பரக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

அருள் வளம்

பரக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள்

இறைவனிடமிருந்து கிடைக்கப்பெறும் மறைமுக அருளான பரக்கத்தை அடைவதற்கான வழிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ،…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருடைய உணவு இருவருக்கு போதுமானது. இன்னும் இருவருடைய உணவு நான்கு நபர்களுக்கு போதுமானது.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
(முஸ்லிம்: 4182,  4183, 3837, 3836)

பரக்கத் என்பது நம்முடைய லாஜிக்கிற்கு அப்பாற்பட்டது. அதாவது ஒருவருக்குத் தேவையான உணவைப் போட்டு அதிலேயே இரண்டு பேர் உண்ணலாம் என்று சென்னால் இது சாதாரணமாக நடக்காத காரியம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِلَعْقِ الْأَصَابِعِ وَالصَّحْفَةِ، وَقَالَ: «إِنَّكُمْ لَا تَدْرُونَ فِي أَيِّهِ الْبَرَكَةُ»

நபி (ஸல்) அவர்கள் விரலை சூப்பி, பாத்திரத்தை நன்கு வழித்து தட்டில் மீதம் வைக்காமல் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். “உணவில் எதில் பரக்கத் இருக்கிறது என்று நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
(முஸ்லிம்: 4136,  4140, 3792, 3796)

தேவைக்கேற்றவாறு உணவை வாங்கி உண்ண வேண்டும். இதுவும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

ஓரத்திலிருந்து உண்ண வேண்டும்

البَرَكَةُ تَنْزِلُ وَسَطَ الطَّعَامِ، فَكُلُوا مِنْ حَافَتَيْهِ، وَلَا تَأْكُلُوا مِنْ وَسَطِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பரக்கத் நாம் உண்ணும் உணவின் நடுவில் தான் இறங்குகிறது. எனவே அதன் ஓரத்திலிருந்து உண்ணுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
(திர்மிதீ: 1805, 1727)

இதையும் நாம் நம் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் லாஜிக் இருக்கிறதா? என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனென்றால் இந்த பரக்கத் என்பதே லாஜிக்கிற்கு அப்பாற்பட்டுத் தான் நடக்கிறது. இதை  எந்த அறிவாளியும் புரிந்து கொள்ள முடியாது. விடை சொல்லவும் முடியாது. எனவே இதையும் நாம் நபி (ஸல்) அவர்கள் கூறியதன் காரணத்தினால் நம்ப வேண்டும்.

உண்ணும் உணவை அளந்து போட வேண்டும்

كِيلُوا طَعَامَكُمْ يُبَارَكْ لَكُمْ

“உங்களுடைய உணவை அளந்து போடுங்கள். நீங்கள் பரக்கத் செய்யப்படுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மிக்தாம் (ரலி),
(புகாரி: 2128)

உணவை அளக்காமல் போட்டால் அதிலிருக்கும் பரக்கத்தை நாம் சரியான முறையில் அறிய முடியாது. பல வீடுகளில் அளந்து போடாமல் அதிகமான உணவை வீண் விரையம் செய்யக் கூடியவர்களைக் காணலாம். உதாரணத்திற்கு, காலை உணவை வீட்டில் எத்தனை நபர் சாப்பிடுகிறார்கள்? அவர்களுக்குத் தேவை எத்தனை கிராம் கறி? எவ்வளவு அரிசி? என்று கணக்கிட வேண்டும். இதில் தான் அதிகக் குடும்பங்கள் தவறு செய்கின்றன.

பரக்கத்திற்க்கு உதாரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்ட உணவும் அவர்களுடைய உடல் பலமும் தான். இரண்டு பேரீத்தம் பழம் மற்றும் தண்ணீர் தான் சாப்பிட்டார்கள். என்றாவது காய்ந்த ரொட்டி கிடைக்கும். ஆனால் அவர்களுடைய உடலமைப்பு பலம் மிக்கதாக இருந்தது. உதாரணத்திற்கு அகழ் யுத்தத்தில் பலர் சேர்ந்து ஒரு பாறையை உடைக்க முற்பட்டனர். ஆனால் இயலவில்லை. இறுதியில் நபிகளார் வந்து ஒரே அடி அடித்ததில் பாறை துண்டு துண்டாகப் பிளந்தது.

அதேபோல் மதீனாவில் ஒரு தருணத்தில் மக்களுக்கு மத்தியில் மிரட்டும் சத்தமொன்று கேட்கிறது. அப்போது பெரும் சலனம் ஏற்படுகிறது. அதைப் பற்றி மக்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்ற பொழுது நபி (ஸல்) அவர்கள் அபுதல்ஹாவின் குதிரையை எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் முன்பாக அங்கே சென்று விட்டு திரும்பி வந்து, “பயப்படாதீர்கள், ஒன்றுமில்லை” என்கிறார்கள்.

அரபுக் குதிரையெல்லாம் நம் நாட்டுக் கடற்கரையில் இருக்கும் குதிரையைப் போலல்ல. மிகுந்த வலிமையானவை. இப்படிப்பட்ட காரியங்களை சாதாரணமாக யாரும் செய்துவிட முடியாது. அப்படிப்பட்ட பலம் வாய்ந்த உடல்வாகைக் கொண்டவர்கள். இப்படிப்பட்ட உடலுக்கு அவர்களுடைய உணவு காரணமில்லை. மாறாக அதில் அல்லாஹ் செய்த பரக்கத் தான் காரணமாக இருந்தது.

ஸஹர் நேர உணவில் பரக்கத்

பல விதத்தில் அல்லாஹ் பரக்கத்தைத் தருகிறான்.  அதிலொன்று சஹர் நேரத்தில் உண்ணும் உணவாகும்.

تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சஹர் உண்ணுங்கள். உங்களுடைய உணவில் பரக்கத்திருக்கிறது.      

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
(புகாரி: 1923)

சஹரைப் பொறுத்த வரை நாம் காலையில் குறைவாகத் தான் உணவு உண்ண முடியும். அந்த உணவிலே ஒரு நாள் முழுவதும் இருக்க முடிகிறதென்றால் அதைப் பார்த்து மாற்றார்கள் ஆச்சரியப்படுகிறார்கள். எப்படி தண்ணீரைக் கூட குடிக்காமல் இருக்க முடிகிறது என்று எண்ணுகிறார்கள். இது தான் அற்புதம்.

அல்லது சிலருக்கு உடல் ஆரோக்கியத்தைத் தந்து அதில் இறைவன் பரக்கத் செய்திருப்பான். உதாரணத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வருமானத்தைத் தந்து ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் நோயைத் தந்தால் அதில் பரக்கத் இல்லை.

அப்படியானால் செல்வம் மட்டும் பரக்கத்தில்லை. மாறாக நல்ல உடல் ஆரோக்கியம் இருப்பதும் பரக்கத்தாகும். இதை ஒரு முஸ்லிம் நம்பினால் அவன் பேராசை கொள்ள மாட்டான். நபி (ஸல்) அவர்கள் “அதிகமான செல்வத்தைத் தருவாயாக’ என்று கேட்டதை விட, “எதை நீ தந்தாயோ அதில் பரக்கத்தைத் தருவாயாக’ என்று தான் கேட்டிருக்கிறார்கள்.

பெருநாளன்று பரக்கத்

«كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْرُجَ يَوْمَ العِيدِ حَتَّى نُخْرِجَ البِكْرَ مِنْ خِدْرِهَا، حَتَّى نُخْرِجَ الحُيَّضَ، فَيَكُنَّ خَلْفَ النَّاسِ، فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ، وَيَدْعُونَ بِدُعَائِهِمْ يَرْجُونَ بَرَكَةَ ذَلِكَ اليَوْمِ وَطُهْرَتَهُ»

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள குமரிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். எந்த அளவிற்கென்றால் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக் கூடப் புறப்படச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டோம்.

பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும்போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள்; ஆண்கள் பிரார்த்திக்கும் போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் (பாவத்) தூய்மையையும் எதிர்பார்ப்பார்கள். 

(புகாரி: 971)

அந்த நாளில், மற்ற நாட்களை விட அதிகம் உணவும் மற்ற பொருட்களும் மிஞ்சிக் கிடப்பதையும் மகிழ்ச்சி பரக்கத்தாக இருப்பதையும் பார்க்கிறோம். அதற்காக அனைவரும் திடலுக்குச் செல்ல வேண்டும்.

பரக்கத்திற்காக பிரார்த்தனை செய்தல்

நபியவர்கள் இந்த பரக்கத்திற்காகப் பிரார்த்தனையும் செய்துள்ளார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ்களில் காணலாம்.

أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا، وَعَلَيْهِ دَيْنٌ، فَاشْتَدَّ الغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا تَمْرَ حَائِطِي وَيُحَلِّلُوا أَبِي، فَأَبَوْا، فَلَمْ يُعْطِهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَائِطِي، وَقَالَ: «سَنَغْدُو عَلَيْكَ»، فَغَدَا عَلَيْنَا حِينَ أَصْبَحَ، فَطَافَ فِي النَّخْلِ وَدَعَا فِي ثَمَرِهَا بِالْبَرَكَةِ، فَجَدَدْتُهَا، فَقَضَيْتُهُمْ، وَبَقِيَ لَنَا مِنْ تَمْرِهَا

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையார் உஹுதுப் போரின் போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.)

நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, “நாம் உன்னிடம் காலையில் வருவோம்” என்று கூறினார்கள்.

பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாகி விட்டன.

(புகாரி: 2395)

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ، قَالَ: «مَا هَذَا؟» قَالَ: إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، قَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ، أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் (ஆடையின்) மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இது என்ன?” என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து, ஒரு பெண்ணை நான் மணமுடித்துக்கொண்டேன்” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “பாரக்கல்லாஹு லக – அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவானாக!” என்று பிரார்த்தித்து விட்டு, “ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா – மணவிருந்து அளியுங்கள்!” என்று சொன்னார்கள்.

(புகாரி: 5155)

ஒரு மனிதனுக்கு அதிகம் செல்வம் இருப்பதை விட, கொடுக்கப்பட்ட செல்வத்திலேயே அவனது தேவை அனைத்தும் நிறைவேறுவதென்பது அதை விடச் சிறந்தது. இந்த ஒரு பிரர்த்தனையைத் தான் எல்லா திருமணங்களிலும் சொல்லும்படி கட்டளையிட்டார்கள். இதைத் தான் நாமும் இன்று மணமக்களை வாழ்த்துவதற்காகக் கூறுகிறோம்.

قَالَتْ أُمِّي: يَا رَسُولَ اللَّهِ، خَادِمُكَ أَنَسٌ، ادْعُ اللَّهَ لَهُ، قَالَ: «اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ، وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ»

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் (பரகத்) வளம் சேர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

(புகாரி: 6344)

குறைந்த செல்வமாக இருந்தாலும் அதில் அல்லாஹ் பரக்கத் செய்து விட்டால் அதுவே போதுமானதாகும். ஒருவன் இதைச் சிந்தித்தால் அவன் பேராசை கொள்ள மாட்டான்.

எனவே மேற்கூறப்பட்ட அனைத்துச் சட்டங்களும், சம்பவங்களும் நாம் பொருளாதாரத்தில் பேராசை கொள்ளாமலும் மற்றவர்களை மோசடி செய்யாமலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் பரக்கத்தைத் தந்திருக்கிறான் என்பதை விளக்குகின்றன.