09) ஷைத்தானால் ஏற்படும் தீங்கு

நூல்கள்: ஜின்களும் ஷைத்தான்களும்

9) ஷைத்தானால் ஏற்படும் தீங்கு

தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையானக் காரியங்களை புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்கு கட்டுப்படுபவர்கள் தீமையை செய்துவிடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.

மனிதன் தான் ஷைத்தானிற்கு கட்டுப்பட்டு தவறிழைக்கிறானேத் தவிர ஷைத்தான் யாரையும் வழுக்கட்டாயமாக அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அதுபோன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானேத் தவிர நன்மையான காரியங்களை செய்யவிடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்குவர மாட்டான். இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.

தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளை காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

4:119 وَّلَاُضِلَّـنَّهُمْ وَلَاُمَنِّيَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُبَـتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّٰهِ‌ؕ وَمَنْ يَّتَّخِذِ الشَّيْطٰنَ وَلِيًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِيْنًا ؕ‏

“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

(அல்குர்ஆன்: 4:119)

2:169 اِنَّمَا يَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَالْفَحْشَآءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ

அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.

(அல்குர்ஆன்: 2:169)

114:5 الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ‏

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.

(அல்குர்ஆன்: 114:5)

அதிகபட்சமாக ஷைத்தானால் என்ன செய்ய முடியும் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான்.

அப்போது இப்லீஸ், “(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, “நீதான் சரி(யான ஆள்)” என்று (பாராட்டிக்) கூறுவான்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலிலி)

(முஸ்லிம்: 5419)

வேறெதுவும் செய்ய முடியாது?

ஒருவரை பைத்தியமாக மாற்றுவது உடல் உறுப்புக்களை செயலிழக்கச் செய்து முடக்கிப்போடுவது போன்ற பாரதூரமான வேலைகளை ஷைத்தானால் செய்ய இயலாது. ஆனால் இவற்றையெல்லாம் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறித் தான் ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை தவறான வழியை காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

14:22   وَقَالَ الشَّيْطٰنُ لَـمَّا قُضِىَ الْاَمْرُ اِنَّ اللّٰهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَـقِّ وَوَعَدْتُّكُمْ فَاَخْلَفْتُكُمْ‌ؕ وَمَا كَانَ لِىَ عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّاۤ اَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِىْ‌ ۚ فَلَا تَلُوْمُوْنِىْ وَلُوْمُوْۤا اَنْفُسَكُمْ‌ ؕ مَاۤ اَنَا بِمُصْرِخِكُمْ وَمَاۤ اَنْتُمْ بِمُصْرِخِىَّ‌ ؕ اِنِّىْ كَفَرْتُ بِمَاۤ اَشْرَكْتُمُوْنِ مِنْ قَبْلُ‌ ؕ اِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏

“அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்” என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு

(அல்குர்ஆன்: 14:22)

17:65 اِنَّ عِبَادِىْ لَـيْسَ لَـكَ عَلَيْهِمْ سُلْطٰنٌ‌ ؕ وَكَفٰى بِرَبِّكَ وَكِيْلً

“எனது அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை” (என்றும் இறைவன் ஷைத்தானிடம் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.

(அல்குர்ஆன்: 17:65)

34:21 وَمَا كَانَ لَهٗ عَلَيْهِمْ مِّنْ سُلْطٰنٍ

அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை.

(அல்குர்ஆன்: 34:21)

குர்ஆன் கூறும் இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டால் பில்லி சூனியம் ஏவல் போன்ற பல்வேறு மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். பில்லி சூனியம் ஏவல் போன்ற காரியங்கள் ஷைத்தானின் உதவியால் நடப்பதாக பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட வசனங்கள் இந்த நம்பிக்கையை தகர்த்து எரிகிறது.

ஷைத்தானுடன் தொடர்பு படுத்திக் கூறும் வழக்கம்

கெட்டக் காரியங்களையும் வெறுப்பிற்குரிய விஷயங்களையும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறும் வழக்கம் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அரபுமொழியிலும் உள்ளது. அடுத்து வரக்கூடிய தலைப்புகளுக்கு இந்த விஷயத்தை நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாக இருப்பதால் இங்கே இது தொடர்பான ஆதாரங்களை குறிப்பிடுகிறோம்.

5:90 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

(அல்குர்ஆன்: 5:90)

மது அருந்துவது சூதாடுவது பலிபீடங்களை உருவாக்குவது குறிபார்ப்பதற்கு அம்புகளை பயன்படுத்துவது இவையனைத்தும் கெட்ட மனிதர்களின் செயல்பாடுகளாகும். ஆனால் இவற்றை அல்லாஹ் ஷைத்தானின் செயல்களாக மேற்கண்ட வசனத்தில் கூறுகிறான்.

18:63 قَالَ اَرَءَيْتَ اِذْ اَوَيْنَاۤ اِلَى الصَّخْرَةِ فَاِنِّىْ نَسِيْتُ الْحُوْتَ وَ مَاۤ اَنْسٰٮنِيْهُ اِلَّا الشَّيْطٰنُ اَنْ اَذْكُرَهٗ‌ ‌ۚ وَاتَّخَذَ سَبِيْلَهٗ فِىْ الْبَحْر‌ِ ‌ۖ عَجَبًا‏

“நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது” என்று (ஊழியர்) கூறினார்.

(அல்குர்ஆன்: 18:63)

மறதி உட்பட எல்லா தீமைகளும் இறைவன் புறத்திலிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. என்றாலும் கெட்ட விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்ற மரியாதைக்காகவே மறதியை ஷைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

ஷைத்தான் பைத்தியத்தை ஏற்படுத்துவானா?

2:275 اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ؕ

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக்கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 2:275)

பைத்தியமாக அவர்கள் எழுவதை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று இவ்வசனம் (அல்குர்ஆன்: 2:275) கூறுகின்றது. ஷைத்தான் தான் பைத்தியத்தை ஏற்படுத்துகிறான் என்று சிலர் இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டுகின்றனர்.

தீய காரியங்களைப் பற்றிக் கூறும் போது “ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறுவதைத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது. இந்த அடிப்படையை முன்பே விரிவாக விளக்கிவிட்டோம். மேலும் இதற்கு சிறந்த உதாரணமாக பின்வரும் வசனத்தை எடுத்துக்கொள்ளலாம்.

37:62 اَذٰ لِكَ خَيْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ‏

37:63 اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِيْنَ‏

37:64 اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِىْۤ اَصْلِ الْجَحِيْمِۙ‏

37:65 طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّيٰطِيْ

இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா? அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம். அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம். அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.

(அல்குர்ஆன்: 37:62-65)

நரகத்தில் உள்ள மரத்தின் பாளை ஷைத்தானின் தலைகளைப் போன்று இருக்கும் என்று இந்த வசனத்தில் கூறப்படுகிறது. இங்கு ஷைத்தானின் தலைகளைப் போல் என்று கூறப்பட்டிருப்பதை நேரடிப் பொருளில் விளங்கமாட்டோம். மோசமான தோற்றம் கொண்டதாக இருக்கும் என்பதை விவரிப்பதற்காக இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்றே புரிந்துகொள்வோம்.

இது போன்று தான் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியமாக எழுப்பப்படுவான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மோசமான நிலையில் எழுப்பப்படுவான் என்பது தான் இந்த வசனத்தின் பொருளே தவிர ஷைத்தானால் பைத்தியத்தை ஏற்படுத்த முடியும் என்றக் கருத்தில் புரிந்துகொள்ளக்கூடாது.

தீயகாரியங்களுக்கு அழைப்பு விடுவதைத் தவிர்த்து வேறெந்த அதிகாரமும் ஷைத்தானிற்கு வழங்கப்படவில்லை என்று குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவ்வாறிருக்க இதற்கு மாற்றமாக ஷைத்தானிற்கு பைத்தியத்தை ஏற்படுத்த முடியும் என்று விளங்குவது குர்ஆனிற்கு முரணாகும்.

இஸ்லாமிய நம்பிக்கைப்படி பைத்தியங்கள் எந்தத் தீமை செய்தாலும் அவர்கள் பாவிகளாக மாட்டார்கள். ஷைத்தானின் வேலை அனைவரையும் பாவிகளாக்குவது தான். பைத்தியமாக்கப்படுவதால் ஷைத்தானுக்கு நட்டமே தவிர லாபம் இல்லை. எனவே ஷைத்தான் யாரையும் பைத்தியமாக்கும் அதிகாரத்தையும் பெறவில்லை. அது அவனது அலுவலும் இல்லை.

ஷைத்தான் நோயை ஏற்படுத்துவானா?

ஷைத்தானிற்கு நோயை ஏற்படுத்தும் அதிகாரம் உள்ளது என்று வாதிடுபவர்கள் கீழ்கண்ட வசனத்தை தங்கள் வாதத்திற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள்.

38:41 وَاذْكُرْ عَبْدَنَاۤ اَيُّوْبَۘ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الشَّيْطٰنُ بِنُصْبٍ وَّعَذَابٍؕ‏
38:42 اُرْكُضْ بِرِجْلِكَ‌ ۚ هٰذَا مُغْتَسَلٌ ۢ بَارِدٌ وَّشَرَابٌ

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).

(அல்குர்ஆன்: 38:41)

அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்ட போது ஷைத்தான் இவ்வாறு செய்து விட்டானே எனக் கூறினார்கள் (அல்குர்ஆன்: 38:41). இதனால் நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக் கூடாது.

நோயை ஏற்படுத்துவது அல்லாஹ்விற்கு மட்டும் உரிய ஆற்றலாக இருந்தாலும் வெறுக்கத்தக்க விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்ற மரியாதை நிமித்தமாகவே நோயை ஷைத்தான் ஏற்படுத்தியதாக அய்யூப் (அலை) அவர்கள் கூறினார்கள்.

குர்ஆனில் வேறொரு இடத்தில் அய்யூப் (அலை) அவர்கள் செய்த இதே பிரார்த்தனையை அல்லாஹ் விவரிக்கிறான்.

21:83 وَاَيُّوْبَ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‌ ۖ‌ۚ‏
21:84 فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ‌ وَّاٰتَيْنٰهُ اَهْلَهٗ و مِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰى لِلْعٰبِدِيْنَ

“எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்” என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

(அல்குர்ஆன்: 21:83-84)

(அல்குர்ஆன்: 38:41)வது வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை இந்த வசனம் தெளிவாக விவரிக்கிறது.(அல்குர்ஆன்: 21:83)இந்த வசனத்தில் ஷைத்தானைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை. எனக்குத் துன்பம் நேர்ந்துவிட்டது என்றே அய்யூப் (அலை) அவர்கள் கூறியதாக உள்ளது.

தனக்கு துன்பம் ஏற்பட்டுவிட்டது என்பதைத் தான் அய்யூப் (அலை) அவர்கள் ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று குறிப்பிடுகிறார்கள்.

தீயகாரியங்களுக்கு அழைப்பு விடுவதைத் தவிர்த்து வேறெந்த அதிகாரமும் ஷைத்தானிற்கு வழங்கப்படவில்லை என்று குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவ்வாறிருக்க இதற்கு மாற்றமாக ஷைத்தானால் நோயை ஏற்படுத்த முடியும் என்று விளங்குவது குர்ஆனிற்கு முரணாகும்.

16:99 اِنَّهٗ لَـيْسَ لَهٗ سُلْطٰنٌ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ

நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை.

(அல்குர்ஆன்: 16:99)

குறிப்பாக நல்லடியார்களின் மீது ஷைத்தானிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மேலுள்ள வசனம் தெரிவிக்கிறது. அய்யூப் நபிக்கு நோயை ஏற்படுத்தும் ஆற்றல் ஷைத்தானிற்கு இருந்தது என்று நம்பினால் அய்யூப் (அலை) அவர்கள் நம்பிக்கைக் கொண்டவராக இருக்கவில்லை. இறைவனை மட்டும் சாந்தவராக இருக்கவில்லை. எனவே தான் ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினான் என்று கூற வேண்டிய அவல நிலை ஏற்படும்.

எனவே அய்யூப் (அலை) அவர்களுக்கு ஷைத்தான் நோயை ஏற்படுத்தவில்லை என்று நம்புவது தான் ஈமானிற்கு உகந்ததும் அய்யூப் நபியை கண்ணியப்படுத்தியதாகவும் அமையும்.

மேலும் நோய்களை ஏற்படுத்துவது இறைவனின் அதிகாரமாக இருக்கும் போது இந்த ஆற்றல் ஷைத்தானிற்கு உண்டு என்று நம்புவது இணைவைப்பில் கொண்டு போய் விடும்.

தீங்கை ஏற்படுத்துவது இறைவனின் அதிகாரம்

நன்மையை ஏற்படுத்துவது இறைவனுடைய அதிகாரமாக இருப்பது போல் தீமைகளை ஏற்படுத்துவதும் இறைவனுக்கு மட்டும் உரிய அதிகாரமாகும். இதில் நபிமார்கள் உட்பட எப்படிப்பட்ட மகானிற்கும் எள்ளளவு கூட ஆற்றல் இல்லை என்கிற போது ஷைத்தானிற்கு இந்த ஆற்றல் இருப்பதாக நினைப்பது தவறாகும்.

قُلْ فَمَنْ يَّمْلِكُ لَـكُمْ مِّنَ اللّٰهِ شَيْـًٔــا اِنْ اَرَادَ بِكُمْ ضَرًّا اَوْ اَرَادَ بِكُمْ نَفْعًا ‌ؕ بَلْ كَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا

“அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?” என்று கேட்பீராக! அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 48:11)

தீமைகளை செய்ய சக்தி பெற்றிருப்பதை இறைத் தன்மைக்கு அளவுகோலாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

5:76 قُلْ اَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَمْلِكُ لَـكُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ‌ؕ وَاللّٰهُ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

“அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?” என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 5:76)

10:106 وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكَ وَ لَا يَضُرُّكَ‌ۚ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِيْنَ‏

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

(அல்குர்ஆன்: 10:106)

ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றா?

ஒட்டு மொத்த ஜின் இனத்தையும் ஷைத்தான்கள் என்று குறிப்பிடும் வழக்கத்தை ஹதீஸ்களில் நம்மால் காணமுடிகிறது. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பொதுவாக ஜின்களை குறிப்பதற்கு ஷைத்தான்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

27:17 وَحُشِرَ لِسُلَيْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوْزَعُوْنَ

ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக் காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.

(அல்குர்ஆன்: 27:17)

34:12 وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ غُدُوُّهَا شَهْرٌ وَّرَوَاحُهَا شَهْرٌۚ وَ اَسَلْنَا لَهٗ عَيْنَ الْقِطْرِؕ وَمِنَ الْجِنِّ مَنْ يَّعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِاِذْنِ رَبِّهِؕ وَمَنْ يَّزِغْ مِنْهُمْ عَنْ اَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيْ

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்கு சுவைக்கச் செய்வோம்.

(அல்குர்ஆன்: 34:12)

மேற்கண்ட இரு வசனங்களிலும் சுலைமான் நபிக்கு ஜின்களை வசப்படுத்திக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இதேக் கருத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் வேற இடங்களில் கூறும் போது ஜின்கள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஷைத்தான்கள் என்று கூறுகிறான். இதை பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.

38:36 فَسَخَّرْنَا لَهُ الرِّيْحَ تَجْرِىْ بِاَمْرِهٖ رُخَآءً حَيْثُ اَصَابَۙ

அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது. ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம்.

(அல்குர்ஆன்: 38:36)

21:82 وَمِنَ الشَّيٰطِيْنِ مَنْ يَّغُوْصُوْنَ لَهٗ وَيَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰ لِكَ‌ ۚ وَكُنَّا لَهُمْ حٰفِظِيْنَۙ

ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.

(அல்குர்ஆன்: 21:82)

இவ்விருவசனங்களும் ஜின்களை ஷைத்தான்கள் என்று குறிப்பிடுகிறது. ஜின்களை ஷைத்தான்கள் என்று குறிப்பிடலாம் என்பதை தெளிவாக இதன் மூலம் அறியமுடிகிறது.

மனிதர்களின் ஆதிப்பிதாவாக ஆதம் (அலை) அவர்கள் இருப்பது போல் ஜின்களின் ஆதிப்பிதா ஷைத்தானாகும். ஜின்கள் அனைவரும் ஷைத்தானின் வழிதோன்றலாகும். ஜின்கள் அனைவரும் ஷைத்தானின் வழிதோன்றலாக இருப்பதால் தான் அல்லாஹ் ஜின்களுக்கு ஷைத்தான்கள் என்ற பெயரை சூட்டுகிறான்.

ஜின் இனத்தை கூறும் போது ஷைத்தான்கள் என்று ஹதீஸ்களிலும் குறிப்பிடப்படுகிறது. இதை பின்வரும் ஹதீஸ்களில் பார்க்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் “உ(க்)காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது விண் கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன.

(ஒட்டுக்கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) தம் கூட்டத்தாரிடம் திரும்பி வந்தனர். அப்போது அக்கூட்டத்தார்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர். ஷைத்தான்கள், “வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டுவிட்டது; எங்கள் மீது விண்கொள்üகள் ஏவிவிடப்பட்டன” என்று பதிலüத்தனர். “புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்க வேண்டும்.

எனவே, நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்கüலும் பரவிச்) சென்று புதிதாக நிகழ்ந்துவிட்ட இ(ந்த சம்பவத்)தை என்னவென்று ஆராயுங்கள்” என்றனர். அவ்வாறே அந்த ஷைத்தான்கள் திரும்பிச் சென்றனர். (அவர்கள் எல்லாத் திசைகளையும் ஆராய்ந்தபடி) திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி வந்தபோது, “உகாழ்’ சந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் “நக்லா’ எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்” என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று, “எங்கள் கூட்டாத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம்.

அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே இறைவனுக்கு (இனி) நாங்கள் (ஒரு போதும்) யாரையும் இணையாகக் கருதமாட்டோம்” என்று கூறினர். (இதையொட்டி) அல்லாஹ் தன் தூதருக்கு “நபியே! நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது…” என்று தொடங்கும் (இந்த 72ஆவது அத்தியாயத்தை)அருüனான்.

ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி “வஹி’யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலிலி)

(புகாரி: 773)

வானுலகத்தில் வானவர்கள் பேசிக்கொள்ளும் செய்தியை ஒட்டுக்கேட்பதற்காக ஜின்கள் சென்றன என்று குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகிறது. இந்த ஜின்களில் குர்ஆனை செவிமடுத்து அல்லாஹ்வை ஈமான் கொண்ட ஜின்களும் உண்டு. மேற்கண்ட ஹதீஸீல் ஜின்கள் என்று கூறுவதற்கு பதிலாக ஷைத்தான்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஜின்கள் ஷைத்தானுடைய வழிதோன்றல்கள் என்பதால் தான் ஜின்களை பொதுவாக ஷைத்தான்கள் என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது என்பதை அறியலாம்.

கெட்ட ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றா?

ஷைத்தான்கள் எனப்படுபவர்கள் ஜின்களில் கெட்டவர்கள் தான் என்று சிலர் கூறுகிறார்கள். இதற்கு மாற்றமாக கெட்ட ஜின்கள் வேறு. ஷைத்தான் வேறு என்றக் கருத்தையும் சிலர் கூறுகிறார்கள். இவ்விரண்டில் கெட்ட ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றே என்றக் கருத்துத் தான் சரியானதாகும்.

நல்ல ஜின்களுக்கு ஷைத்தான்கள் என்ற இப்பெயரை சூட்டாமல் கெட்ட ஜின்களை குறிப்பிடும் போது மட்டும் இப்பெயரை கூறும் வழக்கமும் உள்ளது. ஷைத்தானிடத்தில் இருக்கின்ற கெட்ட குணம் இருப்பதால் கெட்ட குணம் உள்ள ஜின்களுக்கு ஷைத்தான்கள் என்று கூறப்படுகிறது. இதை பின்வரும் வசனத்திலிருந்து விளங்கலாம்.

6:112 وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيٰطِيْنَ الْاِنْسِ وَالْجِنِّ يُوْحِىْ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُوْرًا‌ ؕ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوْهُ‌ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சி கரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

(அல்குர்ஆன்: 6:112)

ஜின்களிலும் மனிதர்களிலும் நபிமார்களுக்கு இடஞ்சல் கொடுத்த தீயவர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். கெட்ட ஜின்கள் என்பதும் ஷைத்தான்கள் என்பதும் ஒன்று என்பதை இதன் மூலம் அறியலாம்.

ஷைத்தான் உருமாறுவானா?

ஷைத்தான் தான் விரும்பும் போது விரும்பிய வடிவில் உருவமாறும் ஆற்றல் கொண்டவன் என்று பரவலாக பலரால் நம்பப்படுகிறது. சில ஆதாரங்களை தவறாக புரிந்து கொண்டதின் விளைவாக இப்படியொரு தவறான கருத்து பரவியுள்ளது.

ஆனால் உண்மையில் இவ்வாரு நம்புவதற்கு ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை. விரும்பிய வடிவில் உருமாறும் ஆற்றல் ஷைத்தானிற்கு வழங்கப்படவுமில்லை.

மனிதனாக உருமாறுவானா?

ஷைத்தான் மனித வடிவில் உருவெடுப்பான் என்று கூறுபவர்கள் கீழ்கண்ட ஹதீஸை ஆதாரமாக காட்டுவார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவன் இரவில் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறுகிறேன். அதற்கவன், “நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது!” என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், “அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்!” என்றார்கள். “மீண்டும் வருவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காகக்) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கிய போது அவனைப் பிடித்தேன். “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்!” என்று கூறினேன்.

அதற்கவன், “என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வரமாட்டேன்!” என்றான். அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன். விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் “அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்!” என்றார்கள்.

மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்( (ஒவ்வொரு முறையும்) “இனிமேல் வரமாட்டேன்!’ என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன், “என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயளிக்கக்கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!” என்றான். அதற்கு நான், “அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன். “நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்றான்.

அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் “நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்!’என்றேன். அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற(வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்!” என்று என்னிடம் அவன் கூறினான்” எனத் தெரிவித்தேன்.

-நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்- அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் உம்மிடம் உண்மையைத்தான் அவன் சொல்லியிருக்கின்றான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். தெரியாது! என்றேன். அவன்தான் ஷைத்தான்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 2311)

அபூஹுரைரா (ரலி) அவர்களிடத்தில் வந்த மனிதனை நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான் என்று கூறி இருக்கிறார்கள். எனவே ஷைத்தான் மனித வடிவில் உருவெடுப்பான் என்றக் கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது என்று சிலர் வாதிடுகிறார்கள்.

கெட்ட செயலை செய்பவர்களையும் கெட்ட குணமுள்ளவர்களையும் ஷைத்தான் என்று குறிப்பிடும் போங்கு குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளது. இந்த அடிப்படையை ஆதாரங்களோடு விளங்கிக்கொண்டால் மேற்கண்ட ஹதீஸையும் இது போன்று அமைந்த இன்ன பிற ஹதீஸ்களையும் சரியான பொருளில் விளங்கிக்கொள்ள முடியும்.

கெட்ட குணம் மற்றும் கெட்ட செயல் உள்ளவர்களுக்கு ஷைத்தான் என்று கூறப்படும்

2:14 وَاِذَا لَقُوْا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْاۤ اٰمَنَّا ۖۚ وَاِذَا خَلَوْا اِلٰى شَيٰطِيْنِهِمْۙ قَالُوْاۤ اِنَّا مَعَكُمْۙ اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது “நம்பிக்கை கொண்டுள்ளோம்” எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது “நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே” எனக் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 2:14)

கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 3275)

(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “அல்அர்ஜ்’ எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலிலி)

(முஸ்லிம்: 4548)

தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடித்திரிபவரையும் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கு சொல்லப்பட்டுள்ள ஷைத்தான் என்ற வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் விளங்கமாட்டோம்.

நேரடிப் பொருளில் விளங்கினால் தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடுபவரையும் ஷைத்தான் என்று கூற வேண்டிய நிலை வரும். இவர்களிடம் கெட்ட செயல் உள்ளது என்ற அடைப்படையில் தான் இவர்களை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எல்லோரும் புரிந்துகொள்கிறோம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் சொல்லப்பட்ட ஷைத்தான் என்ற வார்த்தையும் இது போன்றே நேரடிப்பொருளில் பயன்படுத்தப்படாமல் கெட்டவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருடவந்தவனை பொய்யன் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பது இதையே உணர்த்துகிறது.

ஸகாத் பொருளை திருடுவதற்காக வந்தவன் அபூஹுரைரா (ரலி) அவர்களை ஏமாற்றி திருட்டு வேளையில் ஈடுபட்டதால் அவனை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் உண்மையில் அவன் மனிதனாகத் தான் இருந்தான்.

மனிதர்களின் கண்களுக்குப்படாமல் வாழும் நிலையை ஷைத்தான்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வந்தது ஷைத்தானாக இருந்தால் அவனை அபூஹுரைரா (ரலி) அவர்களால் பார்த்திருக்க முடியாது.

ஆனால் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அவனை பார்த்ததோடு மட்டுமல்லாமல் அவனை தன் கைகளால் பிடித்தும் கொள்கிறார்கள். வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருக்கவில்லை. கெட்ட மனிதனாகவே இருந்தான் என்பதை இதன் மூலம் அறியலாம்.

மேலும் மனிதர்கள் யாரும் பார்க்க முடியாத வகையில் ஷைத்தானால் வர இயலும். இது தான் ஷைத்தான்களின் எதார்த்த தன்மையும் கூட. அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருந்தால் அவன் அபூஹுரைரா (ரலி) அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் வந்து திருடிச் சென்றிருப்பான்.

திருடக்கூடியவன் யாரும் கண்டிராத வகையில் திருடிச் செல்லத் தான் விரும்புவான். ஆனால் அவனால் அவ்வாரு செய்ய இயலவில்லை. திருட வந்தவன் அபூஹுரைராவிடம் மாட்டிக் கொண்டு கெஞ்சுவதிலிருந்து அவன் சாதாரண மனிதன் தான் என்பதை சந்தேகமற அறியலாம்.

ஷைத்தான்களின் உணவு முறையும் மனிதர்களின் உணவு முறையும் முற்றிலும் வேறுபட்டதாகும். கால்நடைகளின் சாணங்களும் எலும்புகளும் கரிக்கட்டைகளும் தான் ஜின்களின் உணவு என்று ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் முன்பு கூறிய பொருட்களை திருடுவதற்காக வரவில்லை. மனிதர்களின் உணவாக இருக்கக்கூடிய பொருட்களையே திருடுவதற்காக வந்துள்ளான். வந்தவன் சாதாரண மனிதன் தான் என்பதை இக்கருத்து மேலும் வலுவூட்டுகிறது. எனவே இந்த செய்தியை வைத்துக்கொண்டு ஷைத்தான் மனித வடிவத்தில் வருவான் என்று வாதிடுவது தவறாகும்.

நாய் வடிவில் வருவானா?

அபூதர் அல்கிஃபாரீ (ரலிலி) அவர்கள், “உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும்

போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.

உடனே நான், “அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும்” என்று கூறினார்கள் என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்)

(முஸ்லிம்: 882)

ஷைத்தான் நாய் வடிவில் உருமாறுவான் என்று கூறுபவர்கள் மேற்கண்ட ஹதீஸையே ஆதாரம் காட்டுகிறார்கள். கருப்பு நாயை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை வைத்து ஷைத்தான் நாய் வடிவில் வர முடியும் என்று வாதிடுகிறார்கள்.

ஆனால் உண்மையில் ஷைத்தான் நாயாக உருமாறினான் என்பதற்கோ அல்லது சாதாரண நாயாக இருந்த பிராணியின் உடம்பில் ஷைத்தான் நுழைந்து கொண்டான் என்று கூறுவதற்கோ இந்த செய்தியில் எந்த ஆதாரமும் இல்லை.

தீய குணமுள்ளவைகளுக்கும் கெடுதல் தருபவைகளுக்கும் ஷைத்தான் என்று கூறப்படும் என்பதற்கு முன்பு ஆதாரங்களை கூறியிருக்கிறோம். இந்த அடிப்படையில் தான் இந்த ஹதீஸிலும் கறுப்பு நாயை ஷைத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மிகவும் கெடுதல் தரக்கூடிய பிராணி என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது.

நாய் பாம்பு போன்ற பிராணிகளை நபியவர்கள் ஷைத்தான் என்று குறிப்பிட்டதைப் போல் ஒட்டகங்களையும் ஷைத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒட்டகத் தொழுவத்தில் தொழுவது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத் தொழுவத்தில் தொழாதீர்கள். ஏனென்றால் ஒட்டகங்கள் ஷைத்தான்களாகும் என்று கூறினார்கள். ஆட்டுகளை கட்டுமிடத்தில் தொழுவது பற்றி கேட்கப்பட்ட போது அங்கே நீங்கள் தொழுகலாம். ஏனென்றால் அவை பரகத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

(அபூதாவூத்: 184, 156)

ஒட்டகங்கள் ஆடுகளைப் போன்று அமைதியாக இருக்கும் பிராணி இல்லை. தொழுது கொண்டிருக்கும் போது தொழுகையாளியின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் இடஞ்சல்களை தரும் பிராணி என்பதால் நபியவர்கள் ஒட்டகங்களை ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள். இந்த அடிப்படையில் தான் நாய் பாம்பு போன்ற பிராணிகளையும் நபியவர்கள் ஷைத்தான் என்று கூறியுள்ளார்கள்.

பொதுவாக நாய்கள் அனைத்துமே கெடுதல் தரக்கூடியவை தான். வேட்டையாடுவதற்கும் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் இப்பிராணி உதவுவதால் இந்த வகை நன்மைக்காக மட்டும் நாய்களை பயன்படுத்திக்கொள்வதை மார்க்கம் அனுமதிக்கிறது.

ஆனால் கறுப்பு நிற நாய்கள் பார்ப்பதற்கு கொடூரமாகவும் கெடுதல் தரக்கூடியதாகவும் இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் கறுப்பு நிற நாயை மட்டும் கொல்லுமாறு கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதையடுத்து, கிராமத்திலிலிருந்து ஒரு பெண் (மதீனாவை நோக்கி) தனது நாயுடன் வந்தால், அதையும் நாங்கள் கொன்றோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்வதற்குத் தடை விதித்தார்கள். மேலும், “கண்களுக்கு மேலே இரு வெண் புள்ளிகள் உள்ள கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

(முஸ்லிம்: 3199)

கறுப்பு நிற நாய் வெறிபிடித்த நாயாக இருப்பதால் அதைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலிலி, வெறிநாய் ஆகியனவாகும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(புகாரி: 1829)

எனவே கெடுதல் தரக்கூடிய வஸ்த்துக்களுக்கு ஷைத்தான் என்று கூறும் வார்த்தைப் பிரயோகம் ஹதீஸ்களில் காணப்படுவதால் இது போன்ற ஹதீஸ்களை கொண்டு வந்து ஷைத்தான் உருமாறுவான் என்று வாதிடுவதற்கு ஆதாரமாக காட்டடக்கூடாது.

ஷைத்தான் திடீரென நாயாக மாறினான் அல்லது நாயுடைய உடலில் ஷைத்தான் புகுந்து கொண்டதால் அந்த நாய் ஷைத்தானக மாறியது என்று தெளிவாக ஹதீஸில் இருந்தால் மட்டுமே ஷைத்தான் என்பது அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது சரியாகும்.

உருமாறிய செய்தியோ உடலில் புகுந்த செய்தியோ ஹதீஸில் இல்லை என்கிற போது இவ்வாறு வாதிடுவது தவறாகும். மாற்று மதத்தினர் தங்கள் கடவுள்களுக்கு இவ்வாறு உருமாறும் தன்மை இருப்பதாக நினைக்கிறார்கள். எனவ ஷைத்தான் இவ்வாறு மாறுவான் என்று நம்புவது ஒரு வகையில் மாற்று மதத்தினர்களின் நம்பிக்கையை ஒத்திருக்கிறது.

பாம்பு வடிவில் வருவானா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய ஜின்கள் சில உள்ளன. உங்களில் ஒருவர், அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புகளில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்புச் செய்யட்டும். அதற்குப் பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடட்டும்! ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

(முஸ்லிம்: 4504)

ஷைத்தான் பாம்பு வடிவில் வருவான் என்று கூறுபவர்கள் மேற்கண்ட செய்தியை தங்கள் வாதத்திற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள். ஷைத்தான் மனிதாகவும் நாயாகவும் வர முடியாது என்பதற்கு நாம் என்ன விளக்கங்களை கூறினோமோ அவ்விளக்கங்கள் அனைத்தும் இங்கேயும் பொருந்திப்போகிறது.

கெடுதல் தருகின்ற வஸ்த்துக்களை ஷைத்தான்கள் என்று குறிப்பிடும் வார்த்தை பிரயோகத்தை நபி (ஸல்) அவர்கள் கடைபிடித்துள்ளார்கள் என்பதை முன்பே பார்த்தோம். மூன்று நாட்கள் ஆகியும் வீட்டை விட்டு வெளியேறாவிட்டால் அது சாதாரண கெடுதல் தரக்கூடிய நச்சுப்பாம்பு என்பதால் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைக் கொல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.

கெடுதல் தராத அல்லது கெட்ட குணமில்லாத உயிரினங்களுக்கு ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை. பாம்பு பள்ளி பருந்து தேள் எலி வெறிநாய் ஆகிய மனிதர்களுக்கு இடஞ்சல் தரும் பிராணிகளை நபி (ஸல்) அவர்கள் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். இவைகளால் கேடு உண்டு என்ற காரணித்திற்குத் தான் நபியவர்கள் இவைகளை கொல்லுமாறு கட்டளையிட்டார்கள்.

கருப்பு நாயும் பாம்பும் உண்மையில் ஷைத்தானாக இருந்தால் இவற்றை நாம் கொல்லும் போது ஷைத்தானையே கொல்கிறோம் என்று அர்த்தமாகிறது. மறுமை நாள் ஏற்படும் வரை இறைவனிடம் ஷைத்தான் சாகாவரம் வாங்கி இருக்கும் போது நம்மால் ஷைத்தானை எவ்வாறு கொல்ல முடியும் என்று சிந்தித்துப் பார்த்தாலும் நாயையும் பாம்பையும் ஷைத்தான் என்று குறிப்பிட்டதின் சரியான பொருளை விளங்கிக்கொள்ளலாம்.

நாமும் நமது பேச்சுக்களில் இந்த முறையை கடைபிடிக்கிறோம். ஒருவரை ஏசும் போது ஷைத்தான் என்று கூறி ஏசும் பழக்கம் நம்மிடம் உள்ளது. ஷைத்தான் என்று ஏசப்பட்டவர் உண்மையில் ஷைத்தான் என்று கேட்பவர்கள் யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். கெட்ட செயல்பாடு உள்ளதை உணர்த்துவதற்காகவே இவ்வாறு சொல்லப்பட்டது என்றே புரிந்துகொள்வோம்.

பூனை வடிவில் வருவானா?

பூனை வடிவில் ஷைத்தான் வருவான் என்றக் கருத்தையும் சிலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தொகுத்த ஃபத்ஹுல் பாரி என்ற நூலை மேற்கொள்காட்டுகிறார்கள்.

ஃபத்ஹுல் பாரி என்பது ஹதீஸ்களை பதிவு செய்கின்ற நூல் அல்ல. இமாம் புகாரி அவர்கள் தொகுத்த சஹீஹுல் புகாரிக்கு விரைவுரையாகும். பூனை வடிவில் ஷைத்தான் வந்ததாக எந்த அறிவிப்பாளர் தொடரும் இல்லாமல் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நாம் தேடிப்பார்த்தவரை இப்படி ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் எங்கும் இடம்பெறவில்லை. எனவே ஆதாரமில்லாமல் பூனை வடிவில் ஷைத்தான் வருவான் என்று நம்புவது தவறாகும்.