12) தவாஃபுல் விதாஃ

நூல்கள்: நபி வழியில் நம் ஹஜ்

தவாஃபுல் விதாஃ

மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும் இறுதியாக தவாஃபுல் விதாஃ என்று கூறப்படும் தவாஃபைச் செய்ய வேண்டும்.

விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாஃப் செய்யப்படுவதால் இது தவாஃபுல் விதாஃ என்று கூறப்படுகின்றது.

மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச் செல்லலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசிக் கிரியையை அல்லாஹ்வின் ஆலயத்தில் (தவாஃப்) செய்து விட்டுப் புறப்படுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(முஸ்லிம்: 2350, 2351)

தவாஃபுல் இஃபாளாவைப் போன்றே இந்தத் தவாஃபும் செய்யப்பட வேண்டும். இதைச் செய்தவுடன் புறப்பட்டுச் சென்று விடலாம்.
ஹாஜிகள் செய்ய வேண்டியவற்றை வரிசையாக இது வரை நாம் அறிந்தோம். மக்காவில் அவர்கள் இருக்கும் போது செய்ய வேண்டிய வேறு சில காரியங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.

 

தவாஃபின் போது பேசலாம்

தவாஃப் என்பது தொழுகை போன்றதாக இருப்பதால் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதால் தவாஃபுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.

ஒரு மனிதர் தனது கையை இன்னொருவருடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டு தவாஃப் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித்தார்கள். இவரது கையைப் பிடித்துக் கொண்டு செல்வீராகஎன்றும் கூறினார்கள்.

(புகாரி: 1620, 6703)

எந்த நேரமும் தொழலாம்; தவாஃப் செய்யலாம்

சூரியன் உதிக்கும் நேரம், மறையும் நேரங்களில் தொழுவதற்குத் தடை உள்ளதை நாம் அறிவோம். ஆனால் கஃபாவில் தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரம் ஏதும் கிடையாது. எந்த நேரமும் தொழலாம். எந்த நேரமும் தவாஃப் செய்யலாம்.

அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

நூல்கள்:(திர்மிதீ: 795),(அபூதாவூத்: 1618), நஸயீ 2875

 

ஆண்களுடன், பெண்களும் தவாஃப் செய்வது

பெண்களும் ஆண்களுடன் தவாஃப் செய்யலாம். அவர்களுக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஆயினும், ஆண்களுடன் கலந்து விடாத வண்ணமாக அவர்கள் தவாஃப் செய்ய வேண்டும். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களை விட்டு விலகி (தூரத்திலிருந்து) தவாஃப் செய்ததாக புகாரியில் (1618) காணப்படுகின்றது.

எனவே ஆண்களுடன் இரண்டறக் கலந்து விடாதவாறு ஆண்களுக்குப் பின் வரிசையில் அவர்கள் தவாஃப் செய்ய வேண்டும்.

அதிகமதிகம் தொழ வேண்டும்

மக்காவில்-மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது மற்ற இடங்களில் தொழுவதை விடப் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியது. ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட வேண்டும்.

எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிது நபவியில்) தொழுவது மஸ்ஜிதுல் ஹராம்தவிர ஏனைய பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறந்ததாகும்.என்பது நபி மொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 1190)

இந்த நன்மையை அடைவதற்காகவே பிரயாணம் மேற்கொள்ளவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர்.

(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸாஎன நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

(புகாரி: 1189, 1197, 1864, 1996)

 

அதிகமதிகம் தவாஃப் செய்ய வேண்டும்

மக்காவுக்குச் சென்றவுடன் செய்யும் தவாஃபுல் குதூம்

பத்தாம் நாளன்று செய்ய வேண்டிய தவாஃபுல் இஃபாளா அல்லது தவாஃபுஸ் ஸியாரா

மக்காவை விட்டும் ஊர் திரும்பும் போது கடைசியாகச் செய்ய வேண்டிய தவாஃபுல் விதாஃ

ஆகிய மூன்று தவாஃப்களைப் பற்றி நாம் அறிந்தோம். இவை தவிர விரும்பிய நேரமெல்லாம் நபிலான- உபரியான- தவாஃப்கள் செய்யலாம்.

இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்யும் எவரையும் தடுக்க வேண்டாம்

என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை முன்னர் நாம் அறிந்தோம்.

இந்த நபி மொழியிலிருந்து எந்த நேரமும் தவாஃப் செய்யலாம் என்பதை நாம் அறியலாம்.