16) தவிர்க்க வேண்டியவை-3
16) தவிர்க்க வேண்டியவை-3
திருட்டுப் பொருளை அன்பளிப்பாகப் பெறலாமா?
திருட்டுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை உண்ணலாமா என்று சிலர் நினைக்கலாம். வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும். திருட்டுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
வட்டியின் மூலம் ஒருவன் சம்பாதித்தால் அவனுடைய சம்பாத்தியம் ஹராமாக இருந்தாலும் அது அவனுடைய பொருளாகும். இந்தியச் சட்டப்படியும், உலக நாடுகள் அனைத்தின் சட்டப்படியும், இஸ்லாமியச் சட்டப்படியும் இதுதான் சட்டமாகும். வட்டி கொடுத்த ஒருவன் வட்டி வாங்கியவனுக்கு எதிராக என்னுடைய பணத்தை வட்டியின் மூலம் அபகரித்து விட்டான் என்று வழக்குப் போட முடியுமா?
ஆனால் திருடப்பட்ட பொருள் இஸ்லாமியச் சட்டப்படியும் ஊர் உலகத்தில் உள்ள அனைத்துச் சட்டங்களின்படியும் திருடியவனுக்குச் சொந்தமானதல்ல. பறிகொடுத்தவன் திருடனுக்கு எதிராக என்னுடைய பொருளைத் திருடி விட்டான் என்று வழக்குப் போட முடியும்.
எனவே திருட்டுப் பொருளை அன்பளிப்பாகப் பெறுவதையும் திருட்டுப் பொருள் என்று தெரிந்து அதை வாங்கி வியாபாரம் செய்வதையும் மேற்கண்ட ஆதாரங்களைக் காட்டி யாரும் நியாயப்படுத்த முடியாது. அடுத்தவனின் பொருளை அன்பளிப்பு கொடுக்கவும் விற்கவும் எந்தச் சட்டத்திலும் அனுமதி இல்லை.
வட்டிக் கடைக்கு வாடகைக்கு விடலாமா?
வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுக்கும்போது வாங்கலாம் என்றால் நம் இடத்தை அல்லது நம் கடையை வட்டிக் கடைக்கு வாடகைக்குக் கொடுக்கலாமே என்று யாரும் கருதக் கூடாது. இரண்டுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது.
நமது இடத்தை அல்லது கடையை வட்டிக் கடைக்கு வாடகைக்கு விட்டால் வட்டி எனும் கொடுமைக்கு நாம் துணை நின்றவர்களாக நேரும். ஆகவே இடத்தையோ, அல்லது கடையையோ வட்டிக்கடைக்கு வாடகைக்குக் கொடுப்பது தவறாகும்.
பேணுதல் என்பது எது
ஒருவர் ஹராமான வழியில் திரட்டிய பொருள் மற்றவருக்கு ஹராமாகாது என்று நாம் தக்க ஆதாரத்துடன் கூறுவதை பேணுதலுக்கு எதிரானதாகச் சிலர் நினைக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைவிட யாரும் அதிகப் பேணுதல் உள்ளவர் கிடையாது என்பதை ஏனோ கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இருந்ததைவிட தங்களிடம் அதிகம் பேணுதல் உள்ளது போல் வாதிடுகின்றனர். பேணுதலுக்காக இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் தவிர்ப்பவர்களாக இருந்திருப்பார்கள்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் தெளிவாக அனுமதித்த ஒன்றைப் பேணுதல் என்ற பெயரில் தவிர்ப்பதற்கு அறவே இடமில்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் அனுமதித்தார்களா இல்லையா என்பதற்குத் தெளிவான ஆதாரம் இல்லாமல் இருந்து அதில் சந்தேகம் ஏற்படும்போதுதான் பேணுதல் என்ற அடிப்படையில் அதைத் தவிர்க்கும் கடமை உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இறைவன் எண்ணற்ற நபிமார்களை அனுப்பி இருந்தாலும் நமக்கு இப்ராஹீம் நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கட்டளை இடுகிறான். அந்த இப்ராஹீம் நபியவர்கள் ஒரு மன்னன் அன்பளிப்பாகக் கொடுத்த ஹாஜர் என்ற பணிப்பெண்ணைப் பெற்றுள்ளனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
பார்க்க :(புகாரி: 3358)
வரதட்சணை திருமணத்திலும் பங்கெடுக்கலாமா?
நாம் இவ்வாறு வாதிடுவதால் வரதட்சணை மற்றும் மார்க்கத்துக்கு விரோதமான காரியங்கள் நடக்கும் சபைகளுக்கும் நாம் போய் கலந்து கொள்ளலாமா? அவர் பாவம் அவருக்கு என்பது இதற்கு மட்டும் பொருந்தாதா என்று சிலர் கருதலாம். இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும்.
ஹராமான வழியில் பொருள் திரட்டிய ஒருவர் நமக்குத் தரும் அன்பளிப்பை ஏற்கலாம் என்று கூறும் நாம் மார்க்கம் தடை செய்த காரியங்கள் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கக் கூடாது என்றும் கூறுகிறோம். இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என்பதால் வெவ்வேறு நிலைபாட்டை நாம் எடுக்கிறோம்.
வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று நாம் கூறுவது அங்கு வழங்கப்படும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல. மாறாக ஒரு தீமை நடக்கக் கண்டால் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகவே அதைப் புறக்கணிக்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. (திரும்பி விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.
அலீ (ரலி) அவர்கள் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சொல்ல, “நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச்சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்து விட்டேன்)” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள்.
அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தத் திரைச்சீலையின் விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்)” என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டில் நபிகள் நாயகம் கண்ட வண்ணத்திரை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல. தடை செய்யப்பட்டதாக இருந்தால் மற்றவருக்கு அதைக் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருக்க மாட்டார்கள். ஆனாலும் அது ஆடம்பரமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தோன்றியுள்ளது. அதன் காரணமாக தமது மகளின் இல்லத்துக்குள் நுழையாமல் திரும்பி விட்டார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டில் உள்ள உணவு ஹராம் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறக்கணிக்கவில்லை. மாறாக ஆடம்பரம் என்று தோன்றிய காரணத்துக்காகத்தான் புறக்கணித்துள்ளனர். அப்படியானால் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியங்கள் நடக்கும் சபைக்கு நாம் எப்படிச் செல்லலாம்? இந்த அடிப்படையிலேயே நாம் வரதட்சணை, பித்அத் இடம் பெற்ற திருமணங்களைப் புறக்கணிக்கிறோம்.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம்கூட அளவுக்கு அதிகமான பகட்டாகத் தென்பட்டால் அதையும் புறக்கணிக்க வேண்டும் என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக திருமணத்தை ஒருவர் பல ஆயிரம் ரூபாய் வாடகையில் மண்டபம் பிடித்து நடத்துகிறார். வரக்கூடிய மக்களின் வசதிக்காகவே இதைச் செய்வதாகக் கூறுகிறார். இது ஹராம் என்று கூற நேரடி ஆதாரம் எதுவும் இல்லை. ஆனாலும் திருமணம் எளிமையாக நடக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திய அறிவுறைக்கு மாற்றமாக இருப்பதால் அதைப் புறக்கணிப்பது நபிவழி என்று நாம் கூறுகிறோம்.
அல்லாஹ்வும் இப்படித்தான் நமக்குக் கட்டளையிடுகிறான்.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும்வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.
ஒரு சபையில் அல்லாஹ்வின் கட்டளை மீறப்படுகிறது. அதன் மூலம் அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்யப்படுகிறது என்றால் அந்தச் சபைகளில் நாம் அமரவே கூடாது. அவ்வாறு அமர்ந்தால் நாம் அவர்களைப் போல் இறைவனால் கருதப்படுவோம் என்ற எச்சரிக்கை காரணமாகவே சில நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கச் சொல்கிறோம். அவர்கள் தரும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல.
உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும். அதற்கு இயலாவிட்டால் தனது நாவால் தடுக்கட்டும். அதற்கும் இயலாவிட்டால் தனது உள்ளத்தால் தடுக்கட்டும். (அதாவது அதை உள்ளத்தால் வெறுக்கட்டும்.) இதுதான் ஈமானில் கடைசி நிலையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
மனதால் வெறுப்பது அந்தச் சபையைப் புறக்கணிப்பதன் மூலம்தான் உறுதியாகும். அதில் கலந்து கொண்டாலோ, அங்கு போய்ச் சாப்பிட்டாலோ தீய காரியம் நடக்கும்போது செய்ய வேண்டிய குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட தெரிவிக்கவில்லை என்பதே பொருளாகும். சிறிதளவும் அவருக்கு ஈமான் இல்லை என்பதுதான் இதன் அர்த்தமாகும்.
தடை செய்யப்பட்ட பொருளாதாரம்
பிறருக்குச் சொந்தமான பொருட்கள்
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! உங்களுக்கிடையே திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.
உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் பிறருடைய பொருட்களைப் புனிதத் தலத்துக்கும் புனித மாதத்துக்கும் நிகராக மதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
(இறுதி ஹஜ்ஜின்போது, துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம்.
அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது துல்ஹஜ் இல்லையா?” என்று கேட்டார்கள். நாங்கள், “ஆம்” என்றோம். (பிறகு,) “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம்.
அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது (புனிதமிக்க) நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள், “ஆம்” என்றோம். மேலும், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம்.
அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?” எனக் கேட்க, நாங்கள், “ஆம்” என்றோம். (பிறகு,) “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும், உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள்.
அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள் : எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள். இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்து விடுங்கள்.
ஏனெனில், இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரைவிட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம். பிறகு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா?” என்று இரண்டு முறை கேட்டார்கள்.
(புகாரி: 67, 105, 1741, 4406, 550, 7447)
புனிதமான மாதத்தையும், புனித ஆலயத்தையும் நாம் எவ்வாறு மதித்துப் பேணுகிறோமோ அது போல் மற்றவர்களின் பொருளாதாரத்தையும் மதிக்க வேண்டும் என்பதை மேற்கண்ட நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
பொதுவாகக் கெட்ட செயல்களைச் சர்வ சாதாரணமாகச் செய்யும் ஒருவன், அவன் புனிதமாக மதிக்கும் இடத்தில் அந்தச் செயலைச் செய்ய மாட்டான். இது போல் மற்றவர்களின் பொருட்கள் விஷயத்தில் கவனமாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.
அற்பமான பொருட்களாக இருந்தாலும் பாதுகாப்பு இல்லாமல் கிடக்கும் பொருள் என்றாலும் பிறருடைய பொருட்கள் நமக்கு ஹலால் ஆகாது என்பது குறித்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவரின் கால்நடையிடம் அவரது அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். தனது சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, தனது உணவுக் கருவூலத்தை உடைத்து, தனது உணவை எடுத்துச் சென்று விடுவதை உங்களில் எவரும் விரும்புவாரா? இவ்வாறே, அவர்களின் கால்நடைகளுடைய மடிகள் அவர்களுடைய உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. ஆகவே, எவரும் ஒருவரது கால்நடையிடம் அவரது அனுமதியின்றிப் பால் கறக்க வேண்டாம்.
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ, வெள்ளிக் காசுகளோ) பயன் தராத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.)
(ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவரது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிறருடைய பொருளில் எதையாவது நாம் கடந்த காலத்தில் அபகரித்து இருந்தால் சம்மந்தப்பட்டவரிடம் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதற்கு வசதி இல்லாவிட்டால் சம்மந்தப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாம் செய்த நன்மைகள் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டு நம்மால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படுவதைத் தவிர்க்க இயலாது.
நாம் யாருடைய பொருளை அபகரித்தோமோ அவர் இறந்து விட்டால், அல்லது அதைத் திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பு இல்லாவிட்டால், அல்லது அவர் மன்னிக்க மறுத்து விட்டால் நமது மறுமை வாழ்க்கையில் நட்டம் அடைவதைத் தவிர்ப்பதற்கு ஏற்ற வகையில் அமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடமிருந்து சில அமல்கள் பிடுங்கப்பட்டாலும் அதன் பின்னரும் மீதமிருக்கும் வகையில் அதிகமான வணக்கங்களைச் செய்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிட வாக்குசாதுர்யம் மிக்கவராக இருக்கக்கூடும். ஆகவே, எவரது (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரது சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று நான் தீர்ப்பளித்து விடுகின்றேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் துண்டித்துக் கொடுக்கிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
(புகாரி: 2680, 7169, 7181, 7185, 6967)
பொது அனுமதி அளிக்கப்பட்டவை
ஒருவர் அன்பளிப்பாகவோ, தர்மமாகவோ நமக்குத் தந்தால் அல்லது வாரிசு முறையில் கிடைத்தால் அல்லது விலை கொடுத்து வாங்கினால் இவை ஹலால் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இவை தவிர தனிப்பட்ட முறையில் நமக்கு அனுமதிக்கப்படாமல் இருந்தாலும் பொதுவாக அனுமதி அளிக்கப்பட்டதாக இருந்தால் அந்தப் பொருள் நமக்கு ஹலால் ஆகும்.
இதனைப் பின் வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
”மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்!” (அல்குர்ஆன்: 2:267) ➚ என்ற வசனம் பேரீச்சை மரங்களுக்குச் சொந்தக்காரர்களாகிய அன்சாரிகளாகிய எங்களுடைய விசயத்தில் இறங்கியதாகும். பேரீச்சை மரங்கள் அதிகமாக வைத்திருப்பவரும், குறைவாக வைத்திருப்பவரும் அதற்கேற்ற அளவிற்கு அதிலிருந்து கொண்டு வருவர். ஒரு மனிதர் ஒன்று அல்லது இரண்டு குலைகளைக் கொண்டு வந்து அதைப் பள்ளிவாசலில் தொங்க விடுவார். திண்ணை ஸஹாபாக்கள் எந்த உணவும் இல்லாதவர்களாக இருந்தார்கள்.
அவர்களில் ஒருவருக்குப் பசித்தால் அந்தக் குலையின் பக்கம் வந்து அதை தன் கைத்தடியால் அடிப்பார். அதிலிருந்து பிஞ்சுகளும், பழங்களும் விழும் . அதை அவர் சாப்பிடுவார். நல்ல விஷயங்களில் நாட்டமில்லாத சில மனிதர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு மனிதர் ஒரு குலையைக் கொண்டு வருவார். அதில் விளையாத பழங்களும் அழுகிய பழங்களும் இருந்தன.
இன்னும் உடைந்த குலையையும் கொண்டு வந்து அதைத் தொங்க விடுவார். எனவே அல்லாஹ் நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக்கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர்ஆன்: 2:267) ➚ என்ற வசனத்தை அருளினான். அதற்குப் பிறகு எங்களில் ஒருவர் தன்னிடம் இருப்பதில் மிகச் சிறந்ததையே கொண்டு வரலானார்.
தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் பள்ளிவாசலில் பேரிச்சை குலைகள் தொங்கவிடப்பட்டதும் அதை நபித்தோழர்கள் சாப்பிட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்ததை இதில் இருந்து அறியலாம்.
வேலி போடாமல் திறந்த வெளியில் ஒருவர் மரம் வளர்த்தால் அந்த மரத்தின் கனிகளை மற்றவர்கள் சாப்பிடுவது குற்றமாகாது. அவர் வேலி போடாமல் இருந்ததும் அல்லது யாரும் சாப்பிடக் கூடாது என்று அறிவிப்புப் பலகை வைக்காததும் பொது அனுமதியைக் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்ளப்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.
அனைவரும் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பொதுவில் வைக்கப்பட்ட பொருட்கள் எந்த நோக்கத்தில் வைக்கப்படுகிறதோ அதற்கேற்பவே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மாற்றமாகப் பயன்படுத்தக் கூடாது.
அனைவரும் குடிப்பதற்காகத் தண்ணீர்ப் பந்தல் வைத்தால் நமக்குத் தேவைப்படும்போது அதைப் பருகலாம்; ஒரு குடத்தை எடுத்துக் கொண்டு வந்து அதை நிரப்பிக் கொண்டு போகக் கூடாது. அல்லது கைகால் கழுவுதல், துணி துவைத்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் குடிப்பதற்குத்தான் அது வைக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
அதே நேரத்தில் ஒருவர் தண்ணீர் தொட்டியைக் கட்டினால் அல்லது கிணறை வெட்டினால் அல்லது ஒரு தண்ணீர்க் குழாய் அமைத்தால் அதைக் குடிக்கவும் பயன்படுத்தலாம்; தேவைக்கு எடுத்தும் செல்லலாம். தேவைப்படுவோர் தண்ணீரைப் பிடித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே இவை பொதுவில் வைக்கப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும்.
தொங்கவிடப்பட்டிருக்கும் பேரிச்சம் பழத்தைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. தன்னுடைய ஆடையில் இரகசியமாக முடிந்து எடுத்துக் கொள்ளாமல் தேவையுடைய ஒருவர் அதிலிருந்து சாப்பிட்டால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று கூறினார்கள்.
தேவைப்படுவோர் உண்பதற்காகவே பள்ளிவாசலில் பேரீச்சம் பழக் குலையைத் தொங்கவிடும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது. எடுத்துச் செல்வதற்காக அல்ல. அதனால்தான் எடுத்துச் செல்லக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள்.
முஸைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் “வழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதனுடன்தான் அதன் குளம்பும் அதன் தண்ணீர்ப் பையும் உள்ளதே! நீர் நிலைகளுக்கு அது செல்கின்றது; மரத்திலிருந்து தின்கின்றது. அதைத் தேடக்கூடியவன் அதனிடம் வரும் வரை அதை நீ விட்டுவிடு” என்று கூறினார்கள்.
தன்னுடைய மேய்ச்சல் நிலத்திலே பாதுகாப்பாக உள்ள கால்நடைகளை (திருடுவதைப்) பற்றி கேட்கப்பட்டபோது, அதனுடைய விலையைக் போன்று இரு மடங்கு (அபராதமும்) தண்டனைக்குரிய அடியும் உண்டு என்று கூறினார்கள். தொழுவத்திலிருந்து (திருடி) எடுக்கப்பட்டது கேடயத்தின் மதிப்பிற்கு இருந்தால் அதற்கு கைவெட்டுதல் இருக்கிறது என்று கூறினார்கள். தானியங்கள் கிளைகளிலிருந்து (திருடி) எடுக்கப்பட்டால் என்னவென்று அவர் கேட்டார்.
யார் இரகசியமாகத் தன் ஆடையில் முடிந்து எடுத்துக் கொள்ளாமல் அந்த இடத்திலேயே சாப்பிடுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. யார் கட்டிக்கொண்டு செல்கிறாரோ அவருக்கு அதனுடைய மதிப்பைப் போன்று இரு மடங்கு (அபராதமும்) தண்டனையாக அடியும் இருக்கிறது என்று கூறினார்கள். தானியக் களஞ்சியத்திலிருந்து (திருடி) எடுக்கப்பட்டது கேடயத்தின் மதிப்பிற்கு இருந்தால் அதற்கு கைவெட்டப்படும் என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே மக்கள் வசிக்கும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருளின் நிலை என்ன? என்று அவர் கேட்டார். அதை ஒரு வருடம் அறிவிப்புச் செய். அதைத் தேடக்கூடியவன் காணப்பட்டால் ஒப்படைத்துவிடு. இல்லையென்றால் அது உனக்குரியதாகும் என்று கூறினார்கள். மக்கள் வசிக்காத பாழடைந்த இடங்களிலே பெற்றுக் கொள்ளப்படுவதைப் பற்றி கேட்டார். அதற்கு புதையலிலே ஐந்தில் ஒன்று (ஜகாத்தாக கொடுக்க வேண்டும்) என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத்
நிர்பந்தமான நிலையில் பிறர் பொருள் ஹலால்
நிர்பந்த நிலையை அடைந்தவர் பிறரது தோட்டத்தில் புகுந்து அதில் சாப்பிடுவதும் தனது குடும்பத்தின் பசியைப் போக்குவதற்காக எடுத்துக் கொள்வதும் குற்றமாகாது. இது போன்ற நிலைக்கு உள்ளானவர் பன்றி உள்ளிட்ட தடை செய்யப்பட்டவைகளை உண்பதுகூட குற்றமாகாது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை” என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
நிர்பந்தத்திற்கு ஆளானவர்கள் தடைசெய்யப்பட்டதை உண்ணலாம் என்பதை இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். என்றாலும் நிர்பந்தம் எந்த நிலையைக் குறிக்கும் என்பதை பெரும்பாலான மக்கள் அறியாமல் உள்ளனர்.
இதை உண்ணாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன் என்று பிறரால் மிரட்டப்படுவதுதான் நிர்பந்தம் எனச் சிலர் கூறுகின்றனர். இதை உண்ணாவிட்டால் இறந்து விடுவோம் என்ற நிலையை ஒருவர் அடைவதுதான் நிர்பந்தம் என்று மற்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்த இரண்டுமே நிர்பந்த நிலைதான். இவை மட்டுமின்றி ஒருவர் அன்றாடம் தனக்கும், தன் குடும்பத்துக்கும் போதிய உணவைப் பெறாமலிருப்பதும் நிர்பந்தம்தான்.
ஓர் ஆண்டு எங்கள் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. நான் மதீனாவுக்கு வந்து ஒரு தோட்டத்திற்குச் சென்றேன். அதிலுள்ள ஒரு தானியக் கதிரை எடுத்து உதிர்த்துச் சாப்பிட்டேன். எனது ஆடையிலும் சேகரித்துக் கொண்டேன். அப்போது தோட்டத்திற்குரியவர் வந்து விட்டார். என்னை அடித்து எனது ஆடையையும் பறித்துக் கொண்டார்.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று விபரம் கூறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோட்டத்திற்குரியவரிடம் “இவர் பசியோடு இருந்தபோது இவருக்கு நீர் உணவளிக்கவில்லை. இவர் அறியாதவராக இருந்தபோது இவருக்குக் கற்றுக் கொடுக்கவில்லை என்றார்கள்.
மேலும் எனது ஆடையை என்னிடம் திருப்பித் தருமாறு அவருக்குக் கட்டளையிட்டனர். மேலும் எனக்கு ஒரு வஸக் (அறுபது ஸாவு) அல்லது அரை வஸக் உணவு தருமாறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குக் கட்டளையிட்டனர்.
நூல்கள் :(அஹ்மத்: 16865),(நஸாயீ: 5314),(அபூதாவூத்: 2252),(இப்னு மாஜா: 2289),
பிறரது தோட்டத்தில் நுழைந்து அதிலுள்ளவற்றை உண்பதும், சேகரிப்பதும் மார்க்கத்தில் விலக்கப்பட்டிருந்தும் இந்த நபித்தோழர் தடையை மீறியதற்காக கண்டிக்கப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை. தோட்டத்தின் உரிமையாளரைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்தனர். அவருக்கோ போதுமான உணவுகளைக் கொடுத்து அனுப்புகிறார்கள். அன்றாடம் உணவு கிடைக்காமலிருப்பதும் நிர்பந்தம்தான் என்பதற்கு இது சான்றாக உள்ளது.
ஒரு மனிதர் தம் மனைவி மக்களுடன் “ஹர்ரா” எனுமிடத்தில் தங்கி இருந்தார். அவரிடம் இன்னொரு மனிதர் வந்து “எனது ஒட்டகம் காணாமல் போய் விட்டது. அதை நீர் கண்டால் பிடித்து வைத்துக் கொள்வீராக” எனக் கூறினார். (குடும்பத்துடன் தங்கியிருந்த அந்த மனிதர் அந்த ஒட்டகத்தைக் கண்டார். உரிமையாளரைக் காணவில்லை (அந்த ஒட்டகத்தைப் பிடித்து வைத்துக் கொண்டார்) அந்த ஒட்டகம் நோயுற்றது. அதை அறுப்பீராக என்று அவரது மனைவி கூறியபோது அவர் மறுத்து விட்டார்.
ஒட்டகம் செத்து விட்டது. அப்போது அவரது மனைவி “இதன் தோலை உரிப்பீராக! நாமும் சாப்பிட்டு, இறைச்சியையும் கொழுப்பையும் காய வைத்துக் கொள்வோம்” எனக் கூறினார். அதற்கு அம்மனிதர் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காமல் செய்ய மாட்டேன்” என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “பிறரிடம் தேவையாகாத அளவுக்கு உமக்கு வசதி இருக்கிறதா? எனக் கேட்டார்கள். அதற்கவர் “இல்லை” என்றார்.
“அப்படியானால் அதை உண்ணுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒட்டகத்தின் உரிமையாளர் வந்தார். அவரிடம் அந்த மனிதர் விபரத்தைக் கூறினார். இதை நீர் அறுத்திருக்கக் கூடாதா?” என்று அவர் கேட்டார் அதற்கு அந்த மனிதர் “நான் வெட்கமடைந்தேன். (அதனால் அறுக்கவில்லை)” என விடையளித்தார்.
நூல் : அபூதாவூத், அஹ்மத்
பிறரிடம் தேவையாகும் அளவுக்குப் பொருளாதார நிலை இருந்தால் அதுவும் நிர்பந்தம் தான் என்பது இந்த ஹதீஸில் இருந்து தெரிகின்றது. உயிர் போகும் நிலையை அடைவது மட்டுமே நிர்பந்த நிலை எனக் கூறுவது ஆதாரமற்றதும் சாத்தியமற்றதுமாகும்.
உயிர் போகும் நிலையை அடைந்தவன் விலக்கப்பட்டவற்றைத் தேடிச் செல்லும் அளவுக்குச் சக்தி பெற மாட்டான். அவனால் எழுந்து நிற்கக்கூட இயலாது. இத்தகைய நிலையில் உள்ளவனுக்கு இந்த அனுமதியால் எந்தப் பயனும் இல்லை. அல்லாஹ்வின் இந்த அனுமதி அர்த்தமற்றதாகவும் ஆகிவிடும்.
எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளின் நிலையை நாம் அறிவோம். கூழுக்கும் பாலுக்கும் வழியின்றி எலும்பும் தோலுமாக மக்கள் காட்சியளிப்பதைத் தொலைக்காட்சி வழியாகப் பார்த்து கண் கலங்காதவர்கள் இருக்க முடியாது.
இந்த மக்களுக்கு எந்த உணவும் தடுக்கப்பட்டதன்று. இதை அம்மக்கள் விளங்கி கிடைப்பதையெல்லாம் உண்டால் அந்த அவல நிலையிலிருந்து விடுபடுவார்கள். அங்குள்ளவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாக இருந்தும் இந்தச் சலுகையை அவர்கள் புரிந்து கொள்ளாமல் உள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட பொருள்கள்
நிர்பந்தமான நிலையில் பிறரது பொருட்கள் நமக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆவது போல் மற்றவர்கள் தவறவிட்ட பொருள்கள் நிபந்தனைக்கு உட்பட்டு நமக்கு அனுமதிக்கப்பட்டதாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, (பாதையில்) கண்டெடுக்கும் பொருளைப் பற்றிக் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய். பிறகு, அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதைப் பற்றி (அடையாளம்) தெரிவிப்பவர் எவராவது உன்னிடம் வந்தால் (அவரிடம் ஒப்படைத்து விடு.) இல்லையென்றால் அதை உன் செலவுக்கு எடுத்துக் கொள்” என்று கூறினார்கள்.
அந்தக் கிராமவாசி, “அல்லாஹ்வின் தூதரே! வழிதவறி (நம்மிடம் வந்து சேர்ந்து) விட்ட ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று கூறினார்கள். அந்தக் கிராமவாசி, “வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார்.
இதைக் கேட்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறி விட்டது. பிறகு, “உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதனுடன்தான் அதன் குளம்பும் அதன் தண்ணீர்ப்பையும் உள்ளதே! நீர் நிலைகளுக்கு அது செல்கின்றது; மரத்திலிருந்து தின்கின்றது” என்று கூறினார்கள்.
ஒரு பணப்பையைக் கண்டெடுத்தால் அதன் தொகையைக் குறித்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு வருட காலம் மக்கள் நடமாடும் இடத்தில் அதை அறிவிப்புச் செய்ய வேண்டும். அது என்னுடைய தொகை என்று யார் கூறுகிறாரோ அவரிடத்தில் தகுந்த அடையாளங்களைக் கேட்க வேண்டும்.
அவர் சரியான அடையாளங்களைச் சொன்னால் அவரிடம் அதை ஒப்படைக்க வேண்டும். ஒரு வருடம் அறிவிப்புச் செய்த பின் அதைக் கேட்டு யாரும் வரவில்லையென்றால் அது கண்டெடுத்தவருக்கு ஆகுமானதாகும். அது ஹராமாக இருக்குமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை.
மூன்று வருடம் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று ஒரு ஹதீஸ் வந்துள்ளது
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், “ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், “ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள்.
நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், “அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள். ஆகவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.
அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : அதன் பிறகு, நான் மக்காவில் வைத்து (இதை எனக்கு அறிவித்த) சலமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், “(நான் அறிவித்த ஹதீஸில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கூறினார்களா அல்லது ஓராண்டுக் காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கூறினார்களா என்று நான் அறிய மாட்டேன்” (அதாவது எனக்கு நினைவில்லை) என்று கூறினார்கள்.
முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் ஒரு வருடம் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று நாம் பார்த்தோம். ஆனால் அதற்கு மாற்றமாக மூன்று வருடமா ஒரு வருடமா என்று சந்தேகத்துடன் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே சந்தேகம் இல்லாத அறிவிப்பில் ஒருவருடம் என்று கூறப்பட்டதையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கண்டெடுக்கப்படும் பொருட்கள் குறித்து ஒரு வருடம் அறிவிப்புச் செய்து அதைப் பாதுகாக்க வேண்டும் என்பது பொதுவானதல்ல. இதில் விதிவிலக்குகளும் உள்ளன.
மக்கள் வாழுகின்ற அல்லது அடிக்கடி மக்கள் வந்து போகின்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுக்குத்தான் இது போன்ற அறிவிப்புகள் அவசியம். மக்கள் வசிக்காத பகுதியில் அல்லது மக்கள் அடிக்கடி நடமாடாத பகுதியில் ஒரு பொருளைக் கண்டெடுத்தால் அதற்கு இந்தச் சட்டம் பொருந்தாது. அதை உடனே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அது புதையல் எனும் நிலையை அடைந்து விடுவதால் அதில் இருபது சதவிகிதத்தை ஜகாத்தாகக் கொடுத்து விட்டு எண்பது சதவிகிதத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறியலாம்
முஸைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் “வழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதனுடன்தான் அதன் குளம்பும் அதன் தண்ணீர்ப் பையும் உள்ளதே! நீர் நிலைகளுக்கு அது செல்கின்றது; மரத்திலிருந்து தின்கின்றது. அதைத் தேடக்கூடியவன் அதனிடம் வரும் வரை அதை நீ விட்டுவிடு” என்று கூறினார்கள்.
தன்னுடைய மேய்ச்சல் நிலத்திலே பாதுகாப்பாக உள்ள கால்நடைகளை (திருடுவதைப்) பற்றி கேட்கப்பட்டபோது, அதனுடைய விலையைக் போன்று இரு மடங்கு (அபராதமும்) தண்டனைக்குரிய அடியும் உண்டு என்று கூறினார்கள். தொழுவத்திலிருந்து (திருடி) எடுக்கப்பட்டது கேடயத்தின் மதிப்பிற்கு இருந்தால் அதற்கு கைவெட்டுதல் இருக்கிறது என்று கூறினார்கள். தானியங்கள் கிளைகளிலிருந்து (திருடி) எடுக்கப்பட்டால் என்னவென்று கேட்டார்.
யார் இரகசியமாகத் தன் ஆடையில் முடிந்து எடுத்துக் கொள்ளாமல் அந்த இடத்திலேயே சாப்பிடுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. யார் கட்டிக்கொண்டு செல்கிறாரோ அவருக்கு அதனுடைய மதிப்பைப் போன்று இரு மடங்கு (அபராதமும்) தண்டனையாக அடியும் இருக்கிறது என்று கூறினார்கள். தானியக் களஞ்சியத்திலிருந்து (திருடி) எடுக்கப்பட்டது கேடயத்தின் மதிப்பிற்கு இருந்தால் அதற்கு கைவெட்டப்படும் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே மக்கள் வசிக்கும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருளின் நிலை என்ன? என்று அவர் கேட்டார்.
அதை ஒரு வருடம் அறிவிப்புச் செய். அதைத் தேடக்கூடியவன் காணப்பட்டால் ஒப்படைத்துவிடு. இல்லையென்றால் அது உனக்குரியதாகும் என்று கூறினார்கள். மக்கள் வசிக்காத பாழடைந்த இடங்களிலே பெற்றுக் கொள்ளப்படுவதைப் பற்றி கேட்டார். அதற்கு புதையலிலே ஐந்தில் ஒன்று (ஜகாத்தாக கொடுக்க வேண்டும்) என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத்
மதிப்பு குறைந்த அற்பமான பொருட்களைக் கண்டெடுத்தால் அது பற்றி எந்த அறிவிப்பும் செய்யாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். “இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் சாப்பிட்டு இருப்பேன்” என்று கூறினார்கள்.
தர்மமாக வழங்கப்பட்ட பொருள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஹராமாகும். எனவே தான் கீழே கிடந்த பேரீச்சம்பழத்தை உண்ணவில்லை என்று அவர்கள் காரணம் சொல்கிறார்கள். இந்தக் காரணம் மற்றவர்களுக்கு இல்லை. எனவே அற்பமான பொருளைக் கண்டெடுத்தால் உடனடியாக நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவருடம் அறிவிப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
புதையல் கண்டெடுக்கப்பட்டால்
நமக்குச் சொந்தமான இடத்திலோ அல்லது யாருக்கும் சொந்தமில்லாத இடத்திலோ நமக்கு ஒரு புதியல் கிடைத்தால் அதைப் பற்றி எந்த அறிவிப்பும் செய்ய வேண்டியதில்லை. எடுத்த உடன் அதை நாமே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதில் 20 சதவிகிதத்தை ஜகாத்தாகக் கொடுத்து விட வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: புதையலில் ஐந்தில் ஒரு பங்கு வசூலிக்கப்படும்.
(புகாரி: 1499, 2355, 6912, 6913)
கணவன் பொருளை மனைவி எடுக்கலாம்
மனைவி மற்றும் குழந்தைகளின் அவசியத் தேவைகள் அனைத்துக்கும் கணவன் தான் பொறுப்பாளியாவான். இந்தக் கடமையைக் கணவன் சரியாகச் செய்துவந்தால் கணவனின் பணத்தை கணவனுக்குத் தெரியாமல் மனைவி எடுக்கக் கூடாது.
கணவனிடம் வசதி இருந்தும் மனைவியின் உணவு உடை போன்ற அவசியத் தேவைகளுக்குப் போதுமான அளவுக்குக் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தால் கணவனைப் பாதிக்காத வகையில் கணவனின் பணத்தை மனைவி எடுத்துக் கொள்ளலாம்.
“அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும், என் குழந்தைக்கும் போதுமான(பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டாலே தவிர” என்று ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்!” என்று சொன்னார்கள்.
(புகாரி: 2211, 2460, 5359, 5364, 5370, 7161, 7180)
எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கணவனின் பொருளை மனைவி எடுத்துக் கொள்ளலாம் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. இது நிபந்தனைக்கு உட்பட்ட அனுமதியாகும்.
மனைவிக்கும் குழந்தைகளுக்கும் போதுமான அளவுக்கு கணவன் தராமல் இருந்தால் தான் இந்த அனுமதி. உணவு உடை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே எடுக்க வேண்டும். ஆடம்பரத்துக்கும் ஊதாரித்தனம் செய்வதற்கும் எடுக்கக் கூடாது.
இவ்வாறு எடுப்பது கணவனைப் பாதிக்கக் கூடியதாக ஆகக் கூடாது. அவர் கடனாளியாகும் அளவுக்கும் அவரது தொழில் பாதிக்கும் அளவுக்கும் எடுக்கக் கூடாது. இந்த நிபந்தனைகளை மேற்கண்ட ஹதீஸில் இருந்தே நாம் அறிந்து கொள்ள இயலும்.
கணவனுக்குத் தெரியாமல் கணவன் வீட்டுப் பொருட்களைக் களவாடி பிறந்த வீட்டுக்கு அனுப்பும் பெண்களும் உள்ளனர். மேற்கண்ட அனுமதி இவர்களின் திருட்டுக்குப் பொருந்தாது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.
எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவனின் அனுமதி இல்லாமல் கணவனின் வீட்டிலிருந்து எதையும் செலவு செய்யக்கூடாது என்று நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே உணவைக்கூட வழங்கக் கூடாதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் அதுதானே நம்முடைய செல்வங்களில் மிகச் சிறந்தது என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவூத்
கணவன் வீட்டில் உள்ள உணவை தனது பிறந்த வீட்டுக்கு வாரி வழங்குவதைத் தான் இது குறிக்கிறது. இல்லாதாருக்கு உதவுவதற்காக கணவனின் அனுமதி இல்லாமல் அவனைப் பாதிக்காத வகையில் தானதர்மம் செய்வதை இது குறிக்காது. ஏனெனில் கணவனைப் பாதிக்காத வகையில் தான தர்மங்களைச் செய்ய மனைவிக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண், தனது வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவு செய்தால், (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்பலன் அவளுக்குக் கிடைக்கும்! (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்பலன் அவளது கணவனுக்கு உண்டு! கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோன்ற (நற்பலன்) கிடைக்கும்! ஒருவர் மற்றவரின் நற்பலனில் எதனையும் குறைத்துவிட மாட்டார்.
(புகாரி: 1441, 1437, 1425, 2065)
பிள்ளைகள் பொருளை தந்தை எடுக்கலாம்
பிள்ளைகள் தலை எடுக்கும் வரை பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது தந்தையின் பொறுப்பாகும். தந்தை தளர்ந்து போய்விட்டால் அவரைக் கவனிக்கும் கடமை பிள்ளைகளுக்கு உள்ளது.
தந்தையின் அவசியத் தேவைகளைப் பிள்ளைகள் நிறைவேற்றாவிட்டால் தனது அத்தியாவசியத் தேவைகளுக்காக பிள்ளைகள் பணத்தை தந்தை எடுக்கலாம். ஊதாரித்தனம் செய்யும் வகையிலோ பிள்ளைகளைப் பாதிக்கும் வகையிலோ எடுக்கக் கூடாது.
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே எனக்குப் பிள்ளையும் செல்வமும் இருக்கின்றன. ஆனால் என்னுடைய தந்தை என் பொருளை எடுத்துக் கொள்கிறார்” என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீயும், உன்னுடைய செல்வமும் உன் தந்தைக்குரியவர்களே; நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானது. உங்களுடைய குழந்தைகளே என்று விளக்கமளித்தார்கள்.
நூல்கள் : அபூதாவூத், நஸாயீ,
உறவினர்களின் வீட்டில் உள்ள உரிமை
யாசகம் கேட்கக் கூடாது என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களிடம் யாசகம் கேட்பது கூடாது. ஆனாலும் நெருங்கிய உறவினர்களின், நெருங்கிய நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று உணவு கேட்பதும் எடுத்துச் சாப்பிடுவதும் யாசகம் கேட்பதில் அடங்காது. உணவுகளை உரிமையுடன் கேட்கலாம். எடுக்கலாம்.
இது இரு தரப்பிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு உறவினர் வீட்டில் நாம் உரிமையுடன் உணவு கேட்டால் அந்த உறவினர் நம் வீட்டில் அப்படி நடந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். இப்படி நண்பர்களிடமும் உறவினர்களிடமும் உரிமையுடன் உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது யாசகம் கேட்பதில் அடங்காது.
மேலும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் ஆண்கள் பெண்கள் அனைவரும் கூட்டாக அமர்ந்து உண்ணுவதும் தவறல்ல. அவ்வாறு உண்ணும் போது பெண்கள் இஸ்லாம் கூறும் முறைப்படி ஆடைகள் அணிந்திருப்பது அவசியம்.
உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை.
ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
விருந்துக்கும் கட்டுப்பாடு உண்டு
உறவினர் வீடுகளுக்கும் நன்பர்கள் வீடுகளுக்கும் சென்றால் அவர்கள் விருந்தளிக்கின்றனர். அது போல் நம்மிடம் வந்தால் நாம் விருந்தளிக்கிறோம். இதற்கு மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற போதும் இதற்கு ஒரு எல்லை வகுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் விருந்தளிப்பது தான் கடமையாகும். மூன்று நாட்கள் வரை விரும்பினால் விருந்தளிக்கலாம். மூன்று நாட்களுக்கு மேல் எந்த வீட்டிலும் விருந்தாளியாக தங்கக் கூடாது.
ஆயினும் விருந்தாளியாக இல்லாமல் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மருமகன் மருமகள்கள் போன்ற உறவினராக இருந்து அவர்கள் அதிக நாட்கள் தங்குவது வீட்டின் உரிமையாளருக்குச் சிரமமாக இல்லாவிட்டால் அதிக நாட்கள் தங்கலாம். அவர்கள் விருந்தாளியின் கணக்கில் வர மாட்டார்கள். வீட்டாருக்கு இது சிரமம் தருகிறதா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பேசிய போது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தமது கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும் என்று கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கொடை என்ன? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், (அவரு டைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று கூறினார்கள்.
அபூஷுரைஹ் அல்குஸாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். ஒரு பகல் ஓர் இரவு (விருந்துபசாரம்) அவருடைய கொடையாகும். ஒரு முஸ்லிமான மனிதர், தம் சகோதரரிடம் அவரைப் பாவத்தில் தள்ளும் அளவுக்குத் தங்கியிருப்பதற்கு அனுமதி இல்லை” என்று கூறினார்கள். மக்கள், “அவரைப் பாவத்தில் தள்ளுதல் எப்படி, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவ(ர் தம் சகோதர)ரிடம் தங்கி இருப்பார். ஆனால், விருந்துபசாரம் செய்யுமளவுக்கு அவரிடம் எதுவுமே இருக்காது” என்று கூறினார்கள்.