41) திருக்குர்ஆனில் இடம் பெற்ற துஆக்கள்
திருக்குர்ஆனில் இடம் பெற்ற துஆக்கள்
நபிமார்கள், நல்லடியார்கள் செய்த பல்வேறு துஆக்களை திருக்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் கூறுகிறான். அந்த துஆக்களை எந்தச் சந்தர்ப்பத்தில் ஓத வேண்டும் என்பதை அதன் பொருளை வைத்தே அறிந்து கொள்ளலாம். அந்த துஆ இடம் பெற்ற வசனத்தின் முன் பின் பகுதிகளைப் பார்த்தும் அறிந்து கொள்ளலாம்.
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிருந்து எங்களைக் காப்பாயாக!
எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.
எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிருந்து எங்களைக் காப்பாயாக!
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்.
எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிருந்து எங்களைக் காப்பா யாக! எங்கள் இறைவா! நீ நரகத்திற்கு அனுப்புபவனை இழிவு படுத்தி விட்டாய். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பைச் செவியுற்றோம். எங்கள் இறைவா! உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங் களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்று வாயாக! எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில்1 எங்களை இழிவு படுத்தாதே! நீ வாக்கு மீற மாட்டாய்.
எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்து வாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!
எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!
எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்.
எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் சமுதாயத்திற்குமிடையில் நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக! நீயே தீர்ப்பளிப்போரில் சிறந்தவன்.
எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்ம்களாக மரணிக்கச் செய்வாயாக!
எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து, எங்களை மன்னிக்கா விட்டால் நஷ்டமடைந்தோராவோம்.
எங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாக! நாங்கள் உன்னிடம் திரும்பி விட்டோம்.
எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன்.
அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத் தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே! உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!.
அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ் வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்மாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!
என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!
சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!
எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!
என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாயாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக!
என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து!
எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்.
உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்.
என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்.
என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!
அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
என் இறைவா! பாக்கியம் பெற்ற இடத்தில் என்னைத் தங்க வைப்பாயாக! தங்க வைப்போரில் நீ மிகச் சிறந்தவன்.
என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!
என் இறைவா! என்னை அநீதி இழைத்த கூட்டத்தில் ஆக்கி விடாதே!
என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்து அருள் புரிவாயாக! நீ கருணையாளர்களில் சிறந்தவன்.
என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன்.
எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனை யைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது. அது மோசமான ஓய்விடமாகவும், தங்குமிடமாகவும் இருக்கிறது.
எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிருந்தும், மக்களிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்கு வாயாக!
நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை எங்கள் இறைவன் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.
அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகச் செய்கிறான். நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான். தீர்ப்பு நாளில் என் தவறை அவன் மன்னிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசு களில் என்னையும் ஆக்குவாயாக! என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார். (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில்1 என்னை இழிவு படுத்தி விடாதே!
எனக்கும் அவர்களுக்கும் இடையே தெளிவான தீர்ப்புக் கூறுவாயாக! என்னையும் என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக!
என் இறைவா! என்னையும், என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக!
நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தி யடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!
என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!
என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!
என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ள வனாக இருக்கிறேன்.
என் இறைவா! சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக!
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக!
எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.