10) இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்

நூல்கள்: திருமறையின் தோற்றுவாய்

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்

இனி இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்பதன் விளக்கத்தைக் காண்போம்.

சூரதுல் ஃபாத்திஹாவில் மூன்று அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதைத் துவக்கத்திலேயே நாம் குறிப்பிட்டிருந்தோம். பிஸ்மில்லாஹிவையும் சேர்த்து முதல் நான்கு வசனங்கள் இறைவனின் பண்புகளைக் கூறும் விதமாக அமைந்துள்ளன. ஐந்தாவது வசனம் இறைவனிடம் நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியைக் கற்றுத் தருகின்றது.

மூன்றாவது அம்சமான ஆறாவது, ஏழாவது வசனங்கள் இறைவனிடம் அவனது அடியார்கள் பிரார்த்தனை செய்வதைக் கற்றுத் தருகின்றன. இந்த மூன்றாவது அம்சத்தைக் கொண்ட அந்த வசனங்களின் விளக்கவுரைகயையே இப்போது நாம் காணவிருக்கிறோம்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் (இறைவா எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக!) என்று அன்றாடம் பல தடவை இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறோம். ஆயினும் நாம் பிரார்த்திக்கின்ற நேரான வழி எதுவென்பதை அறிந்து கொள்ளாமலேயே இவ்வாறு பிரார்த்திக்கின்றோம். தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதையே நேரான வழி என்று கருதிக் கொண்டு பிரார்த்திப்பவர்களும் கூட உள்ளனர்.

நேர்வழி எதுவென்பதை அறிவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், அதில் நடப்பதற்கு முயலாமல் நேரான வழியைக் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

தொழுகையை நிறைவேற்றாத ஒருவன், தொழுவதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இறைவா! என்னைத் தொழுகையாளியாக்கு என்று பிரார்த்தனை செய்வது எவ்வாறு அர்த்தமற்றதோ அது போலவே நேரான வழியைக் காட்டு என்று பிரார்த்தனை செய்துவிட்டு நேரான வழியை அறிந்து கொள்ள முயலாமல் இருப்பதும் அர்த்தமற்றதாகும்.

நேரான வழியைக் காட்டுமாறு பிரார்த்திக்கக் கற்றுத் தரும் அல்லாஹ் திருக்குர்ஆனின் பல இடங்களில் நேரான வழி என்னவென்பதை அடையாளம் காட்டுகிறான். அதை உணர்ந்து நேர்வழியைக் கேட்கும் போது தான் இந்தப் பிரார்த்தனை அர்த்தமுள்ளதாக அமையும்.

குர்ஆனும், ஹதீஸுமே நேர்வழி

குர்ஆன், ஹதீஸ் இரண்டுமே ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழியாகும் என அல்லாஹ் திருக்குர்ஆன் நெடுகிலும் தெளிவுபடுத்துகிறான்.

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 43:43-44)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் சமுதாயத்தினரும் இறைவனால் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றியாக வேண்டும். அது தான் ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழியாகும் என்று இங்கே வலியுறுத்துகின்றான்.

மார்க்கத்தின் எந்த அம்சமானாலும், அதற்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆதாரம் உண்டா? என்று ஆராயாமல் கண்மூடி மற்றவர்களைப் பின்பற்றுபவர்கள் இந்தப் பிரார்த்தனையில் பொய்யுரைத்தவர்களாவார்கள்.

இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர் வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு (ஸிராதுல் முஸ்தகீமுக்கு) அழைக்கிறீர்.

(அல்குர்ஆன்: 42:52)

குர்ஆனையும், நபிவழியையும் விட்டு மத்ஹபுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு இவ்வசனத்தில் போதுமான அறிவுரை இருக்கின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட, இந்த வேதம் அருளப்படுவதற்கு முன் விசுவாசம் என்றால் என்ன? வேதம் என்றால் என்ன? என்பதை அறிந்திருக்கவில்லை. இந்த வேதம் அருளப்பட்ட பின்பே அவர்களால் அறிய முடிந்தது. இதன் துணை கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸிராதுல் முஸ்தகீம் பால் மக்களை அழைக்கின்றனர் என்கிறான் அல்லாஹ்.

திருக்குர்ஆனையும் நபிவழியையும் தவிர வேறு எதுவும் நேர்வழி கிடையாது என்பதற்கு இது தெளிவான சான்று. இறைவா! உனது வேதத்தையும், உனது தூதருடைய வழிகாட்டுதலையும் சான்றுகளாகக் கொண்டு நடக்கின்ற நேர்வழியைக் காட்டுவாயாக என்பதுவே இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்பதன் பொருளாக ஆகிவிடுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு முன் வந்த நபிமார்களும் கூட, அவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டிருந்த வேதங்களின் மூலமே நேர்வழியை அடைய முடிந்தது. உலகைப் படைத்தது முதல் இதுவே இறைவனது நியதியாக இருந்து வந்திருக்கின்றது என்பதைப் பின்வரும் வசனம் விளக்குகின்றது.

அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை வழங்கினோம். அவ்விருவருக்கும் (ஸிராதுல் முஸ்தகீம் எனும்) நேரான வழியைக் காட்டினோம்.

(அல்குர்ஆன்: 37:117-118)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்களின் கட்டளையை சிரமேற் கொண்டவர்களைத் தவிர வேறு எவரும் விசுவாசிகளாக, நேர்வழி பெற்றவர்களாக ஆகவே முடியாது என்பதைப் பின்வரும் வசனங்களில் வல்ல அல்லாஹ் கற்பிக்கிறான்.

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 4:65)

இதைத் தொடர்ந்து வரும் வசனங்களில் தமக்கு அறிவுரை கூறப்பட்டவாறு அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், அதிக உறுதியைக் காட்டுவதாகவும் இருந்திருக்கும். மேலும் அவர்களுக்கு நேரான வழியையும் (ஸிராதுல் முஸ்தகீமையும்) நாம் காட்டி இருப்போம் எனவும் கூறுகிறான்.

உங்களையே கொன்று விடுங்கள்! அல்லது உங்கள் ஊர்களிலிருந்து வெளியேறுங்கள்! என்று அவர்களுக்கு நாம் கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) அதை நிறைவேற்றியிருக்க மாட்டார்கள். தமக்கு அறிவுரை கூறப்பட்டவாறு அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், அதிக உறுதியைக் காட்டுவதாகவும் இருந்திருக்கும். அப்போது நாம் மகத்தான கூலியையும் அவர்களுக்கு வழங்கியிருப்போம். அவர்களுக்கு நேரான வழியையும் (ஸிராதுல் முஸ்தகீமையும்) காட்டியிருப்போம்.

(அல்குர்ஆன்: 4:66-68)

தங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சமயத்தில் அதற்குத் தீர்வு காண்பதற்காக அல்லாஹ்வின் தூதரிடம் அதாவது அவர்களின் போதனையின் பால் செல்லாதவர்கள் மூமின்கள் அல்லவென்று அல்லாஹ் தெளிவாக அறிவிக்கின்றான். மேலும், இந்தப் போதனையின் படி யார் நடக்கின்றார்களோ அவர்களுக்கே நேர்வழி காட்ட முடியும் எனவும் நிபந்தனை விதிக்கிறான்.

ஸிராதுல் முஸ்தகீமை அடைவதற்கு எதனை அல்லாஹ் நிபந்தனையாக ஏற்படுத்துகின்றானோ அதை விட்டு விட்டு ஸிராதுல் முஸ்தகீமைக் காட்டுவாயாக! என கூறுவதில் என்ன அர்த்தமிருக்க முடியும்? இதற்கு மாற்றமான எந்தக் கொள்கையும், செயல் முறைகளும் ஸிராதுல் முஸ்தகீமாக முடியாது.

இறைவனும், அவனது திருத்தூதரும் கூறக் கூடியவை நம்முடைய சிற்றறிவுக்கு எட்டவில்லையென்றாலும் அதையும் நம்பக் கூடியவர்கள் தான் ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழியில் இருப்பவர்கள் என்பதற்கு(அல்குர்ஆன்: 43:61)-வது வசனம் சரியான சான்றாக அமைந்துள்ளது.

அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே (ஸிராதுல் முஸ்தகீம் எனும்) நேர் வழி (எனக் கூறுவீராக.)

(அல்குர்ஆன்: 43:61)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த ஒருவர் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக உயிரோடு வானில் இருந்து கொண்டிருக்கிறார் என்பது நமது சிற்றறிவுக்கு எட்டாமலிருக்கலாம். வானில் இருப்பவர் எதை உண்கிறார்? எவ்வாறு அங்கே மலஜலம் கழிக்கிறார்? இரண்டாயிரம் ஆண்டுகளாக மரணிக்காமல் இருப்பது எப்படிச் சாத்தியமாக முடியும்? என்றெல்லாம் நம்முடைய அறிவு வினாக்களை எழுப்பலாம். உலக நடைமுறைக்கு இது முரணானது தான். நமது அறிவின் தீர்ப்புப் படி இது சாத்தியமற்றது தான்.

நமது அறிவுக்கு இது நம்ப முடியாததாக இருந்தாலும் இறைவனது ஆற்றலையும், வல்லமையையும் புரிந்து கொண்டவர்களுக்கு இது சாத்தியமானதாகவே தெரியும். எந்த அல்லாஹ் நடைமுறைக்கு மாற்றமாக ஈஸா நபியை தந்தையின்றி பிறக்கச் செய்தானோ அதே அல்லாஹ், ஈஸா நபியை எத்தனை காலத்துக்கு வேண்டுமானாலும் வாழச் செய்ய இயலும்.

அந்த அல்லாஹ் தான் ஈஸா கியாமத் நாளின் அடையாளமாகத் திகழ்கிறார் என்கிறான். அந்த அல்லாஹ் தான் இதிலே சந்தேகப்படக் கூடாது என்கிறான். அந்த அல்லாஹ் தான் இப்படி நம்பிக்கை கொள்வதை ஸிராதுல் முஸ்தகீம் என்கிறான். அந்த இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட இறுதித் தூதர் (ஸல்) அவர்களும் இதைப் பற்றி இன்னும் விரிவாக தெளிவாகச் சொல்லித் தருகின்றார்கள்.

இறைவனால் உயர்த்தப்பட்ட ஈஸா (அலை) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள். நீதியை நிலைநாட்டுவார்கள். தஜ்ஜாலைக் கொல்வார்கள். அவர்கள் வரக்கூடிய காலத்தில் செல்வம் பெருக்கெடுத்து ஓடும். வாங்குவதற்குக் கூட எவரும் இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் தெளிவான முன்னறிவிப்புகளை செய்துள்ளனர்.

(புகாரி: 2222, 2476)

இதில் ஐயம் கொள்பவனும், நம்ப மறுப்பவனும் நிச்சயமாக ஸிராதுல் முஸ்தகீமில் இல்லை.

இது ஈஸா (அலை) அவர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இறைவனும், அவனது தூதரும் சொல்லக் கூடிய எல்லா விஷயங்களுக்கும் பொதுவானது தான். அவ்விருவரும் கூறுவதில் எந்த ஒன்றிலாவது எவருக்காவது சந்தேகமோ, மறுப்போ இருக்குமானால் அவர்கள் அசத்திய வழியில் செல்பவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கி இரத்தினச் சுருக்கமாகப் பின்வருமாறு வல்ல அல்லாஹ் விளக்குகின்றான்.

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 6:153)

ஹனபி, ஷாபி, மாலிக், ஹம்பளி என்றும் ஷியா, காரிஜிய்யா, ராபிஜிய்யா என்றும் ஷாதுலிய்யா, காதிரிய்யா என்றும் நம்மிடையே எத்தனையோ மார்க்கங்கள்! ஒவ்வொரு பிரிவினருக்கும் கொள்கைள் தனி! இப்படியெல்லாம் பலவாறான வழிகளில் செல்வது நேர்வழி அல்ல. சாத்தானின் வழிகள் எனவும் இங்கே அடையாளம் காட்டுகிறான்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்று அன்றாடம் பல தடவை இறைவனிடம் பிரார்த்திக்கின்ற நாம் அல்லாஹ் எதனை நேர்வழி என அடையாளம் காட்டுகிறானோ, அதில் செல்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். பாரம்பரியப் பழக்கங்கள், முன்னோர்கள் சென்ற வழிமுறை, மதகுருமார்கள் மீது கொண்ட பக்தி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் தூதருடைய வழியை மட்டும் பின்பற்றுவது பலருக்கு எளிதில் சாத்தியமாவதில்லை. இதற்கான காரணத்தையும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

ஏற்கனவே இருந்த அவர்களின் கிப்லாவை விட்டும் (முஸ்லிம்கள்) ஏன் திரும்பி விட்டனர்? என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான் என்று கூறுவீராக! இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 2:142-143)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த சமயத்தில் கஃபாவை நோக்கித் தம் தொழுகைகளை தொழுது வந்தார்கள். மதீனா வந்த பின் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழலானார்கள். அதன் பின் இறைவனது கட்டளைக்கேற்ப மீண்டும் கஃபாவை நோக்கித் தொழலானார்கள்.

(புகாரி: 41, 399, 4486)

கஃபாவை விடுத்து பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழ ஆரம்பித்த போது மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) பழைய கிப்லாவை விட்டும் புதிய கிப்லாவின் பால் இவர் திரும்பக் காரணம் என்ன? என்று விமர்சிக்கலானார்கள். பைத்துல் முகத்தஸை விடுத்து மீண்டும் கஃபாவை நோக்கித் தொழ ஆரம்பித்த போது மதீனத்து யூதர்கள் இது போன்ற விமர்சனத்தைச் செய்தார்கள். இப்படி விமர்சித்தவர்களையே அல்லாஹ் அறிவீனர்கள் என்கிறான்.

இவர் என்ன அடிக்கடி திசை மாறுகிறார்? என்று அன்றைய யூதர்களும், இணை வைப்பவர்களும் எண்ணியதைப் போல் எண்ணாமல் அல்லாஹ் நமது எஜமான்; சட்டமியற்றவும் கட்டளையிடவும் அவனுக்கு முழு அதிகாரம் உண்டு; அவனது கட்டளையை அவனது தூதர் அவர்கள் எடுத்து வைக்கும் போது அதற்கு அப்படியே கட்டுப்பட்டு நடப்பதே முஸ்லிமுக்குரிய இலக்கணமாகும் என்ற நம்பிக்கையுடன் இதை யார் ஏற்றுக் கொண்டார்களோ அவர்களை நேர்வழியில் – ஸிராதுல் முஸ்தகீமில் செலுத்துவதாக அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

மற்றவர்களுக்கு இது மிகப் பெரிய பாரமாகத் தென்பட்டாலும் உண்மை விசுவாசிகளுக்கு அதாவது இறைவனின் ஆளுமையையும், தனது அடிமைத்தனத்தையும் உணர்ந்து கொண்டவர்களுக்கு இது பெரிய விஷயமாகத் தோன்றாது எனவும் அல்லாஹ் இங்கே கற்றுத் தருகிறான். இந்த இரண்டு வசனங்களும் இறைவனது கட்டளை எதுவானாலும் இறைத்தூதரது வழிகாட்டுதல் எதுவானாலும் அதை அப்படியே ஏற்று நடப்பது தான் ஸிராதுல் முஸ்தகீம் என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றன.

அல்லாஹ் இவ்வாறு கிப்லாவை அடிக்கடி மாற்றியது கூட இறைவனது கட்டளை எதுவானாலும் அப்படியே ஏற்கக் கூடியவர் யார்? தான் விரும்புவதை அல்லாஹ் கட்டளையிட்டால் மட்டும் ஏற்று மற்ற விஷயங்களில் அல்லாஹ்வை அலட்சியப்படுத்துபவர் யார் என்பதை அடையாளம் காட்டவே எனவும் அல்லாஹ் சொல்கிறான்.

இறைவனது கட்டளையும், இறைத்தூதருடைய வழிகாட்டுதலும் இது தான் என அறிந்த பின் அதை ஏற்க மறுப்பவர்களும், எதிர்த்து விமர்சனம் செய்பவர்களும் அறிவீனர்கள்; வந்த வழியே திரும்பிச் சென்றவர்கள். (அதாவது இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள்) எனவும் இங்கே அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான்.

ஏற்கனவே ஒரு கிப்லாவை நோக்கியதாக அல்லாஹ் கூறுகிறானே அந்தக் கிப்லாவை நோக்குமாறு குர்ஆனில் எந்தக் கட்டளையும் இல்லை. குர்ஆன் கட்டளையில்லாமல் இன்னொரு வஹீ மூலம் நபிகள் நயயகம் (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியதை தனது கட்டளையாக அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான்.

குர்ஆன் மட்டும் போதும் என்போர் யார்? இத்தூதரின் வழியையும் பின்பற்றுவோர் யார் என்பதை அறிந்திடவே கிப்லாவை மாற்றியதாக அவனே கூறுகிறான். இறைக் கட்டளையை மட்டுமின்றி இறைத்தூதரின் கட்டளையையும் சேர்த்துப் பின்பற்றுவதே நேரான வழி எனவும் அல்லாஹ் விளக்குகிறான்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என இறைவனிடம் பிரார்த்திக்கும் போது இறைவா! இது தான் நேர்வழி என்று எனக்குத் தெரிந்த பின் அதற்கு அப்படியே கட்டுப்பட்டு நடக்க அருள் புரிவாயாக! என் மனோ இச்சை இதை விரும்பாவிட்டாலும் அதை வெல்லக் கூடிய உறுதியை எனக்குத் தருவாயாக! என்ற எண்ணத்தை மனதிலிறுத்திப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வளவு அர்த்தமும் இந்த சின்னஞ்சிறு வாசகத்தில் உள்ளடங்கி இருக்கிறது.

ஸிராதுல் முஸ்தகீம் என்ற சொற்றொடரைப் பின் வரும் வசனங்களில் இறைவன் பயன்படுத்திள்ளான். இந்த வசனங்களைச் சிந்தித்தால் எவையெல்லாம் ஸிராதுல் முஸ்தகீமில் அடங்கும் என்பதை அறியலாம்.

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர் தாம், அதற்கு முரண்பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் (ஸிராதுல் முஸ்தகீமில்) செலுத்துவான்.

(அல்குர்ஆன்: 2:213)

அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்குக் கூறப்படும் நிலையிலும், அவனது தூதர் (முஹம்மத்) உங்களுடன் இருக்கும் நிலையிலும் எப்படி (ஏக இறைவனை) மறுக்கின்றீர்கள்? அல்லாஹ்வைப் பற்றிக் கொள்பவர் நேரான வழியில் (ஸிராதுல் முஸ்தகீமில்) செலுத்தப்பட்டு விட்டார்.

(அல்குர்ஆன்: 3:101)

வேதமுடையோரே! நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்து விட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். பலவற்றை அலட்சியம் செய்து விடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன. அவனது திருப்தியை நாடுவோருக்கு இதன் மூலம் அல்லாஹ் ஈடேற்றத்தின் வழிகளைக் காட்டுகிறான். தன் விருப்பப்படி அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு செல்கிறான். அவர்களுக்கு நேரான வழியைக் (ஸிராதுல் முஸ்தகீமை) காட்டுகிறான்.

(அல்குர்ஆன்: 5:15-16)

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் செவிடர்கள்; ஊமைகள். இருள்களில் அவர்கள் உள்ளனர். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோரை நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) செலுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 6:39)

ஒருவனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான். இதுவே உமது இறைவனின் (ஸிராதுல் முஸ்தகீம்) நேரான வழி. சிந்திக்கின்ற சமுதாயத்திற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்தி விட்டோம்.

(அல்குர்ஆன்: 6:125-126)

(முஹம்மதே!) கல்வி கொடுக்கப்பட்டோர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை நம்புவதற்காகவும், அவர்களது உள்ளங்கள் அவனுக்குப் பணிவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்). நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் நேரான பாதையை (ஸிராதுல் முஸ்தகீமை) காட்டுகிறான்.

(அல்குர்ஆன்: 22:54)

நீர் அவர்களை நேரான வழியை (ஸிராதுல் முஸ்தகீமை) நோக்கி அழைக்கிறீர்! மறுமையை நம்பாதோர் அவ்வழியை விட்டும் விலகியவர்கள்.

(அல்குர்ஆன்: 23:73-74)

தெளிவுபடுத்தும் வசனங்களை நாம் அருளினோம். தான் நாடியோரை அல்லாஹ் நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) செலுத்துகிறான். அல்லாஹ்வையும், இத்தூதரையும் நம்பினோம்; கட்டுப்பட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் இதன் பிறகு புறக்கணிக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். அவர்களிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர். உண்மை அவர்களுக்குச் சாதகமாக இருந்தால் அதற்குக் கட்டுப்பட்டு வருகின்றனர்.

அவர்களின் உள்ளங்களில் நோய் உள்ளதா? அல்லது சந்தேகம் கொள்கிறார்களா? அல்லது அல்லாஹ்வும், அவனது தூதரும் அவர்களுக்கு அநீதி இழைப்பார்கள் என்று அஞ்சுகிறார்களா? இல்லை! அவர்களே அநீதி இழைத்தவர்கள். அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது செவியுற்றோம்; கட்டுப்பட்டோம் என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 24:46-52)

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 43:43-44)

நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) அமர்ந்து கொள்வேன் என்று கூறினான். பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய் (என்றும் கூறினான்).

(அல்குர்ஆன்: 7:16-17)

இந்த வசனங்கள் அனைத்திலும் ஸிராதுல் முஸ்தகீம் எதுவென மிகத் தெளிவாக அல்லாஹ் விளக்குகின்றான். இறைவனது வசனங்களை விளங்கி நடப்பதும், இறைத்தூதர் கொண்டு வந்த மார்க்கத்தின் படி நடப்பதும் தான் ஸிராதுல் முஸ்தகீம். நூற்றுக்கு நூறு அதற்குக் கட்டுப்படுவதைத் தவிர வேறு எதுவும் ஸிராதுல் முஸ்தகீம் அல்ல.

வாயளவில் அல்லாஹ், ரசூலுக்குக் கட்டுப்பட்டோம் எனக் கூறி விட்டுப் பெரியார்கள், மகான்கள் சொன்ன சொற்களெல்லாம் சான்றுகள் என எவர்கள் நம்புகிறார்களோ அவர்கள் மூமின்களே அல்லர் எனவும் அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

வணக்கங்களை இறைவனுக்கு மட்டும் செய்வதும் நேர்வழியாகும்

வணக்க வழிபாடுகள் அனைத்தையும், இறைவனுக்கு மாத்திரமே உரித்தாக்கி, இறைவனல்லாத எவருக்கும் வணக்கத்தில் பங்கு எதையும் யார் அளிக்கவில்லையோ அவர்களும் நேர்வழியில் இருப்பதாக பல இடங்களில் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

மனிதர்களையும், மரங்களையும், கல்லையும், மண்ணையும், உயிருடனுள்ளவர்களையும், இறந்தவர்களையும், சிலைகளையும், சமாதிகளையும் ஒரு பக்கம் வணங்கிக் கொண்டு, அல்லாஹ்வையும் அவ்வப்போது வணங்குபவர்கள் நேர்வழியில் – ஸிராதுல் முஸ்தகீமில் இருப்பவர்கள் அல்லர் எனப் பல இடங்களில் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும் (எனவும் கூறினார்)

(அல்குர்ஆன்: 3:51)

அல்லாஹ்வே எனது இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழி (என்று கூறுவீராக!)

(அல்குர்ஆன்: 19:36)

அல்லாஹ்வே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேர் வழி (என்றும் கூறினார்.)

(அல்குர்ஆன்: 43:64)

(அல்குர்ஆன்: 6:81-87)முடிய உள்ள வசனங்களில் இறைவனுக்கு இணை வைக்காது அவனை மாத்திரமே வணங்குவதே ஸிராதுல் முஸ்தகீம் என்று இறைவன் கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 11:53-56)முடிய உள்ள வசனங்களில் இறைவனுக்கு மட்டுமே அஞ்சி, அவன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இறைவனல்லாத போலித் தெய்வங்களுக்கு அஞ்சாது துணிவுடன் நடப்பதை ஸிராதுல் முஸ்தகீம் என்று இறைவன் கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 15:40-43)முடிய உள்ள வசனங்களில் அல்லாஹ்வை மாத்திரமே வணங்குவது தான் ஸிராதுல் முஸ்தகீம் எனவும், ஷைத்தானால் இத்தகையோரை வழிகெடுக்க இயலாது எனவும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

(அல்குர்ஆன்: 16:120-121)வசனங்களில் இறைவனுக்கு எதையும், எவரையும் இணை வைக்காது இருப்பது ஸிராதுல் முஸ்தகீம் என்கிறான் அல்லாஹ்.

(அல்குர்ஆன்: 36:60-61)வசனங்களில் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதே நேர்வழி எனவும், இறைவனல்லாத எவரையும் வணங்கினால் அது ஷைத்தானை வணங்கியதாகவே கொள்ளப்படும் என்றும் அறிவிக்கின்றான் அல்லாஹ்.

இந்த வசனங்கள் அனைத்தையும் ஊன்றிக் கவனிப்பவர்கள் எது நேர்வழி என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்று இறைவனிடம் கேட்கும் போது இறைவா! உன்னைத் தவிர வேறு எவரையும் வணங்காத, உன்னை மட்டுமே வணங்குகின்ற நேர்வழியைக் காட்டுவாயாக என்பது அதன் பொருளாக அமைந்து விடுகிறது.