குர்ஆன் வழி நடந்த கோமான் நபி

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

உலகத்தில் வாழ்ந்து மறைந்த எந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு தான் அவரது குணநலன்கள் என்ன? பழக்கவழக்கங்கள் என்ன? அவருக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்பன போன்றவற்றை அறிந்து கொள்வது சாத்தியமாகும்.

ஆனால் இந்தப் பொதுவிதியிலிருந்து அகிலத்திற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் விலக்கு பெறுகிறார்கள். ஆம்! நபிகள் நாயகத்திற்கு மட்டும் அவர்களது வாழ்வுதனை முழுமையாக அறிந்து கொள்ள நம் முன் இரண்டு வழிமுறைகள் உள்ளன.

ஒன்று, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் கொண்டு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வது. இது எல்லாருக்குமான பொது வழிமுறையாகும். மற்றொன்று நபிகள் நாயகத்திற்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பானது. அது தான் புனித ரமலானில் அருளப்பட்ட திருக்குர்ஆன். திருக்குர்ஆன் வாயிலாகவும் நபிகள் நாயகம் எப்படி வாழ்ந்துள்ளார்கள் என்பதைத் தெளிவாகவும், உறுதியாகவும் அறிந்து கொள்ளலாம்.

குர்ஆன் என்பது மக்களைப் பண்படுத்த, நேர்வழிப்படுத்த, நல்வழிப்படுத்த அருளப்பட்ட பொது வேதமாயிற்றே! இதில் மனிதர்களுக்கான அறிவுரைகளும் ஆர்வமூட்டல்களும் தானே இருக்கும்? இத்தகு குர்ஆன் மூலமாக எப்படி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை அறிந்து கொள்ள முடியும்? என்று சற்றே நெருடலாகத் தோன்றலாம்.

முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்ட அருளப்பட்ட வான்மறை வேதமாகத் திருக்குர்ஆன் திகழ்ந்தாலும் குர்ஆனையும், நபிகள் நாயகத்தையும் பிரித்து பார்ப்பது பகலையும், சூரியனையும் பிரித்துப் பார்ப்பதற்குச் சமமானதாகும். திருக்குர்ஆன் வேறு, நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத வகையில் குர்ஆனோடு பிணைந்ததாக நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இருந்தது.

நபிகள் நாயகம் நபித்துவத்தை அடைந்து திருக்குர்ஆன் அருளப்பெற்றதிலிருந்து அன்னாரது வாழ்க்கை திருக்குர்ஆனின் ஒவ்வொரு சொல்லையும் பிரதிபலிப்பதாக இருந்தது. குர்ஆன் பாய்ச்சிய ஒளியினாலேயே நபிகள் நாயகம் தம் வாழ்க்கைப் பாதையை வெளிச்சமுள்ளதாக ஆக்கியிருந்தார்கள்.

இதை அன்னை ஆயிஷா ரலி அவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள்:

عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، قَالَ:
سَأَلْتُ عَائِشَةَ، فَقُلْتُ: أَخْبِرِينِي عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَتْ: «كَانَ خُلُقُهُ الْقُرْآنَ»

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஃத் பின் ஹிஷாம்,
(அஹ்மத்: 25302, 24139)

நபிகள் நாயகத்தின் குணநலண்கள் என்னென்ன என்பதை அறிய எங்கும் அலைய வேண்டியதில்லை. திருக்குர்ஆனை வாசித்தாலே போதுமானது. திருக்குர்ஆன் எதைப் போதிக்கின்றதோ அது தான் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை என்று இரத்தினச் சுருக்கமாக நபியின் வாழ்க்கையை அன்னையவர்கள் விளக்கி விட்டார்கள்.

குர்ஆனின் கட்டளைகளையும், அதற்கேற்ற வகையில் நபிகள் நாயகம் நடந்து கொண்டதையும் அறிந்து கொண்டால் அன்னை ஆயிஷா (ரலி) சொன்னது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மையென்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் அதிக வலுப்பெறும். 

இதோ குர்ஆனைப் பிரதிபலித்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை இந்த உரையில் பார்ப்போம். 

நல்லதைக் கொண்டு தீயதைத் தடுப்பீராக!
وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ‏
وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا‌ۚ وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ‏

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.

(அல்குர்ஆன்: 41:34-35)

நமக்குத் தீங்கிழைக்க முற்படுவோருக்கும், தீங்கிழைத்தவர்களுக்கும் நன்மை செய்து அவர்களை நண்பர்களாக்க முயற்சிக்க வேண்டும் என்று குர்ஆன் அறிவுறுத்துகிறது. அதாவது எதிரிகள் நமக்குச் செய்த தீங்கை மறந்து மன்னித்து விட வேண்டும். அப்படிச் செய்யும் போது தீங்கிழைத்தவன் கூனிக்குறுகி மனந்திருந்திட வாய்ப்புண்டு. அதே நேரம் இந்தக் குணம் எல்லாருக்கும் வாய்த்து விடாதென்றும், இதைக் கடைபிடிப்பவரை மகத்தான பாக்கியம் உடையவர் என்றும் குர்ஆன் புகழாரம் சூட்டுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இறைவசனத்தை அப்படியே உள்வாங்கி தமது வாழ்க்கையில் வெளிப்படுத்தி உள்ளார்கள். ஓரிரு முறை அல்ல, பல முறை நபிகள் நாயகத்தின் வாழ்க்கை மேற்கண்ட வசனத்தின் படி நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பதாகவே இருந்தது. தமக்குத் தீங்கிழைத்த பலரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்முகத்துடன் மன்னித்திருக்கிறார்கள்.

ஒருமுறை நபியவர்களிடம் யாசகம் கேட்க வந்த ஒருவர் சற்றே கடுமையாக நடந்து கொள்கிறார். உச்சகட்டமாக நபிகள் நாயகத்திடம் வன்முறையைப் பிரயோகிக்கிறார். அதனால் நபிகள் நாயகமும் பாதிப்படைகிறார்கள். இருந்தபோதிலும் சிரித்துக் கொண்டே அந்த யாசகருக்குத் தேவையானவற்றை வழங்கும் படி உத்தரவிடுகிறார்கள்.

كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الحَاشِيَةِ، فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَذَبَهُ جَذْبَةً شَدِيدَةً، حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَثَّرَتْ بِهِ حَاشِيَةُ الرِّدَاءِ مِنْ شِدَّةِ جَذْبَتِهِ، ثُمَّ قَالَ: مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ، فَالْتَفَتَ إِلَيْهِ فَضَحِكَ، ثُمَّ «أَمَرَ لَهُ بِعَطَاءٍ

நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களைக் கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால் அந்த கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப் பகுதி நபி (ஸல்) அவர்களுடைய தோளின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்திருந்ததை நான் கண்டேன்.

பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), “தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று கூறினார். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்து விட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
(புகாரி: 3149)

தன்னைக் கொல்ல முன்வந்தவனைக் கூட நபியவர்கள் தண்டிக்காது மன்னித்து விட்டார்கள் என்றால் குர்ஆன் வசனங்களைப் பின்பற்றுவதிலும், பிரதிபலிப்பதிலும் நபிகள் நாயகத்தை நம்மால் ஒரு போதும் மிஞ்ச முடியாது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பிய போது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது.  உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய் விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள்.

தமது வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண் விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி இருந்தார். நபி (ஸல்) அவர்கள், “இவர் நான் தூங்கிக்கொண்டிருக்கும் போது (நான் மரத்தில் தொங்கவிட்டிருந்த எனது) வாளை எனக்கெதிராக உருவிக் கொண்டார்.

நான் கண் விழித்துப் பார்த்தபோது இவரது கையில் உறையிலிருந்து உருவிய (எனது) வாள் இருந்தது. இவர், “என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?’ என்று கேட்டார். நான் “அல்லாஹ்‘ என்று (மூன்று முறை) கூறினேன்” என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),
(புகாரி: 2910)

தமக்குத் தீங்கிழைத்தவர்களைத் தண்டிக்காது மன்னித்து விடுவார் என்று நபிகள் நாயகம் பற்றி தவ்ராத்திலும் வர்ணிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(நபியே!) நாம் உங்களை சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்” எனும் இந்த (48:8ஆவது) குர்ஆன் வசனத்தையே “தவ்ராத்‘ வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்:

“நபியே! நிச்சயமாக நாம் உங்களை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கின்றோம். நீங்கள் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பவர் (“முத்தவக்கில்‘) என்று உங்களுக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்).

(என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ, கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பராகவோ இருக்க மாட்டார்.

ஒரு தீமைக்கு இன்னொரு தீமையினால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்து விட்டு விடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவரது உயிரைக் கைப்பற்ற மாட்டான். மக்கள் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை‘ என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.

(புகாரி: 4838)

பிறரை மன்னிக்க வேண்டும் என்ற வசனம் நபிகள் நாயகத்தை எந்தளவு பாதித்திருந்தது என்றால் தனக்காக யாரையும் நபிகள் நாயகம் பழிக்குப்பழி வாங்கியதில்லை. தனிப்பட்ட முறையில் தனக்குத் துன்பம் தந்த அனைவரையும் மன்னித்தே விட்டிருக்கிறார்கள்.

இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.

«مَا خُيِّرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَمْرَيْنِ إِلَّا اخْتَارَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَأْثَمْ، فَإِذَا كَانَ الإِثْمُ كَانَ أَبْعَدَهُمَا مِنْهُ، وَاللَّهِ مَا انْتَقَمَ لِنَفْسِهِ فِي شَيْءٍ يُؤْتَى إِلَيْهِ قَطُّ، حَتَّى تُنْتَهَكَ حُرُمَاتُ اللَّهِ، فَيَنْتَقِمُ لِلَّهِ»

(பொதுவாக) இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் அவ்விரண்டில் இலேசானதையே எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாயிருந்தால் அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! தமக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென எவரையும் எப்போதும் அவர்கள் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக) அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
(புகாரி: 6786)

சமூகத்தைப் பாதிக்காத வகையிலும், மார்க்கத்தின் புனிதம் கெடாத வகையிலும் தனக்கு இழைக்கப்படும் துன்பங்கள் யாவற்றையும் நபிகள் நாயகம் மன்னித்து உள்ளார்கள் என்றால் குர்ஆனின் வசனங்களை, கட்டளைகளைப் பிரதிபலிப்பதில் நபியவர்களுக்கிருந்த குன்றா ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆலோசனை செய்!

முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்தாலும் அவர்களும் தம் சகாக்களிடம் பல விஷயங்களில் ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் நபியவர்களுக்குக் கட்டளையிடுகிறது.

 وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏

காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அல்குர்ஆன்: 3:159)

ஒரு இறைத்தூதர் தனக்கு இறைவனின் புறத்திலிருந்து வஹியாக அருளப்படுபவை குறித்து மக்களிடம் ஆலோசனை கேட்கத் தேவையில்லை. வஹீச் செய்தியை மற்றவர்களை விட நபியே நன்கறிந்தவர்கள் ஆவார்கள். அப்படியென்றால் ஆலோசனை செய்வீராக என்று அல்லாஹ் கட்டளையிடுவது வஹியல்லாத இதர விஷயங்கள் குறித்து தான் என்பதைத் தெளிவாக அறியலாம். இறைவனின் இவ்வசனத்திற்கும் நபிகள் நாயகம் அழகாய் செவிசாய்த்துள்ளார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதராயிற்றே, சமூகத்தில் பெரும் அந்தஸ்து மிக்கவனாயிற்றே, நான் போய் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதா? என்ற கர்வம் துளியும் இல்லாமல் பல விஷயங்கள் குறித்து நபிகள் நாயகம் மற்றவர்களிடம் ஆலோசனை செய்திருக்கிறார்கள். ஆலோசனை கேட்பது மட்டுமின்றி மற்றவர்களின் கருத்துக்களைச் சரியெனக் கருதும் போது அதற்கு மதிப்பளித்தும் உள்ளார்கள்.

பத்ருப் போர்க்களத்தில் வெற்றி வாகை சூடி முக்கிய எதிரிகளை கைதிகளாய்ப் பிடித்து வைத்துக் கொண்டு அவர்களை என்ன செய்யலாம் என்று தம் சகாக்களுடன் நபிகளார் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். ஆலோசனையில் சொல்லப்பட்ட கருத்துக்களைச் சீர்தூக்கி பார்த்தே அதில் ஒரு முடிவை எடுக்கிறார்கள்.

முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறை பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் “இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?” என்று (ஆலோசனை) கேட்டார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே! அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்” என்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?” என்று கேட்டார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர்கள்), அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்றதன்று. மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்து விடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்களை விடுவிக்க வேண்டாம்)” என்று (ஆலோசனை) கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது: அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! நீங்களும், உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!” என்று கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்து விடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன். ஆனால், (இதோ) இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு அருகிலிருந்த ஓர் மரத்தைக் காட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், “பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது” என்று தொடங்கி, “நீங்கள் அடைந்த போர்ச் சொல்வங்களை அனுமதிக்கப்பட்ட தூய்மையானவையாகவே (கருதி) உண்ணுங்கள்” (அல்குர்ஆன்: 8:67-69) என்பது வரை (மூன்று வசனங்களை) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்களை அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான்.

(முஸ்லிம்: 3621)

அதே போல ஒரு கட்டத்தில் தம் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்களை, ஸஃப்வான் பின் முஅத்தல் எனும் நபித்தோழருடன் இணைத்து விஷமிகள் அவதூறு பரப்பினர்.

இச்சம்பவம் நபியவர்களுக்கு மனக்கவலையை அளித்த போது தம் சொந்தக் குடும்ப விவகாரமாக இருந்த போதிலும் அலீ, உஸாமா, பரீரா ஆகியோரை அழைத்து அவர்களிடம் இது குறித்து ஆலாசனை நடத்தியுள்ளார்கள். கருத்து கேட்டறிந்து கொண்டார்கள் என்று வரலாறு சான்றளிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள்.  அப்போது “வஹீ‘ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்” என்று அவர்கள் கூறினார்கள்.

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களோ (நபி (ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றி பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, “பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கின்றாயா?” என்று கேட்டார்கள்.

அதற்கு பரீரா (ரலி), “தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார்.

(புகாரி: 2661)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவைத் தரிசிக்க நபித்தோழர்களுடன் புறப்பட்டுச் சென்ற போது ஹுதைபிய்யா எனுமிடத்தில் எதிரிகளால் தடுக்கப்படுகிறார்கள்.

பிறகு அங்கேயே இணை வைப்பாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் நிறைவேறுகிறது. ஒப்பந்தம் எழுத்தாகி விட்ட போது முஸ்லிம்களிடம் முடியை மழித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் கூறுகிறார்கள். ஆனால் இணைவைப்பாளர்கள் விதித்த பல நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடிவானதால் இணை வைப்பாளர்களுக்குப் பணிந்து போய் விட்டோமே என்ற ஆதங்கத்தில் நபித்தோழர்கள் யாரும் நபியின் கட்டளைக்கு செவி சாய்க்கவில்லை.

இப்போது நபி (ஸல்) அவர்கள் தம் கட்டளைக்கு செவிசாய்க்காத தோழர்கள் குறித்து தம் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படியே நடந்தார்கள். நபியவர்களின் பிரச்சனையும் தீர்ந்தது என்பதை வரலாற்றில் அறிகிறோம்.

உம்மு சலமா அவர்கள் அப்படி என்ன ஆலோசனை வழங்கினார்கள் என்பது பின்வரும் செய்தியில் இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, “எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அதிருப்தியை(யும், அதனால் அவர்கள் தமக்குக் கீழ்ப்படியாமலிருப்பதையும்) சொன்னார்கள். உடனே உம்மு சலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா?

(நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடி களையப்) புறப்படுங்கள். நீங்கள் (தியாகப் பிராணிகளான) குர்பானி  ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்” என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து விட்டு,  தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்களில் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன்  மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு (தியாகப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.

(புகாரி: 2732)

பொதுவாக ஆண்கள் ஆலோசனை கேட்பதென்பதே அரிது. அதிலும் பெண்களிடம், மனைவியிடம் ஆலோசனை கேட்பது அரிதிலும் அரிது. தான் ஓர் இறைத்தூதராக இருந்தும், இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்தும் தன்னிகரற்ற தலைவராக இருந்தும் நெருக்கடியின் போது தம் மனைவியிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆலோசனை பெற்றிருப்பது நபியவர்களின் வாழ்க்கையில் ஆலோசனைகளுக்குப் பெரும் பங்கிருப்பதைச் சந்தேகமற உணர்த்தி விடுகிறது.

இறைத்தூதராகவும், சிறந்த அறிவாளியாகவும், போர் வியூகராகவும் திகழ்கிற நபிகள் நாயகம் மற்றவரிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் ஆட்சித்துறை சம்பந்தமாகவும், குடும்ப தொடர்பாகவும் ஆலோனை கேட்டிருக்கிறார்கள் என்றால் குர்ஆன் வசனங்களையே தம் வாழ்க்கையாக ஏற்று நடந்துள்ளார்கள் என்பதும், குர்ஆனின் கட்டளைகளுக்கு அப்பால் நபியின் வாழ்க்கை இருக்கவில்லை என்பதுமே நாம் இவற்றிலிருந்து அறிய வேண்டிய முக்கிய பாடமாகும். காரணம், நபியின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது.

பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்