04) இமாம் நஸாயீ
இமாம் நஸாயீ
இயற்பெயர் : அஹ்மத்
குறிப்புப் பெயர் : அபூ அப்திர் ரஹ்மான்
தந்தை பெயர் : ஷுஐப்
பிறப்பு : ஹிஜ்ரீ 215 ஆம் ஆண்டில் நஸா என்ற ஊரில் பிறந்தார்கள். இவர் பிறந்த ஊரான நஸா என்பதுடன் இணைத்து நஸாயீ என்று இவர் மக்களால் அழைக்கப்படுகிறார்.
கல்வி : ஹிஜ்ரி 230ஆம் ஆண்டு பதினைந்தாவது வயதை அடைந்த போதே குதைபா பின் சயீத் அவர்களிடம் பயிலுவதற்காக பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். அவரிடம் 14 மாதங்கள் தங்கினார்கள். இவர் எழுதிய அல்அஹாதீசுல் லிஆஃப் (பலகீனமான ஹதீஸ்கள்) என்ற புத்தகம் ஹதீஸ் துறையில் இவர் பெற்றிருந்த பாண்டித்துவத்தைக் காட்டுகிறது.
இது மட்டுமின்றி மார்க்கச் சட்ட வல்லுனராகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களை விட இமாம் நஸாயீ அவர்களே மார்க்கச் சட்டத்தை அதிகம் அறிந்தவராக இருந்தார் என இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார். எகிப்து நாட்டிலும் ஹிமஸ் நாட்டிலும் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பொறுப்பை ஏற்றார்கள்.
கல்விக்காகப் பயணித்த ஊர்கள் : ஹுராஸான், ஈராக், ஜஸீரா, ஷாம், ஸஹுர், ஹிஜாஸ், எகிப்து
மாணவர்கள்: இப்னு ஹிப்பான், உகைலீ, இப்னு அதீ, அத்தவ்லாபீ, அத்தஹாவீ, அபூஉவானா, அத்தப்ரானி, இப்னு சின்னீ போன்ற பெரும் பெரும் அறிஞர்கள் இமாம் நஸயீ அவர்களிடம் மாணவர்களாகப் பயின்றுள்ளார்கள். இவர்களன்றி இன்னும் பலரும் உள்ளனர்.
ஆசிரியர்கள் : குதைபா, இஸ்ஹாக பின் ராஹவைஹி, அஹ்மத் பின் மனீஃ, அலீ பின் ஹஜர், அபூதாவூத், திர்மிதி, அபூஹாதம், அபூசுர்ஆ, முஹம்மத் பின் யஹ்யா, முஹம்மத் பின் பஷ்ஷார் ஆகியோர். இவர்களில் பெரும்பாலோர் இமாம் புகாரி மற்றும் முஸ்லிமின் ஆசிரியர்கள்.
படைப்புகள்: அஸ்ஸுனனுஸ் சுஹ்ரா, அஸ்ஸுனனுல் குப்ரா, அல்குனா, அமலுல் யவ்மி வல்லய்லா, அத்தஃப்சீர், அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், தஸ்மியது ஃபுகஹாயில் அம்ஸார், இஷ்ரதுன்னிஸா ஆகியவை.
மரணம் : இமாம் நஸயீ பாலஸ்தீனத்தில் இறந்தார் என சில அறிஞர்கள் கூறுகின்றனர். தாரகுத்னீ போன்ற சில அறிஞர்கள் மக்காவில் இறந்ததாகக் கூறுகின்றனர். ஹிஜ்ரீ 303வது வருடம் ஸஃபர் மாதம் 13 ஆம் நாள் திங்கட்கிழமை மரணித்தார்.