23) வியாபாரம் – 6

நூல்கள்: இஸ்லாமியப் பொருளாதாரம்

23) வியாபாரம் – 6

பிறரது பொருளைச் சேதப்படுத்துவதன் இழப்பீடு

பிறரது பொருளை ஒருவர் சேதப்படுத்தி விட்டால் அந்தப் பொருளின் மதிப்புக்கு ஏற்க இழப்பீடு வழங்க வேண்டும்.

صحيح البخاري 5225

 حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ، فَأَرْسَلَتْ إِحْدَى أُمَّهَاتِ المُؤْمِنِينَ بِصَحْفَةٍ فِيهَا طَعَامٌ، فَضَرَبَتِ الَّتِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهَا يَدَ الخَادِمِ، فَسَقَطَتِ الصَّحْفَةُ فَانْفَلَقَتْ، فَجَمَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِلَقَ الصَّحْفَةِ، ثُمَّ جَعَلَ يَجْمَعُ فِيهَا الطَّعَامَ الَّذِي كَانَ فِي الصَّحْفَةِ، وَيَقُولُ: «غَارَتْ أُمُّكُمْ» ثُمَّ حَبَسَ الخَادِمَ حَتَّى أُتِيَ بِصَحْفَةٍ مِنْ عِنْدِ الَّتِي هُوَ فِي بَيْتِهَا، فَدَفَعَ الصَّحْفَةَ الصَّحِيحَةَ إِلَى الَّتِي كُسِرَتْ صَحْفَتُهَا، وَأَمْسَكَ المَكْسُورَةَ فِي بَيْتِ الَّتِي كَسَرَتْ

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒரு மனைவியிடம் இருக்கும் போது இன்னொரு மனைவி உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருடைய வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்த மனைவி (ரோஷத்தில்) பணியாளின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள்.

மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), உங்கள் தாயார் ரோஷப்பட்டு விட்டார் என்று சொன்னார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு (சேதப்படுத்திய) மனைவியின் வீட்டிலிருந்து ஒரு தட்டைக் கொண்டு வரச்செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை அந்த வீட்டிலேயே வைத்துவிட்டார்கள்.

(புகாரி: 5225)

சொத்து தகராறைத் தீர்க்கும் வழிமுறை

ஒரு சொத்து யாருக்கு உரியது என்ற பிரச்சனை வந்தால் அதைத் தீர்ப்பதற்காக நீதிமன்றங்களுக்குச் சென்று பல வருடங்கள் அலைந்து பொருளாதாரத்தை மேலும் இழந்து ஓட்டாண்டியாகி விடுவதைக் காண்கிறோம். இஸ்லாத்தில் இதற்கான தீர்வு மிகவும் எளிமையானது.

ஒரு சொத்துக்கு இருவர் சொந்தம் கொண்டாடினால் அந்தச் சொத்து யாராவது ஒருவரின் கைவசத்தில்தான் இருக்கும். யாருடைய கைவசத்தில் அது உள்ளதோ அவர் தன்னுடையது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டத் தேவையில்லை. அவர் கைவசத்தில் சொத்து இருப்பதே ஒரு வகையான ஆதாரம்தான்.

யாருடைய கைவசத்தில் சொத்து இல்லையோ அவர் அந்தச் சொத்துக்கு உரிமை கொண்டாடினால் அது தன்னுடையதுதான் என்பதற்கு ஆவணங்களை அல்லது சாட்சிகளைக் கொண்டு வந்து நிரூபித்து விட்டால் எதிரியிடமிருந்து அந்தச் சொத்தைப் பிடுங்கி அவரிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படி ஆதாரம் காட்டாவிட்டால் சொத்துக்கு உரிமை கொண்டாடுபவர் உண்மையில் உரிமையாளராக இருந்தால்கூட அவருக்குச் சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படாது.

ஆதாரங்களைத் திரட்டுவதும் அதைப் பாதுகாப்பதும் இவர் மீதுள்ள கடமையாகும். அந்தக் கடமையில் அவர் தவறி விட்டு எவ்வித ஆதாரத்தையும் காட்டாமல் என்னுடையது என்று கூறுவது அர்த்தமற்றதாகும்.

ஒருவர் கைவசத்தில் உள்ள சொத்துக்கு மற்றவர் உரிமை கொண்டாடி வழக்கு தொடுத்தால் அந்த வழக்குக்கும் இஸ்லாம் ஓரளவு மதிப்பளிக்கிறது. சொத்தை யார் கைவசம் வைத்துள்ளாரோ அவர் இது அல்லாஹ்வின் மீது சத்தியமக என்னுடைய சொத்துதான் எனக் கூற வேண்டும். அவ்வாறு அவர் கூறிவிட்டால் அவருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.

இது என்னுடையதுதான் என்று சத்தியம் செய்யும் உரிமை யார் தன் கைவசத்தில் பொருளை வைத்துள்ளாரோ அவருக்கு மட்டும் உள்ளதாகும்.

سنن الترمذي 1341
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَغَيْرُهُ، عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي خُطْبَتِهِ: «البَيِّنَةُ عَلَى المُدَّعِي، وَاليَمِينُ عَلَى المُدَّعَى عَلَيْهِ

 

சத்தியம் செய்யும் உரிமை யாருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதோ அவருக்குத் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

நூல் –(திர்மிதீ: 1341)

இவ்வாறு சத்தியம் செய்யக் கோரும்போது அவர் சத்தியம் செய்ய மறுத்தால் அந்தச் சொத்து தன்னுடையது அல்ல என்று அவரே ஒப்புக் கொள்கிறார் என்பதால் வழக்கு தொடுத்தவருக்கு சத்தியம் செய்யும் உரிமை வழங்கப்படும். இவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அவரே அப்பொருளுக்கு உரிமையாளர் என முடிவு செய்யப்படும்.

ஒரு வீடு இருக்கின்றது. இருவர் சேர்ந்து பணம் கொடுத்து அதை வாங்கியிருக்கின்றார்கள். இருவருமே அந்த வீட்டில் வசிக்கின்றனர். இப்போது யாருடைய கைவசத்தில் அந்த வீடு உள்ளது என்று சொல்ல முடியாது. இருவரும் சமநிலையில் உள்ளனர்.

இது போன்ற சூழ்நிலையில் மட்டும் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக இருவரில் ஒருவருக்கு சத்தியம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். அந்த வாய்ப்பு யாருக்கு என்பது சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவு செய்யப்படும்.

இதில் ஒருவர் பாதிக்கப்படுவார் என்பது உண்மைதான். ஆனால் ஏதாவது ஒரு தீர்ப்பு சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் அந்தச் சண்டை இருந்து கொண்டே இருக்கும். காலமெல்லாம் அவர்களுக்குள் பூசல் இருந்து கொண்டே இருக்கும். எனவேதான் இந்த ஏற்பாடு.

صحيح البخاري 2674
 حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَ عَلَى قَوْمٍ اليَمِينَ، فَأَسْرَعُوا فَأَمَرَ أَنْ يُسْهَمَ بَيْنَهُمْ فِي اليَمِينِ أَيُّهُمْ يَحْلِفُ»

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும்படி அழைத்தார்கள். அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

(புகாரி: 2674)

சீட்டுக் குலுக்கி தீர்வு காண்பது

صحيح البخاري
2688 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ، وَكَانَ يَقْسِمُ لِكُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ يَوْمَهَا وَلَيْلَتَهَا، غَيْرَ أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا وَلَيْلَتَهَا لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَبْتَغِي بِذَلِكَ رِضَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியூர் செல்லும்போது ஒரு மனைவியை அழைத்துச் செல்வார்கள். மனைவியர் அனைவரும் சமமானவர்கள் என்பதால் ஒருவருக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பது அநீதியாகி விடும். எனவே எல்லா மனைவியரின் பெயர்களையும் எழுதி சீட்டு குலுக்குவார்கள். யார் பெயர் வருகிறதோ அவரை அழைத்துச் செல்வார்கள்.

இது(புகாரி: 2688, 2879, 4750)ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

صحيح البخاري 2687
 حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي خَارِجَةُ بْنُ زَيْدٍ الأَنْصَارِيُّ، أَنَّ أُمَّ العَلاَءِ – امْرَأَةً مِنْ نِسَائِهِمْ – قَدْ بَايَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَتْهُ أَنَّ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ طَارَ لَهُ سَهْمُهُ فِي السُّكْنَى، حِينَ أَقْرَعَتْ الأَنْصَارُ سُكْنَى المُهَاجِرِينَ، قَالَتْ أُمُّ العَلاَءِ: فَسَكَنَ عِنْدَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، فَاشْتَكَى، فَمَرَّضْنَاهُ حَتَّى إِذَا تُوُفِّيَ وَجَعَلْنَاهُ فِي ثِيَابِهِ، دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ أَكْرَمَهُ؟»، فَقُلْتُ: لاَ أَدْرِي بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَمَّا عُثْمَانُ فَقَدْ جَاءَهُ وَاللَّهِ اليَقِينُ، وَإِنِّي لَأَرْجُو لَهُ الخَيْرَ، وَاللَّهِ مَا أَدْرِي وَأَنَا رَسُولُ اللَّهِ مَا يُفْعَلُ بِهِ»، قَالَتْ: فَوَاللَّهِ لاَ أُزَكِّي أَحَدًا بَعْدَهُ أَبَدًا، وَأَحْزَنَنِي ذَلِكَ، قَالَتْ: فَنِمْتُ، فَأُرِيتُ لِعُثْمَانَ عَيْنًا تَجْرِي، فَجِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «ذَاكِ عَمَلُهُ»

 

மக்காவாசிகள் நாடு துறந்து மதீனா வந்தபோது மதீனாவில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பம் மக்காவில் இருந்து வந்த ஒருவரை தமது பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஒருவருக்கு வசதியில்லாதவரின் வீடு, மற்றவருக்கு வசதி படைத்தவரின் வீடு என்பது போன்ற எண்ணம் நாடு துறந்த மக்களுக்கும் வரக் கூடாது; உள்ளுர் மக்களுக்கும் வரக்கூடாது என்பதற்காக சீட்டுக் குலுக்கி போட்டு யாருக்கு எந்த வீடு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடிவு செய்தார்கள்.

இது பற்றி(புகாரி: 2687, 1243, 3929, 7004, 7018)ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

இரு சமூகத்தினர் கப்பலில் பயணம் செய்து போகின்றனர். கப்பலில் மேல்தளம் கீழ்தளம் என்று இரு தளங்கள் உள்ளன. இருவருமே நாங்கள்தான் மேல் தளத்தில் இருப்போம். அல்லது நாங்கள்தான் கீழ்த்தளத்தில் இருப்போம் எனப் போட்டியிடுகின்றனர். இப்போது சீட்டுக் குலுக்கி போட்டு முடிவு எடுக்கலாம் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

صحيح البخاري 2686
 حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي الشَّعْبِيُّ، أَنَّهُ سَمِعَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا،
يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَثَلُ المُدْهِنِ فِي حُدُودِ اللَّهِ، وَالوَاقِعِ فِيهَا، مَثَلُ قَوْمٍ اسْتَهَمُوا سَفِينَةً، فَصَارَ بَعْضُهُمْ فِي أَسْفَلِهَا وَصَارَ بَعْضُهُمْ فِي أَعْلاَهَا، فَكَانَ الَّذِي فِي أَسْفَلِهَا يَمُرُّونَ بِالْمَاءِ عَلَى الَّذِينَ فِي أَعْلاَهَا، فَتَأَذَّوْا بِهِ، فَأَخَذَ فَأْسًا فَجَعَلَ يَنْقُرُ أَسْفَلَ السَّفِينَةِ، فَأَتَوْهُ فَقَالُوا: مَا لَكَ، قَالَ: تَأَذَّيْتُمْ بِي وَلاَ بُدَّ لِي مِنَ المَاءِ، فَإِنْ أَخَذُوا عَلَى يَدَيْهِ أَنْجَوْهُ وَنَجَّوْا أَنْفُسَهُمْ، وَإِنْ تَرَكُوهُ أَهْلَكُوهُ وَأَهْلَكُوا أَنْفُسَهُمْ “

 

அல்லாஹ்வின் சட்டங்களில் விட்டுக் கொடுப்பவருக்கும், அதை மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கூட்டத்தாரின் நிலையாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்பலின் கீழ்த் தளத்திலும் சிலருக்குக் கப்பலின் மேல்தளத்திலும் இடம் கிடைத்தது.

கப்பலின் கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல்தளத்தில் இருந்தவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதனால் மேல் தளத்திலிருந்தவர்கள் துன்பமடைந்தார்கள். ஆகவே, கீழ்த்தளத்தில் இருந்த ஒருவன் ஒரு கோடரியை எடுத்து, கப்பலின் கீழ்த்தளத்தைத் துளையிடத் தொடங்கினான்.

மேல் தளத்திலிருந்தவர்கள் அவனிடம் வந்து, “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவன், “நீங்கள் என்னால் துன்பத்திற்குள்ளானீர்கள். எனக்குத் தண்ணீர் அவசியம் தேவைப்படுகின்றது. (அதனால், கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வேன்)” என்று கூறினான்.

(துளையிட விடாமல்) அவனது இரு கைகளையும் அவர்கள் பிடித்துக் கொண்டால் அவர்கள் அவனையும் காப்பாற்றுவார்கள்; தங்களையும் காப்பாற்றிக் கொள்வார்கள். அவனை அவர்கள் (கப்பலில் துளையிட) விட்டு விட்டால் அவனையும் அழித்து விடுவார்கள்; தங்களையும் அழித்துக் கொள்வார்கள்.

(புகாரி: 2686)

பாங்கு சொல்வது போன்ற நல்ல காரியங்களில் பலர் போட்டியிட்டால் அனைவரும் சமநிலையிலும் இருந்தால் சீட்டுக் குலுக்கி ஒருவரைத் தேர்வு செய்யலாம்.

صحيح البخاري 615
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ، لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا»

 

பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக் கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து)விடுவார்கள்.

(புகாரி: 615, 654, 721, 2689)

மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி சம்பாதிப்பது

மதத்தின் பெயராலோ, ஜோதிடம், ஜாதகம், சகுனம் போன்ற மூடநம்பிக்கையின் பெயராலோ மக்களை ஏமாற்றி பிழைப்பதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். “அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக!

(அல்குர்ஆன்: 9:34)

மதகுருமார்கள் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் எந்த வியாபாரத்தையும் செய்து சம்பாதிக்கவில்லை. எந்த வியாபாரமும் செய்யாமல் மூட நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் விதைத்து அதன் மூலம் சம்பாதித்து வந்தனர் என்பதைத்தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

மார்க்கத்தை வைத்து வயிறு வளர்ப்பது என்றால் என்ன? கூடாத ஒன்றை, பணம் வாங்கிக் கொண்டு கூடும் என்று பத்வா கொடுப்பது, குடும்பப் பிரச்சனைகளில் ஒரு தரப்புக்கு ஏற்ப பத்வா கொடுத்து பணம் பண்ணுவது, குற்றம் செய்தவனுக்கு என்ன தண்டனை மார்க்கத்தில் உள்ளதோ அதைச் சொல்லாமல் கொடுக்கும் காசுக்கு ஏற்ப மார்க்கத்தை வளைப்பது ஆகிய காரியங்களைத் தான் யூத மதகுருமார்கள் செய்து வந்தனர். அதைத் தான் அல்லாஹ் கண்டிக்கிறான்.

தாயத்து, தட்டு, கத்தம், பாத்திஹா போன்ற மார்க்கத்தில் இல்லாத விஷயங்களை மார்க்கம் போல் சித்தரித்துக் காட்டி இதன் மூலம் மக்களிடம் பணம் பறிப்பதும் இதில் அடங்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்றபோது அங்குள்ள யூதர்கள் இதுபோல் மார்க்கத்தை வளைத்து ஆதாயம் அடைந்து கொண்டிருந்தார்கள்.

இஸ்லாத்தில் உள்ள குற்றவியல் சட்டங்கள் போலவே தவ்ராத் எனும் யூதர்களின் வேதத்திலும் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் அந்தச் சட்டங்களை சாமானிய மக்களுக்கு மட்டும் பயன்படுத்துவார்கள். செல்வாக்குள்ளவர்களும் வசதி படைத்தவர்களும் அதே தவறைச் செய்தால் அவர்களுக்கு எளிதான இவர்களாக உருவாக்கிக் கொண்ட தீர்ப்பை வழங்குவார்கள்.

صحيح البخاري 3635
 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ اليَهُودَ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلًا مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ». فَقَالُوا: نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: كَذَبْتُمْ إِنَّ فِيهَا الرَّجْمَ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا، فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: ارْفَعْ يَدَكَ، فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ، فَقَالُوا: صَدَقَ يَا مُحَمَّدُ، فِيهَا آيَةُ الرَّجْمِ، فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُجِمَا، قَالَ عَبْدُ اللَّهِ: فَرَأَيْتُ الرَّجُلَ يَجْنَأُ عَلَى المَرْأَةِ يَقِيهَا الحِجَارَةَ “

 

யூதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கவர்கள், அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்கள். உடனே (யூதமத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நீங்கள் பொய் சொன்னீர்கள்.

(விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும் என்று கூறும் வசனத்தின் மீது தனது கையை வைத்து மறைத்துக் கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார்.

அப்போது அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், உன் கையை எடு என்று சொல்ல, அவர் தனது கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், அப்துல்லாஹ் பின் சலாம் உண்மை சொன்னார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது என்று சொன்னார்கள்.

உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும்வரை கல்லால் அடிக்கும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவள் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை நான் பார்த்தேன்.

(புகாரி: 3635)

விவாகரத்து, குலா போன்ற குடும்பப் பிரச்சனைகளில் காசு வாங்கிக் கொண்டு அதற்கேற்ப தீர்ப்புகள் கூறும் மார்க்க அறிஞர்களும் ஷரீஅத் கோர்ட்டுகளும் இருக்கின்றனர். இவர்களின் இந்தக் கேடுகெட்ட செயலும் இந்த எச்சரிக்கையில் அடங்கும்.

அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்,445 தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

(அல்குர்ஆன்: 2:174)

அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. கியாமத் நாளில்1 அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன்: 3:77)

மார்க்கத்தை மறைத்து எதைச் சம்பாதிக்கின்றார்களோ அவர்கள் சோறு உண்ணவில்லை. நரக நெருப்பைத்தான் உண்கின்றார்கள். அல்லாஹ் மறுமையில் இந்த தொழிலைச் செய்பவர்களுடன் பேசமாட்டான். அவர்களைப் பரிசுத்தப்படுத்த மாட்டான். அவர்களுக்குப் பயங்கரமான வேதனை இருக்கின்றது என்று அல்லாஹ் கடுமையாக எச்சரிப்பதைப் பார்த்து இவர்கள் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

மார்க்கப் பணிக்கு கூலி வாங்கலாமா?

வணக்கம் என்பது அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்யப்பட வேண்டும். அதற்காக மனிதர்களிடம் கூலி கேட்கக் கூடாது. இதில் இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை.

யார் உங்களிடம் கூலியைக் கேட்கவில்லையோ அவர்களைப் பின்பற்றுங்கள் அவர்கள்தான் நேர்வழியில் இருப்பவர்கள்.

(அல்குர்ஆன்: 36:21)

என்னுடைய கூட்டமே நான் உங்களிடம் கூலி கேட்கவில்லை என்னுடைய கூலி என்னைப் படைத்த அல்லாஹ்விடமே தவிர இல்லை நீங்கள் இதை சிந்திக்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன்: 11:51)

ஆனால் ஒருவர் மார்க்கப் பணிக்காகத் தனது முழு நேரத்தையும் செலவிடுகிறார். அதன் காரணமாக அவரால் தொழில் செய்யவோ பொருளீட்டவோ இயலவில்லை. அத்துடன் அவர் வசதி படைத்தவராகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் அவரது வணக்கத்துக்குக் கூலியாக இல்லாமல் அவரது தேவையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உதவித் தொகை வழங்கலாம். இத்தகையோருக்கு வழங்குவதற்குத் தான் முதலிடம் அளிக்க வேண்டும்.

அப்படி வழங்கப்படும் உதவித் தொகை அவர் செய்யும் வணக்கத்துக்குக் கூலியாகாது. மார்க்கப் பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது மட்டுமல்லாமல் வலியுறுத்தப்பட்டும் உள்ளது.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:273)

பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர். ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது தான் அவர் ஏழையாக இருப்பதற்கே காரணமாகவும் உள்ளது. இதன் காரணமாக அவரால் பொருளீட்டவும் இயலவில்லை.

இத்தகையவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமின்றி மார்க்கப் பணியிலும் ஈடுபடுகிறார் என்பதையும் கவனத்தில் கொண்டு தர்மங்கள் வழங்குவது தவறில்லை என்று இவ்வசனத்திலிருந்து தெரிகிறது. ஒருவர் பொருளீட்டுவதற்கான முயற்சி எதனையும் மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க மார்க்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொள்வதைக் குறை கூறக் கூடாது; மாறாக இது பாராட்டப்பட வேண்டிய சேவை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

அதே சமயத்தில் இவ்வாறு மார்க்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வோர் வேறு வருமானத்திற்கு வழியில்லை என்பதால் மற்றவர்களிடம் யாசிப்பதோ, சுய மரியாதையை இழப்பதோ கூடாது.

எந்த நிலையிலும் எவரிடமும் கேட்பதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு சுயமரியாதையைப் பேணுபவர்களுக்குத் தான் மார்க்கப் பணியைக் காரணம் காட்டி உதவியும் செய்ய வேண்டும். அவர்கள் யாசிக்க ஆரம்பித்து விட்டால் இந்தத் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்

(அல்குர்ஆன்: 9:60)

எட்டுவகையினருக்கு ஜகாத் கொடுக்குமாறு அல்லாஹ் கூறுகிறான்.

இவர்களில் ஒரு வகையினர் ஜகாத்தை வசூலிப்பவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஜகாத் என்பது ஒரு வணக்கமாகும். அதை வசூலிப்பதும் ஒரு வணக்கம்தான். ஆனாலும் வசூலிப்பதற்காக தன்னை அர்ப்பணிப்பவர் தனது நேரத்தைச் செலவிடுகிறார் என்பதால் அவருக்கு ஜகாத் நிதியில் இருந்து உதவலாம் என்று அல்லாஹ் அனுமதிக்கிறான்

அது போல்தான் மார்க்கத்துக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பிறரிடம் கையேந்தாதவாறு அவர்களின் தேவைகள் நிறைவேறுமளவுக்கு உதவித் தொகை வழங்குவது சமுதாயத்தின் கடமையாகும். அப்போதுதான் அவர்கள் உண்மையான மார்க்கத்தைச் சொல்வார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

மக்களுக்காக ஒருவர் தனது முழு நேரத்தையும் செலவிடும்போது பொதுநிதியில் இருந்து அவரது தேவைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்பதால்தான் அபூபக்ர் ரலி அவர்கள் பொதுநிதியில் இருந்து குடும்பத் தேவைக்கு எடுத்துக் கொள்வேன் என்று வெளிப்படையாக அறிவித்தார்கள்.

صحيح البخاري 2070
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: لَمَّا اسْتُخْلِفَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ، قَالَ: «لَقَدْ عَلِمَ قَوْمِي أَنَّ حِرْفَتِي لَمْ تَكُنْ تَعْجِزُ عَنْ مَئُونَةِ أَهْلِي، وَشُغِلْتُ بِأَمْرِ المُسْلِمِينَ، فَسَيَأْكُلُ آلُ أَبِي بَكْرٍ مِنْ هَذَا المَالِ، وَيَحْتَرِفُ لِلْمُسْلِمِينَ فِيهِ»

அபூபக்ர் (ரலி) கலீஃபாவாக ஆனபோது எனது தொழில் என் குடும்பத்தாரின் செலவுக்குப் போதுமானதாக இருந்தது என்பதை என் சமுதாயத்தினர் அறிவர்; இப்போது நான் முஸ்லிம்களின் (தலைமைப்) பொறுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன்; இனி அபூபக்ரின் குடும்பத்தினர் இந்தப் பொதுநிதியிலிருந்து உண்பார்கள். இதில் முஸ்லிம்களுக்காக நான் உழைப்பேன் என்று கூறினார்கள்.

(புகாரி: 2070)

பொதுவாகவே மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது, அவர்கள் தரித்திரர்களாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது.

மவ்லிது, ஃபாத்திஹா போன்ற பித்அத்துக்கள் உருவானதற்கும், மார்க்கத்தின் பெயரால் பொருளீட்டும் நிலை தோன்றியதற்கும் சமுதாயத்தில் நிலவுகின்ற இந்த மன நிலையும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல!

மார்க்கத்தில் தடுக்கப்பட்ட எந்த வணக்க வழிபாடுகளில் மார்க்கத்தை நாம் எப்படி பேணி நடக்கிறோமோ அது போல் பொருளாதாரத்தை திரட்டுவதிலும் பேணுதலாக நாம் நடந்தால் தான் மறுமையில் நாம் வெற்றி பெற முடியும். இதை உணர்ந்து நடக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக.