ஆண்கள் மருதானி இடலாமா?

கேள்வி-பதில்: பெண்கள்

ஆண்கள் மருதானி இடலாமா?

ஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைகளிலும் கால்களிலும் மருதாணி பூசிய ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் பெண்களுக்கு ஒப்ப நடந்ததால் அவரை நாடுகடத்துமாறு நபியவர்கள் உத்தரவிட்டதாகவும் இந்தச் செய்தி கூறுகின்றது.

இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள அபூஹாஷிம் மற்றும் அபூ யசார் ஆகிய இரண்டு அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையும் அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை. இதன் காரணத்தால் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

ஆண்கள் மருதாணி பூசலாம் என்றோ பூசக் கூடாது என்றோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் நேரடியாக்க் கூறப்படவில்லை. ஆனால் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வை பின்வரும் பொதுவான செய்தியிலிருந்து அறியலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள் .

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (5885)

ஆண்கள் பெண்களைப் போன்று நடந்து கொள்ளக் கூடாது என்று இந்தச் செய்தி கூறுகின்றது. பெண்கள் மட்டுமே பயன்படுத்துகின்ற பொருட்களை ஆண்கள் பயன்படுத்துவதை இச்செய்தி தடைசெய்கின்றது. பெண்கள் மட்டுமே பயன்படுத்துகின்ற பொருட்கள் நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒரு பகுதியில் பெண்கள் மட்டும் பயன்படுத்துகின்ற பொருள் மற்றொரு பகுதியில் ஆண் பெண் இருபாலருக்கும் உரிய பொருளாக இருக்கும்.

எனவே தான் மார்க்கம் இவ்விஷயத்தில் வரையறை செய்யாமல் அந்ததந்தப் பகுதி மக்களின் கலாச்சாரத்தைப் பொறுத்து முடிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. உதாரணமாக தலையில் பூ வைப்பது நமது நாட்டில் பெண்கள் மட்டும் செய்யும் காரியம். ஆண்கள் யாரும் இவ்வாறு செய்வதில்லை. இந்நிலையில் ஒரு ஆண் தலையில் பூ வைத்தால் மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் இது தவறான செயலாகிறது.

இதே போன்று நடைமுறையில் உள்ள மக்கள் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து ஆண்கள் மருதாணி பூசுவது குறித்தும் நாம் முடிவு செய்ய வேண்டும். மருதாணியைப் பொறுத்தவரை அது பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் அலங்காரப் பொருளாக இருந்து வருகின்றது. இப்பொருளை அதிகம் பயன்படுத்தக்கூடியவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் பெண்களே இதைக் கை கால்களில் பூசி பயன்படுத்தினர்.

சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் பனூ ஆமிர் பின் லுஅய்’ குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். -சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்- விடைபெறும் ஹஜ்ஜின் போது சஅத் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது சுபைஆ’ கர்ப்பமுற்றிருந்தார். சஅத் அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமான போது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக்’ (ரலி) அவர்கள் சுபைஆ அவர்களிடம் வந்து, “திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய இத்தா’ காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது” என்று கூறினார்கள். சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, நீ பிரசவித்து விட்ட போதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகி விட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்.

புகாரி (3991)

இந்தச் செய்தியில் சுபைஆ (ரலி) அவர்கள் அலங்காரம் செய்திருந்தார் என்று பொதுவாக்க் கூறப்பட்டுள்ளது. அவர்கள் எந்த அலங்காரம் செய்திருந்தார்கள் என்பதை அஹ்மதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. 26166, 26167 ஆகிய எண்களில் அஹ்மதில் பதிவாகியுள்ள அறிவிப்புகளில் சுபைஆ (ரலி) அவர்கள் கையில் மருதாணி பூசியிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. எனவே பெண்களின் அலங்காரப் பொருளாக உள்ள மருதாணியை ஆண்கள் பூசக்கூடாது.

அதே நேரத்தில் பித்த வெடிப்பு போன்ற காரணங்களுக்காக மருந்தாக அதைப் பூசிக் கொள்வதையும் நரை முடியின் நிறத்தை மாற்றிக் கொள்வதற்காக அதைப் பூசிக் கொள்வதையும் இது கட்டுப்படுத்தாது. ஏனெனில் இதில் பெண்களுக்கு ஒப்பாக நடக்கும் தன்மை ஏதும் இல்லை.