10) மனிதனின் சுயரூபம்
அத்தியாயம் 9
மனிதனின் சுயரூபம்
சென்ற அத்தியாயத்தில் நாம் விவாதித்தது பேரண்டம் படைக்கப்பட்டதா? அல்லது தாமாகத் தோன்றியதா? என்பதைப் பற்றியதாகும். பேரண்டம் படைக்கப்பட்டதே என்றும் நாம் அந்த அத்தியாயத்தில் ஐயமறக் காண்டோம். பேரண்டம் தாமாகத் தோன்றியதாக இருந்திருப்பின் பேரண்டம் ஏன் தோன்றியது? என்பதை நாம் கண்டுபிடிப்பது அரிதாகும். ஏனெனில் இந்த ஆய்வில் தத்துவ ஞானிகள் மற்றும் அறிவியலாளர்கள் எனப் பலரும் ஈடுபட்டு ஆளுக் கொரு காரணத்தைக் கூறி அவற்றுள் எந்தக் காரணம் சரி என்று விளங்கிக் கொள்ள இயலாத சூழலை ஏற்படுத்தி விடும்.
சான்றாக ஒரு மோட்டார் கார் தாமாகவே உலகில் தோன்றி அதில் சிலர் பயணம் செய்து கொண்டிருப்பதை நாம் கண்கூடாகப் பாக்க நேரிட்டாலும் அந்த மோட்டார் கார் எதற்காகத் தோன்றியது என்பதை அப்போதும் யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. அதே நேரத்தில் அந்த மோட்டார் கார் ஒரு மனிதனால் உருவாக்கப்பட்டிருந்தால் அக்கார் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை முற்றிலும் தவறில்லாமல் அக்காரை உருவாக்கிய நபரால் கூற முடியும்.
ஆயினும் மோட்டார் கார் என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கிறது? என்பதை அறிவியலால் பிழையின்றி பதில் கூற முடிவதைப் போன்று மோட்டார் கார் எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது? எனும் வினாவிற்கு அறிவியலால் பதில் கூற முடியாது. எனவே பேரண்டம் என்பது இறைவனால் உருவாக்கப் பட்டது என்பதை ஐயமற விளங்கிக் கொண்ட நாம் பேரண்டம் என்பது என்ன? அது எவ்வாறு இயங்குகிறது?என்பதை அறிவியலிருந்து விளங்கிக் கொண்ட போதிலும் அது ஏன் தோற்றுவிக்கப்பட்டது எனும் வினாவை அதைப் படைத்த இறைவனைக் கேட்பதைத் தவிர வேறு வழியின்றி இருக்கிறோம்.
வானமும் பூமியும் மனிதனுக்காக
இறைவன் ஒருவனைத் தவிர இதற்கு பதில் சொல்லக் கூடிய தகுதி வேறு யாருக்கும் இல்லை என்ற நம்பிக்கையில் இறைவனின் நூலாகிய திருக்குர்ஆனின் பக்கங்களைப் புரட்டினால் இதைக் குறித்து ஆணித்தரமாகப் பதிலளிக் கின்ற பற்பல வசனங்களை அதில் காண்கிறோம். சான்றாக சில வசனங்கள் வருமாறு :
“அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (சீரமைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான்.
“வானங்களில் உள்ளதையும் பூமியில் உள்ளதையும் உங்களுக்கு அல்லாஹ் வசப்படச் செய்ததையும் தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் விசாலமாக்கி இருப்பதையும் நீங்கள் காணவில்லையா?…
“வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தை யும் அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இதில் சிந்திக்கும் சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.
மேற்கண்ட திருமறை வசனங்கள் இப்பேரண்டம் மொத்தமும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டுள்ளதாக ஐயத்திற்கிடமின்றி கூறிவிட்டது. ஆயினும் வாசகர்கள் பலருக்கும் இந்த அறிவிப்பு அவ்வளவு எளிதாக – ஓர் ஆப்பிள் பழம் ஜீரணமாவதைப் போன்று ஜீரணமாகாது என்பது தெரிந்ததே. ஆப்பிள் பழம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டது எனக் கூறினால் அதை எளிதாக விளங்க முடிகிறது. ஆயினும் துருவ நட்சத்திரம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டது எனக் கூறினால் கடற்பயணம் பற்றிப் போதிய அறிவில்லாதவர் களால் அதை விளங்கிக் கொள்ள முடியாது.
இறைவனுக்கு இழப்பு இல்லை
பேரண்டம் படைக்கப்பட்டது மனிதனுக்காகவே என்பது எவ்வகையில் சரி என விளங்காமல் போனதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதலாவது காரணம் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை விளங்காமற் போனதாகும்.
இறைவனுக்கு தாம் படைத்த யாவும் அடிமைகளாக இருந்த போதிலும் மனிதனை மட்டும் மிக அழகிய கோலத்தில் (best stature) படைத்ததை திருமறை (அல்குர்ஆன்: 95:4) ➚ யில் காணலாம். எனவே மனிதனின் மீது இறைவனுக்கு விசேஷ கவனம் உண்டு என்பது தெளிவாகிறது. இருப்பினும் இப்பேரண்டம் என்பது அளவிடற்கரிய மாபெரும் ஆற்றலின் வெளிப்பாடாக இருப்பதால் பொதுவாக மானிட உள்ளங் களில் ஓர் ஐயம் ஏற்படலாம். யாரேனும் ஒருவர் தன்னுடைய வெறும் அடிமைகளின் பயன்பாட்டிற்காக இவ்வளவு பெரிய ஆற்றலைச் செலவிடுவார்களோ என்பதே அந்த ஐயமாகும். இறைவன் என்ற படைப்பாளனை மனிதன் என்ற படைப்பினத்தோடு ஒப்பிட்டதே இந்த ஐயத்திற்குரிய முதற் காரணமாகும்.
மனிதன் செலவு செய்யும் எதையும் அவன் இழந்து விடுகிறான். ஆனால் இறைவனின் கஜானாவில் எதுவுமே குறைவதில்லை. ஆற்றல் யாவும் இறைவனுக்கே சொந்தம். நம்மால் அதை ஆக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது என்பதை விளக்கும் ஐன்டீனுடைய“ஆற்றலின் அழிவின்மை விதி கூறுகிறது. அனைத்திற்கும் அவனே வாரிசாக இருப்பதால் அவன் செலவிட்ட ஆற்றல் யாவும் முடிவாக அவனிடமே திரும்புகிறது. எனவே `இழப்பு என்பதே இல்லாத பாக்கியம் நிறைந்தவனே இறைவனாவான்.
ஒருவர் என்ன செலவு செய்தாலும் அவருடைய கஜானாவிலிருந்து எதுவும் குறைவதில்லை எனில் அவருக்கு செலவு செய்வதில் தயக்கம் இருக்காது. எனவே மானிடனின் பயன்பாட்டிற்காக இறைவன் இம்மாபெரும் பேரண்டத்தைப் படைத்தான் என்று கூறினால் அதில் எவ்வித முரண்பாடும் இல்லை.
மானிடனின் மீதுள்ள இறைவனின் பரிவு
இதைத் தொடர்ந்து மக்கள் மனதில் ஏற்படும் இரண்டாவது ஐயம் யாதெனில் இறைவன் தன்னுடைய ஆற்றலிலிருந்து என்ன தான் செலவிட்டாலும் அவனுக்கு எந்த இழப்பும் ஏற்படுவதில்லை என்பது உண்மையே. ஆயினும் மனிதனுக்காக இவ்வளவு பெரிய ஆற்றலைச் செலவிடும் அளவிற்கு மனிதர்களின் மீது இறைவன் பரிவு கொண்டவனாக இருக்க முடியுமா? என்பதே அந்த ஐயமாகும். இந்த ஐயத்தைப் போக்கும் வசனங்களும் திருக்குர்ஆனில் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவற்றுள் சில வருமாறு :
“…. எனது அருள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது…
“நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது இரக்கமுள்ளவன்; நிகரற்ற அன்புடையோனுமாவான்.
“….. அருள் புரிவதை அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்…
மேற்கண்ட திருமறை வசனங்கள் இறைவன் தனது படைப்பினங்கள் மீது பொதுவாகக் கருணை உள்ளவன் என்பதையும், அதிலும் குறிப்பாக மனிதர்களின் மீது தனிப்பட்ட விதத்தில் பரிவும், கருணையும் கொண்டவன் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இறைவன் தனது படைப்பினங்களின் மீது காட்டும் அன்பின் ஆழத்தைப் பற்றி விளக்கம் அளிக்கும் போது “அல்லாஹ் தனது அன்பை நூறு பாகங்களாகப் பிரித்து அவற்றுள் ஒன்றை மட்டும் பூமிக்கு இறக்கி தொண்ணூற்றொன்பது பங்கை தன்னிடமே வைத்துக் கொண்டான். அந்த ஒரு பங்கைக் கொண்டே பப்பினங்கள் தங்களுக்கு இடையில் அன்பு காட்டு கின்றனர். என இறைத்தூதர் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக) கூறியுள்ளார்.
மேற்கண்ட நபி மொழியிலிருந்து ஒரு குழந்தையின் மீது அதன் தாய் காட்டும் அன்பைக் காட்டிலும் நூறு மடங்கு அன்பு நம் மீது இறைவனுக்கு உண்டு எனத் தெரிய வருகிறது. பொதுவாகப் படைப்பினங்களின் மீதும், குறிப்பாக மனிதர்களின் மீதும் இவ்வளவு அபாரமான ஆழம் காண முடியாத அளவு அன்புடையவனே இறைவன் எனில் இப்பேரண்டம் மிகமிக பிரமாண்டமானதாக இருந்த போதிலும் இதை மனிதனுடைய பயன்பாட்டிற்காக இறைவன் படைத்திருப்பின் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதே அன்றி அதிலும் எவ்வித முரண்பாடும் காண்பதற்கில்லை.
மனிதன் ஒரு சமூக விலங்கு?
பேரண்டம் மனிதர்களுக்காகவே படைக்கப்பட்டது எந்த வகையில் சரி என விளங்காமற் போனதற்கு மூன்றாவது காரணம் இம்மாபெரும் பேரண்டம் எந்த வகையில் மனிதனுக்குத் தேவைப்படுகிறது என்பதைப் பற்றிய அறியாமையாகும். இந்த அறியாமை நீங்க வேண்டுமாயின் மனிதன் யார்? என்பதை முதலில் மனிதர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மானிடனின் தோற்றத்திற்கு இம்மாபெரும் பேரண்டம் தேவையற்றது என்பதே அறிவியலாளர் ஹாக்கிங் அவர்களின் கருத்தாகும்.
இது எந்த அளவுக்குச் சரி என்பதற்கு எதிர்கால அறிவியல் உலகம் பதிலளிக்கட்டும். ஆயினும் மானிடனின் தோற்றத்திற்கு இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை யாயினும் அவன் தன்னுடைய வாழ்வின் குறிக்கோளை அடைய இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையாகும்!
கேட்டவுடன் சிலருக்காவது சிரிப்பை வரவழைக்கும் மேற்கண்ட பதிலைப் புரிந்து கொள்வதற்கு மனிதன் என்றால் யார்? என்பதைப் பிழையின்றி விளங்கிக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாகும். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பெரும்பாலான கல்வியாளர்கள் கூட மனிதனுடைய தேவைகளைப் பற்றி பேசும் போது மனிதன் என்றால் யார்? என்பதைக் கருத்தில் கொள்ளமால் பேசுவதையே நம்மால் பார்க்க முடிகிறது.
உயிரியல் கலையில் உயிரினங்களை வகைப்படுத்தும் போது மனிதனை விலங்கினங்களின் பேரினத்திலுள்ள (Animal Kingdom) ஒரு சிற்றினமாக (Species) சேர்க்கப் பட்டுள்ளது. மேலும் மனிதனுடைய வாழ்க்கை சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. எனவே மனிதன் ஒரு சமூக விலங்காகவே (Social Animal) அடையாளம் காணப்படுகிறான். மனிதனின் புறத் தோற்றமாகிய உடலமைப்பு மற்றும் வாழ்க்கை அமைப்பு ஆகியவைகளிலிருந்து மனித அமைப்பு மிகவும் வேறுபட்டதாகும். எனவே மிகச் சில சந்தர்ப்பங்களில் அவன் ஒரு சமூக விலங்கைப் போன்று காணப்படினும் அவனுடைய ஆன்மீக குணங்களில் (Social Animal) அவன் எப்போதுமே தனித்தன்மை உடையவனாக காணப்படுகிறான்.
மானிடனின் தனிச்சிறப்பு
மனிதனைத் தவிர மொத்த விலங்கினங்களும் அவைகளின் இந்திரிய சுகங்களுக்காக (Sensuous Pleasure) வாழும் போது மனிதர்கள் மட்டும் ஆத்ம சந்தோஷத்திற்கு அதிகமாக மதிப்பளிக்கிறார்கள். மனிதன் அவனுடைய படைப்பிலேயே பெற்ற கல்வித் திறனே அவனுக்கு இந்தக் குணத்தை ஏற்படுத்தியது. மனிதன் அவனுடைய ஆத்மாவைப் புரிந்து கொண்டு அதனுடைய மகிழ்ச்சிக்காக உழைப்பதனாலேயே அவன் ஏனைய உயிரினங்களிலிருந்து உயர் தகுதி பெற்றவனாகத் திகழ்கிறான். அவனுடைய இந்த உயர் தகுதியைப் பற்றி மெய்யான இறைவனின் கலப்பற்ற நூலாம் திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனைக் கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்! ஓதுவீராக! உமது இறைவன் பெரும் தயாள (குணமுடையவ)ன்! அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்! மனிதன் அறியாதவை களை (அவனுக்குக்) கற்றுத் தந்தான்!
அவன் (இறைவன்) மனிதனைப் படைத்தான். விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் ஏனைய உயிரினங்களிலிருந்து மனிதன் எவ்வாறு வேறுபடுகிறான் என்பதை அழகாக விளக்குகிறது. உலகில் இதுவரை அறியப்பட்டிருக்கும் முப்பது இலட்சம் உயிரின வகைகளில் வேறு எந்த ஒன்றுக்குமே வழங்கப்படாத சிறப்பம்சமே கற்கும் திறன் (புத்திமதி – Intllect) ஆகும். கல்வியை அவன் கலைக் கூடங்களிலிருந்தோ அல்லது வாழ்க்கை அனுபவங்களிலிருந்தோ பெற்றுக் கொள்கிறான். மனிதன் நினைவு திரும்பிய நாளிலிருந்து அந்த நினைவு நிலை நிற்கும் நாள் வரை கற்றுக் கொண்டே இருக்கிறான்.
ஏனெனில் கற்கும் திறன் அவனுடைய பிறவிக் குணமாகும். இறைவனால் அவனுக்கென்று தனிச் சிறப்பாக வழங்கப்பட்ட மாபெரும் கொடையாம் இந்தக் கற்கும் ஆற்றலைப் (புத்திமதி) பயன்படுத்துவதன் தரத்தைப் பொருத்தும் அதன் பிறகு கற்றபின் நிற்கும் தரத்தைப் பொருத்தும் ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதர்களிலிருந்து சிற்றில குணங்களில் வேறுபட்டு தனித்த மனிதர்களாக மாறுகின்றனர். மனிதர் களின் இந்த தனிச் சிறப்பான குணமாம் “தனித்துவமே அவனை ஏனைய உயிரினங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்துகிறது.
மனிதன் ஒரு அடையாளச் சின்னம் இல்லை
சான்றாக ஒரு நாய் அந்த இனத்தைச் சார்ந்த அனைத்து நாய்களுக்கும் ஓர் எடுத்துக் காட்டும் அடையாளமுமாகும். இதைப் போன்றே ஒரு நீர்வாழ் உயிரினம் அதன் இனத்தைச் சார்ந்த அனைத்து உயிரினங்களுக்கும் ஓர் அடையாளமாகும். இவ்வாறே ஒர் பறவை அதன் இனத்தைச் சார்ந்த அனைத்து பறவைகளுக்கும், ஒரு மரமோ, செடியோ அதனதன் இனத் தைச் சார்ந்த அனைத்து மரம், செடிகளுக்கும் எடுத்துக்காட்டு களும்,அடையாளங்களுமாகும்.
ஏனெனில் அவை யாவும் அவற்றின் இனங்களுக் கிடையில் ஒன்றுக்கு ஒன்று சமமானவை; ஒரே மாதிரியானவை. ஆனால் மிகப் பெரிய வியப்பிற்குரிய செய்தி யாதெனில் இவ்வுலகில் இது வரை தோன்றியவர்களாயினும் இனி மேல் தோன்றப் போகிறவர்களாயினும் அவர்களில் ஒருவர் கூட மனிதனுக்கு எடுத்துக் காட்டாகவோ அடையாள மாகவோ இருக்க முடியாது என்பதாகும். மிகக் குறைந்த பட்சம் ஒரே பெற்றோருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்களில் ஒருவர் மற்றவருக்கு மாற்றாக,அடையாள மாக, எடுத்துக் காட்டாக முடியுமா எனக் கேட்டால் அப்போதும் கூட முடியவில்லை என்பதே அதற்குப் பதிலாக உள்ளது.
பொருளாதாரம், சமூகம், அரசியல், ஆன்மீகம் போன்றவற்றின் சிந்தனை மற்றும் செயல் வடிவங்களில் சமமானவர்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர் என்பது உண்மையே. இருப்பினும் அவர்களுக்கிடையிலுள்ள சமமற்ற சிந்தனை மற்றும் செயலின் தாக்கம் குறிப்பிட்ட சந்தர்ப்பங் களில் அவர்களை ஒருவரில் இருந்து மற்றவரை வேறு படுத்திக் காட்டும் அளவிற்கு பெரிதாகவே இருக்கும். எனவே எந்த மனிதரையும் மனிதர்களின் அடையாளமாக எடுத்துக் காட்ட இயலாது. மனிதர்களுக்கிடையிலான இந்த வேறு பாட்டைப் பற்றிய சிற்சில குறிப்புகள் திருக்குர்ஆனிலும் (அல்குர்ஆன்: 39:9, 8:22, 2:171) ➚நவஉ) காணமுடிகிறது.
மனிதனைத் தெரிந்து கொள்ளாத மாமேதைகள்
மானிடனுக்கு வழங்கப்பட்ட கற்கும் திறன் அவர்களை மந்தை வெளியிலிருந்து (Cattle Field) தனித்தவர்களாக (Individuals) ஆகும் திறனை வழங்கியதோடு மட்டுமன்றி இறைவனின் படைப்பினங்கள் அனைத்தையும் விட உயர் தகுதிக்கு உயர்த்தப்பட்டதையும் திருக்குர்ஆன் (2:30-34) சுட்டிக் காட்டுகிறது. மானிட வாழ்க்கைக்கு இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை. சூரியக் குடும்பமே போதுமானதாகும் எனச் சிலர் கூறுவதற்குக் காரணம் மானிடனின் மேற்கண்ட உயர் தகுதிகளைக் கருத்தில் கொள்ளாததன் விளைவேயாகும். தனித்த மனிதனை மனித இனத்திற்கு அடையாளமாகக் கொள்ளும் தவறிலிருந்து விஞ்ஞானிகளும் விடுபடவில்லை என்பதை நோபல் பரிசு பெற்ற டாக்டர். அலக்சி காரல் (Dr. Alaxis Carrel) கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
“உண்மைகளின் உலகம் மற்றும் அவைகளின் அடையாளங்களின் உலகம் ஆகிய இரு உலகங்களில் நாம் வாழ்கிறோம். நம்மைப் பற்றிய அறிவைப் பெறுவதற்காக சீரான கவனம் மற்றும் அறிவியல் வாயிலான வேறுபடுத்தல் கள் ஆகியவைகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அக்கருத்து மறுக்க முடியாத உண்மைக்கு தவறாக இருக்கலாம். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் உண்மைகள் அடையாளங்களாகக் கொள்ளப்படுவதோடு தனிமனிதனை (Individual) மனித இனமாகவும் கருதப்படுகிறது.
படித்தவர்கள், மருத்துவர்கள் சமூகவியலாளர்கள் ஆகியவர்களால் செய்யப்படும் பெரும்பாலான தவறுகள் இப்படிப்பட்ட குழப்பத்திலிருந்து வருவனவாகும். விஞ்ஞானிகள் என்பவர்கள் இயந்திரவியலின் தொழில் நுணுக்கம், இரசாயணம், இயற்பியல் மற்றும் உடலியல் போன்ற துறைகளில் பழக்கப்பட்டவர்களாகவும், தத்துவம் மற்றும் புத்திமதியின் கலாச்சாரம் (Intellectual Culture) போன்றவை களில் பழக்கமில்லாதவர்களாகவும் இருப்பது வெவ்வேறு ஒழுக்க எண்ணங்களின் கலப்புக்கும் பொதுவானதைக் குறிப்பிட்டதில் இருந்து அடையாளம் காணாமற் போனதற்கும் பொறுப்பாகும்.
(பார்க்க : பக்கம் 176, மேன் தி அன்னோன், வில்கோ பப்ளிஷிங் ஹெவ், மும்பை, 1959)
பொதுவானதைக் குறிப்பிட்டதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாமற்போனதாலேயே தனி மனிதன் எனும் குறிப்பிட்டதை மனித இனம் எனும் பொதுவானதற்குரிய அடையாளமாக்கும் தவறுகள் நடைபெறுகிறது என்பதை டாக்டர் காரலின் எடுத்துக் காட்டிலிருந்து விளங்குகிறோம்.
மானிடனின் அறிவு எக்காலமும் வளர்ந்து வரும்
மனிதனை ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளமாக இருப்பதிலிருந்து உயிரினங்கள் யாவற்றையும் விட மேலான தகுதிக்கு அவனை உயர்த்திய அவனுடைய கற்கும் திறனைப் பற்றி முன் பக்கங்களில் கண்ட திருக்குர்ஆன் வசனங்களின் கருத்து நம் கண் முன்னால் நிறைவேறி வருகிறது. திருக்குர்ஆன் இறங்கிய காலகட்டத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் மிருகங்களின் மீதே பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இன்று உலகில் காணப்படும் வாகனங் களை அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்க இயலாதவர் களாகவே இருந்தனர். ஆனால் இன்றைய உலகம் மிருகங் களில் பயணம் செய்வதை விட வசதியாக அவர்களின் மோட்டார் கார்களில் பயணம் செய்கிறார்கள் என்பதோடன்றி இதுவரை தங்களை சுமந்து கொண்டிருந்த மிருகங்களைக் கூட தங்கள் பார ஊர்திகளிலும் இரயில்களிலும் சுமந்து செல்லும் ஆற்றலைப் பெற்று விட்டார்கள்
மானிட வரலாற்றில் அவன் பெற்ற இந்த மாபெரும் முன்னேற்றம் எழுதுகோலின் உதவியைக் கொண்டு மனிதன் அறியாதிருந்ததை இறைவன் அவனுக்குக் கற்றுத் தந்தான் எனக் கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனத்தின் நிறைவேற்றமே அன்றி வேறில்லை. அவ்வாறே மனிதனால் ஆகாயத்தில் எவ்வாறு பறக்க முடியும் என்ற கலையையும் நமது முன்னோர் கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்றைய உலகின் விமானங்களும், இராக்கெட்களும் மனிதன் அறியாதிருந் ததை கல்வியின் துணை கொண்டு இறைவன் அவனுக்குக் கற்று தருகிறான் என்று திருக்குர்ஆன் கூறிய வார்த்தைகளின் நிறைவேற்றமாகும்.
ஆயிரக் கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள பூமியின் வெவ்வேறு பகுதிகளில் அமர்ந்து கொண்டு மனிதர்களால் நேருக்கு நேர் பேசும் கலையையும் நம் முன்னோர்கள் அறிந்திருக்கவில்லை. ஆயினும் மனிதனின் கல்வித் திறன் அதை அவனுக்கு சாத்தியமாக்கியது.
இதைப் போன்று மானிட அறிவின் சாதனைகளுக்கு ஆயிரக்கணக்கான சான்றுகளை நாம் கூறமுடியும். மேலும் இன்று நம்மால் அறிந்து கொள்ள முடியாமலிருந்தும் பல கலைகளை திருக்குர்ஆனின் வெளிச்சத்தில் (அல்குர்ஆன்: 96:3-4) ➚ பார்க்கும் போது நாளைய மனிதர்கள் அறிந்து கொள்ளப் போகிறார்கள் என்பது திண்ணம். எனவே மனிதனின் அறிவு என்பது எப்போதும் வளர்ந்து கொண்டிருக்கும் இயல்பைப் பெற்றதாகும்.
மனிதனின் அறிவை அவனுடைய புத்திமதியின் (Intellect) உற்பத்திப் பொருளாகக் கருதினால் அதனுடைய உற்பத்திப் பணிகளே `கற்றல் (Learning) ஆகும். (இந்த விதத்தில் பார்த்தால் அவனுடைய அறிவுக்கு மூலப் பொருள் யாது? மூலப் பொருள் இல்லாமல் உற்பத்தி நடைபெறா தன்றோ?) இதன் காரணமாகவே இறைவன் மனிதனுக்கு எழுதுகோலின் உதவியைக் கொண்டு கற்றுத் தந்தான் எனக் கூறினான். `எழுது கோல் என்பது கல்வியின் அடையாளம் என்பதை நாம் அறிவோம்.
எழுதுகோல்களின் மதிப்பு
ஐன்டீனுடைய சார்பியல் தத்துவங்கள் பெரும் மூளையைக் குழப்பும் (most mind boggling) கோட்பாடாகும் என்பதை நாம் அறிந்துள்ளோம். மிகச் சில அறிவியலாளர் களைத் தவிர மிகப் பெரும்பாலான அறிவியலாளர்களுக்குக் கூட அவருடைய கோட்பாடுகள் விளங்காதவைகளாகவே இருந்தன. இருந்த போதிலும் அந்த கோட்பாடுகள் முழுமை யாக நிரூபிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவரை உலகின் தலை சிறந்த விஞ்ஞானியாக ஒப்புக் கொள்ளச் செய்ததற்குக் காரணம் அவர் வரைந்து காட்டிய அவரது தத்துவங்களி லிருந்து வெளிப்பட்ட அவரது அறிவுத் திறனாகும்.
அணுகுண்டு தயாரிப்பது சாத்தியமே என்பதை விளக்கும் சில தாள்களை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரூவெல்டுக்கு (Roose Velt) ஐன்டீன் 1939, ஆகட் மாதத்தில் எழுதிய போது அமெரிக்க ஜனாதிபதிக்கு இருநூறு கோடி டாலர் செலவில் மன்ஹாட்டன் திட்டத்தை ஆரம்பிப்பதில் எவ்விதத் தயக்கமும் இருக்கவில்லை. அணுகுண்டு தயாரிப்பது சாத்தியமே என்பதற்கு உலகின் எந்த ஒரு விஞ்ஞானியாலும் உத்தரவாதம் தர முடியாமலிருந்தும் அது மட்டுமன்றி ஐன்டீன் எழுதிய சமன்பாடுகளைக் கூட விஞ்ஞானிகளால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தும் ஐன்டீன் உடைய பேனாவிற்கு ரூவெல்ட் வழங்கிய மாபெரும் கண்ணியமே 200 கோடி டாலர் செலவிலான மன்ஹாட்டன் திட்டம் எனக் கூறினால் அது மிகையாகாது.
மன்ஹாட்டன் திட்டம் நிறைவேற்றப்பட்ட போது ஐன்டீனின் அறிவாற்றலைப் புகழ்ந்து பலரும் பாராட்டினர். ஜராம். எ. மெயர் (Jerome. S. Meyer) எனும் அறிவியல் எழுத் தாளர் (USA) தன்னுடைய நூல் ஒன்றில் “இந்த யுகத்தின் மாபெரும் அறிவாளியின் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு சில சமன்பாடுகளின் (Incomprehensible Equations) முகவிலைக்கென்றே முற்றிலும் இருநூறு கோடி டாலர் செலவிடப்பட்டது (பக்கம் 73 Of ABC Phisics, pyramid Publications, Inc, New York, USA, 1944) எனப் புகழ்ந்துரைத்தார்.
பேரண்டத்தில் அறிவை விடச் சிறந்தது எதுவுமே இல்லை என்பதற்கு இது வரை கூறியவை சில உதாரணங் களாகும். இந்த உதாரணங்கள் மனிதன் அறிவுக்காக உழைக்கிறான் என்பதையும் அந்த அறிவு மனிதர்களை பூமியின் மீது அதிகாரம் படைத்தவர்களாக ஆக்கியுள்ளது என்பதையும் நிருபித்த போதிலும் மனிதனுக்கு இவ்வளவு பெரிய பேரண்டம் எப்படித் தேவைப்படுகிறது எனும் கேள்வி இப்போதும் நம்முன் நிலை பெற்றுள்ளது.
சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்லும் மானிடத் தேவைகள்
பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு பூமியைத் தவிர சூரியனும் சந்திரனுமே போதுமானதாக இருந்தது. கடற்பயணயம் செய்யக் கற்றுக் கொண்ட போது வழிகாட்டுவதற்காக சில நட்சத்திரங்கள் தேவைப்பட்டன. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கலீலியோ தொலை நோக்கியை உருவாக்கிய போது சூரியனைப் பற்றியும் சூரியனைச் சுற்றி வரும் கோள்களைப் பற்றியும் அதிகமான செய்திகளைச் சேகரிக்க முடிந்தது.
கலீலியோ விட்டுச் சென்ற அறிவு அவர் இறந்த அதே வருடத்தில் பிறந்த நியூட்டனுக் குள் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இதன் விளை வாக பூமியை நிலைபெறச் செய்வதற்கு சூரியக் குடும்பம் தேவை; எனவே மனிதன் வாழ வேண்டுமானால் அதற்காக ஒரு சூரியக் குடும்பமே தேவை என விளங்கிக் கொள்ள முடிந்தது.
அவன் மனிதனாக இருந்ததால் அறிவுக்கான வேட்கை அவனை இடைவிடாமல் உழைக்கச் செய்தது. இதன் விளை வாக அவனுக்கு அவனுடைய படைப்பாளனாம் இறைவன் வழங்கிய எக்காலமும் வளர்ந்து செல்லும் (நஎநச நேசநயளபே) அறிவு நட்சத்திரங்களைப் பற்றியும் காலக்சியின் தோற்றத் தைப் பற்றியும் பற்பல முக்கியமான செய்திகளை சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அவனுக்குக் கற்றுத் தந்தது.
இந்தச் செய்திகளின் உதவியால் மானிடனின் தோற்றத் திற்கு வெறும் சூரிய குடும்பம் மட்டும் போதாது என்றும் மனிதன் பூமியில் தோன்ற வேண்டின் அதற்காக கோடிக் கணக்கான நட்சத்திரங்களையும் கருங்குழி ( Black Holes)களையும் குவாசர்களையும் (Quasers) வால் நட்சத்திரங் களையும், நெபுலாக்களையும், எண்ணிலடங்காத விண் கற்களையும், இன்ன பிற பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு பிரமாண்டமான காலக்சியே தேவைப்படும் என அறிந்து கொண்டான். இதைப் பற்றி ஹாக்கிங் அவர்கள் கீழ்க்கண்ட வாறு கூறுகிறார்.
“நமது வாழ்க்கைக்கு சூரியக் குடும்பம் நிச்சயமாக ஒரு பிரதான தேவையாகும். ஒருவர் இந்தப் பிரதான தேவையை மொத்த காலக்சிவரை விரிவடையச் செய்யலாம். ஏனெனில் கனமான தனிமங்களைத் தோற்றுவித்த முற்கால நட்சத்திரங் கள் இருக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் மற்ற காலக்சி கள் யாவும் எந்த வகையிலும் தேவையானதாகத் தோன்ற வில்லை. மேலும் பேரண்டம் பேரளவில் எல்லா திசைகளி லும் இவ்வளவு சீராக இருக்க வேண்டிய தேவையும் இல்லை
(பக்கம் : 133)
மேற்கண்ட ஹாக்கிங் அவர்களின் எடுத்துக்காட்டில் மானிட வாழ்க்கைக்கு மொத்த காலக்சியும் தேவை எனக் குறிப்பிடப்பட்டது மானிடனின் தோற்றத்தைக் கருத்தில் கொள்ளப்பட்டதனால் ஆகும். மனித உடலில் பேரளவிலும் (Macro elements) சிற்றளவிலும் (Micro elements) ஏராளமான தனிமங்கள் இருக்கின்றன. அவற்றுள் சிற்றளவு தனிமங் களில் கனமான தனிமங்களாம் தங்கம், பிளாட்டினம் போன்றவைகளும் இருக்கின்றன. இக்கனமான தனிமங்கள் தோன்ற வேண்டுமாயின் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் அழிவுற்று அந்த அழிவிலிருந்து பிறக்கும் இரண்டாம் அல்லது முன்றாம் தலைமுறை நட்சத்திரங்கள் தோன்ற வேண்டுமென நாம் முன்னர் கண்டுள்ளோம்.
இவ்வாறு ஒரு தலைமுறை நட்சத்திரங்கள் அழிந்து அவைகளின் அழிவிலிருந்து மற்றொரு தலைமுறை நட்சத்திரங்கள் பிறக்கும் நிகழ்ச்சிப் போக்குகள் நடைபெற வேண்டுமாயின் காலக்சியின் அமைப்பு இன்றியமையாததாகும். எனவே மானிடனின் உடலைத் தோற்றுவித்த பொருட்களைக் கருத்தில் கொண்டே மனித வாழ்க்கைக்கு இந்த மொத்த காலக்சியும் ஒரு பிரதானத் தேவையாகும் எனக் கூறப்பட்ட தற்குக் காரணமாகும்.
மானிட வாழ்க்கை நடைபெறுவதற்கு ஒரு காலக்சியே தேவையாகும் என இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட முடிவை ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள விஞ்ஞானிகளால் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. ஆயினும் திருக்குர்ஆன் கூறியதற் கிணங்க மனிதன் பெற்றுள்ள வளர்ந்து கொண்டே இருக்கும் அவனது அறிவு இருபதாம் நூற்றாண்டில் ஒரு காலக்சியே அவனுடைய வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும் என அறிவுறுத்தியது. இதற்கு மேல் வருங்காலத் தலைமுறை யினரின் வளர்ந்து கொண்டிருக்கும் அறிவு இக்கூற்றை உறுதிப்படுத்துகிறதா அல்லது மாற்றியமைக்கிறதா என்பதற்கு காலம் பதில் சொல்லும். ஆயினும் நமது நிலை இதிலிருந்து வேறுபட்டதாகும்.
சமூக வாழ்க்கை மனிதனின் குத்தகை இல்லை
மனிதனின் தேவை யாது என நிர்ணயம் செய்யும் போது குறைந்த பட்சம் முதலாவதாக“மனிதன் என்பது என்ன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே அவனுடைய தேவை என்ன என்பதை சரியாக நிர்ணயிக்க முடியும் என்பது விளக்கத் தேவையில்லை. பெரும் கல்விமான்கள் கூட இந்த இடத்தில் தவறி விடுகிறார்கள் என்பதை டாக்டர் காரலின் எடுத்துக் காட்டில் நாம் கண்டோம். கற்றவர்கள் மத்தியில் வழக்கமாக மனிதன் ஒரு சமூக விலங்காக (Social Animal) குறிப்பிடப்படுகிறான்.
உள்ளபடியே மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதற்கப்பால் எதுவும் இல்லை எனில் இம்மாபெரும் பேரண்டம் அவனுக்குத் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் உண்மை நிலை என்னவென்றால் ஒரு சமூக விலங்கு எனும் நிலைக்கு அப்பால் அவனிடம் ஏராளமான குணங்கள் நிறைந்துள்ளன. இந்தக் குணங்களே அவனை `மனிதன் எனும் பெயருக்குத் தகுதி வாய்ந்தவனாக இருக்கச் செய்கிறது. எனவே மனிதனைப் பொருத்தவரை`சமூக விலங்கு எனும் சொல் அவனைக் குறிப்பாக அடையாளம் காட்டுவதில்லை.
மனிதன் பெற்றுள்ள எக்காலமும் வளரும் அறிவு அவனைத் தவிர வேறு சில உயிரினங்களும் சமூக வாழ்க்கையை மேற்கொள்வதைக் கண்டுபிடித்துள்ளது. தேனீக்கள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அவைகள் தங்களது இராச்சியத்தில் (தேன்கூடுகளில்) தொழிற்சாலைகளை உருவாக்கி உற்பத்தி பணிகளை ஈடுபட்டு ஒரு ஆட்சித் தலைவிக்கு (இராணித் தேனீ) கீழ் கட்டுப்பாடுடன் வாழ்ந்து வருவது நாம் அறிந்ததே.
இதைப் போன்று எறும்புகளின் பேரினத்தில் ஒரு குறிப்பிட்ட சிற்றினம் தேனீக்களினும் சிறந்த முறையில் சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பீட்டர் ஃபார்ப் ( Peter Farb, USA ) எனும் அறிவியல் எழுத்தாளர் நிலத்தை உழுது உணவு உற்பத்தி செய்யும் ஒரு வகை எறும்புகளைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“இவைகள் காளான் (Fungus) வளர்க்கும் எறும்பு களாகும். சில செல் எறும்புகளையும் (Termites) மனிதர் களையும் தவிர இந்த உலக உருண்டையின் மீது தங்களின் அன்றாட உணவை உற்பத்தி செய்யும் ஒரே உயிரினம் இது ஆகும். அவைகள் காளான் பாத்திகளை உருவாக்குகின்றன; விதைக்கின்றன; களை எடுக்கின்றன; உரம் இடுகின்றன;விளைச்சல் நன்றாக இருக்கும் போது கூடுதல் தோட்டங் களுக்காக புதிய நிலத்தைச் சீர்படுத்துகிறது. 5,00,000 எறும்புகளின் விருத்தி அடைந்த ஒரு நகரத்திற்கான ஏக உணவாக இருக்கக் கூடிய அதன் விளைச்சலை அவை அறுவடை செய்கிறது. மனிதன் தோன்றுவதற்கு பத்து லட்சம் வருடங்களுக்கு முன்னிருந்து மண்ணின் விவசாயிகளாக வந்த இவைகள் அவைகளின் விவசாயத்தை குற்றமற்ற முறையில் செய்கின்றன
(பக்கம் : 72, லிவிங் எர்த், பிரமிட் பப்ளிகேஷன், யு.எ.ஏ)
மேற்குறிப்பிடப்பட்ட விபரங்களிலிருந்து சமூக வாழ்க்கை என்பது மனிதனின் தனிச் சிறப்பான அடையாளக் குறியீடு இல்லை என்றும் உலகைப் பொருத்தவரை அவனு டைய அடையாளக் குறியீடு (Identification) `புத்தியுள்ள உயிரி னம் (Intelligent Being) என்பதாகும் எனத் தெரிய வருகிறது.
மானிடனின் வரைவிலக்கணத்தின் முக்கியத்துவம்
வாசகர்கள் பலரும் இப்போதும் கூட `மனிதன் என்ற சொல்லின் வரைவிலக்கணம் கூறுவது நமது தலைப்போடு எந்த வகையில் தொடர்பு கொள்கிறது என்ற ஐயத்தில் இருக்கக் கூடும். ஆனால் `கடவுள் இருப்பது உண்மை யானால் இவ்வளவு பெரிய பேரண்டத்தை ஏன் படைத்தார்? இப்பேரண்டம் ஏதேனும் விதத்தில் மனிதனுக்குத் தேவைப்படுகிறதா? என்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்குரிய பதில் `மனிதன் என்ற சொல்லில் வரைவிலக்கணத்திலேயே புதைந்து கிடக்கிறது. எனவே மனிதன் என்ற சொல்லின் வரைவிலக்கணம் ஐயத்திற்கிட மின்றி விளங்கிக் கொண்ட பின்னரே இங்கு எழுப்பப் பட்டிருக்கும் சர்வதேச பிரசித்தி பெற்ற கேள்வியின் விடைக்குள் நாம் செல்ல முடியும்.
மனிதனின் வரைவிலக்கணத்திற்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் உண்டானதற்குக் காரணம் மனிதன் ஒரு சமூக விலங்காக அறிமுகப்படுத்தப்படுவதும் ஒரு குறிப்பிட்ட ஏதேனும் மனிதனை மனித இனத்திற்கு அடையாளமாக (Symbol) கூறப்படுவதுமாகிய தவறான போக்குகளுமாகும். டாக்டர். காரல் தன்னுடைய அதே புத்தகத்தில் மேலும் கூறுகிறார்.
“மனித இனம் என்பது இயற்கையில் எங்குமே காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் தனிமனிதர்கள் மட்டுமே உள்ளனர். மனித இனத்திலிருந்து தனி மனிதன் வேறுபட்டவனாவான். ஏனெனில் `அவன் என்பது ஒரு உறுதிவாய்ந்த உண்மை நிகழ்ச்சியாகும். அவன் செயலாற்று கிறான்; நேசிக்கிறான்; துன்புறுகிறான்;சண்டையிடுகிறான்; செத்துப் போகிறான். இதற்கு மாறாக மனித இனம் என்பது நமது மனங்களிலும், புத்தகங்களிலும் வாழுகின்ற அர்த்தமற்ற (Platonic Idea) கருத்தாகும்.
(பக்கம் : 175, மேன் தி அன்னோன்)
டாக்டர் காரல் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டு ஒரு எளிய உண்மையாகும். சான்றாக உங்கள் கார் ஓட்டுநரை விட ஐசக் நியூட்டனையோ, உங்கள் சகோதரனை விட உங்கள் தேசப் பிதாவையோ நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால் நியூட்டனும், தேசப்பிதாவும் மனித இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக இல்லையென்றும் அவர்களுக்குள் குடியிருந்த அவர்களின் தனித்துவத்திற்காகவே (Individuality) என்பதும் விளக்கம் தேவைப்படாத எளிய உண்மைகளாகும். இன்றைய அறிவியல் உலகின் முடிசூடா மன்னராக ஹாக்கிங் அவர்களை ஏனைய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வது அவர் ஒரு சமூக விலங்கு என்பதற்காகவோ அல்லது அவர் மனித இனத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவோ இல்லை என்பதும் அவருக்குள் இருக்கும் தனி நபர் சிறப்பே (Presonality) அதற்குக் காரணம் என்பதும் விளக்கம் தேவையற்றதாகும்.
மனிதனும் அவனது தனிநபர் சிறப்பியல்பும்
மரத்திலிருந்து பழங்கள் விழுவதை நியுட்டனுக்கு முன்னரும் ஏராளமான அறிவு ஜீவிகள் பார்க்கத்தாம் செய்தனர்.ஆயினும் நியூட்டனின் புத்தியிலிருந்து தோன்றிய கற்க வேண்டும் எனும் ஆர்வத்தை அவர் செயல்படுத்தத் துணிந்ததே ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவரை ஈடுபடச் செய்தது. இது நியூட்டனின் தனிநபர் சிறப்பு (Presonality) ஆகும். இதற்கு மாறாக மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் (Identical) ஆகவும், அவர்களில் தனிநபர்கள் (Individuals) யாரும் இல்லாமலும் இருந்திருந்தால் நியூட்டன் ஒருபோதும் தனிசிறப்பிற்குரியவராக ஆகியிருக்க முடியாது என்பது திண்ணம்.
இந்த நிலையே உலகில் வாழும் மனிதர்கள் பெற்று இருந்தார்கள் எனில் உலகில் எந்த கண்டுபிடிப்பையும் மனிதர்கள் நிகழ்த்தி இருக்க முடியாது. இதன் பொருள் மனிதனும் ஏனைய விலங்குகளைப் போன்று பகுத்தறிவில்லாமலே படைக்கப்பட்டனர் என்பதே ஆகும். அந்த நிலையில் மனிதனும் விலங்கைப் போன்றவனாகவே மாறி இவ்வளவு பெரிய பேரண்டம் அவனுக்கு தேவையற்ற தாகவே கருதப்பட்டிருக்கக் கூடும். ஆனால் நடப்பதோ வேறு விதமாக. இங்கு ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு தனிநபர் சிறப்புக்கு உரியவர்களாக உள்ளனர். டாக்டர் காரல் அதே நூலில் மேலும் கூறுகிறார் :
“நவீன சமூகம் தனிமனிதனைப் புறக்கணிக்கின்றது. அது மனித இனமாக மட்டுமே மனிதனை எடுத்துக் கொள்கிறது. அது ஒட்டு மொத்தமான எதார்த்தங்களில் மட்டுமே நம்பிக்கை கொண்டு மனிதர்களை வேறுபட்டவர் களாவே நடத்துகிறது. தனி மனிதன் மற்றும் மனித இனம் எனும் கருத்துருவங்களில் உள்ள குழப்பம் தொழிலியல் சமூகத்தை (Indnstrial Civilzation) மனிதர்களை தரம் பிரிக்கும் தவறுக்கு இட்டுச் செல்கிறது. நாம் அனைவரும் முற்றிலும் ஒரே மாதிரியாக இருந்திருந்தால் ஒருபெரும் மந்தையில் வாழ்ந்து பணியாற்றும் நாற்காலி விலங்குகளைப் போன்று வளர்க்கப்பட்டிருப்போம். ஆயினும் ஒவ்வொருவருக்கும் சொந்தமான தனிநபர் சிறப்பு (Personalit) உண்டு. அவன் ஒரு அடையாளக் குறியாக நடத்தப்படக் கூடாது.
(பக்கம் : 198, மேன் தி அன்னோன்)
தொழிலியல் சமுதாயத்தில் மனிதர்கள் தொழிலாளி வர்க்கம் மற்றும் முதலாளி வர்க்கம் எனத் தரம் பிரிக்கப் பட்டதை தனிமனிதனை புறக்கணித்துவிட்டு மனிதர்களை மனித இனமாக மட்டுமே எடுத்துக் கொண்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த நடவடிக்கையில் மனிதர்கள் நாற்காலிக்கு ஒப்பாகவே நடத்தப்படுகின்றனர். ஆனால் மனிதர்கள் அனைவரும் தனிநபர்களே (Individuals) என்பதும் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் தனிநபர் சிறப்பும் (Personality) உண்டு என்றும் எனவே மனிதர்களை மனித இனமாக பாவித்து நடத்தப்படக் கூடாது என்பதே டாக்டர் காரல் அவர்களின் கருத்தாகும். அறிவியலாளரும், தத்துவ ஞானியுமான டக்டர் காரலை நாம் மேற்கோள்காட்டி இருப்பது உலகில் தோன்றியுள்ள இலட்சக் கணக்கான உயிரினங்களில் ஒன்றாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் ஏனைய உயிரினங்கள் எதற்குமே இல்லாத பிறவிக் குணம் மனிதர்களுக்குள் இருக்கும் “தனிநபர் சிறப்பியல்புகள் ஆகும் என்பதையும் மேலும் மனிதன் எப்போதும் ஒரு சமூக விலங்காகக் குறிப்பிடப்படுவது தவறான அணுகுமுறை யாகும் என்பதையும் சுட்டிக்காட்டுவதற்கே அன்றி டாக்டர் காரல் அவர்களின் கருத்துகள் யாவையும் ஏற்றுக் கொள்வதாக இதற்கு அர்த்தமில்லை.
பிரதான செய்திகள்
இந்த அத்தியாயத்திலிருந்து இதுவரை ஐந்து பிரதானமான தகவல்களை அறிந்து கொண்டோம். அவற்றுள் முதலாவது இப்பேரண்டம் படைக்கப்பட்டது மனிதர்களுக் காவே ஆகும் என்ற திருக்குர்ஆனின் பிரகடனம். இரண்டாவ தாக இவ்வளவு பெரிய பேரண்டத்தை இறைவன் மனிதர் களுக்காக படைத்த போதிலும் அவனுடைய ஆற்றலில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்பதால் இறைவன் தன்னுடைய அடியார்களுக்காக இப்பேரண்டத்தைப் படைத்ததில் எவ்வித முரண்பாடும் இல்லை என்பது.
மூன்றாவதாக மனிதர்களுக்கென இப்பேரண்டத்தைப் படைத்ததைக் காட்டிலும் மிகுதியான பரிவு மனிதனின் மீது இறைவனுக்கு உண்டு எனும் திருக்குர்ஆனின் விளக்கம். நான்காவதாக இவ்வளவு பெரிய பேரண்டம் எந்த வகையிலும் மனிதனுக்குத் தேவைப்படவில்லை எனும் அறிவியலாளர் களின் கருத்து மனிதனை வெறும் ஒரு சமூக விலங்காக மட்டும் கருத்தில் கொண்டதன் விளைவே என்பது. ஐந்தவாதாக மனிதனின் ஏனைய உயிரினங்கள் எதற்கும் இல்லாத எக்காலமும் வளர்ந்து கொண்டே செல்லும் இயல்புடைய அறிவைப் பிறவிக் குணமாகப் பெற்றவன் என்பதும் இப்பிறவிக் குணம் மனிதர்கள் ஒவ்வொருவரையும் தனிநபர் சிறப்புக்கு உரியவர்களாக ஆக்கியது என்பதுமாகும்.
அடுத்ததாக இம்மாபெரும் பேரண்டம் மனிதனுக்கு எவ்வாறு தேவைப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.