விமர்சனங்களுக்கு கலங்காதீர்!
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
‘வீட்டையே திருத்த முடியலை. இவர் ஊரைத் திருத்த வந்துவிட்டார்’ என்று நம்மை நோக்கி சிலர் கூறுவர். இது போன்ற விமர்சனங்கள் மார்க்கப் பிரச்சாரத்திற்கு ஒரு தடையாக அமைந்துவிடக் கூடாது. ஏனெனில் இப்ராஹிம் நபியின் தந்தை ஆஸர் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. நூஹ், லூத் போன்ற நபிமார்களின் மனைவிமார்கள் ஏகத்துவத்தை ஏற்கவில்லை என்பதே குர்ஆன் கூறும் தெளிவான பிரகடனமாகும்.
தன் மனைவி மக்களைத் திருத்தியதற்குப் பிறகே மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று இவர்கள் நினைத்திருந்தால் மார்க்கத்தை மக்களுக்கு இவர்கள் எடுத்துரைத்திருக்க முடியாது.
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர், சகிப்புத் தன்மை உள்ளவர்.
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர்.
அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!’’ என்று கூறப்பட்டது.
நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களால் கவலைக்கும், மனநெருக்கடிக்கும் உள்ளானார். அதற்கவர்கள் “நீர் பயப்படாதீர்! கவலைப்படாதீர்! உம்மையும், உமது குடும்பத்தினரையும், நாங்கள் காப்பாற்றுவோம். உமது மனைவியைத் தவிர. (அழிவோருடன்) அவள் தங்கி விடுவாள்’’ என்றனர்.
மலைகளைப் போன்ற அலை மீது, அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏகஇறைவனை) மறுப்போருடன் ஆகிவிடாதே!’’ என்று நூஹ் கூறினார்.
“ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்‘’ என்று அவன் கூறினான். “அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை’’ என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.
அவன் எதையாவது சொல்லி விடுவானோ? இவன் எதையாவது சொல்லி விடுவானோ? என்று எண்ணிக் கொண்டிருந்தால் மார்க்கப் பிரச்சாரம் மட்டுமல்ல! நடைமுறை வாழ்க்கையிலேயே நம்மால் எதையும் செய்ய இயலாது. துணிந்தவனுக்குத் துக்கமில்லை என்று கூறுவது போல இறைவன் நம்மோடு இருக்கின்றான் என்று எண்ணி குர்ஆன் ஹதீஸில் உள்ளவாறு உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்க வேண்டுமே ஒழிய, பிறர் இவ்வாறு இவ்வாறெல்லாம் விமர்சிப்பார்களே! என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
நமது கடந்த காலத்தைப் பற்றியோ, நமது மூதாதையர்களின் தவறுகளை பற்றியோ விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டு தான் இருப்பார்கள். திருப்திப்படுத்த முடியாத மனிதனை, திருப்திப்படுத்த எண்ணுவதில் அர்த்தமில்லை. எவ்வளவு தான் நாம் சரியாகவும், நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் நடந்தாலும் குறை சொல்பவர்கள் குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களால் விமர்சிக்கப்படவே செய்தார்கள். அதற்காக அவர்கள் பிரச்சாரப் பணிக்கு முழுக்குப் போடவில்லையே? தமது பணியைத் தொடர்ந்து செய்வதில் ஆர்வம் செலுத்தினார்களே ஒழிய அந்த உன்னதப் பணியிலிருந்து அவர்கள் ஒதுங்கிவிடவில்லை.
பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்திடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! அவர்களை அழகிய முறையில் முற்றிலும் வெறுத்து விடுவீராக!
(முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.
அவர்கள் (உம்மைப் பற்றிப்) பேசுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம்.
நபியே! அல்லாஹ்வை அஞ்சுவீராக! (ஏக இறைவனை) மறுப்போருக்கும், நயவஞ்சகர்களுக்கும் கட்டுப்படாதீர்!
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள், கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல் பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டு விட்டார்கள்: உயைனா பின் பத்ர் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல் கைல் (ரலி). நான்காமவர் அல்கமா (ரலி); அல்லது ஆமிர் பின் துஃபைல் (ரலி).
அப்போது நபித்தோழர்களில் ஒருவர், “இதைப் பெறுவதற்கு இவர்களை விடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம் தாம்‘’ என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ணமுள்ளன’’ என்று சொன்னார்கள்.
அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றி உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?’’ என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார்.
அப்போது காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்து விடட்டுமா?’’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்’’ என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், “எத்தனையோ தொழுகையாளிகள் தம் இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள்’’ என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை’’ என்று கூறி விட்டு, திரும்பிச் சென்று கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள்.
ஒரு சில பகுதிகளுக்கு சொற்பொழிவாற்றச் செல்வதற்கு சில ஆலிம்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஏனெனில் அவர்களுக்கு எத்தனை முறை சென்று பிரச்சாரம் செய்தாலும் மீண்டும் அவர்கள் அதே நிலையில் தான் இருக்கின்றார்கள். அவர்கள் திருந்தவே மாட்டார்கள். திருந்தாதவர்களுக்கு எதற்காகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ஆதங்கப்படுவதைக் காண்கின்றோம்.
மக்களோடு வாழ்ந்து அவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனெனில் இறைவனால் இப்பூலோகத்திற்குத் தூதராக அனுப்பப்பட்டவர்களே மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் போது அதை அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சொற்பமானவர்களே அதை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன.
உதாரணமாக நபி நூஹ் (அலை) அவர்கள் 950 வருடம் மக்களுக்கு அழைப்புப் பணி செய்தார்கள். அப்போது அவருக்கு மக்கள் கொடுத்த சிரமத்தில் சிறிதையும் நாம் அனுபவிக்கவில்லை என்பதற்குக் கீழ்க்கண்ட வசனங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
‘உமது சமுதாயத்திற்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன் அவர்களை எச்சரிப்பீராக’ என்று நூஹை அவரது சமுதாயத்திடம் நாம் அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள் நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவன்.
அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான். குறிப்பிட்ட தவணை வரை உங்களுக்கு அவகாசம் தருவான். அல்லாஹ்வின் தவணை வரும் போது அது பிற்படுத்தப்படாது. நீங்கள் அறிய வேண்டாமா?’ என்று அவர் கூறினார்.
‘என் இறைவா! என் சமுதாயத்தை இரவிலும், பகலிலும் நான் அழைத்தேன்’ என்று அவர் கூறினார். “எனது அழைப்பு வெறுப்பைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு அதிகமாக்கவில்லை’ ‘நீ அவர்களை மன்னிப்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் தமது விரல்களைத் தமது காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். தமது ஆடைகளால் மூடிக் கொள்கின்றனர். பிடிவாதம் பிடிக்கின்றனர். அதிகம் அகந்தை கொள்கின்றனர்’ ‘பின்னர் அவர்களை நான் உரத்த குரலில் அழைத்தேன்’ ‘பின்னர் அவர்களைப் பகிரங்கமாகவும் அழைத்தேன்.
மிகவும் இரகசியமாகவும் அழைத்தேன்’ ‘உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்’ என்று கூறினேன். ‘உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்’ ‘செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காகச் சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான்’ “உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வுக்கு எந்த மரியாதையையும் வழங்காதிருக்கிறீர்கள்’’
எனவே அழைப்புப் பணி செய்யும் போது இது போன்றவற்றை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு சலிப்படைந்து விடக்கூடாது. மேலும் திரும்ப திரும்ப எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.
எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே.
நாம் பிரச்சாரம் செய்த உடனே அவர்கள் திருந்திவிட வேண்டும். அவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ்விடமே உள்ளது. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கும் ஆளாகாதீர்!
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அடக்கத்தலம் (கப்று) அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு!’’ என்றார்கள். அதற்கு அப்பெண், ‘‘என்னை விட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை’’ என்று – நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல் – கூறினாள்.
அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தார். – அங்கே நபியவர்களுக்கு காவலாளிகள் எவரும் இருக்கவில்லை – ‘‘நான் உங்களை (யாரென) அறியவில்லை’’ என நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். “பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது “அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.
ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்குப் பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன்.
அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’’ என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, “முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம்.
(இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’’ என்று கூறினார். உடனே, “(வேண்டாம் ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’’ என்று சொன்னேன்.
எனவே அழைப்புப் பணி செய்வதே நம் கடமை. நேர்வழி காட்டுவது இறைவனின் கையில் என்றே மார்க்கம் நமக்கு கட்டளையிடுகின்றது.
இச்செய்தியை அவர்கள் நம்பாவிட்டால் அவர்களுக்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.
“நான் உங்கள் நலம் நாடினாலும் உங்களை வழிகேட்டில் விட்டுவிட அல்லாஹ் நாடினால் எனது அறிவுரை உங்களுக்குப் பயன் தராது. அவனே உங்கள் இறைவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!’’ (என்றும் கூறினார்.)
‘‘அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!’’ எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.
மார்க்கப் பிரச்சாரம் செய்பவர்கள், அம்மக்களுக்கு உரிமைப்பட்டவராக (உறவினராக) இருந்தால் தாம் சொல்வதை அவர்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதைக் காண்கின்றோம். எடுத்துச் சொல்வது நம் கடமை. அதே சமயம் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அதற்காக அவர்களை நாம் நிர்பந்திக்கக் கூடாது.
இந்த வேளையில் அவர்கள் எதையேனும் நல்லறத்தை நிர்பந்திக்கப்பட்டுச் செய்வார்களேயானால் அதை இறைவனுக்காகச் செய்யாமல் உங்களது பார்வையில் நல்லவர்களாக இருக்க வேண்டும்; உங்களிடத்தில் நல்லபேர் எடுக்க வேண்டும்; நீங்கள் அவர்களைக் கண்டித்து விடக்கூடாது என்பதற்காகவே செய்கின்றனர். நீங்கள் இல்லையென்றால் அவர்கள் அந்த நல்லறத்தைச் செய்வதில்லை. அதை மூட்டை கட்டி வைத்துவிடுவதைப் பார்க்கின்றோம். எனவே நாம் அவர்களுக்கு வலியுறுத்தலாம். ஆனால் அவர்களை வற்புறுத்தக்கூடாது.
அவர்கள் நல்லறங்களை எல்லாக் காலங்களிலும் இறைவனுக்காகச் செய்கின்ற சூழ்நிலையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். நான் சொன்னால் தான் அவன் கேட்பான். என்னால் தான் அவனைத் திருத்த முடியும் என்ற நிலையையும் நாம் தவிர்க்க வேண்டும்.
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.
(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா? அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் நம்பிக்கை கொள்ள முடியாது. இதை விளங்காதோருக்கு வேதனையை அவன் அளிப்பான்.
“இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது’’ என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும்.
ஆகவே விமர்சனங்களை புறம்தள்ளி விட்டு அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் நன் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.