27) நபிமார்கள் கொல்லப்பட்டனர்
27) நபிமார்கள் கொல்லப்பட்டனர்
அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும்,நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக் கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.
மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள்.
அல்லாஹ் அருளியதை நம்புங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம் என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்? என்று (முஹம்மதே!) கேட்பீராக!
அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்து, நபிமார்களை நியாயமின்றி கொலை செய்து,நீதியை ஏவும் மக்களையும் கொலை செய்வோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக!
அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்த போதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் ஏற்க மறுத்ததும், நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததுமே இதற்குக் காரணம். மேலும் அவர்கள் பாவம் செய்ததும் வரம்பு மீறியதும் இதற்குக் காரணம்.
அல்லாஹ் தேவையுள்ளவன்; நாங்களோ தேவையற்றோர் என்று கூறியோரின் கூற்றை அல்லாஹ் செவியுற்று விட்டான். அவர்கள் கூறியதையும் நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவு செய்வோம். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! இது நீங்கள் செய்த வினை. அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன் எனவும் கூறுவோம்.
எங்களிடம் ஒரு காணிக்கையைக் கொண்டு வந்து அதை நெருப்பு சாப்பிடாத வரை எந்தத் தூதரையும் நாங்கள் நம்பக் கூடாது என அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான் என்று அவர்கள் கூறினர். எனக்கு முன்னால் பல தூதர்கள் தெளிவான சான்றுகளையும், நீங்கள் கேட்டதையும் கொண்டு வந்தனர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் ஏன் அவர்களைக் கொலை செய்தீர்கள்? என்று (முஹம்மதே!) கேட்பீராக!
அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும், எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்று கூறியதாலும், (இதற்கும்) மேலாக அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும் அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.
இஸ்ராயீலின் மக்களிடம் உறுதி மொழி எடுத்தோம். அவர்களிடம் தூதர்களையும் அனுப்பினோம். அவர்கள் விரும்பாததைத் தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம் சிலரைப் பொய்யர் என்றனர். மற்றும் சிலரைக் கொன்றனர்.