08) மனிதர்களின் விரோதி
8) மனிதர்களின் விரோதி
மனிதர்களை வெற்றியடைய விடாமல் நரகத்திற்கு அழைப்பது ஷைத்தானுடைய குறிக்கோள் என்பதால் அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் ஷைத்தானைப் பற்றி நமக்கு எச்சரிக்கை செய்கிறான். அவன் மனிதர்களுக்கு பகிரங்கமான விரோதி என்றும் குறிப்பிடுகிறான்.
ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.
மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.
ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.
ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான்.
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.
நபிமார்களுக்கு விரோதி
மக்களை வழிகேட்டிற்கு செல்ல விடாமல் நல்வழிபடுத்துவது நபிமார்களின் பணியாகும். இந்தப் பணி ஷைத்தானிற்கு பிடிக்காததும் அவனுக்கு எதிரானதுமாகும். எனவே இப்பணியில் ஈடுபட்ட நபிமார்களுக்கு ஷைத்தான் பல வழிகளில் இடஞ்சல்களை ஏற்படுத்தி இருக்கிறான்.
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்கிட ஷைத்தான் போட்டதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.
கெட்ட தோழன்
இஸ்லாமிய விதிமுறைகளை மறந்து தீமைகளில் வீரியமாக ஈடுபடுபவர்களுக்கு ஷைத்தானே தோழனாவான். இவர்களுடைய மனதில் ஷைத்தான் போடுகின்ற தவறான எண்ணங்களுக்கிணங்க இவர்கள் செயல்படுகிறார்கள்.
எதிரியாக பார்க்க வேண்டிய ஷைத்தானை ஆலோசனைக் கூறும் நண்பனைப் போல் கருதி அவன் சொல்லுக்கு கட்டுப்படுவதால் இவர்களுக்கு ஷைத்தான் கெட்ட தோழனாகிவிடுகிறான்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.
43:36 وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطٰنًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ
43:37 وَاِنَّهُمْ لَيَصُدُّوْنَهُمْ عَنِ السَّبِيْلِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ
43:38 حَتّٰٓى اِذَا جَآءَنَا قَالَ يٰلَيْتَ بَيْنِىْ وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِيْنُ
எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவருக்கு ஒரு ஷைத்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான். அவர்கள் (நல்) வழியை விட்டும் மக்களைத் தடுக்கின்றனர். தாம் நேர் வழி பெற்றோர் எனவும் எண்ணுகின்றனர்.
முடிவில் அவன் நம்மிடம் வரும் போது “எனக்கும், உனக்கும் இடையே கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருந்திருக்கக் கூடாதா? நீ கெட்ட தோழனாவாய்” என்று அவன் (ஷைத்தானிடம்) கூறுவான்.
ஷைத்தானின் நண்பர்கள்
ஷைத்தானின் விருப்பத்திற்கேற்ப தவறான காரியங்களில் ஈடுபடுபவர்கள் ஷைத்தானின் நண்பர்களாவர்.
சிலருக்கு அவன் நேர் வழி காட்டினான். மற்றும் சிலர் மீது வழி கேடு உறுதியாகி விட்டது. அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர். தாங்கள் நேர் வழி நடப்போர் எனவும் எண்ணிக் கொள்கின்றனர்.
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறு கின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப் பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.
அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
ஒவ்வொருவருடனும் இருக்கிறான்
நபி (ஸல்) அவர்களைத் தவிர்த்து ஷைத்தான் எல்லோரிடமும் இருக்கிறான். இதற்கு நல்லவர்களோ சஹபாக்களோ விதிவிலக்கில்லை. அனைவரிடமும் இருந்து கொண்டு கெட்ட எண்ணங்களை ஏற்படுத்துவான். நல்லவர்கள் இவன் கூறுவதை புறக்கணித்துவிடுவார்கள். தீயவர்கள் செயல்படுத்துவார்கள்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலிலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள்மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர்மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?” என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்’ என்றார்கள். “ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்’ என்றார்கள். நான், “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்” என்று சொன்னார்கள்.
எல்லோரிடமும் ஷைத்தான் இருக்கிறான் என்ற இந்த உண்மையை பலர் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு பைத்தியமோ பலவீனங்களோ நோய்களோ ஏற்படும் போது அவர்களிடத்தில் ஷைத்தான் வந்துவிட்டதாக தவறாக நம்புகிறார்கள்.
ஷைத்தான் ஒருவரிடத்தில் இருப்பதால் அவருக்கு பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்மையானால் மனிதர்கள் அனைவருக்கும் அப்படி பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட வேண்டும். ஏனென்றால் ஷைத்தான் அனைவரிடமும் இருக்கிறான்.
ஆனால் இவ்வாறு அனைவருக்கும் பைத்தியமோ மோசமான நோய்களோ உளறல்களோ ஏறபடுவதில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் இது போன்ற பலவீனங்கள் ஏற்படுகிறது. இறைவனுடைய நாட்டத்தால் இந்த பலவீனங்கள் ஏற்படுகிறதே தவிர ஷைத்தானால் ஏற்படுவதில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.
உடலில் இரண்டரக் கலந்துள்ளான்
ஷைத்தான் நம் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறான் என்றக் கருத்தை பின்வரும் ஹதீஸ்கள் கூறுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்.
அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ரலி)
உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திற்கு என்னை ஆளுநராக நியமித்தார்கள். நான் தொழுகும் போது வேறு விஷயங்களில் என் கவனம் சென்றுகொண்டிருந்தது. இதனால் நான் எத்தனை ரக்அத்துகள் தொழுதேன் என்பதை கூட மறக்கலானேன். இதை (அடிக்கடி) நான் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நீ அபுல் ஆஸுடைய மகன் (உஸ்மானா?) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு நான் ஆம் அல்லாஹ்வின் தூதரே என்றேன். நீங்கள் வந்ததற்கு என்ன காரணம்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே நான் தொழுகும் போது வேறு விஷயங்களில் என் கவனம் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் நான் எத்தனை ரக்அத்துகள் தொழுதேன் என்பதை கூட மறந்துவிடுகிறேன் என்று கூறினேன். இது ஷைத்தானால் ஏற்படுகிறது என்று அவர்கள் கூறிவிட்டு அருகில் வா என்றார்கள்.
நான் நபியவர்களுக்கு அருகில் எனது குதிங்கால்களை ஊன்றி அமர்ந்துகொண்டேன். அவர்களது கரத்தால் என் நெஞ்சில் அடித்து எனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு என்று கூறினார்கள். இவ்வாறு அவர்கள் மூன்று முறை செய்துவிட்டு உன் பணியை துவங்கு என்று (என்னிடம்) கூறினார்கள்.
அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஷைத்தான் உஸ்மான் என்ற இந்த நபித்தோழரின் உடலில் இருந்து கொண்டு தொழுகையில் கவனத்தைத் திருப்பும் வேலையை செய்துள்ளான் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.
ஷைத்தான் நமது உடலுடன் கலந்திருந்தாலும் தீய எண்ணங்களை மட்டுமே அவனால் ஏற்படுத்த முடியுமே தவிர கை கால்களை முடக்குவதோ நோய்களை ஏற்படுத்துவதோ பைத்தியமாக்குவதோ ஷைத்தானால் முடியாத காரியம்.
ஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்
ஷைத்தானை விரட்டுவதாகக் கூறி சம்பாதிக்க நினைப்பவர்களும் மக்களை ஏமாற்றுபவர்களும் ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் இடஞ்சல்களை விவரிக்கும் சில ஹதீஸ்களை மக்களிடம் சொல்கிறார்கள். ஷைத்தானால் மனிதனுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுவதால் மனிதனை விட்டும் ஷைத்தானை நாங்கள் விரட்டுகிறோம். இதில் என்னத் தவறு இருக்கிறது? என்று கேள்வி கேட்டு பாமர மக்களை வழிகெடுக்கிறார்கள்.
இவர்கள் தங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு ஹதீஸ்களில் சொல்லப்பட்ட இடஞ்சல்கள் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை தர முடியுமா?
தொழுகையில் கவனம் திரும்புவது கொட்டாவி விடுவது சுப்ஹ‚ தொழாமல் உறங்குவது இவையெல்லாம் ஷைத்தானால் ஏற்படுவதாக ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியென்றால் இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு தொழுகையில் கவனம் திரும்பாதா? அவர்களுக்கு இனி கொட்டாவியே வராதா? அவர்கள் சுப்ஹ‚ தொழுகையை விடாமல் கடைபிடிப்பார்களா? ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்களுக்குத் தவறான எண்ணங்களே ஏற்படாதா? இந்த அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தாலே ஷைத்தானை விரட்டுவதாக இவர்கள் கூறுவது வடிகட்டியப் பொய் என்பதை அறியலாம்.
அனைவரிடமிருந்தும் ஷைத்தானை விரட்டுவார்களா?
ஷைத்தான் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறான். அப்படியென்றால் ஷைத்தானை விரட்டுவதாக கூறும் போலி ஆண்மீகவாதிகள் அனைத்து மக்களுக்கும் ஓதிப்பார்த்து அவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவார்களா?
நபிமார்களுக்கு ஷைத்தான் இடஞ்சல் தந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இன்றைக்கு இவர்களுக்கு ஷைத்தானை விரட்டத் தெரிந்த யுக்தி நபிமார்களுக்கு ஏன் தெரியவில்லை என்று நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம்.
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.
ஷைத்தான் வலையில் விழுந்தவர்கள் ஷைத்தானை விரட்டுகிறார்களா?
26:221 هَلْ اُنَبِّئُكُمْ عَلٰى مَنْ تَنَزَّلُ الشَّيٰـطِيْنُؕ
26:222 تَنَزَّلُ عَلٰى كُلِّ اَفَّاكٍ اَثِيْمٍۙ
ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.
ஷைத்தானை விரட்டுவதாக கூறுபவர்கள் மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக இட்டுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களிடத்தில் தான் ஷைத்தான் இருக்கிறான்.
ஷைத்தானின் வலையில் சிக்கியவர்கள் மற்றவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவதாக நினைப்பது எவ்வளவு அறிவீனம் என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். ஏமாற்றுபவர்களின் சதியில் சிக்கி தங்கள் பொருளையும் அறிவையும் இழந்துவிட வேண்டாம்.