10) தவாஃப் அல் இஃபாளா

நூல்கள்: நபி வழியில் நம் ஹஜ்

தவாஃப் அல் இஃபாளா

பத்தாம் நாள் அன்று மினாவில் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும்.
இது தவாஃப் ஸியாராஎனவும் கூறப்படுகிறது.

இந்தத் தவாஃபைச் செய்து விட்டு மீண்டும் மினாவுக்குத் திரும்ப வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று தவாஃப் அல் இஃபாளாசெய்து விட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(முஸ்லிம்: 2307)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட்டு, வாகனத்தில் ஏறி தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(முஸ்லிம்: 2137)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும், மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தான் ஹஜ் செய்துள்ளதால் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்ததாகக் கருத முடியாது.

தவாஃபுல் இஃபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்து விட்டதால் அங்கே லுஹர் தொழுது விட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக் கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.

தவாஃப் அல் இஃபாளா செய்யும் முறை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல் குதூம்செய்யும் போது மூன்று தடவை ஓடியும், நான்கு தடவை நடந்தும் சுற்றியதாக முன்னர் கண்டோம். ஆனால் இந்தத் தவாஃபின் போது ஏழு சுற்றிலும் நடந்தே தான் செல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓடியதாக வரும் ஹதீஸ்களில் ஆரம்ப தவாஃபின் போதுஎன்ற வாசகம் காணப்படுகின்றது. இதிலிருந்து இதை நாம் அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் அவர்கள் ஓடவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்:(அபூதாவூத்: 1710), இப்னுமாஜா 3051

பெயர் குறிப்பிடப்பட்ட தவாஃபாக இருந்தாலும், உபரியாகச் செய்யும் தவாஃபாக இருந்தாலும் ஒவ்வொரு தவாஃபையும் முடித்த பின் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவை ஏழு சுற்று சுற்றியதும் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(புகாரி: 396, 1600, 1616, 1624, 1646, 1647, 1794)

அது போல் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஸஃயும் செய்ய வேண்டும்.

இந்தத் தவாஃபை முடித்த பிறகு உடலுறவு உட்பட அனைத்தும் ஹலாலாகின்றது. இப்போது தான் முழுமையாக இஹ்ராமிலிருந்து ஒருவர் விடுபடுகிறார். இஹ்ராம் காரணமாக அவருக்குத் தடுக்கப்பட்ட யாவும் இப்போது முதல் ஹலாலாகின்றது.

கடைசி ஹஜ் வருடத்தின் போது நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். ஹஜ், உம்ரா இரண்டுக்கும் இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர் தவாஃபுல் குதூம் செய்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவரும், ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டியவரும் பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்:(புகாரி: 319, 1562, 4408)

பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட முடியும் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. பத்தாம் நாளில் கல்லெறிந்து, தலையை மழித்து, அறுத்துப் பலியிட்டவுடன் பெண்களிடம் கூடுவது தவிர மற்ற விஷயங்கள் செய்ய அனுமதிக்கப்படுவதை முன்னர் கண்டோம். தவாஃப் அல் இஃபாளா செய்தவுடன் முழுமையாக ஒருவர் இஹ்ராமிலிருந்து விடுபடுகிறார்.

பெருநாள் தொழுகை கிடையாது

பத்தாம் நாள் ஹாஜிகளுக்குப் பெருநாள் தொழுகை கிடையாது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் சொற்பொழிவு நிகழ்த்தியதாகப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது அள்பாஎனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பவர்: ஹிர்மாஸ் பின் ஸியாத் (ரலி)

நூல்கள்:(அஹ்மத்: 19218),(அபூதாவூத்: 1669)

பத்தாம் நாளன்று மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உரையை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)

(அபூதாவூத்: 1670)

அனேகமாக மினாவில் அவர்கள் லுஹர் தொழுகை நடத்திய பிறகு இந்த உரையை நிகழ்த்தியிருக்கக் கூடும்.