டான்.
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.
இதற்கு முன் ஆதமிடம் உறுதி மொழி எடுத்தோம். அவர் மறந்து விட்டார். அவரிடம் உறுதியை நாம் காணவில்லை.
அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.) அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.