09) மினாவுக்கு திரும்புதல் மற்றும் தலை மழித்தல்

நூல்கள்: நபி வழியில் நம் ஹஜ்

மீண்டும் மினாவுக்குச் செல்வது

முஸ்தலிஃபாவில் பஜ்ரைத் தொழுததும் மஷ்அருல் ஹராம்என்ற இடத்தை அடைந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ வேண்டும். நன்கு வெளிச்சம் வரும் வரை அந்த இடத்திலேயே இருந்து விட்டு சூரியன் உதயமாவதற்கு முன் மினாவை நோக்கிப் புறப்பட வேண்டும்.

(பஜ்ரு தொழுததும்) கஸ்வா எனும் தமது ஒட்டகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏறி மஷ்அருல் ஹராம் என்ற இடத்துக்கு வந்தார்கள். அங்கே கிப்லாவை முன்னோக்கினார்கள். அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். (அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு என்று கூறி) அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி லாயிலாஹ இல்லல்லாஹு கூறி அவனது ஏகத்துவத்தை நிலை நாட்டினார்கள். நன்கு வெளிச்சம் வரும் வரை அங்கேயே இருந்தார்கள். சூரியன் உதயமாவதற்கு முன் (மினாவை நோக்கிப்) புறப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(முஸ்லிம்: 2137)

பஜ்ரு தொழுத பின்பே முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குப் புறப்பட வேண்டும் என்றாலும் பலவீனர்கள், பெண்கள் ஆகியோர் இரவிலேயே மினாவுக்குச் சென்று விடலாம்.

ஸவ்தா (ரலி) அவர்கள் பருமனாகவும் விரைந்து நடக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் இரவிலேயே முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 1681, 1680)

தன் குடும்பத்தின் பலவீனர்களுக்கு முஸ்தலிஃபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 1678, 1677, 1856)

மினாவில் செய்ய வேண்டியவை

இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனது கட்டளைப் படி தமது மகனைப் பலியிட முன் வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான். ஜம்ரதுல் அகபாஎன்ற இடத்தில் அவன் மீது ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள்.

அதன் பிறகு ஜம்ரதுல் உஸ்தாஎனும் இடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை கற்களால் எறிந்தார்கள்.
அதன் பிறகு ஜம்ரதுல் ஊலாஎனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள்.

பைஹகீ, ஹாகிம், இப்னு குஸைமா ஆகிய நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது.

அதை நினைவு கூரும் விதமாகவும், இறைவனது கட்டளை நமது சிற்றறிவுக்குப் புரியாவிட்டாலும் அதை அப்படியே ஏற்போம் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும், ஷைத்தான்களின் தூண்டுதலுக்குப் பலியாக மாட்டோம் என்பதைப் பிரகடனப்படுத்தும் வகையிலும் அந்த இடங்களில் கல்லெறிய வேண்டும். இந்த மூன்று இடங்களும் மினாவில் அமைந்துள்ளன.

ஜம்ரதுல் அகபா

முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குள் நுழையும் போது இடப்புறமாக ஜம்ரதுல் அகபாஎனும் இடம் அமைந்துள்ளது.
துல் ஹஜ் பத்தாம் நாள் காலையில் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபாஎன்ற இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிய வேண்டும்.

(புகாரி: 1753)

ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும்.

(புகாரி: 1753)

ஏழு கற்களை எறிந்த பின் கிப்லாவை நோக்கி நின்று கொண்டு இரு கைகளையும் உயர்த்தி நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும்.

(புகாரி: 1753)

எறியப்படும் கற்கள் விரல்களால் சுண்டி விளையாடும் அளவுக்குச் சிறிதாக இருக்க வேண்டும்.

(முஸ்லிம்: 2289)

நெருக்கியடித்தலோ, சண்டையோ, சச்சரவோ, கூச்சலோ போடக்கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன். அங்கே அடிதடி இல்லை; விரட்டுதல் இல்லை; வழி விடு, வழி விடுஎன்பது போன்ற கூச்சல் இல்லை.

அறிவிப்பவர்: குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்கள்: நஸயீ 3011,(திர்மிதீ: 827), இப்னுமாஜா 3026.

இரவே மினாவுக்குச் சென்றவர்கள் சூரிய உதயத்திற்கு முன் கல்லெறியக் கூடாது. இதற்கான ஆதாரம் வருமாறு:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தின் பலவீனர்களை முன் கூட்டியே அனுப்பிய போது, ஜம்ரதுல் அகபாவில் சூரியன் உதயமாகும் முன் கல்லெறிய வேண்டாம்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(திர்மிதீ: 817).

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு பதனு முஹஸ்ஸர்என்ற இடத்தை அடைந்ததும் (ஒட்டகத்தைச்) சற்று விரைவு படுத்தினார்கள். ஜம்ரதுல் அகபாவை அடையும் வழியில் புறப்பட்டார்கள். மரத்திற்கு அருகில் உள்ள ஜம்ரதுல் அகபாவை அடைந்ததும் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறினார்கள். சுண்டி எறியும் சிறு கற்களையே எறிந்தார்கள். பதனுல் வாதிஎன்ற இடத்திலிருந்து எறிந்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்:(முஸ்லிம்: 2137)

முன்னரே புறப்பட்டுச் சென்றவர்களும் சூரியன் உதயமான பிறகே கல்லெறிய வேண்டும் என்றாலும் பெண்கள் மட்டும் மக்கள் கூடுவதற்கு முன்பே கல்லெறிந்து கொள்ளலாம்.

அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், மகனே! சந்திரன் மறைந்து விட்டதா? என்று கேட்டார்கள். நான் இல்லைஎன்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுது விட்டு மகனே சந்திரன் மறைந்து விட்டதா? என்றார்கள். நான் ஆம்என்றேன். அப்போது அவர்கள், புறப்படுங்கள்என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களேஎன்று கேட்டேன். அதற்கவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளனர்என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ்

(புகாரி: 1679)

தலை மழித்தல்

பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்ததும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எதையேனும் குர்பானி கொடுக்க வேண்டும். அதன் பிறகு தலை முடியை மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் இவ்வாறு செய்ததும் இஹ்ராமிலிருந்து ஓரளவு விடுபடுகிறார். இஹ்ராம் கட்டியதால் அவருக்கு விலக்கப்பட்டிருந்த நறுமணம், தைக்கப்பட்ட ஆடைகள் போன்றவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள இப்போது முதல் அவர் அனுமதிக்கப்படுவார்.
தலை மயிரைச் சிறிதளவு குறைத்துக் கொள்ளவும், முழுமையாக மழித்துக் கொள்ளவும் அனுமதி உண்டு; என்றாலும் முழுமையாக மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். பெண்கள் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாகஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்(மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாகஎன்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 1727)

பெண்கள் தலை மழித்தல்

தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 1694)

கல்லெறிந்த பின்

நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 1708)

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு, அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பும், பத்தாம் நாளில் கஃபாவை தவாஃப் செய்வதற்கு முன்பும் கஸ்தூரி கலந்த நறுமணத்தைப் பூசி விட்டேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்:(புகாரி: 1754, 5922)(முஸ்லிம்: 2040)

(பத்தாம் நாளில் குர்பானி கொடுப்பது சம்பந்தமான விவரங்களைத் தனியாக பிறகு விளக்குவோம்.)

பத்தாம் நாள் கிரியைகளை மேலே நாம் கூறிய வரிசைப்படி செய்வது நபிவழி என்றாலும் அந்த வரிசைக்கு மாற்றம் செய்வதில் தவறேதும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும் போது ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன்பே (தலையை) மழித்து விட்டேன்என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லைஎன்றார்கள். இன்னொருவர் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாஃப் செய்து விட்டேன்என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லைஎன்றார்கள். முன் பின்னாகச் செய்யப்பட்ட எதைக் குறித்து கேட்கப்பட்ட போதும் செய்து கொள்! தவறேதும் இல்லைஎன்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

(புகாரி: 124, 1738, 83, 1736, 6665)

மினாவில் பத்தாம் நாள் செய்ய வேண்டிய காரியங்களை முன் பின்னாகச் செய்வதில் தவறேதும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.