இனிய குர்ஆன் ஓதி இரவில் தொழுவோம்

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

இனிய குர்ஆன் ஓதி இரவில் தொழுவோம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 38)

புனிதமிகு ரமளான் வந்துவிட்டது. மேற்கண்ட ஹதீஸில் கூறப்படுவதைப் போன்று பூத்துக் குலுங்கும் நன்மைகளைப் பறிப்பதற்கு மக்கள் போர்க்கோலம் பூண்டு, போர்க்களம் புகுந்துவிட்டனர். அருள்மிகு ரமளான் என்றதும் திருமறைக் குர்ஆனின் ஒலி எங்கு பார்த்தாலும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும். இரவு நேரத் தொழுகைகளில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இந்த இரவுத் தொழுகையை ரமளான் மாதத்தில் ஜமாஅத்தாகத் தொழுத போது மக்கள் ஆர்வத்தில் வெள்ளமாகத் திரண்டனர். மஸ்ஜிதுந்நபவியே பொங்கி வழிந்தது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளியில் தொழுதார்கள். அப்போது சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறு நாள்) முந்திய நாளைவிட அதிக மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) கலையிலும் இது பற்றிப் பேசிக்கொண்டனர்.

அந்த மூன்றாம் நாள் இரவிலும் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். நான்காம் நாள் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்ததால் பள்ளி இடம் கொள்ளவில்லை.

(அன்று இரவு நபியவர்கள் பள்ளிக்கு வரவில்லை.) சுப்ஹுத் தொழுகைக்குத்தான் அவர்கள் வந்தார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறியபின் “அம்மா பஅத்‘ (இறைவாழ்த்துக்குப் பின்…) எனக் கூறிவிட்டு, நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் (இது) உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன் (ஆகவேதான் நேற்றிரவு நான் இரவுத் தொழுகைக்காக பள்ளிக்கு வரவில்லை)” என்று கூறினார்கள்.

(புகாரி: 924)

இது மக்களுக்குக் கடமையாகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்ச ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே இந்த இரவுத் தொழுகை நபி (ஸல்) அவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் ரமளான் மாதத்தில் மட்டுமல்லாமல் எல்லா மாதங்களும் கடமையாக்கப்பட்டிருந்தது.

73:1 يٰۤاَيُّهَا الْمُزَّمِّلُۙ‏ 73:2 قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًا ۙ‏ 73:3 نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًا ۙ‏ 73:4 اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا ؕ‏

போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் குறைவான நேரம் தவிர நின்று வணங்குவீராக! அதில் பாதியளவு அல்லது அதை விடச் சிறிதளவு குறைத்துக் கொள்வீராக! அல்லது அதை விட அதிகமாக்கிக் கொள்வீராக! குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக!

(அல்குர்ஆன்: 73:1-4)

பின்னர் தான் அது தளர்த்தப்பட்டு, இரவுத் தொழுகை என்பது உபரித் தொழுகையானது. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நான் “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீர் குர்ஆனை ஓதவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (ஓதியிருக்கிறேன்)‘ என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள். இதைச் செவியேற்ற நான் எழுந்துவிடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும்வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன்.

பின்னர் எனக்கு ஏதோ தோன்ற, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றிக் கூறுங்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “நீர் யா அய்யுஹல் முஸ்ஸம்மில்…” (எனத் தொடங்கும் 73ஆவது) அத்தியாயத்தை ஓதியதில்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (ஓதியிருக்கிறேன்)‘ என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களின் மூலம் இரவுத் தொழுகையைக் கடமையாக்கினான்.

எனவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஒரு வருட காலம் நின்று தொழுதனர். அந்த அத்தியாயத்தின் இறுதித் தொடரை அல்லாஹ் பன்னிரண்டு மாதங்கள் வானிலேயே நிறுத்தி வைத்துக்கொண்டான். பின்னர் அந்த அத்தியாயத்தின் இறுதித் தொடரில் அல்லாஹ் சலுகையை அறிவித்தான். எனவே, கடமையாக இருந்த இரவுத் தொழுகை பின்னர் கூடுதல் தொழுகையாக மாறிற்று” என்று கூறினார்கள்.

நான், “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ர் தொழுகை பற்றிக் கூறுங்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “நாங்கள் (இரவில் உறங்கச் செல்வதற்கு முன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக அவர்களது பல் துலக்கும் குச்சி, தண்ணீர் ஆகியவற்றைத் தயாராக எடுத்துவைப்போம். இரவில் அவர்களை அல்லாஹ் தான் நாடிய நேரத்தில் எழுப்புவான்.

அவர்கள் எழுந்து பல் துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் எட்டாவது ரக்அத்தி(ன் இறுதியி)ல்தான் அவர்கள் அமர்வார்கள். பின்னர் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு சலாம் கொடுக்காமல் எழுந்து ஒன்பதாவது ரக்அத் தொழுவார்கள்.

(ஒன்பதாவது ரக்அத்தில்) உட்கார்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு எங்களுக்குக் கேட்கும் விதத்தில் சலாம் கொடுப்பார்கள். சலாம் கொடுத்த பின் உட்கார்ந்தவாறே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அருமை மகனே! ஆக, இவை பதினோரு ரக்அத்கள் ஆகும்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் முதுமையடைந்து உடலில் சதை போட்ட நேரத்தில் ஒற்றைப்படையாக ஏழு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்களில் முன்பு செய்ததைப் போன்றே செய்வார்கள். அருமை மகனே! இவை ஒன்பது ரக்அத்கள் ஆகும்.

(பொதுவாக) நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் அதை நிரந்தரமாகக் கடைப்பிடிப்பதையே விரும்புவார்கள். இரவுத் தொழுகைக்கு எழ முடியாதபடி உறக்கமோ நோயோ மிகைத்துவிட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழு(து அதை ஈடு செய்)வார்கள். நபி (ஸல்) அவர்கள் முழுக் குர்ஆனையும் ஒரே இரவில் ஓதியதாகவோ, காலைவரை இரவு முழுக்கத் தொழுததாகவோ, ரமளான் அல்லாத மாதங்களில் ஒரு மாதம் முழுக்க நோன்பு நோற்றதாகவோ நான் அறியேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத்

(முஸ்லிம்: 1357, 1233)

இரவுத் தொழுகை கடமையாக இருந்து உபரியாக மாறிய வரலாறு இந்த ஹதீஸில் முழுமையாக தெளிவுபடுத்தப்படுகின்றது. இப்போது இந்த ஹதீஸின் பின்னணியில் 73வது அத்தியாயத்தின் பிற்பகுதியைப் பார்ப்போம்.

73:20 اِنَّ رَبَّكَ يَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰى مِنْ ثُلُثَىِ الَّيْلِ وَ نِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآٮِٕفَةٌ مِّنَ الَّذِيْنَ مَعَكَ‌ؕ وَاللّٰهُ يُقَدِّرُ الَّيْلَ وَالنَّهَارَ‌ؕ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَيْكُمْ‌ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِ‌ؕ عَلِمَ اَنْ سَيَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰى‌ۙ وَاٰخَرُوْنَ يَضْرِبُوْنَ فِى الْاَرْضِ يَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ‌ۙ وَاٰخَرُوْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ۖ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنْهُ‌ ۙ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا‌ ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرًا وَّاَعْظَمَ اَجْرًا‌ ؕ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ

“(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்” என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்.

உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 73:20)

நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது தோழர்களுக்கும் இரவுத் தொழுகை கடமையாக இருந்து, பின்னர் உபரியாக மாறியதையும், அதுபோல் அந்தத் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை அதிகம் ஓதியதையும் மேற்கண்ட வசனம் விவரிக்கின்றது. நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் இந்த இரவுத் தொழுகையை ரமளானில் மட்டுமன்றி எல்லா மாதங்களிலும் கடைப்பிடித்து வந்தனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு இரவுத் தொழுகை உபரியாக ஆக்கப்பட்ட பின்னரும் இரவில் பெரிய அளவில் சூராக்களை ஓதித் தொழுததை நாம் பார்க்க முடிகின்றது.

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அதில் அவர்கள் “அல்பகரா‘ எனும் (இரண்டாவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். நான் “அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்‘ என்று எண்ணினேன். ஆனால், அவர்கள் (நூறு வசனம் முடிந்த பின்னும்) தொடர்ந்து ஓதினார்கள். நான் “அ(ந்த அத்தியாயத்)தை (இரண்டாகப் பிரித்து ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்துவிடுவார்கள்‘ என்று எண்ணினேன். ஆனால் (அதை முதல் ரக்அத்திலேயே) தொடர்ந்து ஓதினார்கள். நான் “அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்‘ என்று எண்ணினேன்.

அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) “அந்நிசா‘ எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து ஓதினார்கள்; பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச்செல்லும்போது (ஒதுவதை நிறுத்திவிட்டு), (சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் தூயவன் என) இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக்கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு), (இறையருளை) வேண்டினார்கள். (இறை தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு, இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள்….

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

(முஸ்லிம்: 1421, 1291)

நம்மில் அதிகமானோர் நபி (ஸல்) அவர்களின் இந்த சுன்னத்தைக் கடைப்பிடிப்பதில்லை. பலருக்கு சுப்ஹ் தொழுகையே ஆட்டம் காண்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். ஆகவே, நானும் ஒரு கனவு கண்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் (மணமாகாத) இளைஞனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களது காலத்தில் நான் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாக இருந்தேன். (ஒருநாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்:

இரு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் இருப்பது போன்று அந்த நரகத்திற்கும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த நரகத்திற்கு இரு தூண்களும் இருந்தன. அந்த நரகத்தில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் இருந்தனர். உடனே நான் “நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்” என்று பிராத்திக்கலானேன். அப்போது எங்களை மற்றொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம் “இனி ஒருபோதும் நீர் பீதியடைய மாட்டீர்” என்று கூறினார்.

இதை நான் (என் சகோதரியும் நபியவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அப்துல்லாஹ் (பின் உமர்) அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால் (நன்றாயிருக்கும்)” என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

(புகாரி: 1122)

இந்த ஹதீஸ் இரவுத் தொழுகையின் சிறப்பை விவரிக்கின்றது. குறிப்பாக, ரமளான் மாதத்தில் இரவுத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்துகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 37)

அதிலும் லைலத்துல் கத்ரில் நின்று தொழுவதற்குரிய சிறப்பை திருக்குர்ஆனே குறிப்பிடுகின்றது. திருக்குர்ஆன் 97வது அத்தியாயம் இதை சிறப்பித்துக் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்களும் லைலத்துல் கத்ரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் “லைலத்துல் கத்ர்‘ இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது முன் பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 1901)

லைலத்துல் கத்ரு 27ல் மட்டும் இருக்கின்றது என்று நம்பி ஒரு பெருங்கூட்டம் அந்த இரவில் மட்டும் நின்று தொழுதுவிட்டுப் போய்விடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூசயீத் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “ஆம்! நாங்கள் ரமளானின் நடுப்பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் வெளியேறினோம். இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், “எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது; அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதைக் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான் சஜ்தாச் செய்வது போன்று கனவு கண்டேன்.

யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் பள்ளிக்குத் திரும்பட்டும்” எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிக்குத் திரும்பினார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் சஜ்தாச் செய்தார்கள். அவர்களது நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை நான் கண்டேன்‘ என்று விடையளித்தார்.

அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான்

(புகாரி: 2036)

பிந்திய பத்து இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடச் சொல்கிறார்கள். எனவே இந்த ரமளான் மாதத்தில், பாவமன்னிப்பைப் பெற்றுத் தருகின்ற நோன்பு, இனிய குர்ஆனை அதிகம் ஓதும் வாய்ப்பைத் தருகின்ற இரவுத் தொழுகை, லைலத்துல் கத்ரை அடையும் வகையில் இஃதிகாஃப் ஆகிய வணக்கங்களைப் புரிவோமாக! தொழுகையில் மட்டுமல்லாமல் எல்லா நேரங்களிலும் குர்ஆனை அதிகமதிகம் ஓதுவோம். ரமளான் மாதத்தின் தாக்கத்தை ரமளானுக்குப் பிறகும் தொடர்வோமாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.