பெண்ணினத்தை அழிக்கும் வரதட்சணை

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

இந்தியாவில் இளம் பெண்களின் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. வெளியில் பெண்ணின் தற்கொலைக்கான உண்மைக் காரணத்தைச் சொன்னால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கேவலமாகிவிடும் என்பதால் அதிகமானவர்கள் பொய்க் காரணங்களைச் சொல்கின்றனர். இளம் பெண்கள் தற்கொலை செய்யும் போது, வயிற்று வலியினால் தற்கொலை செய்ததாகச் சொல்வார்கள்.

ஆனால் அது பொய்யாகத்தான் இருக்கும். வயிற்று வலி என்பது எய்ட்ஸ் போன்ற மருந்தே கண்டுபிடிக்கப்படாத நோய் போன்றதல்ல! வயிற்று வலிக்கு தகுந்த வைத்தியம் செய்தால் சரியாகிவிடும். அதற்காக ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? தனது தகப்பனால் தன்னைத் திருமணம் முடித்துக் கொடுப்பதற்கு இயலாது என்ற தீர்க்கமான முடிவுக்கு அவள் வரும் போது, பெற்றோருக்கு நாம் ஏன் பாரமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தற்கொலை செய்துவிடுகிறாள். அவள் 15 வயதில் வயதுக்கு வந்து.

தனது திருமணத்தை 16 என்றும் 18 என்றும் 20 என்றும் 25 என்றும் எதிர்பார்க்கிறாள். இதன் பிறகுதான் தற்கொலை முடிவை எடுக்கிறாள் ஒரு பெண். இளம் பெண்ணின் வயது ஏற ஏற பெண்ணுக்கே உள்ள கவர்ச்சி, அழகு போன்றவை குறைய ஆரம்பித்துவிடும். ஓரளவு குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பெண்ணை ஆண்கள் திருமணம் முடிக்க விரும்பமாட்டார்கள் என்பது சமூக எதார்த்தம். எனவே மணவாழ்க்கை கிடைக்காது என்று நினைக்கிற போதுதான் இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

எனவே நாம் பெண்களிடம் வரதட்சணை கேட்பதால், அவர்கள் செய்யும் தற்கொலை என்ற பாவத்திலும் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை வரதட்சணை வாங்குபவர்களும் கொடுப்பவர்களும் மறுக்க முடியாது. வரதட்சணை வாங்கும் ஒவ்வொருவருக்கும், அதில் வாங்குகின்ற கொடுக்கின்ற ஒவ்வொருக்கும், அதை நியாயப்படுத்துகின்ற ஒவ்வொருக்கும், வரதட்சணைத் திருமணங்களைப் புறக்கணிக்காமல் அதை ஆதரிக்கின்ற ஒவ்வொருவருக்கும் தற்கொலைக்கான பாவத்தில் நிச்சயம் பங்குண்டு.

பெண்கள் தவறான ஒழுக்கக் கேட்டில் விழும் பாவத்திலும் பங்குண்டு. அதேபோன்று இஸ்லாத்தை விட்டே வெளியேறும் பாவத்தைச் செய்வதிலும் பங்குண்டு. ஏனெனில் ஒழுங்கான வாழ்க்கையை இந்தச் சமூகம் கொடுக்காததால் தான் இந்தத் தவறுகளெல்லாம் நடந்தேறுகின்றன.

இவற்றையெல்லாம் கடந்து, ஒரு பெண் இறையச்சத்துடன் மறுமைக்காகவே வாழ்வது என்ற முடிவையும் எடுத்தால், அதாவது தற்கொலையை செய்யாமலும், ஒழுக்கக் கேட்டை விரும்பாலும், திருமணத்தின் மூலம்தான் உடல் சுகம் அடைய வேண்டும் என்று மார்க்கம் சொன்னதைக் கடைப்பிடிக்கும் பெண்ணாக இருந்தால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கடைசியில் மனஅழுத்தத்திற்கு ஆளாகி மனநோயாளியாக மாறிவிடுகிறாள்.

பெண்களில் சிலருக்குப் பேய் பிடிக்கும். உண்மையில் பேய் என்று எதுவும் கிடையாது. அது ஒருவிதமான மனநோய். எனவே பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் மனநோயாளியாகும் நிலையைப் பார்க்கிறோம்.

அதேபோன்று, பெண் சிசுக் கொலை செய்வதும் இந்த வரதட்சணையினால்தான். கடந்த காலங்களிலெல்லாம் குழந்தை பிறந்த பிறகுதான் ஆணா? பெண்ணா? என்பது தெரியும். ஆனால் தற்போதுள்ள நிலையில் கருவுக்குள் இருப்பது ஆணா? பெண்ணா? என்று ஸ்கேன் கருவியின் மூலம் தெரிந்து கொண்டு, பெண் என்றால் கருவுக்குள்ளேயே வைத்து சமாதியாக்கிவிடுவதையும் பார்க்கிறோம். மத்திய அரசாங்கம் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று பார்த்து பெற்றோரிடம் அறிவிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றிப் பேணும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்வதால் தவறு ஒன்றுமில்லை. ஆனால் தெரிந்த பிறகு பெண் என்றால் அழிப்பதற்குப் பயன்படுத்துவதால் தான் தடை விதிக்கிறது அரசாங்கம்.

இப்படி முஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் கருவில் பெண் சிசுக்களைக் கொல்வதற்குக் காரணம் வரதட்சணை தான். அதாவது பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தால் அதைக் கரைசேர்க்க முடியாது; அதற்கு நமது சமூகம் ஒத்துழைக்காது; சமூகம் எதிர்பார்க்கும் அளவுக்குப் பொருளாதாரத்தைத் திரட்டுவதற்கு நம்மிடம் சக்தியில்லை; இப்போது 5 இலட்சம் கேட்கிறார்கள்; இந்தப் பெண் குழந்தை வயதிற்கு வந்து அதைக் கல்யாணம் கட்டிக் கொடுக்கும் போது எத்தனை இலட்சம் கேட்பார்களோ என்று மனதிற்குள் ஒரு கணக்குப் போட்டு, அப்படியொரு அவமானம் நமக்குத் தேவையில்லை என்றெண்ணித் தான் சிசுவிலேயே, கருவுக்குள் வைத்தே பெண்களை சமாதியாக்கும் அவலச் செயல் நடந்தேறுகிறது.

கொன்றுவிட்டால் ஒருசில நாட்களுக்குத்தான் கவலை. ஒவ்வொரு நாளும் பொத்திப் பொத்தி வளர்த்து திருமணம் முடிக்க முடியாமல் தினந்தோறும் கவலைப்படத் தேவையில்லை என்று நினைத்து இதைச் செய்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமைதானே! இன்னும் சிலர் பெண் பிள்ளையைக் கொலை செய்யாவிட்டாலும் பெண் பிள்ளை என்றதும் மனக் கவலையும் பொருளாதாரத்தின் மீது கடும் அக்கறையும் காட்டி, பிறந்த நாளிலிருந்தே சேமிப்பு கணக்கைத் தொடங்குகிறார்கள். இப்படியெல்லாம் அவலம் ஏற்படக் காரணம் வரதட்சணைதானே!

சிசுக்கொலை அறியாமைக் கால மக்கத்து காஃபிர்கள் செய்த மாபாதகச் செயலாகும். அவர்கள் வேறு காரணத்திற்காக சிசுக் கொலை செய்தார்கள். அறியாமைக் காலமாக இருந்தாலும் வரதட்சணைக் கொடுமை கிடையாது. இன்னும் சொல்வதெனில் அரபுச் சமூகம் பெண்களுக்கு மஹர் கொடுத்தே மணம் முடித்தனர். நபியவர்கள் வந்துதான் வரதட்சணையை ஒழிக்க வேண்டும் என்ற நிலை அரபு சமூகத்தில் இருந்ததில்லை.

அவர்கள் நிர்வாக நன்மைக்காக ஆணின் கீழ் பெண் என்று வாழாமல் பெண் என்றாலேயே அடிமைதான் என்றெண்ணிய காலம். பெண்ணுக்குத் தனி சுதந்திரம் என்பதே கிடையாது என்ற காலம் அது. இதுபோன்ற ஏதோ ஒரு காரணத்திற்காக பெண் குழந்தைகளைக் கொன்றனர். ஆனால் இன்றைய நவீன உலகம் வரதட்சணை என்ற காரணத்தை முன்வைத்து பெண் சிசுக்களைக் கொல்கிறது. எப்படிக் கொன்றாலும் குற்றம் குற்றம்தான். குர்ஆனில் இது பற்றி மறுமையில் விசாரணை நிச்சயம் உண்டு என்று இறைவன் எச்சரிக்கிறான்.

என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது…

(அல்குர்ஆன்: 81:8-9)

சிசுக்கள் எதற்காக கொல்லப்படுகின்றன என்பதை இறைவனால் விசாரிக்கப்படும் என்று அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் எச்சரிக்கிறான். ஒரு குழந்தை எதற்காகக் கொல்லப்பட்டது என்று பெற்றோரைக் கேட்டால் அதற்கு அந்தப் பெற்றோர்கள் சமூகத்தின் வரதட்சணை அவலத்தைப் பதிலாக நிச்சயம் கூறுவார்கள். அவர்களும் தப்பிக்க முடியாது. சமூகம் தவறு செய்ததால் அதற்கு இன்னொரு தவறு தீர்வாகுமா? என்று இறைவன் பெற்றோரையும் தண்டிப்பான்.

அப்படி அவர்களுடன் இந்தச் சமூகத்திற்கும் தண்டனை நிச்சயம் கிடைக்கத்தான் செய்யும்.  நாளை மறுமையில் அந்தப் பாவத்திற்குரிய தண்டனையில் நாம் சேர்க்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற அக்கறை உண்மையில் இருந்தால், சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் வரதட்சணை என்ற தீமைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். வரதட்சணைத் திருமணங்களைப் புறக்கணிக்க வேண்டும்,

வரதட்சணையை ஊக்குவித்து முன்னின்று நடத்தும் ஊர் ஜமாஅத்துக்களையும் நிர்வாகத்தையும் ஆலிம்களையும் இன்னும் யாரெல்லாம் அதை ஆதரிக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்யவேண்டும். அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் நமது பிள்ளைகளுக்காவது அதுபோன்ற தீமையான திருமணங்களை நடத்தாமல் எதிர்ப்பைக் காட்டியிருந்தால் மறுமையில் சிசுக் கொலைக்கான தண்டனையிலிருந்து நாம் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.