கப்ருகளின் மேல் கட்டப்பட்டுள்ளதா கஃபா ஆலயம்? 

பயான் குறிப்புகள்: கொள்கை

கப்ருகளின் மேல் கட்டப்பட்டுள்ளதா கஃபா ஆலயம்?

 கப்ரு வணங்கிகளின் கயமைத்தனம்

தர்கா வழிபாட்டை ஆதரிக்கும் வழிகெட்ட கூட்டத்தினருக்குக் குர்ஆன் என்றாலே ஆகாது. ஹதீஸ் என்றால் என்னவென்றே தெரியாது. இவர்களின் சன்மார்க்க (?) பிரச்சார ஏடுகளில் குர்ஆனையோ, ஹதீஸ் களையோ அதிகம் குறிப்பிட மாட்டார்கள். தங்களது மனோ இச்சையை நியாயப்படுத்தும் படி யாரேனும் சில கருத்துக்களைக் கூறியிருந்தால் அதைத் தேடி எடுத்து பக்கங்களை நிரப்பி விடுவார்கள்.

இக்குறைமதியாளர்கள் எதை ஹதீஸ் என்று கருதுகிறார்களோ அதை நபியின் பெயரால் எடுத்தெழுதி தங்கள் வழிகேட்டை நியாயப்படுத்த முனைவார்கள். அப்படித்தான் பரேலவிகளின் ஒரு பத்திரிக்கையை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அது அவர்களுக்கே   உரிய சர்வ லட்சணங்களையும் பொதிந்திருந்தது. இந்த லட்சணத்தில், “ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு’ என்ற “ஓம்ஸ்’ (?) விதியின் படி… என்று தத்துவம் வேறு அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்கள்.

“ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு’ என்பது நியூட்டனின்  மூன்றாம் விதி என்பதைக் கூட அறியாத அறிவிலிகள், அறிவியலும் தெரியாமல் ஆன்மீகமும் தெரியாமல் தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி இருக்கிறார்கள். அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு கட்டுரையில் தர்காவை ஆதரிக்கப் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.

இறந்தவர்கள் எங்கும் இருக்கிறார்கள், ஏன் முதல் ஆலயமான கஃபாவைச் சுற்றிலும் அதன் கீழும் எல்லா இடங்களிலும் அடக்கமாகி இருக்கிறார்கள். அதன் மேல்தான் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதை யாரும் தர்கா என்று சொல்வதில்லை. கஃபாவின் வாசலில் ஆதித் தந்தையினர் தலைமாடு உள்ள தென்றும் சுமார் 7 நபிமார்கள் அதனைச் சுற்றி அடங்கப் பட்டுள்ளனர் என்றும் ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் மிஷ்காதுல் மஸாபீஹ்)

கஃபாவின் கீழேயும் அதைச் சுற்றிலும் நபிமார்கள், நல்லோர்களின் அடக்கத்தலங்கள் உள்ளதாம். அதன் மேல்தான் கஃபா எனும் புனித ஆலயமே எழுப்பப்பட்டுள்ளதாம். அப்படியிருக்க அதே போன்று இறந்தவர்களின் மேல் கட்டடம் – தர்கா எழுப்புவதை எப்படி குறை கூற முடியும்?

இது தான் கட்டுரையாளர் முன் வைக்கும் அறிவீன வாதமாகும்.

இவர்களுக்கு ஹதீஸ் என்றால் என்னவென்றே தெரியாது என்ற நமது முன்னுரையை மெய்ப்பிக்கும் வகையில் தான் இந்த வாதம் அமைந்துள்ளது. மார்க்கத்தின் பெயரால் ஒரு கருத்தைச் சொல்வதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்லியிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மார்க்கம் தடுத்த ஒன்றை, அது ஆகுமானதே என்று கூறுவதாக இருந்தால் அதற்குச் சரியான, தகுந்த ஆதாரத்தை முன்வைக்க வேண்டும்.

இறந்தவர்களின் மேல் சமாதியை எழுப்புவது இறை சாபத்திற்குரியது என்று பல நபிமொழிகள் எச்சரிக்கின்றன.

“அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்து வானாக! தம் இறைத் தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்” என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 437)

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப் பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, “யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்து வானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 1330)

கப்ருகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படு வதையும் அதன் மீது உட்காரு வதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(முஸ்லிம்: 1765)

இறந்தவர்களின் அடக்கத்தலத்தின் மேல் தர்கா எழுப்புவது கூடாது என்று இந்த நபிமொழிகள் தெளிவாக எடுத்துரைத்திருக்கும் போது, “இல்லையில்லை தர்கா கட்டுவது குற்றமல்ல, கஃபாவுக்கு கீழேயே கப்ருகள் தான் உள்ளன” என்று சொல்வதாக இருந்தால் மேற்கண்ட நபிமொழிகளுக்குத் தகுந்த விளக்கம் சொல்ல வேண்டும்.

மேலும் கஃபாவுக்குக் கீழே நபிமார்கள், நல்லோர்களின் கப்ர்கள் உள்ளது என்ற தங்கள் கருத்துக்குரிய வலுவான சான்றுகளை முன்வைக்க வேண்டும். கஃபாவின் வாசலில் ஆதித் தந்தையினர் தலைமாடு உள்ளதாம், அவர்களின் கால்மாடு எங்கே உள்ளது என்பதைக் குறிப்பிடாமல் விட்டு விட்டார்கள். அது போக கஃபாவைச் சுற்றி 7 நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்களாம்.

இப்படிப் போகிற போக்கில் சொல்வதெல்லாம் மார்க்கமாகி விடாது.

உலகில் முதலில் கட்டப்பட்ட ஆலயம் கஅபா என்று குர்ஆன் கூறுகிறது.

அகிலத்தின் நேர்வழிக்குரிய தாகவும், பாக்கியம் பொருந்திய தாகவும் மனிதர்களுக்காக அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

(அல்குர்ஆன்: 3:96)

ஆதம் (அலை) அவர்கள் தான் கஅபாவைக் கட்டினார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது. அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் கட்டப்பட்ட க அபா ஆலயத்தில் அவரது கப்ரு எப்படி இருக்கும்? தன்னை அடக்கம் செய்து விட்டு அவர் கஅபாவைக் கட்டினாரா?

ஹதீஸ் உண்டா?

சரி. இவர்கள் சொல்வதற்கு ஏதும் ஆதாரம் உள்ளதா? என்றால் கஃபாவைச் சுற்றிலும், அதன் கீழும் கப்ர்கள் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.

கஃபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளன என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது.

இப்னு அப்பாஸ் ரலி கூறியதாவது:

மஸ்ஜிதுல் ஹாரமில் இரண்டு கப்ருகள் உள்ளன. அவற்றைத் தவிர வேறு எதுவும் அங்கில்லை. அவை இஸ்மாயீல் (அலை) மற்றும் ஷூஐப் (அலை) அவர்களின் கப்ருகளாகும். இஸ்மாயீல் அலை அவர்களின் கப்ர் ஹிஜ்ர் பகுதியில் ருக்னுல் அஸ்வத் – ஹஜருல் அஸ்வதிற்கு – நேராக உள்ளது.

அக்பாரு மக்கா, பாகம் 2,  பக்கம் 124

இது நபிகள் நாயகம் கூறியதாக இல்லை. இப்னு அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழரின் சொந்தக் கூற்றாகவே கூறப்பட்டுள்ளதால் இதை நாம் ஏற்க வேண்டியதில்லை. மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக உள்ள இந்தச் செய்தியும் ஏற்கத்தக்க செய்தி அல்ல. முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.

இதில் இடம்பெற்றுள்ள முஹம்மத் பின் ஸாயிப் அல்கல்பீ என்பவரை அறிஞர்கள் பலரும் பலவீனமானவர், பொய்யர், மூளை குழம்பியவர் என்று குறை கூறியுள்ளனர்.

இமாம் நஸாயி இவரை நம்பகமானவர் அல்ல, இவரது செய்திகள் எழுதப்படாது என்றும் ஹதீஸ் துறை அறிஞர்கள் இவரைப் பொய் சொல்பவராகக் கருதுகிறார்கள் என்று குர்ரா பின் காலித் என்பாரும் விமர்சித்துள்ளனர்.

இவர் ஹதீஸ் துறையில்  மதிப் பில்லாதவர். இவரைப் புறக்கணிப்பதில் அறிஞர்கள் அனைவரும் ஒருமித் துள்ளனர் என்று இமாம் அபூஹாதம் அவர்கள் விமர்சித்துள்ளார்.

இமாம் தாரகுத்னீ, ஹாகிம், ஸாஜி ஆகியோர் இவர் புறக்கணிக்கப்பட வேண்யடிவர் என்று குறை கூறியுள்ளனர். இப்னு அப்பாஸ், அபீ ஸாலிஹ் வழியாக நான் அறிவிக்கும் செய்திகள் பொய்யானாதாகும். அதை அறிவிக்காதீர்கள் என்று அவரே (கல்பீ) தன்னைப் பற்றி கூறியுள்ளதாக இமாம் சுப்யான் அஸ்ஸவ்ரீ கூறுகிறார்.

பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்-9, பக்-158

மேற்கண்ட அறிவிப்பு இப்னு அப்பாஸ், அபீஸாலிஹ் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பல அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட தொடர்புடைய ஹதீஸ் அறிவிப்பாளரே இது பொய்யான அறிவிப்பு என்று இனம் காட்டிய பிறகு இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்வது அறிவீனத்தின் உச்சமாகும். எனவே இந்தப் பொய்யான செய்தியை அடிப்படையாக கொண்டு கஃபாவின் கீழ் கப்ருகள் உள்ளன என்ற தங்கள் கருத்தை நிலைநாட்ட இயலாது.

செய்தி: 2

இக்கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பின்வரும் செய்தியும் அமைந்துள்ளது.

அப்துல்லாஹ் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மகாமு இப்றாஹீமிலிருந்து ருக்னுல் யமானீ பகுதி வரையிலும் ஜம்ஜம் அமைந்த இடத்திலிருந்து ஹிஜ்ர் பகுதி வரையிலும் உள்ள இடைப்பட்ட இடத்தில் சுமார் 99 நபிமார்களின் கப்ருகள் உள்ளன. அவர்கள் ஹஜ் செய்ய வந்தார்கள். (பிறகு) அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.

மஸாயிலுல் இமாம் அஹ்மத்,

பாகம் 1,  பக்கம்-408

இந்தச் செய்தியை இமாம் அஹ்மத் அவர்களின் மகன் ஸாலிஹ் தனது மஸாயில் என்ற நூலில் கொண்டு வருகிறார். இந்தச் செய்தியும் நபிகள் நாயகம் கூறியதாகவோ, நபித்தோழர் கூறியதாகவோ இல்லை. மாறாக அப்துல்லாஹ் பின் ளம்ரா என்ற தாபியி சொன்னதாகவே வருகிறது.

இதுவே இந்தச் செய்தியை நாம் ஆதாரமாக ஏற்க முடியாது என்பதற்கு போதுமான காரணமாகும். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் சுலைம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது நினைவாற்றல் ரீதியாக பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

இவரது ஹதீஸில் சில குறைகள் உள்ளதாக இமாம் அஹ்மத் அவர்களும், இவரது ஹதீஸ் எழுதப்படும் ஆனால் ஆதாரமாக கொள்ளப்படாது என்று இமாம் அபூஹாதம் அவர்களும், உபைதில்லாஹ் பின் அம்ர் வழியாக அறிவிக்கும் போது இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் நஸாயீ அவர்களும் தூலாபி எனும் அறிஞர் இவர் அவ்வளவு உறுதியானவர் அல்ல என்று விமர்சித்துள்ளார்கள்.

இமாம் தாரகுத்னீ அவர்கள் இவர் நினைவாற்றல் மோசமானவர் ஆவார் என்று விமர்சித்துள்ளார்.

பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 11, பக்கம்-198

இத்தகைய விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டவர் இடம்பெற்றுள்ள, நபியின் கூற்றாகவும் இல்லாத இந்தச் செய்தி கண்டிப்பாக நமது கொள்கையை நிர்ணயிக்கவோ நமது நம்பிக்கையை தீர்மானிக்கவோ உதவாது.

மேலும் ஹஜ் செய்ய வந்த நபிமார்கள் அங்கே மரணித்து இருந்தாலும் அங்கே அடக்கம் செய்யப்பட்டு இருக்க முடியாது. இதில் சுட்டிக்காட்டப்படும் பகுதிதான் தவாப் செய்யும் பகுதியாகும். மக்கள் தவாப் செய்து கொண்டு இருக்கும் போது அந்த இடத்தில் எப்படி நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அதுவும் 90 நபிமார்களும் ஒரே நாளில் ஹஜ் செய்ய வந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒருவர் வந்திருக்கலாம். ஒவ்வொரு நபியும் மக்காவில் மரணித்த போதும் சொல்லி வைத்தது போல் தவாப் செய்வதைத் தடுக்கும் வகையில் அங்கே அடக்கம் செய்வார்களா?

இதை பரேலவிகள் உண்மை என்று நம்பினால் நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஏறி மிதிக்கலாம்; அதற்கு எந்த மதிப்பும் கொடுக்கத் தேவை இல்லை என்று பத்வா கொடுக்க வேண்டும். அல்லது தவாப் செய்யும் சுற்றுப் பாதையில் நபிமார்களின் கப்ருகள் உள்ளதால் இனிமேல் கஅபாவை தவாப் செய்யக் கூடாது என்று சொல்ல வேண்டும்.

இரண்டில் எதைச் சொல்லப் போகிறார்கள்?

நபிகள் நாயகம் மற்றும் நபித்தோழர்கள் கூட சம்பந்தப்படாத இந்தச் செய்தி இவர்களது கருத்திற்கு ஒரு போதும் ஆதாரமாகாது. கஃபாவைச் சுற்றி கப்ருகள் உள்ளது தொடர்பாக நபிகள் நாயகம் கூறியதாக அல்குனா வல் அஸ்மா என்ற நூலில் பின்வருமாறு ஒரு செய்தி பதிவாகியுள்ளது.

செய்தி: 3

ஆயிஷா (ரலி) அறிவிப்பதாவது

இஸ்மாயியீல் (அலை) அவர்களின் கப்ர் ஹிஜ்ர் பகுதியிலே உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்குனா வல்அஸ்மா

பாகம் 1, பக்கம்-239

இதில் யஃகூப் பின் அதாஃ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.

இவர் பலவீனமானவர் என்று இமாம் அபூசுர்ஆ மற்றும் இப்னு மயீன் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

இமாம் அஹ்மத் இவரை மறுக்கப்பட வேண்டியவர் என்று குறை கூறியுள்ளார்.

பார்க்க: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 9, பக்கம் 211

இமாம் தஹபீ அவர்களும் இவரை பலவீனமானவர் என்கிறார்.

அல்காஷிஃப்,

பாகம் 2, பக்கம் 395

இது பலவீனமான செய்தி என்பதைப் பல அறிஞர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சுமார் 600 வருடங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த இமாம் ஸகாவீ அவர்கள் இதை பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

அல்மகாஸிதுல் ஹஸனா,

பாகம் 1, பக்கம்-484

எனவே இதுவும் ஏற்கத்தக்க செய்தி அல்ல.

தவாப் செய்யும் சுற்றுப் பாதையில் எப்படி இஸ்மாயீல் (அலை) அவர்களை அடக்கம் செய்திருப்பார்கள்? அப்படியானால் தவாப் செய்யும் போது அந்தக் கப்ரை ஏறி மிதித்து தான் தவாப் செய்கிறார்களா?

அறிவற்ற கப்ர் முட்டிகள்

இஸ்மாயீல் (அலை) உள்ளிட்ட எந்த நபியும் கஃபாவின் கீழ்ப் பகுதியிலோ அல்லது கஃபாவைச் சுற்றியோ அடக்கம் செய்யப் பட்டிருப்பதாக அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ எங்கும் சொல்லவில்லை. மேலும் கஃபா என்பது இறைவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட முதல் ஆலயம் ஆகும்.

ஆதம் அலை அவர்கள் காலத்திலேயே இந்த கஃபா கட்டப்பட்டு விட்டது.

எந்த நபிமார்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகப் புழுகுகிறார்களோ அவர்களது பிறப்பு – இறப்பிற்கு முன்பாகவே கஃபா ஆலயம் கட்டப்பட்டு விட்டது. இறைவனால் அது சிறப்பிக்கப்பட்டும் விட்டது.

அத்தகைய கஃபா ஆலயத்தின் சிறப்பு எந்த தனிமனிதர்களை கொண்டும் அல்ல என்பதை விளங்கி கொள்ள வேண்டும். இவர்கள் கூறியபடி அங்கே சிலர் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் கஃபா ஆலயத்திற்கு எந்தச் சிறப்பும் கிடையாது.

மஸ்ஜிதுந் நபவீ வரலாறு அறியாத மடையர்கள்

ஓரிடத்தில் பள்ளிவாசல் கட்டும் போது அங்கே சில மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தால் அவர்களது உடல்களை அப்புறப் படுத்தி வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும். மனித உடல்களை அப்புறப் படுத்திய பிறகே அங்கே பள்ளிவாசல் எழுப்ப இயலும். இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழிமுறையாகும்.

மஸ்ஜிதுந் நபவீ இந்த அடிப் படையிலேயே கட்டப்பட்டுள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டும்படி பணித்தார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்து வரச் சொல்லி) ஆளனுப் பினார்கள். (அவர்கள் வந்தபோது), “பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்” என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர்.

நான் உங்களிடம் கூறுபவை தாம் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன: அதில் இணை வைப்பாளர்களின் சமாதிகள் இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சிலபேரீச்ச மரங்களும் அதில் இருந்தன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டுவதற்காக அங்குள்ள) சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப் பட்டன. பேரீச்சமரங்களை வெட்டும் படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 428)

இந்த வரலாறு அறியாத மடையர்கள் தான் கஃபாவைச் சுற்றி நபிமார்கள் அடங்கி உள்ளதாக ஆதாரமற்றுப் பிதற்றுகிறார்கள். ஒரு வாதத்திற்கு இவர்கள் சொன்னபடி கஃபாவைச் சுற்றி பல நபிமார்கள் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள் என்றாலும் கூட இன்று அவை கண்டறிய முடியாத படி சமமாக உள்ளது. அவற்றின் மீது வானுயர எந்தக் கோபுரமும், கட்டடமும் கட்டப் பட்டிருக்கவில்லை.

பூமாலைகள் இல்லை, சந்தனங்கள் இல்லை, ஊது பத்திகளோ உண்டியல்களோ இல்லை. சாதாரண தரையாகவே கஃபாவைச் சுற்றிலும் காட்சியளிக்கிறது. அப்படியிருக்க இது எப்படி மேலெழும்பிய தர்கா கட்டி வழிபாடு என்ற பெயரில் இவர்கள் கூத்தடிப் பதற்கும், கும்மாளமிடுவதற்கும் ஆதாரமாகும்? கல்லை வழிபடும் கப்ர் முட்டிகளிடம் அறிவார்ந்த வாதத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை மறந்து விடக்கூடாது.