18) வியாபாரம் -1
18) வியாபாரம்
வியாபாரத்தில் ஏமாற்றுதல் இல்லை
யாரையும் எந்த விதத்திலும் ஏமாற்றக் கூடாது என்பது வியாபாரத்துக்கு இஸ்லாம் கூறும் முக்கியமான விதியாகும். வாங்குபவராக இருந்தாலும் விற்பவராக இருந்தாலும் நாணயத்தையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் மற்ற சந்தர்ப்பங்களில் யாரையும் ஏமாற்றத் துணியாதவர்கள்கூட வியாபாரத்தில் மக்களை ஏமாற்றுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது போல் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.
அளவு நிறுவையில் குறைவு செய்தல், ஒரு பொருளைக் காட்டி இன்னொரு பொருளை விற்றல், போலியான பொருள்களை விற்றல், ஒரு பொருளில் இல்லாத தரத்தை இருப்பதாகக் கூறுதல் மற்றும் எண்ணற்ற ஏமாற்றும் முறைகளை வியாபாரிகள் சர்வசாதாரணமாகக் கடைப்பிடிக்கின்றனர். இந்தப் போக்கை அல்லாஹ்வும் கண்டித்துள்ளான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் தக்க சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று அவர் கூறினார்.
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின் வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்” என்றார். “என் சமுதாயமே! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!”
அளக்கும்போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு.
மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!
அனாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள்! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவேற்றுங்கள்! எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். உறவினராகவே இருந்தாலும் பேசும்போது நீதியையே பேசுங்கள்! அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! நீங்கள் படிப்பினை பெறுவதற்காக அவன் இதையே உங்களுக்கு வலியுறுத்துகிறான்.
அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடுதான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மோசடி வியாபாரத்தை தடை செய்தார்கள்.
இது வியாபாரத்தில் இஸ்லாம் வகுத்துள்ள முக்கியமான விதியாகும். எந்த வியாபாரமாக இருந்தாலும் விற்பவர் வாங்குபவரை ஏமாற்றக் கூடாது. வாங்குபவர் விற்பவரை ஏமாற்றக் கூடாது.
தனக்குச் சொந்தமாக இல்லாததை விற்பது, தண்ணீரில் உள்ள மீன்களை விலை பேசுவது, கறவை மாட்டின் மடியில் உள்ள பாலைக் கறக்காமல் மடியில் வைத்தே விற்பது, மரத்தில் இல்லாத இனிமேல் உருவாகக் கூடிய காய்களை விற்பது, கால்நடைகளின் வயிற்றில் உள்ள குட்டியை விற்பது, மொத்தமாக பொருட்களைக் காட்டி இதில் ஏதோ ஒன்றை இந்த விலைக்கு தருவேன் எனக் கூறி விற்பது போன்றவை ஏமாற்றும் வியாபரங்களாகும்.
மோசடி வியாபாரத்தைப் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தது போல் அன்று நடைமுறையில் இருந்த மோசடி கலந்த வியாபாரங்களைக் குறிப்பாகவும் தடை செய்துள்ளனர்.
அறியாமைக் காலத்து மோசடி வியாபாரங்கள்
இந்தக் கல் எவ்வளவு தொலைவில் விழுகிறதோ அவ்வளவு நிலத்தை இன்ன விலைக்கு விற்கிறேன் என்றும் இந்தக் கல் எந்தப் பொருளின் மீது விழுகிறதோ அந்தப் பொருளின் விலை இவ்வளவு என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சிலர் வியாபாரம் செய்து வந்தனர். இதில் மோசடி உள்ளதால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முனாபதா வியாபாரத்தைத் தடை செய்தார்கள்! முனாபதா என்பது, ஒருவர் தமது துணியை, வாங்குபவர் விரித்துப் பார்ப்பதற்கு முன் அதை வாங்குபவரை நோக்கி எறிந்து (விட்டால் அதை அவர் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிபந்தனையுடன்) அவரிடம் விற்பதாகும்! மேலும் முலாமஸா எனும் வியாபாரத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்! முலாமஸா என்பது கண்ணால் பார்க்காமல் கையால் தொட்டவுடன் வியாபாரம் உறுதியாகிவிடும் என்ற நடைமுறையாகும்.
காயாக இருந்தாலும் கனியாக இருந்தாலும் பிஞ்சாக இருந்தாலும் அதை உடனடியாக அந்த நிலையில் விற்பதில் குற்றமில்லை. இதில் மோசடிக்கோ ஏமாற்றுதலுக்கோ இடமில்லை. ஆனால் காயாக இருப்பதைக் காட்டி காயின் விலைக்கு விற்காமல் இது கனியாகும்போது இன்ன விலைக்கு நான் விற்கிறேன் என்று விலை பேசி பணத்தைப் பெற்றுக் கொள்வதும், பிஞ்சாக இருப்பதைக் காட்டி இது காயாக ஆகும்போது இன்ன விலை என்று கூறி முன் கூட்டியே பணம் பெற்றுக் கொள்வதும் மார்க்கத்தில் கூடாத ஒன்றாகும்.
இது போன்ற வியாபாரங்கள் முஸாபனா என்ற பெயரில் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்து வந்தது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
மரத்தில் உள்ள பழங்களைக் காட்டி இதில் 100 கிலோ கிடைக்கும். இது பழமான உடன் நீ எடுத்துக் கொள். இப்போது எனக்கு 50 கிலோ கொடு என்று ஒருவர் மற்றொருவரிடம் கேட்டால் இது கூடாது. ஏனெனில் அவர் சொன்னதைப் போன்று 100 கிலோ கிடைத்தால் தவறில்லை. அப்படி இல்லாமல் மரத்தில் 90 கிலோ, அல்லது 80 க