பாசமிகு தூதர் முஹம்மது (ஸல்)

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏

உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.

(அல்குர்ஆன்: 9:128)

திருக்குர்ஆனையே தமது வாழ்க்கையாகக் கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கண்ட வசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக சமுதாயத்தின் மீது பேரன்பு கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மீது அன்பை வெளிப்படுத்திய பாசமிகு நிகழ்வுகள் சிலவற்றை நாம் இந்த உரையில் காண்போம்.

பாசத்திற்குப் பதவி முக்கியமில்லை

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆவதற்கு முன்பே மக்களின் மீது அன்பு கொண்டவர்களாக இருந்துள்ளார்கள் என்பதைக் கீழ்க்காணும் ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْجُفُ فُؤَادُهُ، فَدَخَلَ عَلَى خَدِيجَةَ بِنْتِ خُوَيْلِدٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَ: «زَمِّلُونِي زَمِّلُونِي» فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ، فَقَالَ لِخَدِيجَةَ وَأَخْبَرَهَا الخَبَرَ: «لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي» فَقَالَتْ خَدِيجَةُ: كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَكْسِبُ المَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ،

ஆயிஷா (ரலி) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி)யிடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள்.

அப்போது கதீஜா (ரலி) அவர்கள் ‘அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்) நீங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்’ என்றார்கள்.

(புகாரி: 3)

பாசத்திற்கு பதவி தடையில்லை

மதீனாவில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் என் பேரீச்சம் பழங்களுக்காக, அவை அறுவடை செய்யும் (நாள்) வரை எனக்குக் கடன் கொடுத்திருந்தார். ரூமா கிணற்றுச் சாலையிலிருந்த நிலம் எனக்குச் சொந்தமாயிருந்தது. அது விளைச்சல் தரவில்லை. ஆகவே, கடன் ஓர் ஆண்டு தள்ளிப் போனது. அந்த யூதர் அறுவடை வேளையில் என்னிடம் வந்தார். (ஆனால்,) அந்த நிலத்திலிருந்து நான் எதையும் (அந்த ஆண்டு) அறுவடை செய்யவில்லை. ஆகவே, நான் அவரிடம் அடுத்த ஆண்டு வரை அவகாசம் தரும்படி கேட்கலானேன்.

அவர் மறுக்கலானார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தம் தோழர்களிடம் புறப்படுங்கள்; நாம் ஜாபிருக்காக அந்த யூதரிடம் அவகாசம் கேட்போம் என்று சென்னார்கள். நான் எனது பேரீச்சந் தோப்பில் இருந்த போது அவர்கள் (அனைவரும்) என்னிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரிடம் பேசத் தொடங்க, அவர் அபுல் காசிமே! நான் அவருக்கு அவகாசம் அளிக்க மாட்டேன் என்று கூறலானார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் எழுந்து பேரீச்சம் மரங்களுக்கு இடையே சுற்றி வந்தார்கள்; பிறகு, அந்த யூதரிடம் சென்று மீண்டும் பேசலானார்கள். அப்போதும் அவர் மறுத்து விட்டார்.

பிறகு, நான் எழுந்து செங்காய்கள் சிலவற்றைக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் (அதை) உண்டார்கள். பிறகு (நீ ஓய்வெடுக்கும்) பந்தல் எங்கே ஜாபிர்? என்று கேட்டார்கள். நான் அதைக் காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கு அங்கே படுக்கை தயார் செய் என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவர்களுக்குப் படுக்கை விரித்துக் கொடுத்தேன். அவர்கள் (அதனுள்) சென்று உறங்கிப் பிறகு விழித்தார்கள். இன்னொரு கைப்பிடி (செங்காய்களை) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தேன். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு, எழுந்து அந்த யூதரிடம் (மீண்டும்) பேசினார்கள். அவர் அதற்கும் (உடன்பட) மறுத்து விட்டார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் முறையாக செங்காய்கள் கொண்ட பேரீச்சம் மரங்களுக்கிடையே நின்றார்கள். பிறகு, ஜாபிரே! (பழத்தைப்) பறித்து (உனது கடனை) அடைப்பாயாக! என்று சொன்னார்கள். அவர்கள் பறிக்குமிடத்தில் நிற்க, நான் (எனது கடனை) அடைக்கும் அளவுக்கு மரத்திலிருந்து (பழங்களைப்) பறித்தேன். (பிறகும்) பழம் மீதமிருந்தது. நான் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நானே சாட்சியம் அளிக்கின்றேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
(புகாரி: 5443)

இதில் சாதாரண ஏழை நண்பரின் மீதுள்ள அரசனின் இத்தகைய பாசம் ஓர் அசாத்தியம்.

பாதிப்பு ஏற்படுத்தியவருக்கும் பாசம் காட்டிய நபி

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘(தாங்கள் காயமடைந்து) உஹதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்குப் பதிலளிக்கவில்லை.

எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும், அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான்.

அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, ‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் சரி” என்று கூறினார். உடனே, நான் இந்த மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களைத் தண்டிக்க வேண்டாம்)” என்று சொன்னேன்.

(புகாரி: 3231)

நரக நெருப்பை விட்டும் பாதுகாப்பதற்காக பாதிப்பை ஏற்படுத்தியவருக்கும் பாசத்தைக் காட்டினார்கள்.

பாசத்திற்குப் பகட்டில்லை
انَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرِضَ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ: «أَسْلِمْ»، فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ»

அனஸ்(ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலைமாட்டில் அமர்ந்து, ‘இஸ்லாத்தை ஏற்றுக் கொள்!’ என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான்.

அப்போது அவர், ‘அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு” என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்” எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

(புகாரி: 1356)

فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا‏

இச்செய்தியை அவர்கள் நம்பாவிட்டால் அவர்களுக்காகக் கவலைப் பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.

(அல்குர்ஆன்: 18:6)

பாசமிகு தாய்ப் பறவையின் கதகதப்பான அரவணைப்பில் கிடக்கும் குஞ்சுகள் தாய்ப் பறவை இறந்துவிட்டால் எவ்வாறு தவியாய்த் தவிக்குமோ அதுபோன்ற தவிப்பிற்கு அவர்கள் உள்ளாகிறார்களே! மக்கள் நரகத்திற்குச் சென்று விடக் கூடாது என்று பதறுகின்றார்களே! இது என்ன மாயம்? கவலையால் மாய்த்துக் கொள்ளும் அளவுக்கான இப்பாசத்திற்கு இணையில்லை இவ்வுலகிலே!

பிரதிபலனை எதிர்பார்க்கவில்லை

“இறைவனே! இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழிகெடுத்து விட்டன எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார்” என்று இப்ராஹீம் நபி கூறியதாகக் குறிப்பிடும் (அல்குர்ஆன்: 14:36) வசனத்தையும்,  “அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்)” என்று ஈஸா நபி கூறியதாக குறிப்பிடும் வசனத்தையும் நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள். பிறகு தம் கையை உயர்த்தி, “இறைவா! என் சமுதாயம்! என் சமுதாயம்” என்று கூறி அழுதார்கள்.

(அப்போது) இறைவன் அதை அறிந்த நிலையிலே, “ஜிப்ரீலே முஹம்மதிடம் சென்று உம்மை அழச் செய்தது எது? என அவரிடம் கேளுங்கள்” என்று கூறினான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து அதைக் கேட்டார்கள். நபி (ஸல்) விஷயத்தைக் கூறினார்கள். (அப்போது) ஜிப்ரீலே முஹம்மதிடம் சென்று, “நாம் உம் சமுதாயம் விஷயத்தில் உம்மைக் கண்ணியப்படுத்துவோம், உம்மை மறக்க மாட்டோம்” என்று சொல்லுங்கள் என அல்லாஹ் கூறினான்.

(முஸ்லிம்: 346, 520)

முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்’ என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போய்ப் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாளனின் உற்ற நண்பராவார்’ என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும், ‘அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவராவார்’ என்று சொல்வார்கள்.

உடனே, மக்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும், அவனுடைய வார்த்தையும் ஆவார்’ என்று சொல்வார்கள். உடனே, மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா (அலை) அவர்கள் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் போய்ப் பாருங்கள்’ என்று சொல்வார்கள்.

உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், ‘நான் அதற்குரியவன் தான்’ என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் என்னுடைய எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் விழுவேன்.

அப்போது ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்‘ என்று சொல்லப்படும். அப்போது நான், ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்‘ என்பேன். அப்போது, ‘செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்ததோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்’ என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன்.

பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும். ‘முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும் பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்‘ என்று கூறப்படும். அப்போது நான், ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்; என்று சொல்வேன். அப்போது ‘சொல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் ‘அணுவளவு’ அல்லது ‘கடுகளவு’ இறை நம்பிக்கை இருந்தோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்’ என்று சொல்லப்படும்.

நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்‘ என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும்.

அப்போது நான், ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்‘ என்பேன். அதற்கு அவன், ‘செல்லுங்கள்: எவருடைய உள்ளத்தில் கடுகு மணியை விட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்’ என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன்.

(புகாரி: 7510)

சமுதாயத்தின் மீது தாம் அன்பு கொண்டிருந்ததைப் போன்றே மக்கள் அனைவரும் அன்பு காட்ட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 5997)

لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறை நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
(புகாரி: 13)

لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
(முஸ்லிம்: 5122)

ஆகவே தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பாசமிகு தலைவராக இருந்த சில நிகழ்வுகளை இந்த உரையில் நாம் தெரிந்துக் கொண்டோம். நாமும் அல்லாஹ்வுடைய தூதரின் பாசத்திலும், அன்பிலும் படிப்பினை கொண்டு வாழும் நன் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.