23) நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர்
23) நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர்
ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர் என்று நாம் கூறினோம்.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள்! இந்த மரத்தை நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள் (என்றும் கூறினான்)
எனவே அவரது (லூத்) மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும், அவரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக இருந்தாள்.
அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன்,அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம் என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்.
நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக! என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.
லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக்கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா? என்றனர்.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
15:65 فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا يَلْـتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَيْثُ تُؤْمَرُوْنَ
(அதற்கவர்கள்) அவ்வாறில்லை! அவர்கள் சந்தேகம் எழுப்பியதை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்; உண்மையையே உம்மிடம் கொண்டு வந்தோம்; நாங்கள் உண்மை கூறுபவர்கள்; இரவின் ஒரு பகுதியில் உமது குடும்பத்தாருடன் செல்வீராக! அவர்களைப் பின் தொடர்ந்து (கடைசியில்) நீர் செல்வீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். கட்டளையிட்டவாறு செய்து முடியுங்கள்! என்று கூறினார்கள்.
அவர் தமது குடும்பத்தாருக்கு தொழுகையையும், ஸகாத்தையும் ஏவக் கூடியவராக இருந்தார். தமது இறைவனால் திருப்தி கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்.
அவர் ஒரு நெருப்பைக் கண்ட போது தமது குடும்பத்தினரிடம் இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அதில் உங்களுக்கு ஒரு தீப்பந்தத்தைக் கொண்டு வருவேன். அல்லது நெருப்புக்கு ஏதேனும் ஒரு வழியைக் கண்டு வருவேன் என்றார்.
ஆதமே! இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். அவன் உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்!
(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை)அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.
நூஹ், இதற்கு முன் (நம்மிடம்) பிரார்த்தித்த போது, அவருக்காக (அதை) ஏற்றுக் கொண்டோம். அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றினோம்.
21:84 فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ وَّاٰتَيْنٰهُ اَهْلَهٗ و مِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰى لِلْعٰبِدِيْنَ
எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.
21:90 فَاسْتَجَبْنَا لَهٗ وَوَهَبْنَا لَهٗ يَحْيٰى وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ؕ اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا ؕ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ
என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன் என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்த போது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.
என் இறைவா! என்னையும், என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக! (என்றும் கூறினார்)
நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அங்கிருந்து உங்களுக்கு செய்தி கொண்டு வருகிறேன். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஒரு தீப்பந்தத்தை உங்களிடம் கொண்டு வருகிறேன் என்று மூஸா தமது குடும்பத்தாரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
அவரையும், அவரது மனைவியைத் தவிர ஏனைய அவரது குடும்பத்தையும் காப்பாற்றினோம். அவளை (அழிவோருடன்) தங்கி விடுபவள் என நிர்ணயித்து விட்டோம்.
எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர் என்று அவர் கூறினார்.
மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அது பற்றிய செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன் என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார்.
அங்கே லூத் இருக்கிறாரே என்று அவர் கேட்டார். அங்குள்ளவர்களை நாங்கள் நன்றாக அறிவோம். அவரையும், அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம். அவள் (அழிவோருடன்) தங்கி விடுவாள் என்றனர்.
நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களால் கவலைக்கும், மன நெருக்கடிக்கும் உள்ளானார். அதற்கவர்கள் நீர் பயப்படாதீர்! கவலைப்படாதீர்! உம்மையும் உமது மனைவியைத் தவிர ஏனைய உமது குடும்பத்தினரையும், நாங்கள் காப்பாற்றுவோம். (அழிவோருடன்) அவள் தங்கி விடுவாள் என்றனர்.
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். நம்பிக்கை கொண்டோரையும்,ஹிஜ்ரத் செய்தோரையும் விட உறவினர்களே ஒருவருக்கு மற்றவர் முன்னுரிமை பெற்றவர். நீங்களாக உங்கள் நண்பர்களுக்கு உபகாரம் செய்தாலே தவிர. இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில் எழுதப்பட்டதாக இருக்கிறது.
இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன் என்று நபியே (முஹம்மதே!) உமது மனைவியரிடம் கூறுவீராக!
ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.
அவரையும் (அழிவோருடன்) தங்கி விட்ட கிழவியைத் தவிர, அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றியதை நினைவூட்டுவீராக!
அவருக்கு அவரது குடும்பத்தினரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் வழங்கினோம். இது நம்மிடமிருந்து கிடைக்கப் பெறும் அருளும், அறிவுடையோருக்கு அறிவுரையுமாகும்.
தமது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார்.
நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
இந்த நபி தமது மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகக் கூறிய போது,அம்மனைவி அச்செய்தியை (மற்றொருவரிடம்) கூற அதை அல்லாஹ் நபிக்கு வெளிப்படுத்திக் காட்டிய போது அதில் சிலவற்றை (அம் மனைவியிடம்) நபி எடுத்துக் காட்டி, சிலவற்றை எடுத்துக் காட்டாது விட்டார். அவர் அதை அறிவித்த போது இதை உங்களுக்கு அறிவித்தவன் யார் என மனைவி கேட்டார். அதற்கு அறிந்தவனும்,நன்கறிந்தவனும் (ஆகிய இறைவன்) என நபி விடையளித்தார்.