2) அகில உலக ஈர்ப்பாற்றல்

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்-2

அகில உலக ஈர்ப்பாற்றல் :

இப்போது நாம் கூறிய எடுத்துக்காட்டிலிருந்து மற்றொரு வினா எழலாம். திருக்குர்ஆன் கூறியபடி வானம் உயர்த்தப் பட்டு ஈர்ப்பாற்றல் நிறுவப்பட்டிருந்தால் வானத்தில் எல்லா இடத்திலுமே ஈர்ப்பாற்றல் உண்டு என்பது அதன் பொருளா கும். உண்மை நிலை இவ்வாறாக இருந்தால் விண்வெளியில் இரும்புக் கட்டியையும், மரக்கட்டையையும் எடை போட்டுப் பார்த்தபோது, அங்கு தராசு எடை காட்டவில்லையே! ஏன்? அங்கு ஈர்ப்பாற்றல் செயல்படவில்லையா?

செயல்படவில்லை யெனில் திருக்குர்ஆனுடைய வார்த்தை எப்படி உண்மை ஆகும் என்பதே அக்கேள்வியாகும். நியாயமான இக்கேள்விக்கு ஐசக் நியூட்டன் அவர்களின் புகழ் வாய்ந்த கண்டுபிடிப்பாகிய அகிலத்தின் ஈர்ப்பாற்றல் (The law of Universal Gravitation) விதியிலிருந்து அதற்குரிய பதிலைப் பெறலாம். அந்த விதி வருமாறு :

“பேரண்டத்திலுள்ள பொருட்களின் துகள்கள் ஒவ் வொன்றும் மற்ற பொருட்களின் துகள்கள் ஒவ்வொன்றையும் அவைகளின் பொருண்மையின் மதிப்பிற்கு நேர் விகிதத்திலும் அப்பொருட்களின் மையங்களுக்கு இடையிலுள்ள தூரங் களுக்கு எதிரிடையான வர்க்க விகிதத்திலும் ஈர்க்கின்றன. ஈர்ப்பாற்றலின் மேற்கண்ட விதி நமது எடுத்துக்காட்டில் கூறப்பட்ட பொருட்களுக்கு விண்வெளியில் எடை இழப்பு ஏற்பட்டதன் காரணத்தைச் சரியாக விளக்குகிறது.

இதைச் சற்று எளிதாகக் கூறினால் பொருட்களுக்கு இடையிலுள்ள தூரம் கூடும்போது அவைகளுக்கு இடையிலுள்ள ஈர்ப் பாற்றல் குறைந்து கொண்டே வரும் என்பது ஈர்ப்பாற்றலின் விதியாகும். எனவே பூமியிலிருந்து ஒரு பொருள் தூரமாக (அல்லது உயரமாக) எடுத்துச் செல்லும்போது பூமியின் ஈர்ப்பு விசையின் செயற்பாடு அப்பொருளின் மீது குறைந்து கொண்டே வந்து முடிவில் அடையாளம் தெரியாத அளவிற்கு குறைந்துவிடும். இதுவே நமது எடுத்துக்காட்டில் குறிப்பிடப்பட்ட பொருட்களுக்கும் ஏற்பட்டது.

இருப்பினும் அப்பொருட்களுக்கு எந்த இடத்தில் எடை இழப்பு ஏற்பட்டதோ அந்த இடத்தில் ஈர்ப்பாற்றலே இல்லை என்பது அதன் பொருளன்று. அதே இடத்தில் அதிகப் பொருண்மையுள்ள மற்றொரு பொருள் கொண்டு செல்லப்பட்டால் அப்பொருள் பூமியால் ஈர்க்கப்படுவதால் அதற்கு எடை இருக்கவே செய்யும். ஏனெனில் ஈர்ப்பாற்றலின் விதிப்படி பொருட்களின் பொருண்மை கூடும்போது அவைகளுக்கிடையிலுள்ள ஈர்ப்பாற்றலும் கூடும் என்பதாகும்.

இப்போது நமது எடுத்துக்காட்டில் கூறப்பட்ட பொருட்களுக்கு எடை இழப்பு ஏற்பட்டது திருக்குர்ஆனுடைய அறிவியலுக்கு முரண்படவில்லை என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டோம். நமது நிலவும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நிலவின் பொருண்மை பூமியின் பொருண்மையில் 1/81 பங்கு இருப்பதால் அது பூமியிலிருந்து ஏறத்தாழ 4,00,000கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தபோதிலும் நமது பூமியின் ஈர்ப்பாற்றல் அதன்மீது செயல்படுகிறது.

எனவே அது பூமியின் துணைக் கோளாக கோடிக்கணக்கான வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையிலிருந்தும் இதற்குரிய சான்றுகளைக் காணலாம். ஒருவர் பத்து கிராம் எடையுள்ள ஒரு தங்க மோதிரத்தை வாங்கும் போது அதை எடை போட்டே வாங்குகிறார். அந்த மோதிரத் தைக் கொண்டுபோய் பார ஊர்திகளை எடைபோடும் எடை மேடையில் (Weigh bridge) எடைபோட முயன்றால் அந்த எடைமேடை மோதிரத்தின் எடையைக் காட்டாது. இதற்காக எடைமேடையை, எடை காட்டும் கருவி இல்லை என்றோ அல்லது மோதிரத்திற்கு எடை இல்லையென்றோ நாம் கூறுவது இல்லை.

இதைப் போன்றே நமது எடுத்துக்காட்டில் கூறப்பட்ட பொருட்களுக்கு விண்வெளியில் எடை இழப்பு நேர்ந்த போதும் விண்வெளியில் ஈர்ப்பாற்றல் இல்லை என்று நாம் கூறுவதில்லை. இந்த அத்தியாயத்தில் இதுவரை நாம் விவாதித்த விபரங்களைச் சரியாகக் கவனம் செலுத்தி, அதன் பிறகு இங்கு ஆய்வு செய்த திருக்குர்ஆன் வசனங்களை (அல்குர்ஆன்: 55:7-9) மீண்டும் பார்வையிட்டால் அத்திருமறை வசனங்கள் எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மைகளைத் தாங்கி நிற்கிறது என்பதை எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

திருக்குர்ஆன் இந்த அறிவியல் உண்மையை ஏழாம் நூற்றாண்டில் கூறி இருந்தும்கூட அறிவியல் உலகம் இதைக் கண்டுபிடிக்க பதினெட்டாம் நுற்றாண்டில் தோன்ற வேண்டிய உலகின் மிகச் சிறந்த அறிவியலாளராம் ஐசக் நியூட்டனுக்காகக் காத்திருக்க வேண்டி இருந்ததெனில் இம்மாமறையின் இறைஞானத்திற்கு இது ஒரு வலுவான அறிவியல் ஆதாரமல்லவா?

விபரீத விளையாட்டு :

எடை என்பது பொருண்மை இல்லை என்றும், அது ஈர்ப்பாற்றலின் இழு விசையே என்றும்,அவ்விசை வானில் நிறுவப்பட்டுள்ளது எனும் விளக்கத்தைத் தரும் அறிவியல் உண்மையைத் திருக்குர்ஆன் வழங்க வேண்டுமெனில் அக்குர்ஆனின் ஆசிரியருக்கு குறைந்தபட்சம் விண்ணகப் பொருட்களின் சலனங்களைப் பற்றிய விதிகளின் சரியான அறிவு இருந்திருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிபந்தனை ஆகும்.

எனவே இதற்கு மேலும் திருக்குர்ஆன் இறைத் தூதர் முஹம்மத் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக!) அவர்களின் சொந்தப் படைப்பு எனக் கூற முயன்றால் பேரண்டத்தின் ஈர்ப்பு விசையைப் பற்றிய புரட்சிகரமான கண்டுபிடிப்பின் பெருமையை இறைத்தூதர் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக!) அவர்களுக்கு வழங்க வேண்டியிருக்கும்.  அப்படிச் செய்தாலாவது திருக்குர்ஆன் இறை வேதம் இல்லையெனக் கூற இயலாதா என முயற்சி செய்தால் அது நியூட்டனையும், திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் மற்றும் பல அறிவியல்களைக் கண்டுபிடித்த அறிவியலாளர்களையும் அவமானப்படுத்தும் செயலாகவே இருக்கும்.

எனவே நாம் இதுவரை கண்டதும் இனிமேல் காணப்போவதுமாகிய அறிவியல் ஆதாரங்கள் திருக்குர்ஆனை என்னவாக விளம்பரப்படுத்துகிறதோ அதன்படி – மானிட சக்திக்கு அப்பாற்பட்டு இறை ஞானத்திலிருந்து தோன்றியதே எனும் கருத்தின்படி – எடுத்துக் கொள்வதே உண்மையின் தேட்டமும், நியாயமும், சாலச் சிறந்த வழிமுறையும் ஆகும்.

ஈர்ப்பாற்றலை பேரண்டத்தில் நிறுவியதன் வாயிலாக நாம் அடைந்துள்ள பயன்பாடுகளில் இப்போது கூறப்பட்டவை மட்டுமின்றி மற்றும் பல பயன்பாடுகளைப் பற்றியும் திருக்குர்ஆன் கூறியுள்ளது. அடுத்து வரும் சில தலைப்புகளில் அவைகளையும் பார்த்துவிட்டு இப்பேரண்டத்தைப் பேரளவில் (Large scale) ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஈர்ப்பாற்றலைப் பற்றி எந்த அளவிற்கு ஆழமான ஞானம் இத்திருமறையின் வசனங்களில் புதை பொருளாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதைச் சிந்திப்பீர்களாக!

வானுலகைத் தாங்கும் மர்மத் தூண்

உயிரினங்களின் பேரினத்தில் ஒரு சிற்றினமாகிய மனித இனம் இலட்சக்கணக்கான ஏனைய இனங்களைப் போலன்றி சிந்திக்கும் திறனை – புரிந்து கொள்ளும் ஆற்றலைப் (புத்தியை) – பெற்ற இனமாக விளங்குகிறது. எனவே அறிவின்பால் அந்த இனத்திற்குள்ள வேட்கை அதன் பிறவிக் குணமாகும். இதன் காரணமாக அந்த இனத்தைச் சார்ந்தவர்கள் எதைக் கண்டாலும் எதைக் கேட்டாலும் “ஏன்? எப்படி? எதற்கு? எனும் கேள்விகள் அவனுக்குள் எழுந்து கொண்டே இருக்கும்.

அறிவியலின்மீது அவனுக்குள்ள இந்த ஆர்வம் முறைப்படி கட்டுப்படுத்தாவிட்டால் அது அவனுக்குள் மூடநம்பிக்கைகளை உருவாக்கிவிடும். ஏனெனில் அறிவின் மீது அவனுக்குள்ள அடக்க முடியாத தாகம் அவனுக்கு விடை தெரியாத வினாக்களே இருக்கக் கூடாது எனப் பேராசை கொள்கிறது. இதன் காரணமாக எந்த வினாக்களின் விடையை அவன் தீவிரமாக எதிர்பார்க்கிறானோ அந்த வினாக்களுக்கு விடை கிட்டாதபோது அவன் தாமாகவே ஒரு விடையை உருவாக்கிக்கொள்கிறான்.

அவன் அதுவரை பெற்ற அறிவு அவன் இப்போது எதிர்நோக்கும் பிரச்னையோடு தொடர்பு கொண்டதாக இருப்பினும் தொடர்பு கொள்ளாததாக இருப்பினும் அவன் சுயமாக உருவாக்கும் விடைகிட்டா வினாக்களின் பதில்கள் அவனுடைய அதுவரையுள்ள அறிவின் தரத்தை ஒட்டியே அமையும். ஒருவர் தமக்குள் உருவாக்கிக்கொள்ளும் மூட நம்பிக்கை அவருடைய அதுவரையுள்ள அறிவின் தரத்தை ஒட்டி அமைவதால் சில மூட நம்பிக்கைகளை கேட்ட மாத்திரத் தில்`கொல் எனச் சிரிக்க வைக்கும்.

இதற்கு மாறாக வேறு சிலரின் மூட நம்பிக்கை அதைக் கேள்விப்படும் சிலரையாவது அதை நம்பும்படிச் செய்துவிடும். எது எப்படி இருப்பினும் விடைகிட்டாத வினாக்கள் தன்னிடம் இருக்கக் கூடாது என்பது, மனிதனின் பிறவிக் குணமாகிய அறிவின் பாலுள்ள வேட்கையின் முறைப்படி கட்டுப்படுத்தப் படாததன் வெளிப்பாடாகும். மனிதனுடைய பிறவிக் குணத்தின் கட்டுப்பாடற்ற தாக்கத்தை ஒருமுறை கைப்பிள்ளையிடம்கூட கண்டு வியந்து போனதுண்டு.

பூமிக்கும் பற்பல சுமை தாங்கிகள் :

கிராமப்புறமொன்றில் வீட்டு வாசலில் நடை பழகிக் கொண்டிருக்கும் இரண்டரை வயதுச் சிறுவனை நோய் பாதித்தபோது மருத்துவரிடம் எடுத்துச் செல்லப்பட்டு புட்டத்தில் ஊசி போடப்பட்டான். ஊசியால் குத்தப்பட்ட வேதனையை அவ்வப்போது எண்ணி, எண்ணி அழுது கொண்டே தம் தந்தையுடன் வீடு வந்து சேர்ந்த அவன் தம் தாயைப் பார்த்ததும் புட்டத்தை தடவிக்கொண்டே இவ்வாறு புகார் செய்தான் : “அம்மா! என்ன முள்ளு குத்திச்சு!.

மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்ட அவனை மருத்துவர் என்ன செய்தார் என விளங்கிக்கொள்ள இயலாதிருந்த போதிலும் விடைகிட்டாத வினாக்கள் தன்னிடம் இருக்கக்கூடாது எனும் கட்டுப்பாடற்ற அறிவின் வேட்கையே அவனை அப்படிக் கூறச் செய்தது. வீட்டு வாசலில் நடைபழகும்போது அடிக்கடி நெருஞ்சி முட்கள் குத்திய அனுபவமே அந்த பதிலின் பிறப்பிடமாக அமைந்தது.

மனிதனுடைய இந்தப் பிறவிக்குணம் எழுப்பிய ஒரு வினா அவனைத் தொல்லைப்படுத்திக்கொண்டிருந்தது. இந்த உலகத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் பூமி தாங்கிக் கொண்டிருக்கிறது. எனவே பூமியையும் ஏதோ ஒன்று தாங்கிக்கொண்டிருக்க வேண்டும். அந்தப் பொருள் எது என்பதே அந்த வினாவாகும்.

வினா எழுந்ததைப் போன்றே கட்டுப்படுத்தப்படாத வேட்கையிலிருந்து பதில்களும் பிறந்தன. அவைகளில் மகான்களாகக் கருதப்பட்டோரின் பதில்கள் புராணங்களில் இடம் பிடித்து புனிதங்களாயின. எனவே வெவ்வேறு புராணங்களில் பூமி வெவ்வேறு பொருட்களால் தாங்கிக் கொள்ளப்பட்டது.

இப்புராணங்களில் சில பூமியை மூன்று திமிங்கிலங்கள் ஒன்றிணைந்து சுமந்து கொண்டிருக்கின்றன எனக் கூறும் போது, வேறு சில பூமியை ஒரே ஒரு மீனின் வாலின்மீது இருப்பதாகக் கொள்கின்றன. என்ன மீன் என்பதைப் பற்றி அவைகளுக்குக் கவலை இல்லை. வேறு சில புராணங்கள் பன்றியின் மூக்கின்மீது பூமி நிற்பதாகக் கூறுகின்றன.

மேலும் சில பழங்கதைகள் பூமி ஒரு காளையின் கொம்புகளுக்கு இடையில் இருப்பதாகக் கூறுகின்றன. ஆனால் மீன்களாயினும், பன்றிகளாயினும் அல்லது காளைகளாயினும் அவைகள் எதன் மீது நிற்கின்றன என்பதைப் பற்றி மூட நம்பிக்கைகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஹாக்கிங் அவர்கள் அவரது நூலைத் தொடங்குவதும்கூட இது போன்ற வேடிக்கை நிறைந்த ஒரு கதையுடனாகும். அக்கதை வருமாறு :

“அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒரு அறிவியலாளர் (இவர் `பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் -(Bertrand Russle) எனச் சிலர் கூறுகின்றனர்) ஒருமுறை வானியலைக் குறித்து பொதுமக்களுக்கு ஒரு பேருரை (Lecture) நிகழ்த்தினார். அவ்வுரையில் அவர் பூமி எவ்வாறு அதன் சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதையும், சூரியன் எவ்வாறு நமது காலக்சி எனக் கூறப்படும் மிக விசாலமான நட்சத்திரங்களின் தொகுதியை முறைப்படி சுற்றி வருகிறது என்பதையும் மிக விரிவாக விளக்கினார்.

உரையின் இறுதியில் வயது முதிர்ந்த சிற்றுருவத்துடன் கூடிய மூதாட்டி ஒருவர் அறையின் பின் பகுதியிலிருந்து எழுந்து நின்று இவ்வாறு கூறினார் : “நீங்கள் எங்களிடம் கூறியது அபத்தமாகும். உலகம் என்பது ஒரு இராட்சச ஆமையின் முதுகின்மீது தாங்கி நிறுத்தப்பட்டிருக்கும் தட்டை வடிவிலான தட்டு ஆகும்! இதைக் கேட்ட அறிவியலாளர் நன்றாகச் சிரித்து விட்டு “அந்த ஆமையை எது தாங்கிக்கொண்டிருக்கிறது? என்று பதிலளித்தார். அதற்கு மூதாட்டி இவ்வாறு கூறினார் : “நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருக்கிறீர்கள் இளைஞரே! மிகவும் புத்திசாலியாக இருக்கிறீர்கள்! ஆயினும் அது கீழ்மட்டம்வரை ஆமைக் கோபுரமாகும்! என்றாள்.

அக்கால அறிவியலும் அவ்வாறே!

மேற்கண்ட தகவல்களை நாம் இங்கு எடுத்துக் கூறியது வெறும் இலக்கியச் சுவையைக் கருத்தில் கொண்டதனால் மட்டுமின்றி, விண்ணகப் பொருட்களின் அமைப்பைப் பற்றி எந்த அளவிற்கு அறியாமையிலும், அந்த அறியாமையை ஒப்புக்கொள்ளும் மன வலிமை இல்லாததன் விளைவாக எழுந்த மூட நம்பிக்கையிலும், ஆதி காலம் தொட்டு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர்வரை (நியூட்டன் தோன்றிய பின் ரஸலின் காலத்திலும் கூட) மக்கள் மூழ்கிக் கிடந்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதற்காகவும்;அதன் பின்னணியில் ஏழாம் நூற்றாண்டில் இறங்கிய, சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களை அணுக வேண்டும் என்பதற்காகவுமேயாகும்.

தூணில்லா விண்ணகம் :

நாம் இதுவரை பூமி மற்றும் ஆகாயங்களின் கட்டமைப்பு பற்றி சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்வரை உலக மக்களின் நம்பிக்கை எப்படி இருந்தது எனப் பாத்தோம். இப்போது இவைகளைக் குறித்து திருக்குர்ஆனுடைய அறிவியல் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம். ஆகாயத்தின் கட்டமைப்பைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது :

நீங்கள் பார்க்கிற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்… நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 13:2)

“நீங்கள் பார்க்கக்கூடிய தூண்களின்றி வானங்களைப் படைத்தான்.

(அல்குர்ஆன்: 31:10)

எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மையை உள்ளடக்கிய வசனங்கள் இவை! ஆகாயத்தின் கட்டுமானத்தில் எந்தத் திசையில் எவ்வளவு தூரம் சென்று பார்த்தாலும் கண்களுக்கு தெரியக்கூடிய ஒரு தூணைக்கூட பார்க்க இயலாது எனும் செய்தி இந்த வசனங்களில் வெளிப்படை யாகத் தெரிகிறது. இப்படிக் கூறும்போது இது என்ன பெரிய செய்தி என இன்றைய மக்கள் எண்ணக் கூடும்.

ஆனால் திருக்குர்ஆன் வழங்கப்பட்ட காலகட்டத்தையும் அப்போது வாழ்ந்த மக்கள் விண்ணைப் பற்றியும், பூமி உட்பட விண்ணகப் பொருட்களின் கட்டமைப்புப் பற்றியும் எப்படிப் பட்ட நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதைச் சிந்திக்கும்போது விண்ணகத்தின் கட்டமைப்பில் அதைத் தாங்கிக்கொண்டிருக்கும் கட்புலனாகும் பிணைப்பு (அது ஒரு தூணே ஆயினும்) ஒன்றுகூட இல்லை எனும் கூற்று உண்மையிலேயே ஒரு புரட்சிகரமான அறிவியல் பிரகடனமாகும்.

இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சி விண்ணகப் பொருட்களின் கட்டமைப்பிலும் இயக்கத்திலும், முற்காலங்களில் புகுந்து விட்டிருந்த அனைத்து அபத்தங்களையும் மூட நம்பிக்கைகளையும் துடைத்தெறிந்து துப்புரவாக்கி விட்டு விண்ணகத்தின் கட்டமைப்பை நிலை நிறுத்தும் விசைகளைப் (Forces) பற்றிய சரியான அறிவியல் அறிவை நமக்கு வழங்கியுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன் எதிர்கொள்ள வேண்டியிருந்த பிரச்னை வேறு விதமானது. பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான உலக அறிவியலின் அறிவுக்களஞ்சியமாக விளங்கிய ஒரு தலை சிறந்த விஞ்ஞானியின் கண்களுக்கு எதிரே விழுந்த ஆப்பிள் இல்லை அது. அது திருக்குர்ஆன் ஆகும். தொன்மை வாய்ந்த ஏழாம் நூற்றாண்டின் அறிவியல் அறியாமையின் கும்மிருட்டை தங்கள் மூளையில் நிரப்பிக்கொண்டிருந்த பாமர மக்களிடமே திருக்குர்ஆன் முதலாவதாக பாடம் நடத்த வேண்டியிருந்தது. எனவே அப்போதிருந்த உலக மக்களுக்கு திருக்குர்ஆனிலிருந்து வெளிப்படையாகத் தெரிந்த அறிவியலே புரட்சிகரமான ஒன்றாகும்.

கட்புலனாகாத தூண்கள் :

திருக்குர்ஆனிலிருந்து வெளிப்படையாக பெறப்படும் அறிவியல் ஸவிண்ணகத்தின் கட்டமைப்பில் கட்புலனாகும் தூண்கள் (விண்ணகத்தைத் தாங்கி நிறுத்தும் பொருட்கள்) எதுவும் இல்லை எனும் அறிவியல் திருக்குர்ஆன் இறங்கிய காலத்திலேயே ஒரு புரட்சிகரமான அறிவியலாக இருந்தது. அதே நேரத்தில் அந்த வசனங்களின் வரிகளுக்கிடையிலிருந்து வெளிப்படும் அறிவியல், முன் பத்திகளில் நாம் குறிப்பிட்டதும் நியூட்டனால் கண்டுபிடிக்கப்பட்ட, அறிவியல் உலகில் பெரும் புரட்சியை உருவாக்கியதுமாகிய “அனைத்துலக ஈர்ப்பாற்றல் எனும் மகத்தான அறிவியல் உண்மையாகும்.

திருக்குர்ஆனிலிருந்து நாம் முன்னர் கண்ட வசனங்களில் (அல்குர்ஆன்: 13:2, 31:10) பேரண்டத்தின் கட்டமைப்பில் எவ்விதமான தூண்களும் இல்லை எனக் கூறாமல் கட்புலனாகும் தூண்கள் இல்லை எனக் கூறப்படுள்ளது. இதன் பொருள் பேரண்டத்தின் படைப்பில் கட்புலனாகாத தூண்கள் உள்ளன எனத் திருக்குர்ஆன் கூறுவதாக எளிதில் புரிந்து கொள்ளலாம். திருக்குர்ஆனுக்கு இப்படிப்பட்ட கருத்து இல்லை எனில் குறைந்தபட்சம் “தூண்களின்றி வானங்களைப் படைத்தான் என்றோ, “தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான் என்றோ திருக்குர்ஆன் கூறுவதே இயல்பான வார்த்தைப் பிரயோகமாக இருந்திருக்கும்.

ஆனால் திருக் குர்ஆன் இங்கு இயல்பை மீறி “நீங்கள் பார்க்கக்கூடிய தூண்கள் இன்றி எனும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பயன்படுத்தியது, பேரண்டத்தின் கட்டுமானத்தில் கட்புலனாகாத தூண்கள் (விண்ணகப் பொருட்களை விலகிப் போகாமல் அதனதன் இடத்திலேயே நிறுத்தும் கட்புலனாகாத ஏதோ பிணைப்புகள்) இருக்கின்றன எனும் கருத்தை உருவாக்குவதற்கே என்பதை மிக எளிதாகப் புரிந்துகொள்கிறோம்.

பேரண்டத்தின் கட்டமைப்பில் கட்புலனாகாத தூண்கள் இருப்பதாக திருக்குர்ஆனுடைய வரிகளுக்கிடையிலிருந்து விளங்கப்பெற்ற அறிவியல் பிரகடனம் உண்மையா எனத் தேடிக் கண்டுபிடிக்கும் தேவையில்லாதவாறு அப்படிப்பட்ட கட்புலனாகாத பிணைப்பு ஒன்று உள்ளது என்பதை இன்று நாம் அறிவோம். நியூட்டனின் திறமைமிக்க அரும்பணியே நமக்கு அதை வெளிப்படுத்தித் தந்தது. தம்முடைய கடினமான விடாமுயற்சியாலும் உலகை வியக்க வைத்த `கால்குலஸ் (Calculus) எனும் கணித முறையை உருவாக்கி, கிரக சஞ்சாரங்களை விளக்கிக் காட்டியும் பேரண்டம் தாமாகவே காரணமின்றி நிலை பெற்றிருக்கவில்லை;

அதனை நிலைநிறத்தும் கட்புலனாகாத ஒரு பிணைப்பு உண்டு; அந்தப் பிணைப்பே பேரண்டம் மொத்தமும் பரவி நிற்கும் ஈர்ப்பாற்றலாகும் எனக் கூறி திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் கூறிய அறிவியலை நியூட்டன் அறிந்தோ அறியாமலோ நிலைநாட்டியபோது உலக மக்களின் பெரு மதிப்பிற்குரியவராக, இன்று வரை எந்த அறிவியலாளருக்கும் கிட்டாத பெருமதிப்பிற்கு உரியவரானார்.

இதுவரை நாம் கண்டவை மட்டுமின்றி பேரண்டத்தின் அமைப்பில் ஈர்ப்பாற்றலின் பங்கு எந்த அளவிற்கு இன்றியமை யாதது என்பதைப் பற்றி திருக்குர்ஆன் போதிக்கும் அறிவியல் மேலும் ஆழமானது. இது தொடர்பாக அது மேலும் கூறுகிறது:

விலகத் தேடும் விண்ணும் மண்ணும் :

வானங்களும் பூமியும் இடம் பெயராதபடி நிச்சயமாக அல்லாஹ் தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அதன் பின்னர் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மை உடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன்: 35:41)

மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டிருக்கும் செய்தி மிக அற்புதமானதும் அனைத்துலக ஈர்ப்பாற்றலின் இன்றியமை யாமையை விளக்கும் ஆழமான அறிவியல் உண்மையுமா கும். இவ்வசனத்தில் கூறப்பட்டிருக்கும் அறிவியலின் சாரம் ஆகாயங்களும் பூமியும் ஒன்றை விட்டு ஒன்று விலகி ஓடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதாகும் என எளிதாக விளங்குகிறது. ஆனால் நமக்குள் உயர்ந்து வரும் கேள்வி எதற்காக இந்த பூமி ஆகாயத்திலிருந்து விலகாமல் தடுக்கப் பட வேண்டும் என்பதாகும்.

திருக்குர்ஆன் இறங்கிய நூற்றாண்டில் நாம் பிறந்திருந்தாலும் அல்லது பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னர் எப்போது பிறந்திருந்தாலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியை ஆகாயத்திலிருந்து விலகாமல் தடுக்க வேண்டிய காரணம் என்ன என்பது ஒருக்காலும் நம்மால் தெரிந்து கொண்டிருக்க முடியாது. ஏனெனில் இது குறித்து ஆய்வு செய்ய எந்த அறிவிய லாளரும் அப்போது தயாராக இருக்கவில்லை.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவராகக் கருதப்படும் கிரேக்க தத்துவஞானி`அரிஸ்டார்ச்ச (Aristarchus) என்பவர் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங் கள் அதைச் சுற்றி வருகின்றன எனும் கருத்தை வெளி யிட்டார். ஆனால் இவர் இது தொடர்பாக அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை. தம்முடைய தத்துவ நோக்கு நிலையிலிருந்து அறிவியல் சாரா அகப் பார்வையாகவே (Inspiration) அவர் இக்கருத்தைக் கூறினார்.

இருப்பினும் பண்டையக் காலம் தொட்டு நவீன அறிவியல் யுகம் தொடங்கும் வரை அறிவியல் உலகில் அரிடாட்டிலின் வார்த்தைகளே வேதவாக்காக (கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் தரத்திற்கு உயர்த்தப்பட்ட, குறையேதும் இல்லாத வார்த்தைகளாக) இருந்தமையாலும் அவர் புவிமையக் கோட்பாட்டை அறிவியலாக ஏற்று உண்மைப்படுத்தியதாலும் அரிடார்ச்சஸின் கருத்து பிறந்த வேகத்திலேயே சமாதியாயிற்று.

அரிடாட்டிலைப்போன்றே கிருத்தவச் சபைகளும் புவிமையக் கோட்பாடே தங்களது வேதவாக்கு (பைபிளின் கருத்து) எனப் பிரகடனம் செய்ததாலும் அதை எதிர்த்துப் பேசுபவர்களைத் தண்டிப்பதற்குள்ள அரசியல் அதிகாரம் மேற்கத்திய நாடுகளில் திருச்சபைகளுக்கு இருந்த காரணத்தாலும் இத்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அறிவியலாளர்கள் துணிவு பெறவில்லை.

கோபர் நிக்கசின் மீது சபை நடவடிக்கை :

அரிடாட்டிலின் பிரம்மை சிறுகச் சிறுக மாறத் துவங்கிய காலகட்டத்தில் சிறந்த கல்வியாளரும் செல்வச் சீமானுமாகிய போலந்து நாட்டின் கோபர் நிக்க தம்முடைய வாலிபப் பருவத்திலேயே அரிடார்ச்சஸின் கருத்தைக் கேள்விப்பட்டு தம்முடைய ஓய்வு நேரத்தில் இவர் க்ராகோ பல்கலைக் கழகத்தில் (University of Cracow) பட்டம் பெற்று வானியலில் ஆர்வம் கொண்டவராக இருந்தபோதிலும் கிருத்தவ உயர் சபையில் (Cathedral) பணியாற்றுவதைப் பெரிதாக மதித்து ஏற்றுக்கொண்டவராவார் வானியல் ஆய்வுகளை மேற்கொள்ள துவங்கினார். விரைவிலேயே அரிடார்ச்சஸின் கருத்து சரியாக இருப்பதைக் கண்டார்.

கோபர் நிக்க சபை நடவடிக்கைகளுக்குப் பயந்து மிக இரகசியமாக தமக்கு மிக நெருங்கியவர்களிடமே தமது ஆய்வின் முடிவைத் தெரிவித்து வந்தார். பிறகு தமது அறுபதாம் வயதில் ரோமில் சூரிய மையக் கோட்பாட்டை வலியுறுத்தி உரை நிகழ்த்தினார். உடனே சபைகளின் நடவடிக்கையால் தமது கருத்துக்கள் தவறானவை எனக் கூறி தமது கூற்றைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆயினும் தமது எழுபதாம் வயதில் இறப்பதற்குச் சற்று முன் தனது ஆய்வின் முடிவை புத்தகமாக வெளியிடச் செய்தார்.

ஆர்க்கி மெடிசும் அவ்வாறே :

நாம் இதுவரை கூறிய விபரங்களிலிருந்து திருக்குர்ஆன் இறங்கிய காலத்திலும் அதன் பிறகு கிட்டத்தட்ட நீண்ட ஆயிரம் வருடங்கள் வரையிலும் பூமி ஆகாயத்தின் மையத் தில் அசையாதிருக்கும் கோள் என்பது எந்த விதத்திலும் ஐயுறப்படாத நம்பிக்கையாக இருந்ததோடு இத்துறையில் எந்த அறிவியலாளரும் எவ்வித ஆய்வும் மேற்கொள்ள வில்லை என்பதாகும். உண்மை நிலை இவ்வாறு இருக்க, தாமுண்டு; தாமிருக்கும் இடமுண்டு என அசைவற்றுக் கிடக்கும் இந்த பூமி ஆகாயத்திலிருந்து விலகிப் போவதற்கு வாய்ப்பு என்ன உள்ளது? ஆகாயத்திற்கு வெளியே இதை இழுத்துச் செல்ல யாரேனும் முயற்சி செய்கிறார்களா?

ஆர்க்கி மெடிஸ்

பண்டைக்கால அறிவியல் உலகின் ஐன்டீனாக மதிக்கப்படும் ஆர்க்கி மெடிஸ் (Archimedes 287 B.C 212 B.C) ஒருமுறை இவ்வாறு கூறினார்: “போதிய நீளமுள்ள ஒரு நெம்புகோலையும் நிற்பதற்கு ஒரு இடமும் தாருங்கள். நான் பூமியை நகர்த்திக் காட்டுகிறேன்.

நெம்புகோலின் (Liver) தத்துவத்தை விளக்கிய அவர் போதிய நீளமுள்ள நெம்புகோல் இருந்தால் எவ்வளவு பளுவான பொருளையும் நகர்த்தலாம் எனக் கூறுவதற்காகவே இந்த உதாரணத்தைப் பயன்படுத்தினார். (ஆயினும் ஆதாரத் தானம் – Fulcrum – இல்லாமல் இதை அவரால் எப்படிச் செய்ய முடியும் எனும் வினாவைப் புறக்கணிப்போம்) அவர் கூறிய இந்த உதாரணத்திலிருந்து பண்டைக்கால அறிவியல் மேதைகளால் கூட பூமி அசுர வேகத்தில் விண்ணில் பறந்தோடிக் கொண்டிருக்கும் ஒரு கோள் என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனெனில் நெம்புகோலின் இயந்திரவியல் பயன்பாட்டை (Mechanical Advantage) விளக்குவதற்கு ஓயாமல் நகர்ந்து கொண்டிருக்கும் பொருளை உதாரணம் காட்ட முடியாதல்லவா?

சுருங்கக்கூறின், திருக்குர்ஆன் இறங்கிய காலத்தில் ஒரு புரட்சிகரமான அறிவியல் உண்மை என்பதற்கு மேல் திருக்குர்ஆனுடைய இந்த செய்தி ஏனைய செய்திகளைப் போன்றே திருக்குர்ஆன் மானிட அறிவிலிருந்து தோன்றியது இல்லை என்பதற்குச் சான்றளிக்கிறது.

விண்ணகப் பொருட்களின் விலகி ஓடும் காட்சி :

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக் கும் நாம் பெற்றுள்ள அறிவியல் வளர்ச்சி, பூமி ஆகாயத்தி லிருந்து விலகிப் போகும் வாய்ப்பு உண்டு என்றும் அதைத் தடுத்துக்கொண்டிருக்கும் இயற்பாடு ஒன்று அதில் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையும் நமக்கு எளிதாகப் புரியும்படி செய்துள்ளது. சூரிய குடும்பத்திலுள்ள ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு இதர கோளை ஈர்த்துக்கொண்டிருக் கிறது என்றும் அவற்றிற்கிடையே பொருண்மை கூடிய சூரியன் ஒவ்வொரு கோளையும் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தியுள்ளது என்பதையும் இன்றைய உலகின் உயர் நிலைப் பள்ளிகளில் கூட பயிற்றுவிக்க தொடங்கி விட்டது.

இப்போதும் பூமி ஆகாயத்திலிருந்து விலகுவதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது என விளங்காதவர்களும் இருப்பார் கள். அவர்களின் பொருட்டு நாம் மேலும் ஒரு விளக்கத்தைப் பார்ப்போம்.

பூமி ஆகாயத்தில் ஓய்ந்திருக்கும் ஒரு கோள் இல்லை யென்றும் அது ஆகாயத்தில் பறந்தோடிக்கொண்டிருக்கும் கோள் ஆகும் என்பதும் நமக்குத் தெரியும். (திருக்குர்ஆன் கூறிக்கொண்டிருக்கும் இந்த அறிவியலை நாம் இந்நூலின் முதல் பாகத்தில் ஆய்வு செய்துள்ளோம்) இக்கோள் 600 கோடி கி.மீ. ஆரம் (Radius) கொண்ட (புளுட்டோ கோளையும் உள்ளடக்கிய கணக்கின்படி) சூரிய குடும்பத்தில் வசிக்கிறது. இந்தச் சூரிய குடும்பம் பால் வழி மண்டலம் (Milky way Galaxy) எனும் அதன் வசிப்பிடத்தில் வசிக்கிறது. இம்மண்டலத்தின் அதிகப்படியான பருமன் 20,000 ஒளி வருடங்களும், அதன் நீளம் 1,00,000 ஒளி வருடங்களுமாகும்.

ஒளி வருடம் என்பது காலத்தையன்றி தூரத்தைக் குறிக்கும் சொல் என்பது நாம் அறிந்ததே. ஒளியின் வேகம் வினாடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர் என்பதும் இந்த வேகத்தில் ஒளி பயணம் செய்தால் ஒரு வருடத்தில் ஒளி எவ்வளவு தூரம் செல்லுமோ அந்த தூரமே ஒரு ஒளி வருடமாகும் என்பதும் நமக்குத் தெரியும். பூமியின் வேகம் வினாடிக்கு 30 கிலோ மீட்டர் ஆகும். எனவே பூமியின் வேகத்தைப் போன்று 10,000 மடங்கு வேகத்தை ஒளி பெற்றுள்ளது.

நவீன அறிவியல் உலகம் கண்டுபிடித்த இந்தப் புள்ளி விபரங்கள் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் திருக்குர்ஆன் வசனங்களில் உள்ளடங்கியுள்ள ஆழமான அறிவியல் உண்மையை நமக்கு தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. ஆம்! வினாடிக்கு முப்பது கிலோ மீட்டர் எனும் அமித வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பூமியின் விண்ணோட்டத்தை உரிய முறைப்படி திசை மாற்றம் செய்யப்பட்டிருக்காவிடில் இந்த பூமி சூரிய குடும்பத்தி லிருந்து மட்டுமின்றி சூரிய குடும்பத்தின் வசிப்பிடமாகிய பால் வழி மண்டலத்திலிருந்தே விலகி பேரண்டத்தின் ஆழங்களில் என்றோ மறைந்து போயிருக்கும்! அந்தக் கணக்கு வருமாறு :

பூமியின் வேகம் ஒளி வேகத்தில் 1/10,000 மடங்காக இருப்பதாலும் பால்வழி மண்டலத்தின் அதிகப்படியான பருமன் 20,000 ஒளி வருடமாக இருப்பதாலும் பூமிக்கு இந்தப் பரப்பளவைத் தாண்டவேண்டுமானால் (20,000×10,000) 20 கோடி வருடங்கள் போதுமானதாக இருந்திருக்கும். பூமியின் விண்ணோட்டம் இந்த மண்டலத் தின் நீளவாக்கில் அமைந்திருந்தால் கூட அதன் நீளத்தைத் தாண்டிச் செல்வதற்கு பூமிக்குத் தேவையான கால அளவு (1,00,000×10.000) வெறும் நூறு கோடி வருடங்களாகும்.

ஆனால் நமது பூமி நமது காலக்சியை விட்டுத் தாண்டிச் செல்லவில்லை என்பது மட்டுமின்றி வெறும் ஓரிரு மாதங்களிலேயே விலகிச்செல்லும் வாய்ப்புள்ள சூரிய குடும்பத்திலிருந்து கூட பூமி இன்னும் விலகிச் செல்லாமல் 500 கோடி வருடங்களாக சூரிய குடும்பத்திலேயே அது இருந்து வருகிறது. மேலும் சூரிய குடும்பத்தை விட்டு விலகிச்செல்லாமல் பூமியைத் தடுத்து வைத்திருக்கும் இயற்பாடு எது என்பதும் இன்று நமக்குத் தெரியும். சூரியனின் ஈர்ப்பாற்றலே அந்த இயற்பாடாகும்.

சுருங்கக்கூறின், பூமியின் விண்ணோட்டம் வினாடிக்கு 30 கிலோ மீட்டர் எனும் அமித வேகத்தில் அமைந்திருப்ப தால் இந்த 500 கோடி வருடங்களுக்குள் நமது பூமி ஆகாயத் தில் அதன் வசிப்பிடமாகிய சூரிய குடும்பத்திலிருந்து மட்டுமின்றி பால்வழி மண்டலத்திலிருந்தே கூட விலகிச் சென்று இருக்க முடியும். ஆயினும் அதை அதன் வசிப்பிட மாகிய விண்ணகத் தொகுதியிலிருந்து விலகி விடாதவாறு சூரியனின் ஈர்ப்பாற்றல் அதைத் தடுத்து வைத்துக்கொண்டு காலமெல்லாம் அது தன்னையே சுற்றிவரும்படிச் செய்து கொண்டிருக்கிறது.

இவை யாவையும் இப்பேரண்டத்தில் வடிவமைப்புச் செய்து அதைப் படைத்திருப்பது இறைவனே என்பதால் பூமியை விண்ணிலிருந்து விலகாதபடி தடுத்துக் கொண்டிருப்பது தாமே அன்றி வேறு யாரும் அல்லர் எனும் உண்மையை அவன் தனது சத்தியத் திருமறையில் பிரகடனப்படுத்துகிறான்.

விரண்டோடும் விண் பொருட்கள் :

பூமியும் இதர கோள்களும் மட்டுமின்றி நட்சத்திரங் களும், நட்சத்திர மண்டலமாம் காலச்சிகள் உள்ளிட்ட விண்ணகப் பொருட்கள் அனைத்தும் அவைகளுக்குரிய பாதையில் விண்ணில் ஓடிக்கொண்டிருக்கின்றன. கீழ்க் காணும் தகவல்கள் “எ நியூ ஹான்ட் புக் ஆஃப் ஹெவன் எனும் நூலிலிருந்து (பக்கம் : 230-231) எடுக்கப்பட்டவை ஆகும்.

“பேரண்டத்தின் மற்ற தனித் தனி தொகுப்புகள் (Units) அனைத்திற்கும் அண்டத்துகள்களின் மேகங்களுக்கும் கூட சுயமான இயக்கங்கள் (Motions) உண்டு. சூரியனுக்கும் சொந்தமான இயக்கம் உண்டு. ஒவ்வொரு கோளும் அதனதன் பாதையில் விரையும்போது அவைகளின் துணைக் கோள்கள் அவைகளை வட்டமிடுகின்றன. எரி நட்சத்திரங் களும், விண் கற்களும்,குறுங்கோள்களுமாகிய சூரியனின் பரிவாரங்கள் அதைச் சுற்றி வருகின்றன.

எல்லா நட்சத்திரங் களும் அறியப்படாத ஏதோ இலக்கை நோக்கி விரைகின்றன. அவ்வாறே நட்சத்திரக் குழுக்களும் (Star Clusters) வளைய நெபுலாக்களும் (Ring Nebulae) வெவ்வேறு திசைகளில் வெற்று வெளியினூடே (Empty Space) துரிதப்பட்டு ஓடுகின் றன. ஆனால் அத்துடன் கூடவே மொத்த நட்சத்திர மண்டல மும் முற்றாக ஸஜிட்டாரிய (Sagittarius)எனப்படும் நட்சத்திரத் தொகுதி (Star Constellation) இருக்கும் திசையில் அமைந்துள்ள அதன் மைய அச்சை மிகப் பெரும் வேகத்தில் சுற்றி வருகிறது. அந்த மைய அச்சை ஒருமுறை சுற்றி வருவதற்கு இருபது கோடி வருடங்கள் இத்தொகுதிக்கு தேவைப் படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் ஹைடன் பிளானிட்டோரிய ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் தரும் தகவல்களே முன் பத்தியில் கண்டோம். அத்தகவல்களிலிருந்து விண்ண கத்தின் உறுப்புக்களில் ஒன்று கூட ஓய்ந்திருக்காமல் யாவும் விரைந்து ஓடிக்கொண்டிருக்கின்றன என ஐயமின்றித் தெரிந்து கொள்கிறோம்.

இவற்றின் விண்ணோட்டத்தை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் இவை யாவும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிப்போய் ஆகாயம் என்பதே பொருளற்ற வார்த்தையாக மாறியிருக்கும். இதன் காரணமாகவே விண்ணகப் பொருட்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிப்போகாமல் தடுக்கப்பட வேண்டிய தேவை உருவாகிறது. இத்தேவையை நிறைவேற்ற பேரண்டத்தைப் படைத்த இறைவன் இதில் வடிவமைப்பு செய்த உபாயமே (Technique) அனைத்துலக ஈர்ப்பாற்றலாகும்.

பேரண்டத்தின் படைப்பில் ஈர்ப்பாற்றலை வடிவமைப்பு செய்திருந்த போதிலும் விண்ணகப் பொருட்கள் இயக் கத்தை (ஓட்டத்தை) நிறுத்தி விடவில்லை. அவைகளின் இயக்கங்கள் நிறுத்தப்படாமலும் அதே நேரத்தில் அவை விலகிப் போகாமலும் இருக்கும்படியான ஒரு உபாயமே, தொழில் தந்திரமே – ஈர்ப்பாற்றலாகும். எனவே இந்த ஈர்ப்பாற்றலைச் செயலற்றதாக்கும் மற்றொரு உபாயம் இறைவனால் இதில் மேற்கொள்ளப்பட்டால் மிக நிச்சயமாக ஆகாயத்தின் தொகுதிகள் ஒவ்வொன்றும் விலகிப்போகத் தொடங்கி விடும். ஒருக்கால் அப்படி நடந்து விட்டால் அதன் பிறகு அவைகளின் விலகலைத் தடுத்து நிறுத்த இறைவனா லன்றி வேறு ஒருவராலும் இயலாது எனக் கூறும் திரு மறையின் வார்த்தைகளை யாரால்தான் மறுக்க இயலும்?

இதுவரை நாம் விவாதித்தறிந்த விபரங்களின் பின்னணி யில் மீண்டும் ஒரு முறை திருக்குர்ஆன் கூறும் அந்த அறிவி யல் வசனத்தை (35:41) படித்துப் பார்த்தீர்களானால் பிர மிக்கச் செய்யும் அதன் அறிவியல் ஆழம் வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும். இப்போது நமக்கு முன் எழும் கேள்விகள் நியூட்டனோ, கலிலியோவோ, கெப்ளரோ, கோபர் நிக்கசோ தோன்றுவதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இறங்கிய திருக்குர்ஆனுக்கு இவ்வளவு மகத்தான, நவீன விஞ்ஞான உலகில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எப்படித் தெரிய வந்தது என்பதாகும்.

நாம் ஆய்வு செய்த வசனங்களில் (அல்குர்ஆன்: 13:2, 35:41) கூறப்பட்ட அறிவியல் உண்மை களை ஒருவர் கூற வேண்டுமாயின் குறைந்தபட்சம் காலக்சி கள் உட்பட பேரண்டத்திலுள்ள பொருட்கள் யாவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதும், அவைகளுக்காக இயக்க விதிகளும் அவைகளின் இயக்கத்தை ஆட்சி புரிகின்ற பேரண்டம் தழுவிய ஈர்ப்பாற்றலும், அதன் விதிகளும் தெரிந்த ஒருவராகவே அவர் இருக்க வேண்டும் என்பது இன்றியமையாத நிபந்தனையாகும்.

அப்படிப்பட்ட ஒரு நபர் ஏழாம் நூற்றாண்டில் இருந்தாரே எனில் அது மெய்யாகவே இப் பேரண்டத்தைப் படைத்த இறைவனே அன்றி வேறு யாராகவும் இருக்க முடியாது என்பதில் (அறிவியல் உண்மைகளின் சிறப்பையும், அந்த அறிவியல் உண்மைகளால் நிரூபிக்கப்படும் ஒரு செய்தியின் செல்லுபடியாகும் தன்மையையும் ஓரளவு விளங்கிக் கொள்ளும் நபர்களுக்கு) இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது!

இப்போது நம் முன்னால் இருக்கும் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் தோன்றிதே என்பதும், அந்தக் குர்ஆனில் மேற் கண்ட விபரங்கள் யாவும் உண்டு என்பதும் உண்மை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதை விளங்கிக் கொண்டோம். எனவே திருக்குர்ஆனின் ஆசிரியர் வேறொரு வருமன்றி பேரண்டத்தைப் படைத்த இறைவனே என்பதில் இதற்கு மேல் எதற்காக ஐயப்பட வேண்டும்?