காதியானிகள் யார் – 3

பயான் குறிப்புகள்: கொள்கை
மிர்சா குலாம் நபியா?

மிர்சா குலாமின் முக்கியமான வாதம், தன்னை இறைத்தூதர் என்று வாதிட்டது! தான் இறைத்தூதர் என்பதற்குச் சில முறையற்ற வாதங்களை அவன் எடுத்து வைக்கின்றான். அவற்றின் உண்மை நிலை என்ன? என்பதை இந்தத் தொடரில் நாம் அறிந்து கொள்வோம்.

திருக்குர்ஆனில் இறைத்தூதர்களைக் குறிக்க இரண்டுவிதமான சொற் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று நபி, இரண்டு ரசூல். இந்த இரண்டு சொற்களுக்கும் இருவேறு கருத்துக்களைக் கொடுத்து, தான் நபி என்று மிர்சா குலாம் வாதிடுகின்றான். நபி என்பதற்கு இலக்கணம் வேறு, ரசூல் என்பதற்கு இலக்கணம் வேறு என்று புதிய ஒரு கருத்தை விதைத்து, தன் வாதங்களை நிலைநாட்ட முயல்கின்றான்.

நபி என்றால் முந்தைய ரசூல் கொண்டு வந்த கொள்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்வார் என்றும் ரசூல் என்றால் புதிதாக சட்டதிட்டங்கள் அவருக்கு இறக்கப்படும் என்றும் கூறுகிறான். எனவே நான் நபிதான், ரசூல் இல்லை என்றும் ரசூல்தான் வரமுடியாது, நபி வரலாம் என்றும் கூறுகிறான்.

நமது பதில்

நபியும் ரசூலும் ஒன்றே

நபி என்ற சொல்லையும், ரசூல் என்ற சொல்லையும் நாம் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். நபி, ரசூல் ஆகிய இரண்டையும் ஒரே பொருளில் நாம் பயன்படுத்தி வருகின்றோம். இவ்விரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? இரண்டும் ஒரே கருத்தைச் சொல்லக் கூடிய சொற்களா? இதை நாம் விரிவாக அறிந்து கொள்வோம்.

நபி என்ற சொல் நபஅ என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். இச்சொல்லுக்கு அறிவிப்பவர் என்று பொருள். அல்லாஹ்விடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களுக்கு அறிவிப்பவர் என்ற கருத்தில் இறைத்தூதர்கள் நபி என்று குறிப்பிடப்படுகின்றனர்.

ரசூல் என்றால் சொந்தக் கருத்தைச் சொல்லாமல் பிறரது கருத்தை அப்படியே கொண்டு சேர்ப்பவர் அதாவது தூதர் என்பது பொருள். இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுகிறார்கள் என்ற அடிப்படையில் ரசூல் – தூதர் என்று சொல்லப்படுகிறது.

எல்லா நபியும் இறைவனிடமிருந்து செய்தியைப் பெறுவதால் அவர் ரசூலாகவும் இருக்கிறார். எல்லா ரசூலும் இறைவனிடமிருந்து பெற்ற செய்திகளை மக்களுக்கு மறைக்காமல் அறிவித்து விடுவதால் அவர்கள் நபியாகவும் இருக்கிறார்கள்.

ரசூல் என்றால் வேதம் கொடுக்கப்பட்டவர்கள். நபி என்றால் வேதம் கொடுக்கப்படாதவர்கள் என்பதற்குப் பின்வரும் வசனங்கள் ஆதாரமாக உள்ளதாக இவர்கள் சொல்கின்றனர்.

(அல்குர்ஆன்: 2:129, 2:151, 2:252, 3:164, 3:184, 4:136, 5:15, 5:67, 5:83, 6:130, 7:35, 9:97, 35:25, 39:71, 57:25, 62:2)ஆகிய வசனங்கள் ரசூலுக்கு வேதம் வழங்கப்படும் என்று சொல்வதைச் சான்றாகக் காட்டுவார்கள்.

ஆனால்(அல்குர்ஆன்: 2:136, 2:213, 3:79, 3:81, 3:84, 5:81, 19:30, 37:112-117, 29:27, 45:16, 57:26)ஆகிய வசனங்கள் நபிக்கும் வேதம் வழங்கப்பட்டது என்று சொல்வதால் இவர்களின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.

ரசூலுக்குத் தனி மார்க்கம் வழங்கப்படும். நபி என்பவர் இன்னொரு நபிக்கு வழங்கப்பட்ட மார்க்கத்துக்குப் புத்துயிர் ஊட்டுவார் என்று சிலர் வாதிடுகின்றனர்.

(அல்குர்ஆன்: 9:33, 10:47, 17:15, 48:28, 61:9)ஆகிய வசனங்கள் ரசூலுக்கு தனி மார்க்கம் என்று சொல்வதை சான்றாகக் காட்டுகின்றனர். இது தவறாகும். ஏனெனில்(அல்குர்ஆன்: 19:49, 66:8)ஆகிய வசனங்கள் நபிக்கும் தனி மார்க்கம் வழங்கப்பட்டதாகக் கூறுகிறது. மேலும்(அல்குர்ஆன்: 7:157, 7:158, 9:61, 19:51, 19:54, 43:6)ஆகிய வசனங்கள் நபியும் ரசூலும் ஒன்று என்று சொல்கின்றன.

நபி வேறு, ரசூல் வேறு என்று கருதும் வகையில் ஒரே ஒரு வசனம் மட்டும் உள்ளது. ஆனாலும் அதுவும் இந்த வாதத்தை நிலைநாட்ட உதவாது.

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும்போது அவர் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.

(அல்குர்ஆன்: 22:52)

இவ்வசனத்தில் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், எந்தத் தூதரானாலும்… என்ற சொற்றொடர் இடம் பெறுகின்றது. நபியும் ரசூலும் ஒன்றல்ல; வெவ்வேறானவை எனக் கூறுவோர் இதைச் சான்றாகக் காட்டுவார்கள். இதை அப்படியே பொருள் கொண்டு, நபி வேறு; ரசூல் வேறு எனக் கூறினால் அதற்கு மாற்றமாக அமைந்த ஏராளமான வசனங்களை நிராகரிக்கும் நிலைமை ஏற்படும்.

மனிதர்களின் பேச்சு வழக்கில் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு சொற்களைப் பயன்படுத்தி, தனித்தனி பொருள் போன்று கூறும் வழக்கம் உள்ளது. குறிப்பாக எதிர்மறையாகப் பேசும்போது இது அதிக அளவில் காணப்படுகிறது. அரபு மொழி உட்பட இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த வழக்கம் உள்ளது.

எனக்கு எந்தக் கூட்டாளியும், நண்பனும் கிடையாது.

எனக்கு எந்தச் சொந்தமும், பந்தமும் இல்லை என்பன போன்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம்.

அதிக அழுத்தம் கொடுப்பதற்காக ஒரே கருத்தில் அமைந்த இரு சொற்களை, இரு கருத்துக்களைப் போல் பயன்படுத்துகிறோம். அது போல் மேற்கண்ட வசனத்தைப் புரிந்து கொண்டால் நபியும் ரசூலும் ஒன்றே எனக் கூறும் வசனங்களுடன் பொருந்திப் போகின்றது.

எனவே நபி வேறு, ரசூல் வேறு என்று வாதிட்டு தன்னை நபி என்று மிர்சா குலாம் வாதிடமுடியாது.

கதியானிகளின் வாதம்

வானவர்களிலும், மனிதர்களிலும் அல்லாஹ் தூதர்களைத் தேர்வு செய்கிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்

(அல்குர்ஆன்: 22:75)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் ரசூல்மார்களை மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுப்பான் என்று முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி கூறுகிறான்.

(தூதர்கள் என்று மொழிபெயர்த்த இடத்தில் ரசூல் என்ற அரபி பதம் இடம்பெற்றுள்ளது)

அல்லாஹ் தேர்ந்தெடுப்பான் என்று வருங்காலத்தில் முஹம்மது (ஸல்) அவர்களைப் பார்த்து கூறுவதிலிருந்து முஹம்மதிற்குப் பிறகு ரசூலை அல்லாஹ் அனுப்புவான் என்பதை விளங்கலாம் என்பது மிர்சா குலாம் வகையறாக்களின் வாதம்.

நமது பதில்

ஒரு பெரிய அந்தஸ்தில் உள்ளவர் ஒரு காரியத்தைச் செய்த பிறகு அவருக்கு கீழ் வேலை செய்யக்கூடியவேரோ அல்லது வேறு யாரோ, “நீங்கள் ஏன் இதை செய்தீர்கள்?” என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு அந்த உயர் அந்தஸ்தில் உள்ளவர், “நான் அப்படித்தான் செய்வேன். அதைக் கேட்க நீங்கள் யார்?” என்று அவர் ஏற்கனவே செய்த காரியத்தைப் பற்றி வருங்காலத்தைப் பயன்படுத்திதான் கூறுவார் (நான் அப்படித்தான் செய்தேன் என்று) இறந்த காலத்தில் கூறமுடியாது. ஆக அவருடைய நோக்கம் தன்னுடைய அதிகாரத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதுதான்.

இது போன்றுதான் அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராக அனுப்பிய போது மக்கத்து காபிர்கள், இவரையா அல்லாஹ் தூதராக அனுப்பி இருக்கின்றான்? என்று அல்லாஹ்வைக் கேலி செய்யும் விதமாகக் கூறினார்கள்.

“(மக்கா மதீனா ஆகிய) இவ்விரு ஊர்களில் உள்ள மகத்தான மனிதருக்கு இந்தக் குர்ஆன் அருளப்பட்டிருக்கக் கூடாதா?’’ எனக் கேட்கின்றனர். உமது இறைவனின் அருட்கொடையை அவர்கள் தான் பங்கிடுகிறார்களா? இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் வாழ்க்கை வசதிகளை நாமே பங்கிடுகிறோம். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பணியாளராக ஆக்குவதற்காகச் சிலரை விட சிலரின் தகுதிகளை உயர்த்தினோம். அவர்கள் திரட்டுவதை விட உமது இறைவனின் அருள் சிறந்தது.

(அல்குர்ஆன்: 43:31)

மேலும் இவர்கள் கூறுகிறார்கள்: இந்த தூதருக்கென்ன (அவர் மற்ற மனிதர்களைப் போன்றே) உணவு உண்கிறார் இன்னும் வீதிகளில் நடக்கிறார் (அல்லாஹ்வுடைய தூதராக அவர் இருந்தால்) அவர் பால் ஒரு மலக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அப்பொழுது அவர் இவருடனிருந்து அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராக இருப்பார்

(அல்குர்ஆன்: 25:7)

இவ்வாறெல்லாம் அல்லாஹ் முஹம்மதை (ஒரு மனிதரை) மக்களுக்குத் தூதராக அனுப்பியதைக் குறை கூறினர். மக்கத்துக் காஃபிர்களுடைய வாதத்திற்குப் பதிலளிக்கும் வகையில்தான் இந்த வசனத்தை அல்லாஹ் அமைத்திருக்கின்றான். அல்லாஹ் மலக்குகளிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுப்பான் என்று கூறுகிறான் இதன் முலம் தனது அதிகாரத்தையும் வல்லமையையும் காட்டுகிறான்

அப்படியே அல்லாஹ், முஹம்மதிற்குப் பிறகு தூதரை அனுப்புவான் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் இவனுக்கு இதில் ஆதாரம் இல்லை. ஏனென்றால் இந்த வசனத்தில் அல்லாஹ் ரசூலைத்தான் அனுப்புவான் என்று கூறுகிறான்; நபியை அனுப்புவான் என்று கூறவில்லை. நபி வரலாம், ரசூல் வரமுடியாது என்பது தான் இவனின் வாதம். எனவே ரசூல் என்ற பதம் பயன்படுத்தப்பட்ட இந்த வசனத்தை அவனுக்கு ஆதாரமாகக் கொண்டு வரமுடியாது.