திருக்குர்ஆன் பார்வையில் மூஃமின்களின் பண்புகள்!
திருக்குர்ஆன் பார்வையில் மூஃமின்களின் பண்புகள்!
அல்லாஹ்வின் படைப்பில் இயங்கும் இவ்வுலகில் ஒவ்வொரு படைப்பும் தமக்குரிய பண்புகளோடு வாழ்கின்றன. படைப்புகளில் ஓர் உன்னத படைப்பாக வாழும் மனிதர்களும் தங்களுக்குரிய இயற்கை பண்புகளோடு வாழ்கின்றனர். இஸ்லாத்தை பொறுத்தவரை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு எல்லைக்குட்பட்டு வாழ்கின்றோம்.
அல்லாஹ்வையும் அவன் கொடுத்த வேதத்தையும் நம்பி மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே அதற்குரிய காரணமாகும். அந்த வெற்றியை தீர்மானிப்பது இறைநம்பிக்கையாளர்களின் பண்புகள் ஆகும். அந்த பண்புகள் நம்மிடம் உள்ளனவா? என்பதை திருக்குர்ஆனின் ஒளியில் உரசிப்பார்த்து அதனடிப்படையில் வாழ்ந்தால் மறுமையில் அல்லாஹ் நம்மை சொர்க்கத்து பூஞ்சோலைக்கு சொந்தக்காரர்களாக ஆக்குவன்.
மூஃமின்களின் பண்புகள்:-
மூஃமின்களுக்குரிய பண்புகள் என்று பல ஏராளமான பண்புகளை திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள்.
அதில் முதன்மையான பண்பு “இறையச்சமே” ஆகும்.
நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
அல்லாஹ்வையே சார்ந்திருப்பார்கள்:-
ஓர் இறைநம்பிக்கையாளர் துன்பம் ஏற்பட்டாலும் இன்பம் ஏற்பட்டாலும் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பார்கள் என்று இயம்புகிறது திருமறை.
நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
இப்படி அல்லாஹ்வையே சார்ந்திருக்கும் இந்த பண்பை குறித்து நபி (ஸல்) அவர்களும் சிறப்பித்து கூறுகின்றார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை.
அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.
அறிவிப்பாளர்: சுஹைப் (ரலி),
(முஸ்லிம்: 5726)
இவற்றை உணர்ந்தால் இறைநம்பிக்கையாளர் எந்த நிலையிலும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்பதை அறியலாம்.
தொழுகையை பேணுவர்:-
சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும். தொழுகைகளில் கவனமற்றிருப்பது மூஃமின்களின் பண்பாக இருக்காது. மூஃமின்களை பற்றி பேசும் எண்ணற்ற திருமறை வசனங்களில் தொழுகையை பேணுவது குறித்து இறைவன் வலியுறுத்துவதை நாம் பார்க்கலாம். எனவே முஃமூன்களாகிய நாம் நமது தொழுகைகளை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
அவர்கள் தமது தொழுகையைப் பேணுவார்கள்.
ஜகாத் கொடுப்பார்கள்:-
ஜகாத் கொடுப்பது முஃமின்களுக்குரிய கட்டாய கடமையாகும். தொழுகையை பேணி ஜகாத் கொடுப்பது முஃமின்களுக்குரிய முக்கிய பண்புகளில் ஒன்றாகும்.
அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்களே, உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
எவ்வித பேரமோ, நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலைநாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்குக் கூறுவீராக!
பொறுமையை கடைபிடிப்பார்கள்:-
இவ்வுலக வாழ்விலே ஏற்படும் இழப்புகளை நாம் பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதற்கு பகரமாக அல்லாஹ் வெற்றியை மூஃமின்களுக்கு வழங்குவதாக வாக்களிக்கின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
அமானிதத்தையும் உடன் படிக்கையையும் பேணுவது:-
நாம் வாழும் உலகில் நம்பிக்கை மோசடிகள் சர்வ சாதாரணமாக நிகழ்வதை காண்கின்றோம். உடன்பிறந்தவர்களைக்கூட இக்காலத்தில் முழுமையாக நம்புவது கிடையாது. பொய் சொல்வது, ஏமாற்றுவது , மோசடி செய்வது , வாக்குறுதி மீறுவது முஃமினகளின் பண்புகளாக இருக்க முடியது என திருமறை எடுத்தியம்புகிறது.
அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
தமது அமானிதங்களையும் உடன்படிக்கைகளையும் அவர்கள் பேணுவார்கள்.
அவர்கள் தமது அமானிதங்களையும், ஒப்பந்தத்தையும் பேணுவார்கள்.
நாம் இதில் கவனமாக இருக்கின்றோமா என எண்ணி பார்க்க கடமைபட்டிருக்கின்றோம்.
மார்க்கக் கல்வியை பயில்வார்கள்:-
இன்றைய ஆடம்பர உலகத்திலே மார்க்க கல்விக்கு முஸ்லிம்கிகளாகிய நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம் என்று சிந்தித்து பார்த்து இருக்கிறோமா? இன்னும் இஸ்லாத்தின் அடிப்படையே தெரியாமல் பின்னர் படித்துக் கொள்ளலாம் என நினைத்து நமது காலங்களை செலவழிக்கின்றோம். நமது நிலை இப்படி என்றால் நமது குழந்தைகளிடம் மார்க்கக் கல்வி அறவே இல்லாது போய்விடும். அதனால் தான் மார்க்கக் கல்விக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மூஃமின்களின் ஒரு பண்பாக குறிப்பிடுகின்றான்.
நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக் கொள்வார்கள்.
ஆகவே குறிப்பிட்ட அத்துனை பண்புகளையும் அல்குர்ஆன் மூஃமின்களின் பண்பாக சொல்கிறது. மேலும் மூஃமின்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றான்.
இறைநம்பிக்கையாளர்கள் வெற்றிபெறுவார்கள், இறை உதவி நிச்சயம் உண்டு, கூலி வீணாகாது:-
பின்னர் நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். நம்பிக்கை கொண்டோரை இவ்வாறு காப்பாற்றுவது நமது கடமை.
நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது.
அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நற்பேறு மற்றும் அருள் பற்றியும், நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றியும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இறைநம்பிக்கையாளர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள்:-
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.
இப்படி பல்வேறு வகைகளில் மூஃமின்களை பற்றி அல்லாஹ் சிலாகித்து சொல்கின்றான். எனவே நாமும் திருமறை சொல்லக்கூடிய மூஃமின்களின் பண்பை பெற்று இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் திருப்தியை அடைந்து வெற்றி பெறுவோமாக!