நபியின் கப்ருக்கு சென்றால் என்ன ஓதவேண்டும்?

கேள்வி-பதில்: இதர சட்டங்கள்

நபியின் கப்ருக்கு சென்றால் என்ன ஓதவேண்டும்?

நாம் பொது மையவாடிக்குச் சென்றால் கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையைத் தான் நபியின் கப்ருக்குச் சென்றால் கூறிக் கொள்ள வேண்டும். இதற்கு என பிரத்யேகமாக எதையும் கூற வேண்டியதில்லை.

“அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அஸ்ஸலாமு அலா அஹ்லிலித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்” என்றார்கள்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக் கூடியவர்களாக உள்ளோம்.)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (1774)

மதீனாவுக்குச் செல்வது பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்வது பற்றியும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.

“(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா” என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

(புகாரி: 1189, 1197, 1864, 1996)

இந்த ஹதீஸினடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் உட்பட எந்த அடக்கத்தலத்துக்கும் பிரயாணம் செய்யக் கூடாது என்று அறிய முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் வீடுகளை அடக்கத் தலங்களாக ஆக்காதீர்கள். மேலும் எனது அடக்கத் தலத்தில் விழா எடுக்காதீர்கள். என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் கூறும் சலவாத்து நீங்கள் எங்கிருந்தாலும் என்னை வந்தடையும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவுத் (1746)

தனது மண்ணறையில் மக்கள் குழுமி விடக் கூடாது என்பதற்காக நபியவர்கள் என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அது என்னை வந்தடையும் என்று போதிக்கிறார்கள்.

நபியவர்கள் மீது நாம் கூறும் சலவாத்தை வானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்கிறார்கள். எனவே மதீனாவிற்குச் சென்று சலாம் சொல்ல வேண்டும் என்று நினைப்பது தவறு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பூமியில் சுற்றித் திரியும் வானவர்கள் அல்லாஹ்விற்கு இருக்கிறார்கள். அவர்கள் என் சமூகத்தினரிடமிருந்து சலாத்தை எனக்கு எத்தி வைக்கிறார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : அஹ்மத் (3484)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளிவாசல் மதீனாவில் உள்ளது; பிரயாணம் செய்து அதிக நன்மையை நாடும் மூன்று பள்ளிகளில் ஒன்றாக அது அமைந்துள்ளது; அங்கே தொழுவது ஏனைய பள்ளிகளில் (மஸ்ஜிதுல் ஹராம் நீங்கலாக) தொழுவதை விட ஆயிரம் மடங்கு உயர்வானது என்ற நோக்கத்திற்காக மதீனாவுக்குச் செல்லலாம். ஹஜ்ஜுக்குச் சென்றவர்களும் மதீனா செல்லலாம்.

சொந்த ஊரிலிருந்தே அப்பள்ளியில் தொழுவதற்காகவே தனிப் பிரயாணமும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு மதீனாவுக்குச் சென்றவர்கள் அப்பள்ளியில் இயன்ற அளவு தொழ வேண்டும். அதன் பிறகு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தையும், மற்ற அடக்கத்தலங்களையும் ஸியாரத் செய்யலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை பிரத்யேகமாக ஸியாரத் செய்வது பற்றி ஒரே ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூட இல்லை. பொதுவாக கப்ருகளை ஸியாரத் செய்வது பற்றிக் கூறப்படும் ஹதீஸ்களின் அடிப்படையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரையும் ஸியாரத் செய்யலாம்.