06) பூமியின் வடிவம் உருண்டை
அத்தியாயம் 5
பூமியின் வடிவம் உருண்டை
பூகோளத்தின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான இயற்பாடுகளில் ஒவ்வொரு நாளும் காலம் தவறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராப்பகல் மாற்றமும் ஒன்றாகும். மனித இனம் உலகில் வாழத் துவங்கிய காலம் முதல் தவறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விந்தையைப் பார்த்து வியப்படைந்தவாறே வாழ்ந்து வந்தது. இதை ஆராய்ந்த பழங்கால அறிவியலாளர்கள் இதற்கான கோட்பாடு ஒன்றை உருவாக்கினர். புவி மையக் கோட்பாடு (The earth centeric theory) என்பது இதன் பெயராகும்.
பூகோளம் பேரண்டத்தின் மையத்தில் அசையாது நிலைபெற்றிருக்கிறது என்பதும் சூரியனும் இதர கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்பதும் இக்கோட்பாட்டின் கருத்தாகும். பழங்கால அறிவியல் உலகின் தன்னிகரற்ற அறிவியலாளராம் அரிடாட்டில் இக்கோட்பாட்டைச் சோதித்து அங்கீகாரம் அளித்தபடியால் இக்கோட்பாடு கேள்விக்கிடமில்லாமல் மொத்த உலகிலும் நம்பப்பட்டு வந்தது. இப்போது திருக்குர்ஆனின் அறிவியல் இக்கோட் பாட்டிற்கு எந்த அளவிற்கு அங்கீகாரம் அளிக்கிறது என்பதைப் பார்போம்.
புவிமையத்தின் கோட்பாட்டில் பேரண்டத்தின் அச்சாணி யைப் போன்று அசையாதிருப்பதாக கற்பளை செய்யப்பட்ட பூமியைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
யாவும் விண்ணில் நீந்துகின்றன
“அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனை யும் படைத்தான். ஒவ்வொன்றும் வானவெளியில் நீந்துகின்றன.
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் வானில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை என்றும் விண்ணகப் பொருட்கள் யாவும் விண்ணில் நீந்திக் கொண்டிருக்கின்றன என்றும் கூறியதிலிருந்து பூமியும் விண்ணில் நீந்திக் கொண்டிருப்ப தாகப் பொருள்படுகிறது. எனவே பேரண்டத்தின் மையத்தில் பூமி அசையாதிருப்பதாகக் கூறப்பட்ட புவிமையக் கோட் பாட்டை திருக்குர்ஆன் நிராகரித்து விட்டது என்பதே அதன் பொருளாகும்.
மேற்கண்ட விளக்கத்திலிருந்து திருக்குர்ஆன் தேர்ந் தெடுத்துப் பயன்படுத்திய பதப் பிரயோகங்களின் (இரவும், பகலும்… விண்ணில் நீந்துகின்றன) வாயிலாக அது வெளிப் படுத்திய அறிவியல் பதினொன்றாம் நூற்றாண்டிலும், பதினே ழாம் நூற்றாண்டிலும் கோபர் நிக்கஸும், கலீலியோவும் உலகில் தோற்றுவித்த புரட்சிகரமான அறிவியல் கொந்தளிப்பை விட ஆழம் மிக்கத் தீவிரமான அறிவியலாகும் என்பதில் ஐயமில்லை.
ஏனெனில் மேற்கண்ட அறிவியலாளர்களின் கண்டு பிடிப்புகள் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் நகர்வைப் பற்றி மட்டும் குறிப்பிடும் போது திருக்குர்ஆன் பேரண்டத்தி லுள்ள அனைத்து நட்சத்திரக் குடும்பங்களின் நகர்வையும் ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி விட்டது. திருக்குர்ஆன் மானிட அறிவிலிருந்து தோன்றியதில்லை என்பதற்கு உறுதியான அறிவியல் ஆதாரமாக இது தோன்றவில்லையா?
சூரிய மையக் கோட்பாடு
திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் விண்ணகப் பொருட்களின் நகர்வு பற்றியும் அதில் உள்ளடங்கிய பூமியின் நகர்வு பற்றியும் கூறிய அறிவியலை பல நூற்றாண்டுகள் கழிந்தாயினும் அறிவியல் உலகமும் அதை உண்மைப்படுத்தி விட்டது. நமது பள்ளிச் சிறுவர்கள் கூட இன்று பூமி ஆகாயத் தில் ஓய்ந்திராமல் சூரியனைச் சுற்றி வருகிறது எனக் கற்பிக்கப் பட்டு வருகிறார்கள். இதைக் கண்டுபிடித்த முதலாவது அறிவியலாளர் கோபர் நிக்க (1473-1543) ஆவார்.
ஜோஹன்ன கெப்ளர் (1571-1630) எனும் அறிவியலாளர் பூமியும், இதர கோள்களும் சூரியனைச் சுற்றிவரும் விதியைக் கண்டுபிடித்தார். இவர்களின் கோட்பாடு சூரிய குடும்பத்தின் மையத்தில் சூரியன் அசையாதிருக்க கோள்கள் யாவும் சூரினைச் சுற்றி வருகிறது எனக் கூறிற்று. இக்கோட்பாடு சூரிய மையக் கோட்பாடு (Solar centric theory) என அழைக்கப்பட்டது.
புவியின் வடிவச் சிறப்பு
பூமியின் மீது இராப்பகல் மாற்றம் எவ்வாறு நடைபெறு கிறது என்பதே நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட விவாதப் பொருளாகும். சூரியன் பூமியைக் சுற்றி வருவதா லேயே இராப்பகல் மாற்றம் தோன்றுகிறது எனும் கருத்து தவறு என்றும் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதனா லேயே இராப்பகல் மாற்றம் ஏற்படுகிறது என்பதே சரி என்பதையும் நாம் கண்டோம். பூமியின் மீது நிகழ்ந்து கொண் டிருக்கும் இராப்பகல் மாற்றத்திற்கு பூமி தன்னைத்தானே சுற்றுவது பிரதான காரணமாக இருந்த போதிலும் அம்மாற்றம் செவ்வனே நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் அமையும் பொருட்டு பூமியின் வடிவமும் அமைந்துள்ளது என்பதையும் நாம் அறிவோம்.
பூமியின் உருவம் உருண்டையாக இல்லாமல் தட்டையாக இருந்திருப்பின் இராப்பகல் மாற்றம் இப்போது நடப்பதைப் போன்று செவ்வனே நடைபெறாமல் பூமியின் மொத்த நிலப்பரப்பிலும் ஒரே வினாடியில் சூரியன் திடீரென உதித்து சூரியன் திடீரென மறையும் நிலை ஏற்பட்டிருக்கும். எனவே பூமியின் உருண்டை வடிவம் பூமியின் நிலப்பரப்பில் சூரியனின் உதயமும் மறைவும் படிப்படியாக நடைபெற உதவிசெய்கிறது.
கடலில் செல்லும் கப்பல் தரும் படிப்பினை
பூமிசூரியனைச் சுற்றி வருகிறது என்பது பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிறகே அறிவியல் உலகம் தெரிந்து கொண்ட போதிலும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதை நிரூபிப்பதற்கு எளியதும் முற்றிலும் சரியானதுமான நிரூபணத்தைக் கடலில் செல்லும் கப்பலைப் பார்த்து கற்றுக் கொண்டிருந்தனர்.
கப்பல் ஒன்று கடலில் செல்லும் போது அக்கப்பல் நீண்டநேரம் கடலில் சென்று கொண்டே இருந்த பிறகு படிப்படியாகக் கப்பலின் உருவம் சிறுத்துக் கொண்டே வந்து கடைசியில் கப்பல் முற்றாக மறைந்து போவதில்லை. அதற்கு மாறாக கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பல் சற்று நேரத்திற்குப் பிறகு கப்பல் தெளிவாக கண்களுக்கு தெரிந்து கொண்டிருக்கும் போதே முதலாவதாக கப்பலின் அடிபாகம் மறைந்து போகிறது.
அதன்பிறகு அதன் நடுப்பகுதி மறைந்து போகிறது. அதன்பிறகு கடைசியாக கப்பலின் கொடிமரமும் (பண்டைகாலங்களில் பாய்க்கப்பல்கள் மட்டுமே இருந்தன என்பதும் அவற்றிற்கு கொடி மரங்கள் இருந்தன என்பதையும் நினைவிற்கொள்க) மறைந்து கப்பல் முற்றாக மறைந்து போகிறது. இக்காட்சி கப்பல் ஒரு கீழ்நோக்கிய வளைவில் இறங்குவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
இப்போது கடலிலிருந்து கரையை நோக்கி வரும் மற்றொரு கப்பலைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் இதற்கு நேர்மாறான காட்சியைத் தாம் பார்க்க முடியும். கரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் கப்பலின் கொடிமரமே முதலில் கடலுக்கு மேல் தோன்றும். அதன் பிறகு கடைசியாக கப்பலின் அடிப்பகுதியும் கடலுக்கு மேல் தோன்றி கப்பல் முற்றிலுமாக கடலுக்கு மேல் தென்படும். இக்காட்சி அக்கப்பல் கடலின் கீழ்நோக்கிய வளைவிலிருந்து மேலேறி வருவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
உலகின் எப்பகுதிக்குச் சென்று கப்பல் போக்குவரவைக் கவனித்தாலும் இவ்வாறே தென்படும். இது நமது பூமி அதன் எல்லா திசைகளிலும் கீழ்நோக்கி வளைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. இவ்வாறு எத்திசையிலும் வளைந் திருக்கும் ஒரு பொருள் உருண்டையாகவே இருக்கும் என்பதும் அந்த உருண்டையின் மேல் நின்று பார்ப்பதாலேயே அதன் வளைவு கீழ்நோக்கிக் காணப்படுகிறது என்பதும் கடலில் செல்லும் கப்பல்களை ஆய்வு செய்ததிலிருந்து தெரிந்து கொண்டார்கள்.
வானவெளியில் பூமியைப் படைத்து அதில் இராப்பகல் மாற்றம் செவ்வனே நடைபெறும் பொருட்டு பூமி உருண்டை வடிவத்தில் படைக்கப்பட்டுள்ளதை பள்ளிச் சிறுவர்களும் இன்று அறிகிரார்கள். ஆயினும் கடலில் செல்லும் கப்பல்களை ஆராய்ந்து பண்டை கால கிரேக்கத்து அறிவியலாளர்கள் பூமியின் வடிவம் உருண்டை என்பதைக் கண்டறிந் திருந்தார்கள். இப்போது அதற்குப்பின் தோன்றிய திருக் குர்ஆன் பண்டைகால கிரேக்கர்கள் கூறியதை ஏற்கிறதா? அல்லது மறுக்கிறதா? எனக் கேட்டால் திருக்குர்ஆனுடைய பதில் வருமாறு:
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறிமாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் ….. விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.
மேற்கண்ட வசனத்தில் பண்டைகால விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு முறையையே எடுத்துக் கூறி அதில் விளங்கிக் கொள்ளும் ஆற்றலுள்ளவர்கள் அனைவருக்கும் சான்றுகள் கிடைக்கும் எனக் கூறியதிலிருந்து பண்டைகால விஞ்ஞானிகள் கடலில் செல்லும் கப்பல்களை ஆய்வு செய்து பூமி உருண்டை வடிவம் கொண்டது எனக் கூறுயதை ஏற்றுக் கொள்வதோடன்றி கடலில் செல்லும் கப்பலை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்ளுதல் என்பது மிகச் சிறந்த ஆய்வு முறையாகவும் அதிலிருந்து ஒன்றல்ல பல சான்றுகள் கிடைக்கலாம் எனவும் திருக்குர்ஆன் கூறுவதாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆம்! அதுவே திருக்குர்ஆன்! பொய்யையும், மெய்யை யும் பிரித்தறிவிக்கும் அதி அற்புத வான்மறை! உண்மைகள் எதையும் அது ஒப்புக்கொள்ளும்! பொய்கள் எதையும் அது தன்னை நெருங்க விடாது! அதுவே தூய்மையின் ஒப்பற்ற உதாரணம்!
அந்தரத்தில் நிலை கொள்ளும் ஆகாயம்
இப்போது கடலில் செல்லும் கப்பல்களை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்வதிலிருந்து பல சான்றுகள் கிடைக்கும் என திருக்குர்ஆன் கூறியதற்கிணங்க முதலாவ தாக பூமியின் வடிவத்திற்கான சான்றைப் பெற்றோம். இது “வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் எனத் திருக்குர்ஆன் கூறியதிலுள்ள “பூமியைப் படைத்தல் என்ப திலுள்ள சான்றாகும். இனி திருக்குர்ஆனின் கூற்றிற்கிணங்க “வானத்தைப் படைத்ததிலும் எனும் வார்த்தைகளை நிரூ பிக்க கடலில் செல்லும் கப்பல்களால் ஏதேனும் சான்று வழங்க முடியுமா எனப் பார்த்தால் அதோ முக்கியமான சான்று கப்பல் ஓட்டும் மனிதனுக்காகக் காத்திருக்கிறது.
இந்தச் சான்றை பெறுவதற்கு கடற்கரையில் நின்று கொண்டு கவனித்தால் மட்டும் போதாது. இதற்கு ஒரு நீண்ட கடற்பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஒருவர் நீண்ட தூரம் கடலில் பயணம் செய்து கொண்டே போனால் அவர் புறப்பட்ட இடத்திற்கே திரும்பவும் வந்து சேருவதால் பூமியின் வடிவம் உருண்டையானதே என்பதைத் தெரிந்து கொள்வ தோடு இப்பயணம் ஆகாயத்தைப் பற்றிய ஒரு மூடநம்பிக்கை யையும் விலக்கிவிடக் கூடியதாகும்.
ஆகாயத்தைப் பற்றிய பண்டைகால மூடநம்பிக்கைக ளில் ஒன்று எல்லையில்லா பூமியில் நெடுந்தொலைவிற்கப் பால் ஆகாயத்தின் குடை போன்று வளைந்து காணப்படும் முகட்டின் கீழ் விளிம்பு ஊன்றப்பட்டுள்ளது என்பதாகும். ஆயினும் பூமியை முழுமையாக ஒரு சுற்று சுற்றிவந்த போதும் ஆகாயத்தின் விளிம்பு பூமியில் எங்கும் ஊன்றப்படவில்லை என்பது மட்டுமன்றி ஆகாயத்தின் முகடு பூமியின் மீது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகவே தெரிந்ததும் ஒரு குறிப்பிடத் தகுந்த சான்றாகும். ஏனெனில் பூமியின் மீது ஆகாய முகடு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத் தெரிதல் என்பது பூமிக்குரிய அகாயம் விளிம்பற்றது என்பதற்கான ஓர் அற்புத மான அறிவியல் சான்றாகும்.
எனவே திருக்குர்ஆன் கூறியதற் கிணங்க கடலில் செல்லும் கப்பல் ஆயாகத்தின் படைப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிவிப்பதிலும் தன்னால் இயன்றதைத் தரவல்ல ஒன்றாகும் என்பதையும் நாம் கண்டு விட்டோம். இதிலிருந்து பண்டை கிரேக்கர்களின் விளக்கத்தை விட திருக்குர்ஆனுடைய அறிவியல் வசனம் மேலும் விரிவான அறிவியல் தகவலை உள்ளடக்கியதாகும் என்பது தெளிவு.
பூமியின் கீழ்ப்பகுதியும் நடக்கத் தகுந்ததே!
பூகோளத்தின் உருவ அமைப்பைப் புரிந்து கொள்ளும் வகையில் மேலும் சில குறிசொற்களைத் (clues) திருக்குர்ன் பயன்படுத்தியுள்ளது. சான்றாக பண்டைகால அறிவியலாளர் கள் பூமியின் வடிவம் உருண்டை என்பதை அறிந்திருந்தார்கள் எனக் கண்டோம். ஆயினும் கல்வியைப் பரப்பும் சாதனங்கள் மிகமிக அரிதாக இருந்த அக்கால கட்டத்தில் பொதுமக்களிடம் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பைப் பற்றிய செய்திகள் வருவதும் அரிதாகவே இருந்தது.
எனவே பொதுமக்களைப் பொருத்தவரை பூமி அப்போதும் தட்டையாகவே இருந்தது. பூமியின் வடிவம் தட்டையானது எனப் பொதுமக்கள் நம்பி வந்த காரணத்தால் பூமியின் மேற்பரப்பில் மட்டுமே மனிதர் களால் நடமாட முடியும் என்றும் அதன் பக்கவாட்டிலோ அதன் அடிப்பகுதிக்கோ செல்ல நேர்ந்தால் மனிதன் கீழே விழுந்து விடுவான் என நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் திருக் குர்ஆன் கூறிய செய்தி வியப்பிற்குரியதாகும். அது வருமாறு:
“அவனே பூமியை (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்….
இந்த செய்தியில் பூமியின் படைப்பைப் பற்றி இரண்டு செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலொன்று பூமி மனிதர் கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் படைக்கப்பட்டுள்ளது என்பதும் இரண்டாவதாக பூமியின் எல்லாப் பகுதிகளுக்கும் மனிதர்கள் சென்று பயன்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அது படைக்கப்பட்டுள்ளது எனும் செய்தியுமாகும்.
இந்த இரண்டாவது செய்தி பூமி தட்டையாக இருப்பதால் அதன் ஒரே பகுதியில் (மேற்பரப்பில்) மட்டுமே மனிதர்கள் நடமாட முடியும் என்றோ அதன் பக்கவாட்டிலோ அடிப்பகுதியிலோ மனிதர்கள் நடமாட முடியாது எனும் நம்பிக்கையை திருக் குர்ஆன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது “எனவே அதன் பல பகுதிகளுக்கும் செல்லுங்கள் எனும் வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தியதிலிருந்து திருக்குர்ஆன் எளிதாக விளங்கச் செய்கிறது.
கொலம்பஸின் தோல்வி
பூகோளத்தின் முன்னர் கூறப்பட்ட இயற்பாடுகளை திருக்குர்ஆன் ஒரு வரலாற்றுச் சம்பவத்தைக் கூறிவதில் கூட தேர்ந்தெடுத்த சில சொற்பிரயோகங்ளில் உள்ளடக்கித் தந் திருப்பதைக் காண முடிகிறது. கொலம்ப (christopher columbus, 1451-1506) எனும் உலகப் புகழ் பெற்ற மாலுமியைப் பற்றி கேள்விப்படாதோர் அரிதாகும்.
கடற் பயணத்தை மேற்கொண்டு உலகம் உருண்டை என நிரூ பித்த மாவீரராக இவரைப் பற்றி அவ்வப்போது கூறப்படுவ துண்டு. ஆனால் இது தவறாகும். அவர் ஐரோப்பாவிலிருந்து மேற்கு நோக்கி கடற்கயணம் செய்து ஆசியாவிற்கு ஒரு புதிய கடல்மார்க்கத்தை கண்டுபிடிப்பதாகக் கூறி இசபெல்லா மகாராணியிடம் பொருளுதவி பெற்று கடற்பயத்தை துவக்கி யது உண்மையே. தாம் கூறியபடி அவர் செய்து காட்டியிருந் தால் அவர் உலகம் உருண்டை என்பதை கடற்பயணத்தால் நிருபித்துக் காட்டிய மாவீரராவதற்கு தகுதி பெற்றிருப்பார். ஆனால் உண்மையில் அவர் தம்முடைய முயற்சியில் வெற்றி பெறவில்லை.
கொலம்ப முதலாவதாக 1492லும் அதன் பிறகு தொடர்ந்துள்ள வருடங்களில் மேலும் சில முயற்சிகளையும் செய்தபோதும் அவரால் ஆசியாவை அடைய முடியவில்லை. எனவே அமெரிக்காவிற்கு சென்று வந்த பெருமையோடு திருப்திபட்டுக் கொள்ளவேண்டியதாயிற்று. (அவர் அமெரிக்கா கண்டத்திற்கு சென்று வந்ததால் அவரே அமெரிக்காவை கண்டுபிடித்தவர் என பாடபுத்தகங்களில் கூட எழுதப்படு கிறது. ஆனால் அமெரிக்கா கண்டத்தைக் கண்டுபிடித்த முதல் மனிதர் இவர் இல்லை. அவருக்கு பல நூற்றாண்டு களுக்கு முன் லீஃப் எரிக்சன் (Leif Ericson) எனும் ஒரு கடல் கொள்ளைக்காரன் அமெரிக்கா சென்று வந்துள்ளான் என்பதும் நமது தலைப்போடு தொடர்பில்லாத செய்தியாகும்).
மாவீரர் துல்கர்னைன்
ஆனால் தரைவழிப் பயணமும் கடல்வழிப் பயணமும் செய்து உலகம் உருண்டை என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாற்றைக் கூறும் வியப்பிற்குரிய செய்தியையும் திருக்குர்ஆனில் நம்மால் பார்க்க முடிகிறது.
திருக்குர்ஆன் வழங்கப்படுவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் “துல்கர்னைன் எனும் பேரரசர் ஒருவர் நீதிநெறி தவறாத சிறப்பான ஆட்சியை நடத்தி வந்தார். இந்த அரசரைப் பற்றிய செய்தியை வம்சாவழியாக கேள்விப் பட்டிருந்த அரேபிய மக்கள் தங்களுக்கு இடையில் இறைவ னுடைய தூதர் ஒருவர் தோன்றிய போது துல்கர்னைன் அவர் களைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்காக இறைத் தூதரிடம் சில கேள்விகளை எழுப்புகிறார்கள். தன்னுடைய தூதரிடம் கேட்ட கேள்விக்கு அளிக்கப்பட வேண்டிய பதிலை இறைவன் தன்னுடைய தூதருக்கு அறிவிக்கிறான். இதைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது :
“(முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன் என்று கூறுவீராக! அவருக்கு பூமியில் (ஆட்சி செய்ய) நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் (பயணம்) சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் அது மறைவதைக் காண்டார். அங்கே (அவர்) சமுதாயத்தைக் கண்டார்….
பயணத்தின் திசை மேற்காகும்
இவ்வசனங்களில் கூறப்பட்டிருக்கும் பேரரசருக்கு “துல்கர்னைனி என்பது பட்டப்பெயராகும். இச்சொல்லுக்கு “இரு கொம்புகளின் உடைமையாளர் (Lord of two horns) என்பது பொருளாகும். இவருடைய இயற்பெயர் என்ன என்பதோ அல்லது இவர் காலம், இவர் ஆண்ட தேசங்கள் எது என்பதோ திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. சிலர் இவரே மாவீரர் அலெக்ஸாண்டர் (Alexandar the Great) என்றும் வேறு சிலர் இவர் ஒரு பழங்கால பாரசீக அரசர் என்றும் மற்றும் சிலர் இவர் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை சார்ந்த ஓர் அரசர் என்றும் வெவ்வேறு விதத்தில் அபிப்பிராயப்படுகின்றனர். ஆனால் இவையாவும் நமது தலைப்போடு தொடர்பு கொள்ளவில்லை.
நமது தலைப்போடு தொடர்பு கொண்ட விபரங்களாவன இறைவனின் கட்டளைப்படி உலகின் சில பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய தமது பேரரசின் ஆட்சி நிர்வாகப் பணிகளை (civil Administration) முன்னிட்டு துல்கர்னைன் அவர்கள் ஒரு நீண்ட பயணத்தை துவங்கினார் என்பது முதலாவதாகத் தெரிய வருகிறது.
இரண்டாவதாக அவர் அப்பயணத்தின் ஒரு கட்டத்தில் “சூரியன் மறையும் இடத்தை அடைந்தார் எனத் தெரிய வருகிறது. இது திருக்குர்ஆன் பயன்படுத்தி இருக்கும் அறிவியல் ஆழம் மிக்க தனிச்சிறப்பான சொற்பிரயோகமாகும். இதைப் பற்றி கூடுதல் விபரங்கள் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த அத்தியாயத்தோடு தொடர்புள்ள விபரங்கள் வருமாறு :
- முதலாவது செய்தி“சூரியன் மறையும் இடத்தை அடைந்தார் எனத் திருக்குர்ஆன் கூறியதிலிருந்து துல்கர்னைன் அவர்கள் தமது (திருக்குர்ஆனின் வரலாற்றுப் புகழ் மிக்க) அந்த நீண்ட பயணத்தை மேற்கு திசையிலேயே ஆரம்பித்தார் என்பதாகும்.
- இரண்டாது செய்தி சூரியன் நீர்நிலையில் மறைவதை அவர் கண்டார் எனக் கூறப்பட்டதிலிருந்து அவரது அந்தப் பயணம் ஒரு கடற்கரையில் முடிவடைந்தது எனத் தெரிய வருகிறது. ஏனெனில் சூரியன் தண்ணீரில் மறைவது போன்ற காட்சி கடற்கரையில் நின்று பார்ப்பவர்களுக்கு ஏற்படும் அனுபவமாகும் என்பதும் மேலும் மேற்கு திசையில் அமைந்துள்ள கடயற்கரைக்கு வந்து சேரும் எந்த ஒரு நபரும் கடல் நீரில் சூரியன் மறைகின்ற அக்கண் கொள்ளாக் காட்சியை காணத் தவற மாட்டார்கள் என்பதும் தெரிந்ததே.
- அக்கடற்கரையை ஒட்டி ஒரு நகரம் இருந்ததாகவும் அந்நகர மக்களிடம் குற்றங்களை தடுப்பதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் தேவையான சில உத்தரவுகளை (இதைக் குறித்து திருக்குர்ஆனைப் பார்த்து தெரிந்து கொள்க) இறைவனின் வழிகாட்டுதலின்படி நடைமுறைப் படுத்தும்படி கட்டளை இட்டதாகத் தெரிய வருகிறது. அதன் பிறகு உலகின் வேறு சில பகுதிகளில் தாம் நிறைவேற்ற வேண்டிய வேறுசில முக்கியமான பணிகளுக்காக தமது பயணத்தை மீண்டும் தொடர்கிறார்.
- துல்கர்னைன் அவர்களுடைய இந்த நீண்ட பயணத் தில் அவர் கடற்கரையில் அமைந்துள்ள நகரத்தை அடைந் தார் என விளங்கப் பெற்றதிலிருந்து அதுவரை அவர் செய்தது தரை வழிப் பயணமே என்பதும் புலனாகிறது.
மேற்கு கிழக்காகிப் போன அற்புதம்!
தன்னுடைய நீண்ட பயணத்தில் கடற்கரையை அடைந்த துல்கர்னைன் அவர்கள் திசைமாறாமல் மேலும் பயணம் செய்ய வேண்டுமானால் அவர் அதற்கு மேல் கடல் வழிப் பயணமே செய்திருக்க வேண்டும். திருக்குர்ஆனுடைய வாசகங்களில் அவர் பயணத்தில் சென்றடைந்த நாடு, நகரம், சந்தித்த மக்களினம் போன்ற விபரங்கள் எதற்கும் தரப்படாத முக்கியத்துவம் அவர் பயணம் செய்த திசைக்கு வழங்கப் பட்டுள்ளது என்பது கருத்தூன்றி கவனிக்க வேண்டிய சிறப் பம்சமாகும். எனவே துல்கர்னைன் அவர்களின் பயணத்தில் திசைமாற்றம் நடைபெற்றிருந்தால் திருக்குர்ஆனில் சிறப்பாகக் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கும். ஆனால் திருக்குர்ஆன் திசைமாற்றம் குறித்து எதுவும் கூறாமல் அவர் மீண்டும் பயணம் தொடர்ந்ததைப் பற்றியே கூறுகிறது. எனவே துல்கர்னைன் அவர்களுடைய மேற்கொண்டுள்ள பயணம் கடல்வழிப் பயணமாகும்.
துல்கர்னைன் அவர்களுக்கு அவ்வளவு பண்டைகாலத் திலேயே கடல்கடந்து பயணம் செய்யும் அளவிற்கு தகுதி வாய்ந்த பயண வசதிகள் இருந்தனவா என்ற ஐயம் எழுமாயின் அவருடைய பயணத்தையும் அப்பயணத்தில் செய்து முடிக்கவேண்டிய பணிகளுக்கும் தேவையான யாவும் அவருக்கு இறைவனால் வழங்கப்பட்டிருந்தது என்பதே “ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத் தினோம் எனக் கூறப்பட்டதில் உள்ளடங்கிய கருத்தாகும். எனவே பேரரசர் துல்கர்னைன் தன்னுடைய பரிவாரங்களுடன் (திருக்குர்ஆனுடைய சம்பந்தப்பட்ட வசனங்களிலிருந்து பேரரசர் துல்கர்னைனின் பயணக்குழுவில் படைவீரர்களும் வல்லுநர்களும் தொழிலாளர்களும் அடங்கிய பெரும் பரிவாரமே இடம் பெற்றிருந்தது எனத் தெரிய வருகிறது) கடல் மார்க்கமாகப் பயணத்தைத் தொடர்கிறார். இப்பயணத் தைக் குறித்து திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
“பின்னர் ஒரு வழியில் சென்றார்
இந்த வசனத்தில் துல்கர்னைன் அவர்கள் தனது பயணத்தை மேலும் தொடர்ந்த செய்தி சொல்லப்பட்டுள் ளது. ஆயினும் அப்பயணம் தரைவழிப் பயணமன்றி கடல் வழிப் பயணமே என்பது “பின்னர் ஒரு வழியில் எனத் திருக்குர்ஆன் கூறியதிலிருந்து விளங்கலாம். இந்தப்பயணத் தில் அவர் சென்றடைந்த இடத்தைப் பற்றிய வியக்கத்தகு செய்தி ஒன்றை திருக்குர்ஆன் கூறுகிறது. ஆம்! இப்போது சென்றடைந்த இடம் :
“முடிவில் சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்தார். ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை.
என்னே வியப்பு! மேற்கு திசையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த துல்கர்னைன் அவர்கள் : “முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தார் இது எப்படிச் சாத்தியமாகும்? நாம் வாழும் இந்த பூமி தட்டையாக இருந்திருந்தால் இந்த பூமியில் மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் கிழக்குத் திசையை அடைய முடியுமா?ஆனால் இந்த பூமியின் மீது மேற்குத் திசையில் சென்று கொண்டிருந்த ஒருவர் கிழக்குத் திசையை அடைந்த தாகத் திருக்குர்ஆன் கூறுவதிலிருந்து பூமியின் வடிவம் தட்டையானது இல்லை என்றும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதுமே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பது தெளிவு.
இக்கடல் வழிப்பயணத்தின் முடிவில் அவர் மற்றொரு தேசத்தை (நிலப்பகுதியை) அடைந்தார் என்பது வீடுகளில் லாத ஒரு நாடோடிக் குழுவினரை தூல்கர்னைன் அவர்கள் அங்கு கண்டார். எனப் பொருள்படும் திருமறை வசனங்களி லிருந்து விளங்கலாம். இதன் பிறகு கடல் வழியிலிருந்து மீண்டும் தரைவழி பயணத்திற்கு மாறிய துல்கர்னைன் அவர்களின் பயணத்தின் தொடர்ச்சி திருமறையில் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது.
நாம் இதுவரை கூறியதிலிருந்து பூமியின் மீது கடல் மற்றும் கரை வழியாக நீண்டதூரப் பயணம் செய்து பூமி உருண்டை வடிவம் கொண்டதே என நிறுவியவர் துல்கர்னைன் அவர்களே என்றும் அந்த வரலாறு திருக்குர்ஆன் எடுத்துக் கூறி உண்மைபடுத்துவதால் திருக்குர்ஆனின் அறிவியலும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதுமாகும்.
பூமியின் மீது நடைபெறும் இராப்பகல் மாற்றம் செவ்வனே நடைபெறும் பொருட்டு பூமி உருண்டை வடிவம் கொண்டுள்ளது என்பதைக் கண்டோம். அடுத்தபடியாக பூமின் அச்சில் சுழற்சியைப் பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.