உத்தம நபி உயிருடன் உள்ளார்களா?
உத்தம நபி உயிருடன் உள்ளார்களா?
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
சமீபத்தில் மனாருல் ஹுதா எனும் மாத இதழ், “வரலாற்று ஆய்வில் புனித ரவ்ளா’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது.
அதில் இஸ்லாத்திற்கு முரணான, பரேலவிசக் கருத்துக்களை பக்கம் பக்கமாக நிரப்பியிருந்தனர்.
“கஅபாவை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப் பட்ட ரவ்ளா சிறந்தது’ என்ற அடிப்படையற்ற வாதத்தையும் அதற்கு ஆதாரமாக சில தவறான செய்திகளையும் அதில் அவர்கள் முன் வைத்திருந்தனர்.
அவர்களது அபத்தமான இக்கருத்திற்கு, தக்க மறுப்பை முந்தைய ஏகத்துவம் இதழில் அளித்திருந்தோம்.
நபிகள் நாயகம் மரணிக்கவில்லை, இன்னும் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற வழிகெட்ட கருத்தையும் மனாருல் ஹுதா அக்கட்டுரையில் தெரிவித்திருந்தது.
இதற்கு ஆதாரம் என்ற பெயரில் சில வாதங்களையும் வைத்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் மரணித்து விட்டார்கள் என்பதற்குரிய மார்க்கச் சான்றுகளை முந்தைய ஏகத்துவம் இதழில் விளக்கி விட்டோம்.
இனி அவர்கள் ஆதாரம் என்ற பெயரில் எடுத்து வைக்கும் செய்திகளுக்கு உரிய விளக்கத்தை விரிவாகக் காண்போம்.
நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்கிறார்கள் எனும் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக கஃபுல் அஹ்பாரின் பின்வரும் செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.
ஒருமுறை கஃபுல் அஹ்பார், ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நினைவு கூர்ந்தார்கள். அப்போது கஃபுல் அஹ்பார் அவர்கள், “சூரியன் உதிக்கின்ற எந்தவொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் வானிலிருந்து இறங்காமல் இருப் பதில்லை. அவ்வானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை தங்கள் இறக்கைகளை அடித்தவாறு சூழ்ந்து கொண்டு நபிகள் நாயகத்திற்காக ஸலவாத் ஓதி அருள் வேண்டுகிறார்கள். மாலையானதும் அவர்கள் மேலேறி விடுகிறார்கள். அவர்களைப் போன்றே மற்றொரு வானவர் கூட்டம் (மாலையில்) இறங்குகின்றனர். அவர்களும் அவர்களை போன்றே பிரார்த்தனை செய்கின்றனர்.
இறுதியில் பூமி அவர்களை விட்டும் பிளந்து விடும். எழுபதாயிரம் வானவர்கள் நபி (ஸல்) அவர்களை சூழ்ந்து இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் வெளிப்படுவார்கள்.
இந்த செய்தி தாரமியில் (ஹதீஸ் எண்: 95) பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபியவர்கள் இறக்கவில்லை என்ற தங்களின் கொள்கை நிலைப்பாட்டிற்கு இத்தகைய செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள் எனில் மனாருல் ஹுதா வகையறாக்களின் தரம் என்ன என்பதை எளிதாக விளங்க முடிகிறது.
ஏனெனில் இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும். பல காரணங்களால் இந்தச் செய்தி பலவீனமடைகிறது.
முதலாவது, இந்தச் செய்தி கஃபுல் அஹ்பாரின் சொந்தக் கருத்தாகவே சொல்லப்பட்டுள்ளது. இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கான எந்த வாசகமும் இந்தச் செய்தியில் இல்லை.
மேலும் கஃபுல் அஹ்பார் என்பார் நபித்தோழரல்ல.
ஒரு நபித்தோழர் நபிகள் நாயகத்திடமிருந்து அறிவிக்காமல் தனது சொந்தச் கருத்தை அறிவித்தால் அதையே ஆதாரமாகக் கொள்ள இயலாது. அப்படியிருக்கும் போது நபித்தோழரல்லாத, தாபியியான கஃபுல் அஹ்பார் கூறுவதை வைத்துக் கொண்டு இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதை எப்படி உறுதிப்படுத்த இயலும். ஒரு போதும் உறுதிப்படுத்த இயலாது. இதை எப்படி மார்க்க ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியும்?
மேலும், தான் யாரிடமிருந்து கேட்டார் என்பதையும் அவர் தெளிவு படுத்தவில்லை.
எனவே நபிகள் நாயகத்தின் கருத்தாக இல்லாமல் கஃபுல் அஹ்பார் எனும் தாபியின் சொந்தக் கருத்தாக இருப்பது இச்செய்தியின் முதல் குறையாகும்.
இரண்டாவது, இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இவரைப் பல அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.
இவரைப் பற்றி இமாம் ஹிப்பான் கூறுகிறார்:
இவருடைய ஹதீஸ்கள் முற்றிலும் நிராகரிக்கத்தக்கதாகும். நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அவர் களுடைய ஹதீஸில் இல்லாதவற்றை அறிவிப்பார். இவர் தன்னளவில் நல்லவராக இருந்தாலும் இவருடைய அண்டை வீட்டுக்காரர் மூலமாக இவருடைய செய்திகளில் மறுக்கத் தக்கவை புகுந்துவிட்டது. ஷைஹ் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பார் மீது அவர் அண்டை வீட்டுக்காரர் ஹதீஸை இட்டுக்கட்டி அவருடைய எழுத்தைப் போன்றே எழுதி அவருடைய வீட்டிலே அவருடைய புத்தகங்களுக்கு மத்தியில் நுழைத்து விடுவார். அப்துல்லாஹ் அதை தன்னுடைய எழுத்து என்று எண்ணி அறிவித்து விடுவார்.
இப்னு அதீ கூறுகிறார்: இவர் என்னிடத்தில் ஹதீஸ்களில் உறுதி யானவர் என்றாலும் இவருடைய ஹதீஸில் அறிவிப்பாளர் தொடர் களிலும், கருத்திலும் குழப்பங்கள் நிகழ்ந்து விட்டது. இவர் திட்டமிட்டு பொய்யுரைக்க மாட்டார்.
ஸாலிஹ் இப்னு முஹம்மத் கூறுகிறார்: இப்னு மயீன் இவரை நம்பகமானவர் என்று உறுதிப் படுத்தியுள்ளார். ஆனால் நான் இவரை ஹதீஸ்களில் பொய்யுரைப் பவர் என்றே கருதுகிறேன்.
இப்னுல் மதீனி கூறுகிறார்: இவருடைய ஹதீஸை நான் எழுதினேன். ஆனால் அவரிட மிருந்து எதையும் நான் அறிவிக்க மாட்டேன்.
அஹ்மத் இப்னு ஸாலிஹ் கூறுகிறார்: இவர் தவறிழைக்கக் கூடியவர். ஒரு பொருட்டாகக் கொள்ளத்தக்கவரில்லை.
இவர் உறுதியானவர் இல்லை என்று இமாம் நஸாயீ விமர்சித்துள்ளார்கள்.
இவர் ஹதீஸ்களில் பலவீன மானவர் என்று இமாம் ஹாகிம் கூறுகிறார்.
பார்க்க: அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன் 2:127➚,
எனவே இது இச்செய்தியின் பலவீனத்தை அதிகரிக்கும் இரண்டாவது காரணமாகும்.
இந்தச் செய்தியினை கஃபுல் அஹ்பார் என்பாரிடமிருந்து நுபைஹ் பின் வஹ்ப் என்பார் அறிவிப்பதாக உள்ளது. ஆனால் நுபைஹ் என்பவர் கஃபுல் அஹ்பாரை அடையவில்லை என்ற குற்றச்சாட்டையும் சில அறிஞர்கள் முன் வைத்துள்ளனர். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவது குறையாகும்.
எப்படிப் பார்த்தாலும் இது ஆதாரமாகக் கொள்ள ஏற்புடைய செய்தி அல்ல என்பது தெளிவு.
மேலும் இந்தச் செய்தியின் கருத்தை நன்கு கவனித்துப் பாருங்கள்.
நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளதா? அவ்வாறு சொல்லப்படவில்லை.
மறுமை நிகழ்வு ஏற்படும் போது நபிகள் நாயகம் எழுப்பப்பட்டு வெளிவருவார்கள் என்றுதான் உள்ளது. அப்படியென்றால் நபிகள் நாயகம் தற்போது உயிருடன் இல்லை என்ற கருத்து தான் வருமே தவிர மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற கருத்து இதில் வராது.
மறுமையில் பூமி பிளந்து நபிகள் நாயகம் வெளிவருவார்கள் எனும் வாசகத்திலிருந்து அவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்று புரிந்து கொண்டால் உலகில் இறந்துவிட்ட ஏனைய மனிதர்களும் அவ்வாறே உயிருடன் உள்ளார்கள் என்று புரிய முடியும்.
ஏனெனில் பொதுவாக மனிதர்களைப் பற்றி இறைவன் கூறும் போதும் இதே வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளான்.
அவர்களை விட்டு பூமி பிளந்து அவர்கள் விரைவார்கள். அதுதான் ஒன்று திரட்டப்படும் நாள். இது நமக்கு எளிதானது.
ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள். எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?” என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)
இந்த வசனங்களில் பூமி பிளந்து சமாதிகளிலிருந்து மனிதர்கள் வெளிப்படுவார்கள் என்று சொல்லப் பட்டுள்ளது. இதன் காரணத்தினால் இவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்றாகி விடுமா?
எனவே மறுமையில் கப்ரிலிருந்து வெளிவருவார்கள் என்பதை வைத்துக் கொண்டு நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று வாதம் வைப்பது மடமைத்தனமான வாதமாகும்.
ஒரு வாதத்திற்கு இவர்கள் கூறும் கருத்து இந்தச் செய்தியில் நேரடியாகக் கூறப்பட்டிருந்தால் கூட பலவீனமான செய்தியாக இருப்பதால் இது ஆதாரமாகாது. அவ்வாறிருக்க இந்தச் செய்தி எப்படி ஆதாரமாகும்?
அறிவுக்கும் தங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை இந்த நவீன பரேலவிகள் இதன் மூலம் தெளிவுபடுத்தி விட்டனர்.
இந்த அறிவிலிகள் எதை ஆதாரமாகக் குறிப்பிடுவது என்ற அடிப்படை அறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
காரணம், நபிமார்களின் உடல்களை மண் தின்றுவிடாது என்பதைத் தங்கள் கருத்துக்கு அதாவது நபிகள் நாயகம் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தங்கள் அபத்தக் கருத்திற்கு ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபிமார்களின் உடல்களை பூமி தின்று விடாது என்பது உண்மையே. நபியவர்கள் இதை விளக்கியுள்ளார்கள்.
உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் இறந்தார்கள். அந்நாளில் தான் ஸூர் ஊதப்படும். அந்நாளில் தான் மயக்கமுறுதலும் நடைபெறும். எனவே அந்நாளில் அதிகம் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிப் போன பிறகு உங்களிடம் எப்படி எங்கள் ஸலவாத் எடுத்துக் காட்டப்படும்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நபிமார்களின் உடலை பூமி திண்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ்,(நஸாயீ: 1357) ➚
நபிமார்களின் உடல்களை பூமி தின்றுவிடாது என்பதால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று பொருளாகாது.
நபிமார்களின் உடல்களை பூமி தின்றுவிடாத வகையில் அல்லாஹ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளான் என்பதைத் தான் இதிலிருந்து விளங்க முடிகிறதே தவிர நபிமார்கள் உயிருடன் உள்ளார்கள் என ஒரு போதும் விளங்க முடியாது. அறிவுடையோர் அவ்வாறு விளங்க மாட்டார்கள்.
மக்களின் நம்பிக்கை பிரகாரம் பிர்அவ்ன் உடல் பாதுகாக்கப் பட்டுள்ளது என்பதால் பிர்அவ்ன் உயிருடன் வாழ்ந்து வருகிறான் என்று பொருளாகுமா?
இரசாயனக் கலவைகள் மூலம் இன்றைக்குப் பல உடல்கள் அழியாத படி பாதுகாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் அனைவரும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றா அர்த்தம்?
அரசின் சார்பில் எத்தனையோ உடல்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்றாகி விடுமா?
அப்படி ஒரு வாதம் வைத்தால் அது மூளையுள்ளவர்களின் கருத்தாக இருக்க முடியுமா?
ஓர் உடல் அழியாத வகையில் பாதுகாக்கப்படுகிறது என்றால் உடல் (ஜடம்) பாதுகாக்கப்படுகிறது என்று தான் ஆகுமே தவிர உயிருடன் அவர் வாழ்கிறார் என்று ஒரு போதும் ஆகாது.
எனவே இவர்களின் இந்த வாதமும் சரியானதாக இல்லை.
ஒருவர் உயிருடன் இருந்தால் அவரை மண் சாப்பிடுவதில்லை. அவர் உயிருடன் இருப்பதே அவரை மண் சாப்பிடுவதில் இருந்து தடுத்து விடும். உலகில் 700 கோடி மக்கள் வாழ்கிறோம். இவர்களில் யாரையாவது மண் தின்றுள்ளதா? உயிருடன் இருப்பவனை மண் சாப்பிடாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் இந்தக் கேள்வியே எழாது. ஏனென்றால் உயிருடன் இருப்பவரை மண் சாப்பிடாதல்லவா?
அவர்கள் உயிருடன் இல்லை என்பதால் தான் அவர்களின் உடலை மண் சாப்பிடுமா என்ற கேள்வியே பிறக்கிறது. இதற்கு, “நபிமார்கள் இறந்து விட்டாலும் அவர்களது உடலை மண் சாப்பிடாது” என்ற கருத்தில் நபிகள் நாயகம் பதிலளிக்கிறார்கள். எனவே இது நபிமார்கள் உயிருடன் இல்லை என்பதற்குத்தான் ஆதாரமாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் முன்னிலையில் குரலை உயர்த்திப் பேசக் கூடாது என்பதையும் அவர்கள் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.
இப்போது நபி அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு முன்பு நின்று கொண்டு குரலை உயர்த்திப் பேசக் கூடாது என்கிறார்கள். ஏனெனில் நபி உயிருடன் உள்ளார்களாம்.
இவர்களுக்கு எந்த அளவு மூளை வறண்டு போய் விட்டது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
குரலை உயர்த்தக் கூடாது எனும் விதியை, நபிகள் நாயகத்தை மதிக்கும் வகையில் அவர்கள் வாழும் காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங் காகவே இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.
இந்த வசனத்தை நன்கு கூர்ந்து படியுங்கள். இது நபிகள் நாயகம் நம்மிடையே வாழும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக் கத்தையே கற்றுத் தருகிறது.
“நபியின் குரலை விட உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்’ என்று கூற வேண்டும் என்றால் நபி நம்மிடையே வாழ்ந்து, அவர்களது குரலை நாம் செவிமடுக்கும் வகையில் நம்மிடம் பேச வேண்டும். அப்போது தான் அவர்களது குரலை விட சப்தத்தை உயர்த்தாதீர்கள் என்று சொல்ல முடியும்.
இதற்கு அடுத்து வரக்கூடிய வசனங்கள் யாவும் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றது.
அல்லாஹ்வின் தூதரிடம் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள் வோரின் உள்ளங்களை (இறை) அச்சத்துக்காக அல்லாஹ் பரிசுத்தப் படுத்தி விட்டான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் இருக்கிறது.
(முஹம்மதே!) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை அழைப்பவர்களில் அதிகமானோர் விளங்காதவர்கள்.
இதன் தொடர்ச்சியில் 7ம் வசனத்தில் “உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அப்படி என்றால் அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே இருந்து, அவர்களது குரலை நாம் செவிமடுக்கும் வகையில் இருக்கும் போது நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தான் இது பேசுகிறது.
நபியின் குரலுக்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள் எனும் இறைவார்த்தை இக்கருத்தை தெளிவாகப் பறைசாற்றுகின்றது.
இன்றைக்கு நபிகள் நாயகம் நம்முடன் இல்லை. அவர்களது குரலை நம்மால் செவிமடுக்க இயலாது. எனவே இச்சட்டம் இப்போது பொருந்தாது.
நபியின் குரலுக்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள் என்றால் இது எப்படி நபிகள் நாயகம் உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும்?
இவர்களுக்கு சிந்திக்கும் திறன் கொஞ்சமேனும் இருந்திருந்தால் இப்படி ஒரு வாதத்தை வைத்திருப்பார்களா?
அது சரி! சமாதி வழிபாட்டை ஆதரிப்பவர்களிடம் எப்படி சிந்தனைத் திறனை எதிர்பார்க்க முடியும்?
நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டும் அடுத்த ஆதாரம், நபிகள் நாயகத்தின் மனைவிமார்களை நாம் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதைக் குறிப்பிடுகிறார்கள்.
உயிருடன் உள்ளபோது அவர்களின் மனைவிமார்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றால் அது சரி. நபிகள் நாயகம் இறந்ததற்குப் பிறகும் அவர்களது மனைவியர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றால் என்ன பொருள்? நபிகள் நாயகம் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று தானே அர்த்தம்.
இவ்வாறு இந்த நவீன பரேலவிகள் பிதற்றுகிறார்கள்.
நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ் பல்வேறு தனிச்சிறப்புகளை வழங்கி யிருக்கிறான். அவர்களது உடலை மண் தின்றுவிடாது என்பதைப் போன்று அவர்களது இறப்பிற்குப் பிறகு அவர்களது மனைவியரை மணக்கக் கூடாது என்பதையும் அல்லாஹ் ஒரு சிறப்புச் சட்டமாக ஆக்கி வைத்துள்ளான்.
நபியின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் மனைவியர்களை மணக்கக் கூடாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
இதிலிருந்து நபிகள் நாயகம் உயிருடன் இல்லை என்பது தான் தெளிவே தவிர அவர்கள் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது.
நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப் பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக் காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண் டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.
அவருக்குப் பின் அவரது மனைவியரை மணக்கக் கூடாது என்றால் அதன் பொருள் என்ன?
நபிகள் நாயகம் இறந்து விடுவார்கள். அவரது இறப்பிற்குப் பிறகு யாரும் அவர்களது மனைவியர்களை மணக்க கூடாது என்பது தானே இதன் பொருள்.
நபிகள் நாயகம் இறந்து விட்டார்கள். உயிருடன் இல்லை என்பதை எந்த வசனம் தெளிவாகப் பறை சாற்றுகின்றதோ அதையே நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு இவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள் எனில் இவர்கள் எந்த அளவுக்கு மூடர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
மேலும் இறைமறை வசனம் நபிகள் நாயகம் மரணிப்பவரே என்பதை தெளிவாக எடுத்துரைத்து விட்டது.
(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.
(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா? ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்கள் காலத்திலேயே மரணத்தைத் தழுவி “பர்ஸக்’ எனும் திரை மறைவு வாழ்க்கைக்குச் சென்று விட்டார்கள்.
(நபியவர்கள் மரணித்த போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் “அல்லாஹ் (என்றும்) உயிராய் இருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். மேலும், “(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே‘ என்னும் (39:30➚) இறை வசனத்தையும், “முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்‘ என்னும் (3:144➚) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.
நபிகள் நாயகம் மரணித்து விட்டார்கள் – உயிருடன் இல்லை என்பதை சஹாபாக்கள் உறுதியாக அறிந்து கொண்ட காரணத்தினால் தான் அபூபக்கர் (ரலி) அவர்களை ஆட்சியாளராக ஒருமித்து ஏற்றுக் கொண்டார்கள்.
பர்ஸக் வாழ்க்கைக்கு சென்று விட்ட நபிகள் நாயகத்தை உலகத்தில் உள்ளதைப் போன்று இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது குர்ஆனுக்கு எதிரான கருத்தாகும். பகிரங்க வழிகேடாகும்.
சென்ற இதழின் தொடர்ச்சி…
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
சமீபத்தில் மனாருல் ஹுதா எனும் மாத இதழ், “நபிகள் நாயகம் மரணிக்கவில்லை, இன்னும் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து கொண்டி ருக்கின்றார்கள்’ என்ற வழிகெட்ட கருத்தை வெளியிட்டிருந்தது.
இதற்கு ஆதாரம் என்ற பெயரில் அவர்கள் எடுத்து வைத்த சில வாதங்களுக்கான விளக்கங்களைப் பார்த்து வருகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரில் உயிருடன் உள்ளார்கள். நாம் சொல்வதை எல்லாம் நேரடியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று சிலர் நம்புகிறார்கள்.
இதற்கு ஆதாரமாக, நபிமார்கள் அனைவர்களும் உயிருடன் உள்ளார்கள், கப்ரில் தொழுது கொண்டிருக்கிறார்கள் எனும் ஹதீஸை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.
இந்த ஹதீஸ்களின் உண்மைத்தரம் என்ன? அவை என்ன கருத்தைத் தெரிவிக்கின்றன? என்பதைப் பார்ப்போம்.
இமாம் பைஹகீ அவர்கள் தமது ஹயாதுல் அன்பியா எனும் நூலில் இது தொடர்பாக சில ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளார்கள்.
செய்தி: 1
அனஸ் (ரலி) அறிவிப்பதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபிமார்கள் நாற்பது நாட்களுக்கு மேல் தங்கள் கப்ருகளில் விட்டு வைக்கப்பட மாட்டார்கள். எனினும் அல்லாஹ்வின் முன் சூர் ஊதப்படும் வரை தொழுவார்கள்.
ஹயாதுல் அன்பியா, ஹதீஸ் எண்: 4
இந்தச் செய்தி முழுக்க முழுக்க பலவீனமான செய்தியாகும்.
இந்தச் செய்தியில் அஹ்மத் பின் அலி அல்ஹசனவிய்யு என்பவர் இடம் பெறுகிறார்.
இவரை அறிஞர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இவர் பெரும் கூட்டத்திடமிருந்து அறிவிக்கின்றார். ஆனால் அல்லாஹ்வை சாட்சியாக்கி சொல்கிறேன். இவர் அவர்களிடம் செவியேற்றதில்லை என்று ஹாகிம் விமர்சித்துள்ளார்.
மீஸானுல் இஃதிதால் 1/121
மொத்தத்தில் இவரது ஹதீஸ் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டாது என்றும் ஹாகிம் விமர்சித்துள்ளார்.
லிஸானுல் மீஸான் 1/541
இமாம் முஹம்மத் பின் யூசுஃப் இவரைப் பொய்யர் என்று சாடியுள்ளார்.
ஸியரு அஃலாமிந் நுபலாஃ, 30/49
இது இந்த ஹதீஸில் உள்ள ஒரு குறையாகும்.
அடுத்து, இதன் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா என்பவரும் அறிஞர்களால் கடுமை யாகக் குறை கூறப்பட்டவர் ஆவார்.
இவரை விட நினைவாற்றலில் மோசமானவரை நான் பார்த்ததில்லை என இமாம் ஷுஃபா விமர்சித்துள்ளார்.
அல்ஜரஹ் வத்தஃதீல் 1 152
கைஸ் பின் ரபீஃ எனும் பலவீனமான நபரைப் பற்றி இமாம் அபூஹாதம் விமர்சிக்கும் போது, முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலாவை விட கைஸ் தான் எனக்கு விருப்பத்திற்குரியவர்; ஆனால் இருவரது ஹதீஸ்களும் ஆதாரம் கொள்ளப்படாது என்கிறார்.
அல்ஜரஹ் வத்தஃதீல், 7/98
இமாம் அஹ்மத், இவர் நினைவாற்றல் மோசமானவர் என்று குறை கூறியுள்ளார்.
அல்ஜரஹ் வத்தஃதீல் 7/322
இன்னும் பல அறிஞர்களும் இவரை விமர்சித்துள்ளார்கள்.
எனவே இது இச்செய்தியின் பலவீனத்தை மேலும் அதிகரிக்கிறது.
அதுமட்டுமின்றி இதில் இஸ்மாயீல் பின் தல்ஹா, மற்றும் முஹம்மத் பின் அப்பாஸ் ஆகிய இரு அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை அறிஞர்களால் உறுதி செய்யப் படவில்லை.
எனவே இது முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.
செய்தி: 2
ஹீலூளீனீ ளீகூரீஞூறீலூளீமீ கூகூறீலூடூளுலூ 458 – (1
அனஸ் (ரலி) அறிவிப்பதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபிமார்கள் தங்கள் கப்ருகளில் உயிரோடும், தொழுது கொண்டும் இருக்கிறார்கள்.
ஹயாதுல் அன்பியா ஹதீஸ் எண்: 1
இந்தச் செய்தி இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவை முஸ்னது பஸ்ஸார் 6888, முஸ்னது அபீயஃலா 3425, அல்ஃபவாயித் 58, அக்பாரு உஸ்பஹான் பாகம் 6, பக்கம் 316 ஆகிய நூல்களாகும்.
ஹஸன் பின் குதைபாவின் அறிவிப்பு
பஸ்ஸார், அல்ஃபவாயித் மற்றும் ஹயாதுல் அன்பியா ஆகிய நூல்களின் அறிவிப்பில் ஹஸன் பின் குதைபா என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
அல்அஸதீ எனும் அறிஞர் இவரை ஹதீஸ் துறையில் மோசமானவர் என்றும், அலி பின் உமர் என்பவர் இவர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்படுபவர் என்றும் குறை கூறியுள்ளார்கள்.
தாரீகு பக்தாத் 7/404
இவர் பிரச்சனைக்குரியவராக இல்லை என நான் கருதுகிறேன் என்று இப்னு அதீ அவர்கள் கூறிய கூற்றை எடுத்துக் கூறி, “அவ்வாறில்லை; இவர் (அழிந்து போகக் கூடியவர்) அபாயகரமானவர்’ என்று தஹபீ விமர்சித்துள்ளார்.
அபூஹாதம் இவரை பலவீன மானவர் என்று விமர்சித்துள்ளார்.
இவரிடம் அதிகமான சந்தேகங்கள் உள்ளன என்று உகைலீ குறை கூறியுள்ளார்.
பார்க்க: மீஸானுல் இஃதிததால்,
பாகம் 1, பக்கம் 519
எனவே ஹஸன் பின் குதைபாவை ஆதாரம் கொள்ள இயலாது என்பதால் இவர் இடம் பெற்றுள்ள மேற்கண்ட அறிவிப்புகள் பலவீனமானவையாகும்.
அக்பாரு உஸ்பஹானில் பதிவான அறிவிப்பில் அப்துல்லாஹ் பின் இப்றாஹீம் பின் ஸபாஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் அறியப்படாத நபர் ஆவார். இவரது நம்பகத்தன்மை அறிஞர்களிடம் நிரூபிக்கப்படவில்லை.
(குறைகள் உள்ள பல செய்திகளை ஒன்றிணைத்து அதன் அடிப்படையில்) ஹதீஸைச் சரி காணும் இமாம் அல்பானீ அவர்களும் கூட இவரது நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார்.
அப்துல்லாஹ் பின் இப்றாஹீம் பின் ஸபாஹ் பற்றி எந்த குறை நிறையையும் இமாம் அபூநுஐம் தனது நூலில் குறிப்பிடவில்லை.
ஸில்ஸிலது ஸஹீஹா 2/120
மேலும் இச்செய்தியில் அலீ பின் மஹ்மூத் பின் மாலிக் இடம் பெறுகிறார். இவரின் நம்பகத் தன்மையையும் எந்த அறிஞரும் உறுதி செய்ததாக நாம் காணவில்லை.
எனவே நம்பகத்தன்மை அறியப் படாத அறிவிப்பாளரின் அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பு பலவீனமாகி விடும்.
இறுதியாக மீதமுள்ளது முஸ்னது அபீயஃலாவின் அறிவிப்பாகும். இதில் அபுல்ஜஹ்ம் அல்அஸ்ரக் பின் அலீ என்பவர் இடம் பெற்றுள்ளார்.
இவரை இப்னு ஹிப்பானை தவிரத் வேறு யாரும் நம்பகமானவர் என்று சான்றளிக்கவில்லை. இப்னு ஹிப்பானைப் பொறுத்தவரை யாரென்று அறியப்படாத நபரையும் நம்பகமானவர் என்று சான்றளித்து விடுவதால் அவர் மட்டும் தனித்து அளிக்கும் சான்றிதழ் ஏற்கப்படாது. இது ஹதீஸ்கலையில் அறியப்பட்ட விஷயமாகும்.
இப்னு ஹஜர் அவர்கள் இவரை உண்மையாளர். புதிய செய்திகளை அறிவிப்பர் என்று கூறுகிறார்.
இது அவரது நம்பகத் தன்மைக்கான சான்றாக ஆகாது.
எனவே அபீயஃலாவின் அறிவிப்பும் பலவீனமேயாகும்.
இமாம் அல்பானீ அவர்கள் இந்த மூன்றையும் இணைத்து ஒன்று இன்னொன்றுக்கு வலுசேர்க்கின்றது என்ற அடிப்படையில் தான் இந்த செய்தியைச் சரியானது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு பலவீனமான செய்தி இன்னொரு பலவீனமான செய்திக்கு வலு சேர்க்காது. இவ்வாறு எல்லா பலவீனமான ஹதீஸ்களிலும் முடிவு செய்தால் பல ஆபத்தான, தவறான கொள்கை முடிவுகளை எடுக்க நேரிடும்.
எனவே நபிமார்கள் உயிருடனும், கப்ரில் தொழுது கொண்டும் இருக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ள செய்தி பலவீனமானதாகும்.
நபிமார்கள் உயிருடன் இருக் கிறார்கள் என்பதற்கு மிஃராஜில் நபிகள் நாயகம் இறைத்தூதர்கள் பலரையும் பார்த்த நிகழ்வையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப் பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), (முஸ்லிம்: 4736) ➚
இது நபிகள் நாயகம் மிஃராஜ் என்ற விண்ணுலகப் பயணம் செய்த போது நடந்த நிகழ்வாகும்.
அந்தப் பயணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல இறைத்தூதர்களையும் பார்த்தார்கள்.
நபிகள் நாயகம் மிஃராஜில் இறந்தவர்களைப் பார்த்தார்கள் என்பதை வைத்துக் கொண்டு அவர்கள் இவ்வுலகில் உள்ளதைப் போன்று உயிருடன் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
ஏனெனில் மிஃராஜில் நபிகள் நாயகம் இறந்தவர்களைப் பார்த்தார்கள் என்பதை நேரடியாகப் பார்த்தார்கள் என்று விளங்க முடியாது. மாறாக அது எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வாகும்.
இறைவன் தனது வல்லமையினால் அவர்களை தன் தூதருக்கு எடுத்துக் காட்டினான். அவ்வளவு தான். மிஃராஜில் இறைவன் எடுத்துக் காட்டிய நிகழ்வை வைத்துக் கொண்டு இறந்தவர்கள் உயிருடன் இருக் கிறார்கள் என்று வாதிடமுடியாது. எடுத்துக்காட்டப்படுதல் வேறு. பார்த்தல் என்பது வேறு.
மிஃராஜில் நபிகளார் பார்த்த நிகழ்வுகள் யாவும் இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வு தான் என்பதைப் பல சான்றுகள் உறுதி செய்கின்றன.
மிஃராஜின் போது நபிகள் நாயகம் இறந்தவர்களை மட்டும் பார்க்க வில்லை. மாறாக உலகில் வெளிப்படாத பலரையும் பார்த்தார்கள். தஜ்ஜாலைப் பார்த்தார்கள் என்றும் ஹதீஸ்களில் காண்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூசா அவர்களை “ஷனூஆ‘ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்ட வர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச் சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), (புகாரி: 3239) ➚
உலகில் இதுவரை தோன்றாத தஜ்ஜாலை எப்படிப் பார்த்தார்கள்? அவன் தான் இதுவரை வெளிப் படவில்லையே? வெளியாகுவதற்கு முன்பே தன் தூதருக்கு இறைவன் எடுத்துக் காட்டியிருக்கிறான். இதுவே நபிகள் நாயகம் பார்த்த காட்சிகள் யாவும் இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வு தான் என்பதை உணர்த்துகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன், (புகாரி: 3241) ➚
(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்துகொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், “இவர் யார்?” எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர்கள் வலப் பக்கம் (சொர்க்க வாசிகளான தம்மக்களைப்) பார்க்கும் போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), (புகாரி: 349) ➚
நபி (ஸல்) அவர்கள் சுவனத்தில் அதிகமான ஏழைகளைக் கண்ட தாகவும், நரகத்தில் அதிகமான பெண்களைக் கண்டதாகவும் முதல் ஹதீஸ் தெரிவிக்கின்றது.
ஆதமுடைய சந்ததிகள் அனைவரையும் சொர்க்கவாசிகள் – நரகவாசிகள் என இரு அணியாகப் பார்த்தார்கள் என இரண்டாவது ஹதீஸ் தெரிவிக்கின்றது.
அதில் மறுமை நாள் வரும் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரும் உள்ளடங்குவர். நாமும் அடங்குவோம். நபிகள் நாயகம் மிஃராஜ் சென்ற போது நாம் தான் பிறக்கவே இல்லையே பிறகு எப்படி நம்மைக் கண்டார்கள்?
உலகம் அழிக்கப்பட்டு, தீர்ப்பு நாளுக்குப் பிறகு தானே சொர்க்க வாசிகள் சொர்க்கத்திற்கும் நரகவாசிகள் நரகத்திற்கும் செல்ல முடியும்?
தீர்ப்பு நாளுக்கு முன்னரே நபிகள் நாயகம் எப்படி இந்தக் காட்சியைக் காணமுடிந்தது?
இவை யாவும் இறைவனது வல்லமையால் நபிகளாருக்கு எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்ச்சி என்பது தான் இதற்குப் பதில்.
இறந்தவர்களையும் இறைவன் எடுத்துக்காட்டுவான். இனி வரவிருப் பவர்களையும் எடுத்துக்காட்டுவான். இது இறைவனுக்கு சாத்தியமே.
ஆதம் (அலை) அவர்களிடம் மறுமை நாள் வரையிலும் வரவிருக்கிற சந்ததிகளை வெளிப்படுத்தி எடுத்துக் காட்டியதாக திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.
ஆதமுடைய மக்களின் முதுகு களிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். “நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்” என்றோ, “இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?” என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)
மறுமை நாள் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரையும் ஆதம் (அலை) அவர்களிடம் எடுத்துக் காட்டியதாக இவ்வசனம் கூறுகிறது. அவர்கள் அனைவரையும் ஆதம் நபி பார்த்தார்கள் என்றால் நேரடியாகப் பார்த்தார்கள் என்ற பொருளில் அல்ல. இறைவன் எடுத்துக் காட்டிய விதத்தில் பார்த்தார்கள் என்பதாகும்.
இது போலவே மிஃராஜிலும் நபிகள் நாயகம் அவர்களுக்கு பல காட்சிகளை எடுத்துக் காட்டினான்.
எனவே இறைவன் தன் தூதருக்கு எடுத்துக் காட்டும் நிகழ்வை வைத்துக் கொண்டு இறந்தவர்கள் உலகில் உள்ளதைப் போன்று உயிருடன் இருக்கிறார்கள் என்று கூறுவது அபத்தமானதாகும்.
மேலும் நபிகள் நாயகம் மிஃராஜில் பார்த்தது அனைத்தும் எடுத்துகாட்டல் தான் என்பதை இன்னும் சில ஆதாரங்களும் உறுதி செய்கின்றன.
ஏனெனில் நபிகள் நாயகம் மிஃராஜில் உலகில் உயிருடன் உள்ளவர்களையும் பார்த்தார்கள் என்று ஹதீஸ்களில் காண்கிறோம். மிஃராஜில் அவர்களை நபியவர்கள் பார்த்த அதே நேரத்தில் அவர்கள் உலகிலும் இருந்தார்கள்.
ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில் சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ)செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புகாரி: 1149) ➚
அனஸ் (ரலி) தாயார் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “நான் என்னை சொர்க்கத்தில் நுழைந்த வனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். உடனே, “யார் அவர்?’ என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), “இவர் பிலால்‘ என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், “இது யாருக் குரியது?’ என்று கேட்டேன். அவர், (வானவர்), “இது உமருடையது‘ என்று சொன்னார். ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்” என்று கேட்டார்கள்.
பிலால் (ரலி) அவர்கள் உலகில் உயிருடன் இருக்கும் போது அவர்களை அங்கு காட்டுகின்றான். இறந்தவர்களை மிஃராஜில் நபி பார்த்ததினால் அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று இவர்கள் நம்புவதைப் போன்று, உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களாக ஆகிவிடுவார்களா?
உலகில் உள்ள பிலால் தான் அங்கேயும் உலாவினார் என்றால் அதே நேரத்தில் அவர் எப்படி உலகிலும் இருக்க முடியும்?
நபிகள் நாயகம் பிலாலிடம் இந்தத் தகவலைச் சொன்ன போது பிலாலுக்கே இந்தத் தகவல் தெரியவில்லையே? நேரடியாக அவரே சொர்க்கத்தில் உலாவியிருந்தால் இது பிலாலுக்குத் தெரியாமல் போகுமா?
பிலால் (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை சுவனத்தில் நடமாட விடுவது போன்று, இறந்தவர்களை மிஃராஜின் போது எழுப்பிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றான். அதாவது எடுத்துக் காட்டியிருக்கின்றான். இது இறைவனின் வல்லமையை உணர்த்தும் செயலாகும்.
ஒருவரையே பல இடங்களில் பார்த்ததாக வருவதும் இது எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வுதான் என்பதை மேலும் தெளிவாக்குகிறது.
மூஸா நபியை முதலில் கப்ரில் பார்த்தார்கள் என்று(முஸ்லிம்: 4736) ➚கூறுகின்றது.
கப்ரில் தொழும் நிலையில் மூஸா நபியைப் பார்த்தது போலவே வானத்திலும் மூஸா நபியைச் சந்தித்தார்கள். (பார்க்க:(புகாரி: 349) ➚
நபிகள் நாயகம் அவர்களுக்கு இதற்கு முந்தைய சமுதாயங்கள் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது மூஸா அலை அவர்களும் கூட இருந்தனர். (முஸ்லிம்: 3410) ➚
நேரடியாகப் பார்ப்பதாக இருந்தால் ஒருவரை ஒரு இடத்தில் தான் பார்க்க இயலும். ஒருவரை ஒரே நேரத்தில் பல இடங்களில் பார்த்ததாக வருவதிலிருந்து இது இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட காட்சி என்பதை அறியலாம்.
பல தண்டனைகள்
உலகம் அழிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு நாளில் தீர்ப்பும் வழங்கப்பட்ட பின்னரே நல்லோர்கள் சொர்க்கத் திற்கும், தீயோர்கள் நரகத்திற்கும் செல்வார்கள்.
அதுவரை நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் சொர்க்கம் செல்ல இயலாது.
பிர்அவ்ன், அபூஜஹ்ல்களாகவே இருந்தாலும் நரகத்திற்குச் செல்ல முடியாது. (பர்ஸக் வாழ்க்கையில் தான் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்)
ஆனால் நபிகள் நாயகம் மிஃராஜில் நரகத்தில் வழங்கப்படும் பல தண்டனைகளை அனுபவிக்கும் நபர்களைப் பார்த்ததாக அந்த ஹதீஸ்களில் வருகிறது.
பொய் கூறித் திரிந்தவர், விபச்சாரம் செய்தவர், குர்ஆனைப் புறக்கணித் தவர், பிறர் மானத்தில் விளையாடியவர் ஆகியோர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதை நபிகள் நாயகம் மிஃராஜில் பார்த்துள்ளார்கள்.
“இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு இருவரும் “ஆம், முதலில் தாடை சிதைக்கப் பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப், (புகாரி: 1386) ➚
விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்குச் செம்பினால் ஆன நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் தங்களது முகங்களையும், மார்புகளையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். “ஜிப்ரயீலே! இவர்கள் யார்?” என்று நான் கேட்டேன். “இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்களின் தன்மானங்களில் விளையாடிக் கொண்டும் இருந்தனர்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), (அபூதாவூத்: 4255) ➚
இனி தான் உலகம் அழிக்கப் படவிருக்கின்றது. இனி தான் அனைவரும் எழுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவிருக்கின்றது. அதன் பிறகே நரகவாசிகள் நரகிற்குச் சென்று தண்டனையை அனுபவிப்பார்கள். அதற்குள் இந்தத் தண்டனைகளைப் பெறுபவர்களை நபிகள் நாயகம் எப்படிப் பார்த்தார்கள்?
நபிகள் நாயகம் கண்ட இக்காட்சி இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்டு, நரகத்தின் தண்டனை எப்படி இருக்கும் என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இப்படி பல காட்சிகளையும், அத்தாட்சிகளையும் நபிகளாருக்குக் காட்டும் போது தான் இறந்து போன இறைத்தூதர்களையும் இறைவன் எடுத்துக் காட்டினான். இதனால் அவர்கள் உலகில் உள்ளதைப் போன்று உயிருடன் இருக்கிறார்கள் என்பதாக ஆகாது.
எனவே மிஃராஜில் இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வை வைத்துக் கொண்டு உலகில் உள்ளதைப் போன்று அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொல்வது தவறான வாதமாகும்.
இறந்தவர்கள் அனைவரும் பர்ஸக் வாழ்க்கைக்குள் சென்றுவிடுவதாக திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப்பெரிய திரை போடப்பட்டு விடுகிறது. இது தான் பர்ஸக் வாழ்க்கை எனப்படுகிறது.
பர்ஸக் வாழ்க்கையில் நபிமார்கள் மட்டுமல்லாமல் இறந்து விட்ட நல்லவர்கள் – தீயவர்கள் என அனைவருமே உயிருடன் தான் உள்ளார்கள்.
தீயவர்கள் வேதனையை அனுபவிக்கிறார்கள். நல்லோர்கள் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். நபிமார்கள் மேலான உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள்.
அங்கு உயிருடன் இருக்கிறார்கள் என்பதை வைத்துக் கொண்டு அவர்கள் இவ்வுலகில் உள்ளதைப் போன்று இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளக் கூடாது.
ஏனெனில் பர்ஸக் வாழ்க்கையில் உயிருடன் இருப்பது என்பது இவ்வுலக வாழ்க்கையில் உயிருடன் இருப்பதைப் போன்றதல்ல.
அங்குள்ளவர்கள் இங்கு நடப்பவற்றை அறிந்து கொள்ள மாட்டார்கள். உலகில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள இயலாது. அந்த அளவில் பலமான திரையொன்று இறைவனால் போடப்படுகிறது. நாம் உணரமுடியாத வகையிலேயே பர்ஸக் எனும் வாழ்க்கையில் அவர்கள் இருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.
பர்ஸக் வாழ்க்கையில் – கப்ரில் தீயவர் சம்மட்டியால் அடிக்கப் படுவதாகவும் அதனால் கடுமையாக அலறுவதாகவும் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். (புகாரி: 1338) ➚
ஆனால் நாம் மையவாடிக்கு அருகில் இருந்தாலும் அந்தச் சப்தத்தை நம்மால் கேட்க இயலவில்லை. ஏன்?
இறைமறுப்பாளனுக்கு அவரின் மண்ணறையில் நெருப்பாலான ஆடை, விரிப்பு, போர்வை போன்றவை வழங்கப்படும் என்றும் ஹதீஸ் உள்ளது. (அபூதாவூத்: 4127) ➚
இப்போது ஒரு காபிரின் கப்ரில் தோண்டிப் பார்த்தால் நரகத்து ஆடை, போர்வை, விரிப்பு போன்றவைகள் இருக்குமா? அவற்றை நம்மால் பார்க்க இயலவில்லையே?
அதே போன்று நல்லவருக்கு சொர்க்கத்தின் விரிப்பு, சொர்க்கத்தின் நறுமணம் வழங்கப்படும் என்றும் ஹதீஸ் உள்ளது. (அஹ்மத்: 17803) ➚
முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்வதற்காகத் தோண்டும் போது இது நாள் வரையிலும் எந்தப் போர்வையும் கிடைத்ததில்லையே?
அப்படி எனில் இறந்தவர்கள் வாழும் பர்ஸக் வாழ்க்கை நம்முடைய புலன்களுக்கு அப்பாலும், நம்மால் அறிந்து கொள்ள முடியாத வகையிலும் உள்ளது என்பதை இது விளக்குகிறது.
பர்ஸக் வாழ்க்கையில் நடை பெறுவதை வைத்து உலகில் சட்டம் சொல்ல இயலாது. அந்த வாழ்க்கை நம்முடைய புலன்களால் அடைந்து கொள்ள முடியாத திரை போடப்பட்ட வாழ்க்கையாகும்.
எனவே அந்த வாழ்க்கையில் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை இவ்வுலகில் உள்ளதைப் போன்று என்று புரிந்து கொள்ளக் கூடாது.
நபிமார்கள் பர்ஸக் வாழ்க்கையில் உயிருடன் உள்ளார்கள் என்பதை இவ்வுலகில் உள்ளதைப் போன்று என்று புரிந்தால் நபிமார்கள் உலகில் உயிருடன் இருந்தால் என்னென்ன செய்ய வேண்டும்? அவற்றைச் செய்கிறார்களா?
மிகக் குறிப்பாக, நபிமார்கள் தம் தூதுப்பணியை எடுத்துரைக்க வேண்டும். அதற்குரிய சான்றுகளை வெளிப்படுத்த வேண்டும். அற்புதங்கள் வழியாக தஃவா செய்ய வேண்டும். இவற்றில் எந்த ஒன்றையும் செய்யாமல் கப்ரில் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் அது எப்படி சாத்தியமாகும்?
இறந்து விட்ட ஒவ்வொரு மனிதரும் பர்ஸக் வாழ்க்கையில் உயிருடன் தான் உள்ளனர். அதனால் அவர்களது சொத்தைப் பங்கிடக் கூடாது, அவர்களது மனைவியை இன்னொரு ஆண் திருமணம் செய்யக் கூடாது என்று கூறுவோமா? இதிலிருந்தே அங்கு உயிருடன் இருக்கிறார்கள் என்பதை உலகத்தில் இருப்பதை போன்று இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதில்லை.
நபிமார்கள் விஷயத்திலும் இவ்வாறே விளங்கிக் கொள்ள வேண்டும்.