கோடை வெயிலும் குளு குளு சொர்க்கமும்!
கோடை வெயிலும் குளு குளு சொர்க்கமும்!
வழக்கமாக மே மாதத்தில் தெறிக்கின்ற கோடை வெயில் இப்போது மார்ச் மாதமே தெறிக்க ஆரம்பித்து விட்டது. ஏப்ரலில் அது ஏறுமுகத்தில் போய்க் கொண்டிருக்கின்றது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வீசுகின்ற அனல் காற்றுக்கு இது வரை நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இவ்விரு மாநிலங்களில் 118 டிகிரி வெயில் அடிக்கின்றது. இதன் விளைவாக கொதிக்கின்ற சட்டியில் பொறிக்க வேண்டிய முட்டையை கொதிக்கின்ற சாலையில் பொறிக்கின்றனர். அந்த அளவுக்குக் கோடையின் வெப்பம் உக்கிரத்தை அடைந்திருக்கின்றது.
சென்ற ஆண்டு இதே கோடையில் ஆந்திராவில் 1700 பேரும், தெலுங்கானாவில் 500 பேரும் பலியாயினர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்திலும் கோடை வெயிலுக்கு இந்த ஆண்டு மக்கள் ஒரு சில இடங்களில் பலியாகிக் கொண்டிருப்பதை ஊடகங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் வேலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் கோடை வெயில் 105, 106, 107 என்று ஏறிக் கொண்டே சென்று 110 டிகிரியைத் தொட்டு விட்டது. இதன் விளைவாக ஒரு பக்கம் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் தங்கள் வீடுகளில் ஏர் கண்டிஷனர்களை மாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஓரிரு வேளைகள் சாப்பிடாமல் இருந்து விட்டு போகலாம். ஆனால் இந்த வெயிலின் வெட்கையில் மாட்டித் தவிக்க முடியாது என்று கூற ஆரம்பித்து விட்டனர்.
மற்றொரு பக்கம், “ஏழைகளுக்கு ஏற்காடு! வசதியானவர்களுக்கு ஊட்டி’ என்று ஒரு காலத்தில் இருந்த நிலை மாறிப் போய், இப்போது ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடில்லாமல், அனைவரும் இந்த வெயிலின் உச்சககட்ட தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காகவும், விரண்டோடுவதற்காகவும் ஊட்டி, கொடைக்கானல் நோக்கிக் கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கின்றனர்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற எந்தக் கோடை கால உல்லாச வாசஸ்தலமாக இருந்தாலும் பெரும்பாலும் அவை மலைப் பகுதியில் அமைந்திருப்பவை என்று நாம் அறிந்திருக்கின்றோம்.
சமதளப் பாதையில் சாலைப் பயணம் என்பது இன்றைய காலத்தில் சவாலான பயணமாக இருக்கையில், மலைப் பாதையில் அதை விடப் பன்மடங்கு சவாலான, உயிரைப் பணயம் வைத்து, மரணத்தின் மிக அருகில் அமைந்த ஆபத்தான பயணம் என்பதை எல்லோரும் தெரிந்திருக்கின்றார்கள்.
இந்த மலைப் பயணத்தில் என்னென்ன ஆபத்துக்கள் இருக் கின்றன? என்பதை முதலில் பார்ப்போம்.
- சாதாரண சாலைகளில் 50 கிலோ மீட்டரை ஒரு முக்கால் மணி நேரத்தில் கடந்து விடலாம். ஆனால் இதே தூரத்தை மலைப் பகுதியில் மூன்று மணி நேரத்தில் தான் அடைய முடியும். போக்குவரத்து பாதித்து விட்டால் நான்கைந்து மணி நேரம் கடக்க வேண்டும். இது மலைப் பகுதியில் பயணிகள் சந்திக்கின்ற முதல் சவாலாகும்.
- மலைப் பாதையில் கற்கள், மரங்களை ஏற்றிச் செல்கின்ற கனரக வாகனங்களின் ஓட்டுனர்கள் மது போதையில் இருந்து அல்லது ஏதோ தவறுதலாக பிரேக் பிடிக்காமல் ஆக்ஸிலரேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் போதும். கண்ணிமைக்கும் நேரத்தில் வண்டி பின்னோக்கிப் பாய்ந்து விடும். அவ்வளவு தான் பின்னால் அடுத்து அடுத்து நிற்கின்ற வண்டிகள் பாதிப்புக்கும், பயங்கர விபத்திற்கும் உள்ளாகி விடும். பின்னால் நின்று கொண்டிருந்த காரில் அல்லது பஸ்ஸில் பயணிகளின் உயிர்களை ஒரு நொடிப் பொழுதில் பலி வாங்கி விடும். இந்தியாவில் கனரக வாகனங்கள் மலைப் பாதையில் செல்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
- ஊட்டி கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர்கள் உயரத்தில் அமைந்த மலைப் பகுதியாகும். வளைந்து, வளைந்து செல்கின்ற அதிலும் குறிப்பாக தலையை சுற்றச் செய்கின்ற கொண்டை ஊசி வளைவுகளில் கொஞ்சம் வேகமாக வாகனங்கள் சென்றால் கூட பல அடிகள் பள்ளத் தாக்கில் விழுந்து மனித உடலின் எலும்பும் வண்டி உடலின் இரும்பும் தேறாத அளவுக்கு சுக்கு நூறாக அப்பளமாக நொறுங்கிப் போய் விடும். இந்தியாவில் மலைப் பகுதியில் செல்கின்ற வாகனங்களுக்கு எவ்வித வேகக் கட்டுப்பாடும் கண்காணிப்பும் கிடையாது.
- மலைப் பாதையில் குறிப்பாக மழைக் காலங்களில் பாறைகள் வாகனங்களின் மீது உருண்டு விழுவ தற்கும், மரங்கள் சாய்ந்து விழுவதற்கும் அதிகம் அதிகம் வாய்ப்புகள் உள்ளன. இதனால் உயிர் பறி போகின்ற அபாயம் அதிகமாகவே காத்திருக்கின்றது.
- சுய நலமிக்க மனிதனின் சுரண்டல் வேலையின் காரணமாக காடுகளும் சுரண்டல்களுக்கு உள்ளாயின. அதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டு அங்குள்ள நீர் வளங்கள் வற்றிப் போனதால் யானைகள் காடுகளிலிருந்து கூட்டம் கூட்டமாக சாலைகளுக்குள் படை எடுத்து வர ஆரம்பித்து விட்டன. இப்படிப்பட்ட யானைகளின் பவனியும், படையெடுப்பும் மனிதனின் சாலைப் பயணத்தை சாவுப் பயணமாக மாற்றி விடுகின்றது.
- சாதாரண சாலைகளிலேயே வாகனங்கள் ஒன்று மற்றொன்றுடன் சர்வ சாதாரணமாக மோதி உயிர்ப் பலிகள் ஏற்பட்டு விடுகின்றன. ஆனால் மலைப் பாதையில் மோதல்களுக்குரிய சாத்தியக் கூறுகள் அதாவது சாவுக்குரிய சாத்தியக் கூறுகள் இன்னும் பன்மடங்கு பரிமாணத்தில் உள்ளன.
- சாலைப் பயணத்தில் சில ஆண்களுக்கும் அதிகமான குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பஸ், கார் பயணங்களின் போது வாந்தி வரத்துவங்கி விடும். வளைந்து வளைந்து செல்கின்ற மலைப் பயணத்தில் வாந்திக்கும், குடலைப் புரட்டுகின்ற குமட்டல்களுக்கும் சொல்லவே வேண்டியதில்லை. அதனால், ஊட்டி, கொடைக்கானல் பாதையில் செல்வோர் ஆங்காங்கு கார்களை நிறுத்திக் கொண்டு கூட்டம் கூட்டமாக, குடம் குடமாக வாந்தி எடுப்பதை அதிகம் பார்க்க முடியும்.
8, மலைகளில் பாயும் அருவிகளில் குளிப்பதற்காகவும் மக்கள் இதுபோன்ற சவால்களைச் சந்தித்து, தங்களது உயிர்களைப் பணயம் வைத்து பயணம் மேற்கொள்வதற்கும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள்.
இப்படிப்பட்ட சிறிய, பெரிய சோதனைகளைச் சந்தித்துக் கொண்டும், சகித்துக் கொண்டும் இவ்வளவு சங்கடங்களும் சவால்களும் சடுதியில் சாவுக்கு அழைத்துச் செல்கின்ற சாத்தியக் கூறுகளும் நிறைந்த இந்த சாகசப் பயணத்தை மக்கள் மேற்கொள்வது எதற்கு? சுட்டெரிக்கின்ற சூரிய வெப்பத்திலிருந்து ஒரு சில நாட்களாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காகத் தான்!
ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் சாதாரண நாட்களில் தங்கும் விடுதி அறைகளில் ஒரு நாள் வாடகை ஐநூறு ரூபாய் என்றால் இது போன்ற சீசன் நாட்களில் ஆயிரம், இரண்டாயிரம் என்று பன்மடங்கு அதிகரித்து விடுகின்றது. மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் ஒரு மாதத்திற்குக் கொடுக்கும் வாடகையை இங்கு ஒரு நாளுக்குக் கொடுக்கிறார்கள். ஒரு மாதச் செலவுகளை ஒரே நாளில் செலவழிக்கின்றார்கள்.
மக்கள் இப்படிச் செலவழிப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள் என்றால் இது வெப்பத்தின் வேகத்தையும், அதில் அவர்கள் வெந்து நீர்ந்து வியர்வையில் குளித்து அனுபவிக்கின்ற வேதனையும் தான் எடுத்துக் காட்டுகின்றது.
ஆட்டம் போட்ட சூரியன் அந்தி நேரத்தில் அஸ்தமான பின்னரும், அடிவானத்தில் அடைக்கலமான பின்னரும் அவனது தாக்கம் அடங்க மறுக்கின்றது. பகலில் அடித்த வெயிலின் வெட்கை இரவில் மக்களின் தூக்கத்தைக் கலைக்கின்றது. படுக்கும் பாய்களை நனைக்கின்றது. அதனால் தான் மக்கள் என்ன விலை கொடுத்தேனும் இதை விட்டுத் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
இந்தக் கொடிய வெயிலுக்கே இப்படித் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்களே! நாளை மறுமையில் மக்களை வாட்டி எடுக்கப் போகும் கொடிய நரகத்தின் வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், தடுத்துக் கொள்ளவும், அதிலிருந்து தப்பித்து, தங்களை விடுவித்துக் கொள்ளவும் என்ன விலையேனும் கொடுப்பார்கள் அல்லவா? இதோ அல்லாஹ் சொல்கின்றான்:
அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலை யாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும்.
இந்த வசனங்கள் நாளை நரகத்தின் பரிமாணத்தையும், பயங்கரத்தையும், அதற்காக மனிதன் என்ன விலையையும் கொடுப்பதற்குத் தயாராக இருப்பான் என்பதையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆனால் அப்போது மனிதன் என்ன விலையும் கொடுக்கவும் முடியாது. அப்படியே கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளவும் படாது என்பதைக் கீழ்க்காணும் வசனங்கள் எடுத்துக் கூறுகின்றன.
அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.
இன்று உங்களிடமிருந்தும், (ஏக இறைவனை) மறுத்தோரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. உங்கள் தங்குமிடம் நரகமே. அதுவே உங்கள் துணை. அது மிகவும் கெட்ட தங்குமிடம்.
இந்த உலகில் மனிதன் தப்ப நினைக்கின்ற வெப்பம் அதிகப்பட்சம் ஒரு மூன்று மாத கால அளவு தான்! அதன் பின்னர் குளிர் காலம் அவனை அரவணைத்துக் கொள்கின்றது. ஆனால் நரகம் அவ்வாறானது அல்ல! இதோ அல்லாஹ் சொல்கின்றான்.
(நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக் குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப் படவும் மாட்டாது. (நம்மை) மறுக்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம்.
அது ஓர் அணையாத நெருப்பு என்று அல்குர்ஆன் சொல்கின்றது.
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனையன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காண மாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர் களாக கியாமத் நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம்.
எனவே அப்படிப்பட்ட நெருப்பை விட்டு தப்பிப்பதற்கு என்ன வழி?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படு பவரிடம், “பூமியிலிருக்கும் பொருள் களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனை யிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், “ஆம்” என்று பதிலளிப்பான்: அப்போது அல்லாஹ், “நீ ஆதமின் முதுகுத் தண்டில் (கருவாகாமல்) இருந்த போது இதை விட இலேசான ஒன்றை – எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப் பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பிய போது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை” என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
ஆம்! ஒருவன், இறைவனுக்கு இணை வைத்து விட்டால் அவன் நிரந்தர நரகத்திற்குப் போய் விடுவான் என்று இந்த நபிமொழி கூறுகின்றது.
“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப் பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரை யும் இணைகற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
இந்த வசனம் கூறுகின்றபடி, ஒருவர் அல்லாஹ்வுக்கு எதையும், எவரையும் இணையாக்காமல் இவ்வுலகில் அவனை மட்டும் வணங்கி, நல்லறங்கள் செய்து வாழ்ந்து மரணித்தால் அவர்களுக்கு நிச்சயமாக சுவனம் பரிசாகக் கிடைக்கும். இன்றைக்கு உயிரைப் பணயம் வைத்துச் செல்கின்ற தற்காலிக சோலைகள் போலல்லாமல் நிரந்தரமான சுவனச் சோலைகளில் இருப்பார்கள் என்று அழுத்தம் திருத்தமாக அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகின்றன.
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?
நாம் நரகத்திலிருந்து காப்பாற்றப் பட்டு சொர்க்கச் சோலைகளில் காலாகாலம் வசிக்கின்ற நன்மக்களாக ஆவோமாக! இந்தக் கோடை காலம் நமக்கு ஒரு பாடமாகவும், படிப்பினையாகவும் அமையட்டுமாக!