07) நாள்தோறும் நடைபெறும் இராப்பகல் மாற்றம்

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

அத்தியாயம் 6

நாள்தோறும் நடைபெறும் இராப்பகல் மாற்றம்

நாம் வாழும் இந்தப் பூமியில் எண்ணிலடங்காத உயிரினங் கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உயிரினங்களின் வாழ்க்கைக்கு பூமியின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராப்பகல் மாற்றம் மிகவும் அவசியமாகும். பூமியில் நடை பெறும் இராப்பகல் மாற்றத்தைக் குறித்து பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. அவை பிரதானமாக இராப்பகல் மாற்றத்தால் உயிரினங்கள் அடையும் பயன்பாடு பற்றியதும்,இராப்பகல் மாற்றம் நடைபெறச் செய்கின்ற அதன் அமைப்பைப் (Function) பற்றியதுமாகும்.

இராப்பகல் மாற்றங்களால் நாம் அடையும் பயன்பாடுக ளில் சிலவற்றைத் திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

இராப்பகல் மாற்றங்களும் அதன் பயன்பாடுகளும்

நீங்கள் அமைதி பெறுவதற்காக இரவையும், பார்க்கக்கூடிய நிலையில் பகலையும் அல்லாஹ்வே ஏற்படுத்தினான். அல்லாஹ் மனிதர்களின் மீது அருளுடையவன்; எனினும் மனிதர்களில் அதிக மானோர் நன்றி செலுத்துவதில்லை.

(அல்குர்ஆன்: 40:61)

அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.

((அல்குர்ஆன்: 25:47)

இராப்பகல் மாற்றத்தால் மனிதர்கள் அடையும் பயன் பாடுகளை இது போன்ற சில வசனங்களில் குறிப்பிடும் திருக் குர்ஆன் இராப்பகல் மாற்றத்திற்கான அதன் இயக்கத்தை நேரம் குறிப்பிடுவதற்காக சில வசனங்களில் கூறுகிறது. அவற்றுள் ஒன்று வருமாறு:-

“சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலைநாட்டுவீராக!

((அல்குர்ஆன்: 17:78)

இந்த வசனத்தில் மனிதர்களின் பேச்சு வழக்கில் (colloquial language) திருக்குர்ஆன் பேசுவதால் அது கூறும் அறிவுரையைப் புரிந்து கொள்வதில் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படவில்லை. மனிதர்கள் விளங்கிப் பணியாற்ற வேண்டிய விபரங் களைக் கூறும் இது போன்ற இடங்களில் திருக்குர்ஆன் அறிவியலை நுழைத்து குழப்பத்தை உருவாக்குவதில்லை என்பதையும், மற்ற இடங்களில் அறிவியலோடு தொடர் பில்லாத ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் கூறும் போது கூட அறிவியலைப் பயன்படுத்தி உள்ளது என்பதையும் திருமறையின் ஆய்விலிருந்து மிக அழகாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இராப்பகல் மாற்றத்தின் அறிவியலை உட்படுத்துவ தற்காக திருக்குர்ஆன் கையாண்ட மற்றொரு வார்த்தைத் தந்திரம் துல்கர்னைன் அவர்களின் வரலாற்று நிகழ்ச்சியில் காணப்படுகிறது. இந்த வசனத் தொடரில் திருக்குர்ஆன் பயன்படுத்திய இரண்டு செய்திகளை நினைவு கூர்வோம். முதலாவது செய்தி, “சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது….. என்பதும் இரண்டாவது செய்தி, “…. சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்த போது…. என்பதுமாகும்.

மேற்கண்ட இரண்டு செய்திகளில் சூரியன் உதிப்பதற் கென்று ஒரு இடமும், சூரியன் மறைவதற்கென்று மற்றொரு இடமும் இருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுவதைத் தெளிவாகக் காண்கிறோம். சூரியனின் உதயமும், மறைவும் விண்ணில் நடைபெறும் நிகழ்ச்சியே என்பது நமக்குத் தெரியும். எனவே பூமியைச் சூரியன் சுற்றி வருவதாக இருந்தால் சூரியன் உதிக்கும் இடம் என்றோ அல்லது சூரியன் மறையும் இடம் என்றோ ஏதேனும் இடங்கள் விண்ணிலோ அல்லது பூமியிலோ இருக்க முடியுமா எனத் தேடிப் பார்ப்போம்.

உதிக்கும் இடமும் மறையும் இடமும்?

தேடலின் துவக்கமாக நாம் இப்போது சூரியன் பசிபிக் சமுத்திரத்தின் உச்சியில் ஒளி வீசிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்வோம். சூரியனின் ஒளிக்கதிர்கள் இப்போது பூமியின் அரைக்கோளத்தில் விழுகின்றன. எனவே அப்பகுதி பகலாக இருக்கிறது. அப்பகலின் ஒரு எல்லை சீனாவிலும் மற்றொரு எல்லை அமெரிக்காவிலும் இருக்கின்றன.

சூரியன் இப்போது அமெரிக்கா இருக்கும் திசையை நோக்கி நகர்வதாகக் கற்பனை செய்தால் சூரியன் உதிக்கும் இடம் அமெரிக்காவிலும் சூரியன் மறையும் இடம் சீனாவிலும் இருக்கும். அதன் பொருள் அமெரிக்க மக்களுக்கு சூரியன் உதித்துக் கொண்டிருக்கும் என்பதும் சீனத்து மக்களுக்கு சூரியன் மறைந்து கொண்டிருக்கும் என்பதுமாகும்.

சூரியன் நகரத் துவங்கி பூமியைச் சுற்றி வரத் துவங்கியதும் உதிக்கும் இடமும் மறையும் இடமும் சூரியனுடன் நகரத் துவங்கி விடுகிறது. பூமியிலும் சரி ஆகாயத்திலும் சரி உதிக்கும் இடமும் மறையும் இடமும் எந்தவோர் இடத்திலும் நிலைத்து நிற்காமல் சூரியனுடன் நகரத் துவங்கி விடுகிறது. ஆனால் திருக்குர்ஆன் இராப்பகல் இயக்கத்தில் உதிக்கும் இடமும், மறையும் இடமும் இருக்கிறது என தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

திருக்குர்ஆனின் வார்த்தை உண்மையாக வேண்டுமாயின் உதிப்பதற்கும், மறைவதற்கும் தனித்தனி இடங்கள் இருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிபந்தனையாகும். எனவே இந்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டுமானால் இராப்பகலின் இயக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதே இப்போது நம்முன் இருக்கும் வினாவாகும்.

கட்டுண்டு நிற்கும் உதயமும் மறைவும்!

இது வரை நாம் செய்து பார்த்த கற்பனைக் காட்சிகள் புவி மையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த அடிப்படையில் சிந்திக்கும் போது திருக்குர்ஆனுடைய கூற்றை மெய்பிக்கக் கூடிய உதிக்கும் இடமும் மறையும் இடமும் விண்ணில் உருவாகவில்லை என்பதால் இந்தச் சிந்தனை திருக்குர்ஆனுக்கு எதிரான சிந்தனை என்பதை எளிதாக விளங்க முடிகிறது.

எனவே இப்போது இராப்பகல் இயக்கத்தை நடத்துவதற்கு நம் முன்னால் ஒரே ஒரு வழி மட்டுமேயாகும். அது சூரியனை நகராமால் ஒரே இடத்தில் நிறுத்திவிட்டு பூமியைச் சுழற்றிப் பார்ப்பதே ஆகும். எனவே நாம் இப்போது அந்தச் சோதனையைக் கற்பனை செய்து பார்ப்போம்.

இப்பவும் சூரியன் பசிபிக் சமுத்திரத்தின் மீது ஒளி வீசிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்வோம். எனவே பசிபிக்கின் மீதுள்ள பகலின் இரண்டு ஓரங்கள் முன் போலவே அமெரிக்காவிலும் சீனாவிலும் இருக்கும். இப்போது பூகோளம் மேற்கிலிருந்து கிழக்காக சுழல ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். இதன் விளைவாக பூமியின் மீதுள்ள பகல் பகுதி கிழக்கிலிருந்து மேற்காக நகரத் துவங்கும்.

எனவே முன் போன்றே அமெரிக்க மக்கள் சூரிய உதயத்தையும், சீனத்து மக்கள் சூரியனின் மறைவையும் பார்ப்பார்கள். பூமி மேலும் சுழலச் சுழல அமெரிக்காவில் இருந்த சூரியனின் உதயத்தையும் சீனாவில் இருந்த சூரியனின் மறைவையும் பூமியின் வெவ்வேறு பகுதிகள் பெற்றுக் கொள்கின்றன. ஆயினும் இப்போது ஆகாயத்தைப் பார்த்தால் அற்புதமான மற்றொரு காட்சியை நாம் காண்கிறோம்.

ஆம்! அமெரிக்காவிலும், சீனாவிலும் இருந்த உதயமும் மறைவும் பூமியின் வெவ்வேறு பகுதிகளால் பெற்றுக் கொள்ளப்பட்ட போதும் ஆகாயத்தைப் பொருத்த வரை உதிக்கும் இடமும் மறையும் இடமும் எள்ளளவும் நகராமல் ஒரே இடத்தில் நிலைபெற்று இருக்கின்றன. பூமி சூரியனை முழுமையாக ஒரு சுற்று சுற்றி வந்த போதும் உதயமும் மறைவும் ஆகாயத்தில் நகராமல் நிலை நின்றதே அன்றி எங்குமே நகர்ந்து செல்லவில்லை.

பூமியின் மீது கூட உதயமும் மறைவும் நகர்வதாகத் தோன்றுவதற்குக் காரணம் உண்மையில் ஆகாயத்தில் நிலைபெற்றிருக்கும் உதயம் மற்றும் மறையும் இடங்களுக்கு பூமியின் வெவ்வேறு பகுதிகள் சுழன்று வந்து அவை தாமாகவே உதயத்தையும் மறைவையும் பெற்றுக் கொள்வதனாலேயே அன்றி பூமியின் மீது கூட உதயமோ மறைவோ நகரவில்லை. எனவே பூகோளம் சுழல்வதால் பூமியின் மீது இராப்பகல் இயக்கம் நடைபெறுவதாக நாம் செய்து கொண்ட கற்பனை திருக்குர்ஆன் கூறும் இராப்பகல் அறிவியலை மிக அழகாகவும் அற்புதமாகவும் நிரூபித்து விட்டது.

இராப்பகலைத் தேடிச் செல்லும் நிலப் பகுதிகள்

சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக நம்பிக் கொண்டிருக் கும் ஒருவர் புவிஈர்ப்பு விசை தம்மைப் பாதிக்காத உயரத்தில் நின்று பூமியின் மீது நடைபெறும் இந்த அற்புதமான காட்சியை (ஒரே இடத்தில் கட்டுண்டு நிற்கும் உதயம் மற்றும் மறைவுக் காட்சிகளைக்) காண்பது விந்தை மிகு காட்சியாக இருக்கும்.

சூரியன் நகராமல் ஒரே இடத்தில் நின்றிருக்க (சூரியன் நகர்கிறது என்பதை மற்றொரு அத்தியாயத்தில் விளக்கி யுள்ளோம். ஆயினும் சூரியன் சூரியக் குடும்பத்திற்குள் நகர்வதில்லை என்றும் சூரிய குடும்பத்தைப் பொருத்தவரை சூரியன் நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது என்பதையும் கருத்தில் கொள்க) பூமி தன்னைத் தானே சுற்றி இராப்பகல் மாற்றத்தைத் தோற்றுவிப்பதே விந்தைகள் தோன்றுவதற்குக் காரணமாகும்.

சூரியன் நகராமல் நின்று விடுவதால் இராப்பகல்களும் நகராமல் நின்று விடுகின்றன. இராப்பகல்கள் நகராமல் நிற்பதால் உதயமும் மறைவும் நகராமல் அதனதன் இடத்தில் கட்டுண்டு நின்று விடுகின்றன. ஆயினும் பூமியின் ஒவ்வொரு நிலப்பகுதிகளும் நகர்ந்து சென்று நகராமல் கட்டுண்டு நிற்கும் உதயம், மறைவு, இரவு மற்றும் பகல் ஆகியவைகளை அவைகள் இருக்கும் இடங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்கிறது.

சான்றாக பூமியின் ஏதோ ஒரு நிலப்பகுதி. இதை லண்டன் மாநகர் எனக் கொள்வோம். இப்பிரதேசம் சூரியன் உதிக்கும் இடத்திற்கு வருவதற்கு சில வினாடிகளுக்கு முன்னால் வரை லண்டன் மாநகரில் சூரியோதயம் இல்லை. ஆயினும் உதயம் நகராமல் கட்டுண்டு நிற்கும் இடத்திற்கு வந்ததும் லண்டனில் சூரியோதயம் நிகழ்கிறது. சில நிமிடங்களில் லண்டன் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து நகர்ந்து விடுகிறது. உடனே லண்டன் சூரியோதயத்தை இழந்துவிட்டு முற்பகலாகி விடுகிறது.

இப்போது லண்டனைத் தொடர்ந்து அது வரை இரவாக இருந்த பெல்ஜியம் பூமியின் சுழற்சியால் சூரியன் உதிக்கும் இடத்தை அடைகிறது. உடனே அது வரை பெல்ஜியத்தில் இல்லாத சூரியோதயத்தை பெல்ஜியம் பெற்று விடுகிறது. சில நிமிடங்களில் பூமியின் சுழற்சி பெல்ஜியத்தையும் அந்த இடத்திலிருந்து நகர்த்தி விடுவதால் பெல்ஜியம் சூரியோதயத்தை இழந்து முற்பகலைப் பெறுகிறது.

அதன் பின் பூமியின் சுழற்சி ஜெர்மெனியின் பான் (Bonn city) மாநகரை அங்கு கொண்டு வருகிறது. அப்போது பான் நகரமும் அது வரை இல்லாத சூரியோதயத்தைப் பெற்று விடுகிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கு இவ்வாறே தொடர்கிறது.

சூரியனின் மறைவிடத்தையும் மேற்கூறியவாறே பூமியின் சுழற்சியால் பூமியின் ஒவ்வொரு பிரதேசங்களும் தேடிவந்து பெற்றுக் கொள்கிறது. இவ்வாறு சூரியனுக்கு உதிக்கும் இடமும் உண்டு, மறையும் இடமும் உண்டு எனத் திருக்குர்ஆன் கூறிய இயற்பாடு பூமி அதன் அச்சில் சுழன்று இராப் பகல்களைத் தோற்றுவிக்கும் போதே ஏற்படுகின்றன என ஐயத்திற்கிடமின்றி நாம் கண்டு தெளிந்தோம்.

திருமறையில் வேரூன்றி நிற்கும் வானியல் ஆழம்!

எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மைகளைத் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே தமக்குள் ஆழமாக வேரூன்றச் செய்துள்ளது பார்த்தீர்களா? இந்த அற்புதத் திருமறை சூரியன் பூமியைச் சுற்றுகிறது எனும் பிழையான அறிவியலை ஆதரிக்கும் நூலாக இருக்க முடியுமா?

சூரியன் பூமியைச் சுற்றுகிறது எனும் கருத்தை ஆதரிக்கும் நூலே திருக்குர்ஆன் என யாரேனும் கூறினால் அவர் எவ்வளவு தான் உலகப் புகழ் வாய்ந்தவராகப் போற்றப் பட்டாலும் அவரது நேர்மையை, அல்லது அவரது ஆய்வுத் திறமையை எவ்வாறு மதிப்பிட வேண்டும் என்பதை விளக்கத் தேவையில்லையல்லவா?

சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக இருந்தால் திருக்குர்ஆன் கூறியவாறு சூரியதோயத்திற்கென்றும் சூரிய மறைவிற்கென்றும் தனித்தனி இடங்களைத் தோற்றுவிக்கும் இயற்பாட்டை அந்த இயக்கம் தோற்றுவிக்காது என்பதை நாம் விளக்கி விட்டோம். எனவே சூரியன் பூமியைச் சுற்றுவதாகக் கூறப்பட்ட பிழையான கருத்தை திருக்குர்ஆன் ஏற்கவில்லை என்பதையும் பூமி தன்னைத்தானே சுற்றுவதாலேயே இராப்பகல் ஏற்படுகின்றன என்பதே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பதையும் திருக்குர்ஆனை ஆய்வு செய்யும் ஆய்வாளர்க்கு புலப்படுத்தவே இப்படிப்பட்ட தந்திரச் சொற்களை திருக்குர்ஆன் பயன்படுத்தியது என்பதையே இது காட்டுகிறது.

அறிவியல் கலவா பொருள் விளக்கம்

இதை மேலும் விளங்கிக் கொள்ள நாம் இங்கு ஆய்விற் கெடுத்துக் கொண்ட இரு வகையான சொற்றொடர்களி லிருந்தும் நாம் இங்கு விளக்கிய அறிவியல்களை நீக்கி விட்டுப் பார்த்தால் அவைகளின் பொருள் என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம். முதல் சொற்றொடராம் “….. சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது ….. என்பது“(அவருடைய பயணத்திற்கிடையில்) ஒரு நாள் சூரியன் மறையும் நேரத்தில் தமது இலட்சியத் தானங் களில் ஒன்றை அவர் சென்றடைந்தார் எனும் செய்தியை மட்டுமே அது தெரிவிப்பதாக அமையும்.

அவ்வாறே இரண்டாவது சொற்றொடராம் “சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்தார் என்பது “மீண்டும் அவர் பயணம் செய்து ஒரு நாள் சூரியன் உதிக்கும் நேரத்தில் தன்னுடைய மற்றொரு இலட்சியத் தானத்தை அவர் சென்றடைந்தார் எனும் தகவலை மட்டுமே அது அளிக்கக்கூடியதாக அமையும்.

இவ்வாறு அறிவியலை அகற்றி விட்டுப் பார்த்தால் “சூரியன் உதிக்கும் இடம் என்பது சூரியன் உதிக்கும் நேரம் என்றும் “சூரியன் மறையும் இடம் என்பது சூரியன் மறையும் நேரம் என்றும் சாதாரணமான பொருள் கொண்ட வார்த்தை களாகவே தோன்றுகின்றன. இது இறைவனின் நல்லடியார் ஒருவரைப் பற்றியும் இறைவன் அவருக்குச் செய்த உதவிகள் குறித்தும் அக்காலத்தில் அரபு நாட்டில் நிலவி வந்த பழங்கதை ஒன்றின் உண்மை நிலையை அறிய அரபு மக்கள் இறைத் தூதரிடம் கேள்வி கேட்டபோது அப்பழங்கதையின் சுவைக்கும், பாணிக்கும் ஏற்ற விதத்திலேயே திருக்குர்ஆன் பதில் சொல்வதாக அமைந்துள்ளது. இருப்பினும் சூரியன் உதிக்கும் நேரம் என்றும் சூரியன் மறையும் நேரம் என்றும் கூறவேண்டிய இடத்தில் திருக்குர்ஆனின் தோற்றுவாயின் ஆழம் காணமுடியாத அதி அற்புத சர்வ சம்பூரண ஞானத்தி லிருந்து ஒரு துளியின் துளியாம் இராப்பகல் இயக்கத்தின் அறிவியலை அதில் கலந்துவிட்ட போது சூரியன் உதிக்கும் நேரம் என்பது “சூரியன் உதிக்கும் இடம் என்றும் சூரியன் மறையும் நேரம் என்பதும் “சூரியன் மறையும் இடம் என்றும் மாறிவிட்டதாக திருக்குர்ஆனின் ஆய்வாளர்களுக்குப் புலப்படுவது மிகப் பொருத்தமானதும் ஏற்கத்தக்கதுமாகும்.

திருக்குர்ஆன் மெய்யாகவே இறைவனிடமிருந்து வரப் பெற்றதா? அல்லது இறைவனின் பெயரால் புனைந்துரைக்கப் பட்டதா? என ஆய்வு செய்து பார்க்கும்படித் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. இதன் அழைப்பிற்கிணங்க அறிவியல் பார்வை கொண்ட ஒருவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்ய முயல்வதோடு உலகில் மிகப் பெரிய வாக்குவாதத்தை உருவாக்கி மிகச் சிறந்த அறிவியலாளர்கள் சிலரைக் கொடுமைப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த இராப்பகல் மாற்றத்தின் அறிவியலைக் குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகிறது எனப் பார்க்க முயன்றால் அவருடைய ஆய்வுக் கண்களுக்குப் புலப்படுவதற்காகவே இப்படிப்பட்ட அறி வியல்களை இந்த விதத்தில் (எக்காலத்திலும் திருக்குர்ஆன் பெற்றிருக்க வேண்டிய நம்பிக்கையைத் தகர்க்காத விதத்தில்) திருக்குர்ஆன் கூறி வைத்துள்ளதாகத் தெரிய வருகிறது.

உதிக்கும் இடங்களும் மறையும் இடங்களும் ஏராளம்!

உதிக்கும் இடத்தைப் பற்றியும் மறையும் இடத்தையும் இது வரை நாம் விவாதித்த விபரங்களைக் கவனமாக பார்வையிட்டவர்களிடம் இப்போது மற்றொரு கேள்வி எழலாம். சூரியன் நகராமல் ஓரிடத்தில் இருக்க பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் பூமிக்கு உதிக்கும் இடமும், மறையும் இடமும் உருவாகி விடுகிறது. அப்படிப் பார்த்தால் சூரியனுக்கு மேலும் சில கோள்களும் துணைக் கோள்களும் இருக்கின்றன.

அவைகளும் தம்மைத்தாமே சுற்றிக் கொள்கின்றன. எனவே அவை ஒவ்வொன்றுக்கும் பூமிக்கு இருப்பதைப் போன்று உதிக்கும் இடங்களும் மறையும் இடங்களும் இருக்க வேண்டும். எனவே நமது சூரியக் குடும்பத்திற்குள்ளேயே பல உதிக்கும் இடங்களும் பல மறையும் இடங்களும் இருந்தாக வேண்டும். இதைப் பற்றி திருக்குர்ஆன் ஏதேனும் கூறியுள்ளதா? என்பதே அக்கேள்வியாகும்.

மிக அற்புதமாக இந்த விபரத்தையும் திருக்குர்ஆன் கூறுகிறது என்பதே அதற்குரிய பதிலாகும். அந்த பதில் வருமாறு :

“உதிக்கும் இடங்களுக்கும் மறையும் இடங்களுக்கும் உரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்…..

((அல்குர்ஆன்: 70:40)

மேற்கண்ட வசனத்தில் உதிக்கும் இடத்தையும் மறையும் இடத்தையும் பன்மையில் கூறியதிலிருந்து திருக்குர்ஆனுடைய பதில் கூடுதல் விளக்கமின்றித் தெளிவாக விளங்குகிறது. ஆயினும் இங்கு கூடுதலாக மற்றொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பேரண்டத்தில் எண்ணிலடங்காத நட்சத்திரங் களும் அவைகளில் பலவற்றிற்கு கோள் குடும்பங்களும் உண்டு என்பதையும் சென்ற நூற்றாண்டில் அறிவியல் உலகம் கண்டுபிடித்ததன் பின்னணியில் மேற்குறிப்பிடப் பட்ட திருக்குர்ஆனறிவியல் மேலும் விரிவான பொருட் செறிவுடையதாகும்.

ஏனெனில் அங்கிங்கெனாதபடி பேரண்டம் எங்குமே ஏராளமான உதிக்கும் இடங்களும் ஏராள மான மறையும் இடங்களும் உள்ளதாக நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் உறுதி அளிப்பதாலும் இச்செய்தியையும் உள்ளடக்கியதாக மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் காணப்படுவதாலும் அது விரிவான பொருட்செறிவுடைய திருக்குர்ஆன் வசனமாகும் என்பது தெளிவாகும்.

பகலை மூடும் இரவு!

சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை. தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியே இராப்பகலைத் தோற்றுவிக்கிறது எனும் அறிவியலை மற்றொரு வசனத்தில் இவ்வாறு காணலாம்.

“…. அவன் பகலை இரவால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்தினருக்கு இதில் பல சான்றுகள் இருக்கின்றன.

((அல்குர்ஆன்: 13:3)

இதைத்தாம் நாம் முன்னரே கூறினோம். இம்மாமறைக் குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தாமா? அல்லது இறைவனின் பெயரால் புனைந்துரைக்கப்பட்டதா? என ஆய்வு செய்யப் புகும் ஓர் ஆய்வாளர் அறிவியல் பார்வை உ டையவராக இருந்து விட்டால் உலகில் மிகப் பெரிய சர்ச்சைகளைக் கிளப்பிய கோபர் நிக்க மற்றும் டார்வின் போன்றவர்களின் சித்தாந்தங்களைப் பற்றிய திருக்குர்ஆ னுடைய கருத்து என்ன? என்பதை ஆராய்ந்து பார்க்காமல் இருக்க மாட்டார். எனவே அப்படிப்பட்ட ஆய்வாளர்களுக்குள்ள சான்று களாக இருக்கும் பொருட்டே இப்படிப்பட்ட வசனங்களில் அறிவியல் உண்மைகளைத் திருக்குர்ஆன் உட்புகுத்தி உள்ளது. இப்போது இந்த வசனத்திலுள்ள அறிவியலுக்கு வருவோம்.

இந்த வசனத்தில் பகலை இரவு மூடுவதாகக் கூறப் பட்டுள்ள செய்தி உள்ளபடியே வியப்பைத் தருவதாகும். பகல் என்பது வெளிச்சமாக இருக்கும் என்பதும், இரவு என்பது இருட்டாக இருக்கும் என்பதும் நமக்குத் தெரியும். எனவே வெளிச்சமாக இருக்கும் பகலை மூடுவதற்கு இருட்டாக இருக்கும் இரவு வந்தால் இரவு அழிந்து போகும். உண்மை நிலை இவ்வாறு இருக்க பகலை இரவால் எவ்வாறு மூட முடியும்? எடுத்த எடுப்பிலேயே இது சாத்தியமில்லை என்று தோன்றினாலும் நாம் இதை ஆய்வுக் கண்களோடு அணுகிப் பார்ப்போம்.

இரவை மூடும் பகல்!

பகலை இரவால் மூடவேண்டுமானால் முதலாவதாக பகல் ஓரிடத்தில் கட்டுண்டு நிற்க வேண்டும். அதன் பிறகு இரவு நகர்ந்து வந்து பகலின் மீது படிய வேண்டும். அதன் பிறகு இரவால் பகலை மூட முடிகிறதா எனப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் பகலின் இயற்பியல் நகராமல் நிலையானதாகவும் இரவின் இயற்பியல் நகர்வதாகவும் இருக்க வேண்டும். ஆனால் சூரியன் பூமியைச் சுற்றுவதாக இருந் திருந்தால் இரவு, பகல் இரண்டுமே நகரக் கூடியதாகவே இருந்திருக்கும். எனவே இந்த நிலையில் பகலை இரவால் மூட முடியாது என்பது தெளிவாகும். திருக்குர்ஆன் தன் னுடைய மற்றொரு வசனத்தில் மேலும் இவ்வாறு கூறுகிறது:

“…..இரவை அவன் பகலால் மூடுகிறான்…

(அல்குர்ஆன்: 7:54)

இந்த வசனத்தில் கூறப்பட்டவாறு இராப்பகல் இயக்கம் நடைபெற வேண்டுமானால் இரவு நகராமல் கட்டுண்டு இருக்க பகல் மட்டும் நகரக் கூடியதாக இருக்க வேண்டும். இப்போது மேற்கண்ட இரண்டு வசனங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விதத்தில் இரவும் பகலும் நகராமல் இருக்க வேண்டுமென்றாலும் மற்றொரு விதத்தில் இரவும் பகலும் நகர்ந்தே ஆக வேண்டும். ஆனால் சூரியன் பூமியைச் சுற்றி வருவதாலேயே இராப்பகல்கள் நடைபெறுவதாக இருந்திருந் தால் இராப்பகல்கள் எந்த இடத்திலும் எந்த நிலையிலும் ஒரே இடத்தில் கட்டுண்டு இருக்காமல் நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதையும் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் மட்டுமே இப்படிப்பட்ட இயற்பாடுகள் சூரியக் குடும்பத்தின் இயக்கத்தில் தோன்றும் என்பதையும் நாம் முன்னரே கண்டுள்ளோம். இருப்பினும் மேல் விளக்கத்திற் காக அதை மீண்டும் ஒரு முறை சுருக்கமாகக் காண்போம்.

சூரியன் நகராமல் ஒரே இடத்தில் இருக்க பூமி சூரியனுக்கு முன் சுழன்று வருகிறது. சூரியன் நகராத காரணத்தால் விண்ணில் உள்ள இராப்பகல்களும் நகர்வதில்லை. ஆனால் பூமியின் மீது பகலாக இருக்கும் நிலப்பகுதிகள் பூமியின் சுழற்சியால் நகர்ந்து சென்று ஆகாயத்தில் நிலைபெற்றிருக்கும் இரவிற்குள் நுழைந்து தன்னை மூடிக் கொள்கிறது. இதைப் போலவே பூமியில் இரவாக இருக்கும் நிலப்பகுதிகள் பூமியின் சுழற்சியால் நகர்ந்து சென்று ஆகாயத்தில் நிலை பெற்றிருக்கும் பகலுக்குள் நுழைந்து பகலால் தன்னை மூடிக் கொள்கிறது.

பூகோளத்தின் அச்சில் சுழற்சி எவ்வளவு ஆழமாகவும் அற்புதமாகவும் திருக்குர்ஆனின் அறிவியலை நிரூபித்து நிற்கிறது!

பகலில் நுழையும் இரவும், இரவில் நுழையும் பகலும்

பூகோளத்தின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராப்பகல் மாற்றத்தின் மிகச் சரியான பிழையற்ற அறிவியலை இப்போது நாம் கண்ட விளக்கத்தின்படியே எடுத்துக் கூறும் மற்றொரு வசனத் தொடர் இதோ :

“அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப்பதையும், பகலை இரவில் நுழைப்பதையும்,சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

((அல்குர்ஆன்: 31:29)

இந்த வசனம் பூமியில் நடைபெறும் இராப்பகல் இயக்கம் என்பது பகலை இரவில் நுழைப்பதனாலும் இரவைப் பகலில் நுழைப்பதனாலும் ஏற்படுவதாகும் எனக் கூறியதிலிருந்து இராப்பகல் இயக்கத்தைத் தோற்றுவிப்பது புவி மையக் கோட்பாட்டின்படி அன்றி சூரியமையக் கோட்பாட்டின்படி ஆகும் என்பதை மீண்டும் ஐயத்திற்கிடமின்றித் திருக்குர்ஆன் நிரூபிக்கிறது!

புவிமையக் கோட்பாடு என்பது சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது எனும் பிழையான கருத்தாகும். எனவே சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக இருந்தால் இரவு எப்போதும் பகலுக்குப் பிறகு ஓடிக் கொண்டிருக்குமே அன்றி அது எங்குமே நகராமல் நிற்பதில்லை. இரவை நகராமல் நிறுத்த முடியாவிடில் அதற்குள் பகலை எவ்வாறு நுழைக்க முடியும்?அவ்வாறே பகலை நகராமல் நிறுத்த முடியாவிடில் பகலுக்குள் இரவை எவ்வாறு நுழைக்க முடியும்? ஒரே ஒரு வழியே உண்டு.

பகலை விட இரவை விரட்டினால் பகல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே அதற்குள் இரவை நுழைத்து விட முடியும். அப்படிச் செய்தால் இரவானது திரும்பத் திரும்ப பகலுக்குள் நுழையுமே அன்றி பகல் எப்போதுமே இரவுக்குள் நுழையாது! ஆனால் திருக்குர்ஆனோ பகலுக்குள் இரவு நுழைவது போல் இரவுக்குள் பகலும் நுழைவதாகக் கூறுகிறது.

எவ்வளவு சிறந்த கவனத்தோடு துல்லியமாகத் தேர்வு செய்யப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் இவை! இப்போது சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக இருந்தால் மட்டும் பகலோ இரவோ ஏதேனும் ஒன்று ஏதேனும் ஒன்றுக்குள் நுழைய முடிகிறதா? இல்லவே இல்லை! ஏன்? ஏனெனில் சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் பகலும் இரவும் ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் எந்த இரண்டு பொருட்களும் ஒன்றுக்குள் ஒன்று ஒரு போதும் நுழையாது. எனவே பூமி அதன் அச்சில் சுழலும் போது மட்டுமே பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இராப்பகல்கள் நகராமல் ஒரே இடத்தில் கட்டுண்டு நிற்க முடிகிறது.

பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இராப்பகல்கள் கட்டுண்டு நிற்கும் போது பூமியின் பகல் பிரதேசம் பூமியின் சுழற்சியால் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் இரவுக்குள் நுழைய முடிகிறது. அதைப் போல் மறுபக்கம் பூமி யின் மீதுள்ள இரவுப் பிரதேசம் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் பகலுக்குள் நுழைய முடிகிறது.

“பகலுக்குள் நுழையும் இரவு! இரவுக்குள் நுழையும் பகல்! எவ்வளவு சிறப்பான அறிவியல் ஞானத்தை திருக்குர்ஆனின் மேற்கண்ட வார்த்தைப் பிரயோகங்கள் அதனை ஆய்வு செய்வோரின் கண்களுக்கு வெட்ட வெளிச்சமாகக் காட்டித் தருகிறது! இந்த சொற்பிரயோகங்கள் எவ்வளவு அற்புதமாக புவி மையக் கோட்பாட்டை மறுத்து விட்டு எவ்வளவு துல்லியமாக சூரிய மையக் கோட்பட்டை உண்மைப்படுத்துகிறது! இதற்கு மேலும் இம்மாறைக் குர்ஆன் புவிமையக் கோட்பாட்டை ஆதரிக்கும் நூல் என்றோ அல்லது இராப்பகல் மாற்றத்தின் பிழையற்ற அறிவியல் திருக் குர்ஆனுக்குத் தெரியாது என்றோ ஒருவரால் கூற முடியுமா?

பின் வாங்கிச் செல்லும் இரவு

சூரியக் குடும்பத்தின் இயக்கம் பற்றிய திருக்குர்ஆனின் அறிவியல் ஆழத்தை எடுத்துக்காட்டும் மற்றொரு வசனம் வருமாறு :

பின்வாங்கிச் செல்லும் இரவின் மீது ஆணையாக! வெளிச்சம் தரும் காலைப் பொழுதின் மீது ஆணையாக!

((அல்குர்ஆன்: 74:33-34)

இந்த அற்புதமான திருமறை வசனம் இரவின் ஒரு இயற்பியல் குணத்தை இங்கு படம் பிடித்துக் காட்டுகிறது. இரவு என்பது பின்வாங்கிச் செல்லும் குணத்தையுடையது என்பதே அந்த இயற்பியல் குணமாகும். இந்த வசனத்தில் கூறப்படிருக்கும் தகவலைப் புரிந்து கொள்ள வேண்டு மானால் “பின் வாங்கிச் செல்லுதல் என்றால் என்ன? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பின்வாங்கிச் செல்லுதல் என்பது ஒரு இயக்கம் எந்த திசையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அந்த திசையில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் முன்னேற இயலாமல் அது வரை அந்த இயக்கம் எந்த திசையில் சென்று கொண்டிருந்ததோ அத்திசைக்கு எதிர் திசையில் இயங்குவதையே “பின் வாங்கிச் செல்லுதல் என்று கூறுகிறோம். இப்போது வழக்கம்போல் சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் இரவு எந்த இடத்திலாவது பின் வாங்கிச் செல்லும் நிலை ஏடற்படுகிறதா? எனப் பார்ப்போம்.

அவ்வாறு இரவு பின்வாங்கிச் செல்லும் நிலை அதில் காணப்பட்டால் இதுவே இராப்பகல் மாற்றத்தைப் பற்றிய திருக்குர்ஆனின் கருத்தாக முடிவு செய்யலாம். எனவே அந்த ஆய்விற்குள் செல்வோம்.

இப்போது சூரியன் பூமியைச் சுற்றுவதாக வைத்துக் கொண்டு இரவின் இயக்கம் எத்திசையில் எவ்வாறு நடைபெறும் எனப் பார்ப்போம். சூரியன் இப்போதும் பசிபிக் சமுத்திரத்தின் உச்சியில் இருப்பதாகக் கொள்வோம். சூரியனின் எதிரில் உள்ள பூமியின் அமெரிக்கா முதல் சீனா வரையிலான அரைக்கோளம் பகலாகவும் அந்த அரைக் கோளத்திற்கு மறுபக்கம் உள்ள பூமியின் அரைக்கோளம் இரவாகவும் இருக்கும். சூரியன் நகரத் துவங்கியதும் இரவும், பகலும் ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்றாக நகரத் தொடங்கு கிறது. சூரியன் ஒரே திசையில் சுழல்வதால் இரவும் பகலும் ஒரே திசையில் பூமியின் மீது சுழன்று வருகிறது.

சூரியன் திசைமாறிச் சுழலாத காரணத்தால் இரவோ அல்லது பகலோ ஒரு போதும் பின்வாங்கிச் செல்ல இயலவில்லை. எனவே சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக இருந்தால் இரவுக்குப் பின்வாங்கிச் செல்லும் இயற்பியல் பண்பு ஒரு போதும் தோன்றுவதில்லை என்பதால் திருக்குர்ஆன் புவி மையக் கோட்பாட்டை ஒரு போதும் ஆதரிப்பதில்லை என்றும் இரவுக்கு பின்வாங்கிச் செல்லும் இயற்பியல் பண்பைத் தோற்றுவிக்கும் இராப்பகல் இயக்கம் எதுவோ அதுவே இதைப் பற்றிய திருக்குர்ஆனுடைய அறிவியல் கோட்பாடா கும் என்பதையும் ஐயத்திற்கிடமின்றி விளங்குகிறோம். எனவே வழக்கம் போல் பூமி தன்னைத்தானே சுற்றி இராப்பகலைத் தோற்றுவிக்கும் போது இரவுக்கு பின்வாங்கிச் செல்லும் இயற்பியல் குணம் ஏற்படுகிறதா? எனப் பார்ப்போம்.

பின்வாங்கல் என்பதன் அற்புதக் காட்சி

ஆய்வின் தொடக்கத்தில் சூரியன் நகராமல் ஒரே இடத்தில் இருப்பதாவும் இதன் காரணமாக பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இராப்பகல் நகராமல் கட்டுண்டு நிற்பதாகவும் பூமி அதன் அச்சில் சுழல்வதாகவும் வைத்துக் கொள்வோம். பூமியின் சுழற்சி அதன் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை – இதை இந்தியா எனக் கொள்வோம் – இரவுக்குள் பன்னிரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக ஒரே திசையில் நகரச் செய்துவிட்டு சூரியன் உதிக்கும் இடத்திற் குள் இந்தியாவை நுழையச் செய்கிறது. ஆனால் இந்தியாவில் இருந்த இரவின் நிலைமை இப்போது நாம் கவனித்தால் இரவின் “பின்வாங்கல் மிக அற்புதமாக நடைபெறுவதை நம்மால் பார்க்க முடியும்!

ஆம்! உதய எல்லையை இந்தியா தொட்ட பிறகும் எந்தத் திசையில் பூமி சுழன்று வந்ததோ அதே திசையிலேயே இந்தியா தொடர்ந்து முன்னேறிய போதும் இந்தியாவில் உள்ள இரவு இந்தியா செல்லும் திசைக்கு நேர் எதிர் திசையில் பின்வாங்குகிறது. இந்தியாவைப் பின்தொடர்ந்து பாக்கி தான் வந்து கொண்டிருப்பதால் இந்தியாவிலிருந்து பின்வாங் கிய இரவு பாக்கிதானுக்குச் செல்கிறது.

ஆனால் சில வினாடிகளில் பாக்கிதானும் உதய எல்லைக்குள் நுழையத் தொடங்குகிறது. எனவே பாக்கிதானுக்குப் பின்வாங்கிய இரவு ஈரானுக்குப் பின்வாங்கத் தொடங்குகிறது. இவ்வாறே ஈரானுக்குப் பிறகு படிப்படியாக எகிப்து, அட்லாண்டிக், அமெரிக்கா, பசிபிக், சீனா போன்ற இடங்களுக்குப் பின்வாங்கி திரும்பவும் இந்தியாவிற்கும், பிறகு பாக்கிதானுக்கும் பின்வாங்கிக் கொண்டே செல்கிறது!

இக்காட்சி எவ்வளவு அற்புதமாக திருக்குர்ஆனின் அறிவியலை நிரூபித்துக் காட்டுகிறது!

சூரியனின் உதய எல்லையில் நடைபெறும் பின் வாங்கும் இயற்பியல் குணம் இப்போது எளிதாக நம்மால் விளங்க முடிகிறது. ஆயினும் இரவின் இந்த இயற்பியல் குணம் பூகோளத்தில் இரவாக இருக்கும் அரைக்கோளம் முழுவதிலுமுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சிப் போக்கே என்பதை இதற்கு மேல் வாசகர்கள் சுயமாகவே புரிந்து கொள்ள முடியும்.

இயற்கையின் நேர்முக வர்ணனை!

இரவு என்பது பின்வாங்கும் இயல்பைக் கொண்டது எனும் திருமறை அறிவியலின் விளக்கத்தை கோபர் நிக்க, கெப்ளர், கலீலியோ போன்ற சிறந்த அறிவியலாளர்கள் அறிவியல் உலகிற்கு வழங்கிய பங்களிப்புகளின் துணையால் இன்று நாம் சரியாக விளங்கிக் கொண்டோம். ஆயினும் இந்த அறிவியலாளர்கள் பிறப்பதற்கு கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இரவு பின்வாங்கும் நிலையைக் கொண்டது எனக் கூற வேண்டுமாயின் அவர் யாராக இருக்க வேண்டும்?

குறைந்த பட்சம் அவர் பூமியின் சுற்றுப் பாதைக்கு (Orbit) அப்பால் நின்று கொண்டு அதே நேரத்தில் பூமியில் இராப்பகல் மாற்றம் நடைபெறுவதை மிகத் துல்லியமாகப் பார்த்தறியும் ஆற்றல் மிகு கண்களைப் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதோடு எந்தக் காட்சியையும் கற்பனை வளத்துடன் அதே நேரத்தில் பொய்யக் கலப்பின்றியும் வர்ணனை செய்யும் இலக்கிய அறிவும் பெற்ற ஒருவராகவே அவர் இருக்க வேண்டும்!

அப்படிப்பட்ட ஒருவர் இருந்தார் என நம்மால் கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?ஒருகாலும் முடியாது என்பதே நமது பதிலாக இருக்கும். உண்மை நிலை இதுவே என்றால் சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்றும் அதற்கு மாறாக பூமியே தன்னைத்தானே சுற்றிக் கொண்டு இராப்பகலைத் தோற்றுவிக்கிறது என்ற கருத்தை உள்ளடக்கிய இதைப் போன்ற வசனங்களைத் திருக் குர்ஆனால் எப்படிக் கூற முடிந்தது?

திருக்குர்ஆன் மானிடப் படைப்பன்றி இறைவனின் வார்த்தைகளே என நம்புவதில் இதற்கு மேலும் என்ன பிரச்னை?