3) நபிமார்கள் இறைநேசர்கள்
3) நபிமார்கள் இறைநேசர்கள்
இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களும் இறைநேசர்கள், அவ்லியாக்கள் என்று நாம் நம்ப வேண்டும். இறைவன் தேர்ந்தெடுத்து ஒருவரிடம் பொறுப்பைச் சுமத்துகிறான் என்றால் கண்டிப்பாக அவர் இறைவனுடைய நேசராகத் தான் இருக்க முடியும்.
ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதியாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை எத்தனை நபிமார்கள் அனுப்பப்பட்டார்களோ அத்தனை பேருமே இறைநேசர்கள் தான்.
மர்யம், ஆஸியா நல்லடியார்கள்
அதேபோல் மர்யம் (அலை) அவர்களைப் பற்றி நல்லடியார் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
“மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்” என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!
ஃபிர்அவ்னுடைய மனைவி ஆசியா அவர்கள் இறைநேசர் என்று நாம் உறுதிபடச் சொல்ல்லாம்.
“என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்ரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!’ என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். இம்ரானின் மகள் மர்யமையும் இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான். அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராக இருந்தார்.
ஆசியா என்ற பெயரை அல்லாஹ் பயன்படுத்தாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிர்அவ்னின் மனைவி ஆசியா என்று குறிப்பிட்டுள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும், இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளை விடவும் “ஸரீத்’ உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.
அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி),
இந்தச் செய்தி(புகாரி: 3434, 3769, 5418)ஆகிய இடங்களிலும் இடம் பெற்றுள்ளது.
குகைவாசிகள் நல்லடியார்கள்
இதே போன்று குகைவாசிகளையும் நல்லடியார்கள் என்று இறைவன் சொல்கிறான்.
அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர்வழியை அதிகமாக்கினோம்.
முக்கியமான நபித்தோழர்கள் நல்லடியார்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உஹுத்! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும் ஒரு சித்தீக்கும், இரு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
அபூபக்ர், உமர், உஸ்மான் ஆகிய நபித்தோழர்கள் இறைநேசர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டதால் அவர்கள் அல்லாஹ்விடம் இறைநேசர்கள் தான்.
இம்மூவரும் இறைநேசர்கள் என்று(புகாரி: 3693, 3674, 3695, 6216, 7097, 7262)ஆகிய ஹதீஸ்களில் இருந்தும் அறியலாம்.
“அபூபக்கர் சொர்க்கத்தில் இருப்பார். உமர் சொர்க்கத்தில் இருப்பார். உஸ்மான் சொர்க்கத்தில் இருப்பார். அலீ சொர்க்கத்தில் இருப்பார். தல்ஹா சொர்க்கத்தில் இருப்பார். ஸுபைர் சொர்க்கத்தில் இருப்பார். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் சொர்க்கத்தில் இருப்பார். ஸஅத் பின் அபீ வக்காஸ் சொர்க்கத்தில் இருப்பார். ஸயீத் பின் ஸைத் சொர்க்கத்தில் இருப்பார். அபூஉபைதா அல்ஜர்ராஹ் சொர்க்கத்தில் இருப்பார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி),
மேலும் இச்செய்தி(திர்மிதீ: 3680, 3748)ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியில் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 நபர்களில் முதல் நான்கு பேரும் கலீபாக்கள். அவர்களிடத்தில் மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் நிகழ்ந்திருந்தாலும், அவர்கள் ஆட்சி செய்த நேரத்தில், அவர்களுடைய ஆளுமை மக்களுக்கு அதிருப்தியைத் தந்தாலும் அவர்களுடைய தியாகத்திற்கு முன் அது சாதாரண காரியமாகத் தான் அமையும்.
நம்முடைய பார்வையில் அது தவறாகத் தெரிந்தாலும் அல்லாஹ்வுடைய பார்வையில் அது மன்னிக்கப்படக் கூடிய பாவமாகத் தான் தெரிந்திருக்கிறது. அந்த 10 பேரும் பாவங்களைச் செய்திருந்தாலும் அல்லாஹ் அதை மன்னித்து விட்டான். அதனால் தான் சொர்க்கத்திற்குரியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்.
அதே மாதிரி ஸஅத் பின் முஆத் அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் பட்டை (அணியக் கூடாது என்று) தடை செய்து வந்தார்கள். மக்களோ, அந்த அங்கி(யின் தரத்தை மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (என் தோழர்) சஅத் பின் முஆதுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதை விட உயர்ந்தவை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
அதே போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய மகன் இப்ராஹீம் சிறு வயதிலேயே, அதாவது பால்குடிப் பருவத்திலேயே இறந்து விடுகிறார். அவரும் சொர்க்கவாசி என்று கூறலாம்.
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இப்ராஹீம் இறந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு” எனக் கூறினார்கள்.
அதே போன்று அனஸ் (ரலி) அவர்களுடைய தாயார் குமைஸா பின்த் மில்ஹான் அவர்களையும் சொர்க்கத்திற்குரியவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு ஒரு காலடிச் சப்தத்தைக் கேட்டேன். அப்போது இது யார்? என்று கேட்டேன். அ(ங்கிருந்த வான)வர்கள், “இவர் தான் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் ஃகுமைஸா பின்த் மில்ஹான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம்
அதேபோல பிலால் (ரலி) அவர்களையும் சொர்க்கத்திற்குரியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
(ஒருநாள்) அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக! ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை.
ஆயினும் நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக உளூச் செய்தாலும், அந்த உளூ மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகையை) தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
அதுபோன்று, உம்மு சுஃபைர் அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று தந்திருக்கிறார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு தடவை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது.
ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள்.
இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அதாஉ பின் அபீரபாஹ்
ஹாரிஸா பின் நுஃமான் (ரலி) அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு (ஒருநாள்) கனவில் சொர்க்கம் எடுத்துக் காட்டப்பட்டது. அப்போது அங்கே ஒருவர் குர்ஆன் ஓதுவதைச் செவியுற்றேன். அப்போது இவர் யார்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “இவர் தான் ஹாரிஸா பின் நுஃமான்” என்று சொன்னார்கள். “இவர் தான் மக்களிலேயே தன்னுடைய தாய்க்கு அதிகமாக நன்மை செய்யக்கூடியவராக இருந்தார்” என்று கூறினார்கள்.
பத்ர் போராளிகள் நல்லடியார்கள்
பத்ருப்போரில் யாரெல்லாம் கலந்து கொண்டார்களோ (அனைவருடைய தகவலும் இல்லாவிட்டாலும் பத்ருவாசிகள் என்று யாரெல்லாம் சொல்லப்பட்டார்களோ) அவர்களை நாம் சொர்க்கவாசிகள், மகான்கள், அவ்லியாக்கள் என்று நாம் சொல்லலாம்.
பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைவருடைய பெயரும் குறிப்பிடப்படாவிட்டாலும், பத்ருவாசிகள் என்று சுமார் 60க்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் பெயர்கள் ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
குதிரை வீரர்களான என்னையும், ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களையும், அபூமர்ஸத் (ரலி) அவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் “ரவ்ளத்து ஹாஜ்’ எனும் இடம் வரை செல்லுங்கள். -இவ்வாறு “ஹாஜ்’ என்றே அபூஅவானா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அபூசலமா கூறுகிறார்கள். (மற்ற அறிவிப்புகளில் “ரவ்ளத்து காக்’ என வந்துள்ளது) – அங்கு ஒரு பெண் இருப்பாள். அவளிடம் ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (மக்காவிலிருக்கும்) இணைவைப்பாளர்களுக்கு எழுதிய (நமது இரகசிய திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்றிருக்கும். அதை (அவளிடமிருந்து கைப்பற்றி) என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார்கள்.
உடனே நாங்கள் எங்கள் குதிரைகளின் மீதேறிச் சென்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குறிப்பிட்ட அந்த இடத்தில் தனது ஒட்டகம் ஒன்றின் மீது அவள் செல்வதைக் கண்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை வெற்றி கொள்வதற்காக) மக்காவாசிகளை நோக்கிப் புறப்படவிருப்பது தொடர்பாக ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (அக்கடிதத்தில்) மக்காவாசிகளுக்கு எழுதியிருந்தார். நாங்கள் (அவளிடம்), “உன்னிடம் உள்ள அந்தக் கடிதம் எங்கே?” என்று கேட்டோம். அவள், “என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று சொன்னாள்.
உடனே நாங்கள் அவள் அமர்ந்திருந்த அந்த ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அவளிருந்த சிவிகைக்குள் (கடிதத்தைத்) தேடினோம். (அதில்) எதுவும் கிடைக்கவில்லை. அப்போது என் சகாக்கள் இருவரும் “இவளிடம் எந்தக் கடிதத்தையும் நம்மால் காணமுடியவில்லையே” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று திட்டவட்டமாக நாம் அறிந்துள்ளோம்” என்று கூறிவிட்டு, சத்தியம் செய்வதற்கு தகுதிபெற்ற (இறை)வன் மீது ஆணையிட்டு, “ஒன்று நீயாக அதை வெளியே எடுக்க வேண்டும். அல்லது நான் உன்னை (சோதனையிடுவதற்காக உனது ஆடையைக்) கழற்ற வேண்டியிருக்கும்” என்று சொன்னேன். இதைக் கேட்ட அவள் தனது இடுப்பை நோக்கி (தனது கையைக்) கொண்டு சென்றாள்.
அவள் (இடுப்பில்) ஒரு துணி கட்டியிருந்தாள். (அதற்குள்ளேயிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள். அந்தக் கடிதத்தை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தோம். பிறகு அதை நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டினேன்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; அவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹாத்திபே! ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.
ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? (நான் இறைநம்பிக்கையைக் கைவிட்டுவிடவில்லை.) மாறாக, மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் ஏதேனும் செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் (அங்குள்ள பலவீனமான) என் உறவினர்களையும் என் செல்வங்களையும் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன்; தங்களுடைய (முஹாஜிர்) தோழர்கள் அனைவருக்குமே அவர்களுயை குடும்பத்தாரையும் செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் அங்கு உள்ளனர்” என்று கூறினார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவர் உண்மை பேசினார். இவர் குறித்து நல்லதையே சொல்லுங்கள்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் மீண்டும் “அல்லாஹ்வின் தூதரே! இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவர் பத்ருப் போரில் கலந்துகொண்டவர் இல்லையா? உங்களுக்கு என்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள்.
சொர்க்கத்தை உங்களுக்கு நான் உறுதியாக்கிவிட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீரில் மூழ்கின. அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மேலும்(புகாரி: 3007, 3081, 4274, 4890, 6259, 3983)ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைவருமே சொர்க்கவாசிகள் என்பது தெளிவாகிறது. அவர்களிடம் எத்தனை தவறுகளைக் கண்டாலும் அவர்கள் சொர்க்கவாசிகள் தான் என்று அல்லாஹ்வும் கூறுகிறான். இந்த ஹதீஸில் இடம்பெற்ற ஸஹாபியும் பத்ருப் போரில் கலந்து கொண்டவர் தான்.
அந்தப் போருக்கு பிறகு அவர் தவறு செய்திருக்கிறார் என்ற செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிய வருகின்றது. ஆனால் அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் என்று சொன்ன காரணத்தினால் அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. எனவே இந்தச் செய்தியில் இடம்பெற்ற ஹாதீப் பின் அபீ பல்தஆ அவர்களையும், பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைவரையுமே நல்லடியார்கள், மகான்கள், அவ்லியாக்கள் என்று நாம் சந்தேகமற உறுதிபடக் கூறலாம்.
மரத்தடியில் உடன்படிக்கை எடுத்தவர்கள்
இது போன்று, பைஅத்து ரிள்வான் என்று சொல்லப்படக்கூடிய ஹுதைபியா உடன்படிக்கையின் போது ஒரு மரத்தடியில் உறுதி மொழி எடுத்தவர்கள் அனைவரையும் சொர்க்கவாசிகள் என்று நாம் சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் தியாகம் செய்யாவிட்டாலும் அதற்காகப் பின்வாங்காமல், உயிரை விடவும் தயாராக இருந்ததால் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டதாகப் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்கு சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.
அந்தச் சம்பவம் என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு உம்ரா செய்வதற்காகச் செல்லும் போது இடையில் தடுக்கப்படுகிறார்கள். அப்போது ஒரு மரத்தின் அடியில் அனைவரும் தங்கி ஓய்வெடுக்கிறார்கள். அப்போது உஸ்மான் (ரலி) அவர்களைப் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக, தூதுவராக மக்காவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பி வரவில்லை. அவர்களை மக்காவில் உள்ள எதிரிகள் கொன்று விட்டார்கள் என்று வதந்தி பரவுகின்றது.
இந்தச் சம்பவத்தில், எதிரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தூதுவராக சென்ற உஸ்மான் (ரலி) திரும்பி வருவதற்கு தாமதமாகி விட்டது. எதிரிகள் அவரைப் பிடித்தும் வைக்கவில்லை; தடுத்தும் வைக்கவில்லை. ஆனால் இந்தத் தாமதமான செய்தியை அறியாமல் அவர்களைக் கொன்று விட்டார்கள் என்று வதந்தியை பரப்பி விடுகின்றனர்.
தூதுவராக அனுப்பிய உஸ்மான் (ரலி) அவர்களை எதிரிகள் கொன்று விட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களை ஒரு மரத்தடியின் கீழ் ஒன்றுகூட்டி, “நாம் தூதுவராக அனுப்பிய உஸ்மான் (ரலி) அவர்களை எதிரிகள் கொன்று இருப்பார்களானால், அல்லாஹ்வுக்காகக் கடைசி வரையும் நின்று போராடுவோம் என்று சொல்லக்கூடியவர்கள் என்னுடன் உறுதிமொழி எடுங்கள்!” என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் நாங்கள் கடைசி வரைக்கும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்கிறார்கள்.
ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பி வந்ததால் போர் நடக்கவில்லை. எந்தவித சண்டையும் நடக்கவில்லை. யாரும் எந்தவித தியாகமும் செய்யவில்லை. ஆனால் “கடைசி நிமிடம் வரைக்கும் பின்வாங்க மாட்டோம். இந்த விஷயத்தை (அதாவது தூதரைக் கொன்ற விஷயத்தை) நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். வெற்றி பெறும் வரை அல்லது வீரமரணம் அடையும் வரைக்கும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று என்னிடத்தில் உறுதிமொழி அளிக்கக்கூடியவர்கள் யார்?’ என்று கேட்டவுடன் அனைவரும் உறுதிமொழி அளிக்கிறார்கள்.
இந்த உறுதிமொழியில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் எல்லாருமே சொர்க்கவாசிகள் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். எனவே அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொண்டதால் இவர்களை நல்லடியார்கள், அவ்லியாக்கள், மகான்கள் என்று நாம் கூறலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் அந்த மரத்தினடியில் உறுதிமொழி (பைஅத்) எடுத்தார்களோ அவர்கள் நரகில் நுழைய மாட்டார்கள். அவர்கள் சொர்க்கவாசிகள். சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்ற கருத்தில் அமைந்த செய்தி(முஸ்லிம்: 4552)வது ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.
இதைப் போன்று எந்த நல்லடியார்களைப் பற்றி சொர்க்கவாசி என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அவர்களைத் தான் சொர்க்கவாசிகள் என்றோ, நல்லடியார்கள் என்றோ சொல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி ஏராளமானவர்களைப் பற்றி நல்லடியார்கள் என்றும் சொர்க்கவாசிகள் என்றும் நற்சான்று அளித்திருக்கிறார்கள்.
நல்லடியார் பட்டம் யாருக்கும் கொடுக்க வேண்டாம்
நான்கு இமாம்கள், மக்களால் அறியப்பட்ட பிரபலங்கள், பெரிய தர்காக்கள் கட்டப்பட்டவர்கள் உள்ளிட்ட யாரையும் நல்லடியார் என்றும், இறைநேசர் என்றும் சொர்க்கவாசி என்றும் கூறும் அதிகாரம் நமக்கு இல்லை. மதிப்புக்குரிய நன்மக்களாக நம் அளவில் கருதலாமே தவிர சொர்க்கவாசிகள் என்று கருத முடியாது,
அவர்கள் சொர்க்கம் போவார்களா என்பதே நமக்குத் தெரியாத நிலையில் அவர்கள் அல்லாஹ்விடம் நமக்காகப் பரிந்து பேசுவார்கள் என்று நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
அல்லாஹ்வும், அவனது தூதரும் யாரை நல்லடியார்கள் என்று கூறினார்களோ அவர்களை மாத்திரமே நாம் நல்லடியார்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, வேறு யாரையாவது நல்லடியார்கள், மகான்கள் எனக் கூறிக்கொண்டு அவர்களுக்காக விழா எடுப்பதும், அவர்களிடம் உதவி தேடுவதும், அவர்களின் காலில் விழுவதும் பெரும் பாவங்களில் ஒன்றாகும். அது நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்பதையும் விளங்கி இந்தப் பாவத்திலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டும்.
நல்லடியார்களுக்கு மறுமையில் கிடைக்கக் கூடிய பரிசுகளை, அந்தஸ்துகளை, கூலியைப் பற்றி இஸ்லாம் கூறுவது அவர்களைக் கொண்டாடுவதற்கு அல்ல. நல்லடியார்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றால் தான் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தலாமா என்ற கேள்வியே வரும். அவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தாலும் அந்த நல்லடியார்களுக்கு உருஸ் எடுக்கவோ, சந்தனக்கூடு எடுக்கவோ, பாராட்டு விழா நடத்தவோ அல்லாஹ் சொல்லவில்லை.
அவர்களைப் போன்று நீயும் நல்லடியானாக ஆக வேண்டும் என்பதற்குத் தான் நல்லடியார்களைப் பற்றி சொல்கிறான்.
அல்லாஹ்வாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலும் சொர்க்கவாசிகள் என்று கூறப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் சொர்க்கவாசிகள் எனக் கூறக்கூடாது. நல்லவர் என்று நாம் நம்பும் பலர் நரகவாசிகளாக இருப்பார்கள். கெட்டவர்கள் என்று நாம் புறக்கணித்த பலர் சொர்க்கவாசிகளாக இருப்பார்கள். இதை உணர்ந்து நடக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கட்டும்.
இறைநேசர் பட்டம் கொடுத்து அல்லாஹ்வின் அதிகாரத்தைக் கையில் எடுத்த குற்றவாளிகளாக ஆகாமல் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!