68) மறைவானவை அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்
68) மறைவானவை அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.
இவரது இறைவனிடமிருந்து இவருக்குச் சான்று அருளப்பட்டிருக்க வேண்டாமா? என்று அவர்கள் கேட்கின்றனர். மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. நீங்களும் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக!
(உலகம் அழியும்) அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
(உலகம் அழியும்) அந்த நேரம் எங்களிடம் வராது என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அவ்வாறல்ல! என் இறைவன் மீது ஆணையாக! அது உங்களிடம் வரும். அவன் மறைவானதை அறிபவன். வானங்களிலோ, பூமியிலோ அணுவளவோ, அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ அவனுக்குத் தெரியாமல் போகாது. தெளிவான பதிவேட்டில் அவை இல்லாமல் இல்லை என்று கூறுவீராக!