தூதரின் பக்கம் திரும்புவோம்

பயான் குறிப்புகள்: கொள்கை

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

எந்தவொரு செய்தியாக இருந்தாலும் எல்லோரும் அதை ஒரே விதமாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். சிலர் விளங்கிக் கொள்வதில் கூடுதல் குறைவு இருக்கும். சிலர் சரியாகப் புரிந்து கொள்வார்கள்; சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். இதனால்தான், எது குறித்துக் கேட்டாலும், பார்த்தாலும் மக்களிடையே பல்வேறு விதமான கருத்துகள் வருகின்றன. இதுவே யதார்த்தம்.

எனவே இதை மனதில் நிறுத்திக் கொண்டு எந்தச் செய்தியையும் சரியான முறையில் அணுக வேண்டும். அது உலகம் தொடர்பாக இருந்தாலும் சரி; மார்க்கம் தொடர்பாக இருந்தாலும் சரி! நமக்கு மத்தியில் மார்க்க ரீதியான முடிவுகளில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இதுபோன்ற தருணங்களில், எவ்வாறு மார்க்கச் செய்தியை அணுக வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மார்க்கத்தில் வழிமுறை சொல்லப்பட்டு உள்ளது.

எந்த விவகாரமாக இருந்தாலும், இறைத்தூதரின் வழிகாட்டுதல்படி முடிவெடுத்துச் செயல்பட வேண்டும் என்பதே அந்த வழிமுறையின் சுருக்கம். இது தொடர்பாக சில முக்கியச் செய்திகளை இப்போது இந்த உரையில் காண்போம்.

இறைத்தூதருக்குக் கட்டுப்படுங்கள்

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக அனுப்பி, அல்லாஹ் நமக்கு அருள் புரிந்து இருக்கிறான். வாழ்க்கை எனும் கலையை நபிகளார் நமக்கு முழுமையாகக் கற்றுத் தந்திருக்கிறார்கள். வழிகேடு எனும் இருளில் இருந்து தப்பித்து நேர்வழி எனும் ஒளிமிக்க பாதையில் பயணிக்கும் பயிற்சி அளித்திருக்கிறார்கள். அனைவருக்கும் அனைத்து விஷயத்திலும் அண்ணலாரிடமே அழகிய முன்மாதிரி இருக்கிறது.

ஆகவே, மார்க்க வழிகாட்டி எனும் தூதருக்குரிய இடத்தை வேறு யாருக்கும் கடுகளவும் கொடுத்துவிடக் கூடாது. அவரின் சொல், செயல், அங்கீகாரத்தின் அடிப்படையில்தான் மார்க்கத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ ‌ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ‏

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(அல்குர்ஆன்: 59:7)

اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 24:51)

தூதரைப் புறக்கணிப்பது வழிகேடு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆணைக்கு அடிபணிந்து வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. அவர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்வது அவசியம் என்று மட்டுமல்ல. அதற்கு மாறுசெய்வது மிகப்பெரும் குற்றம் என்றும் எச்சரிக்கிறது. இதற்குப் புறம்பாக, தூதருடைய தீர்ப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு மற்ற மனிதர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அப்பட்டமான வழிகேடு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுபோன்ற பண்பு ஒருபோதும் முஃமின்களிடம் இருக்கவே கூடாது.

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

(அல்குர்ஆன்: 33:36)

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا‏

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 4:65)

மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர்பாய்ச்சி வந்த “ஹர்ரா‘ (என்னும் இடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், “தண்ணீரைத் திறந்து ஓட விடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) அவர்கள் (தண்ணீரைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள்.

(இந்தத் தகராறையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி (ஸல்) அவர்கள், “ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள். 

இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, “உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?” என்று கேட்டார்.  இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து) விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, “உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

(என்னிடம்) இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர் (ரலி) அவர்கள், “இறைவன் மீதாணையாக! “(முஹம்மதே!) உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்றுக் கொண்டு, பின்னர், நீங்கள் அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்‘ என்னும் (அல்குர்ஆன்: 4:65) வசனம் இந்த விவகாரத்தில் தான் இறங்கியது என்று நான் எண்ணுகிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
(புகாரி: 2359, 2360)

தூதரின் தீர்ப்பே தீர்வு தரும்

இறைத் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை மேற்கண்ட செய்திகள் மூலம் விளங்க முடிகிறது. அவர்களின் நெறிமுறைக்கு மாற்றமாகச் செயல்படுவதன் விபரீதத்தைப் புரிந்து கொள்ள இயலுகிறது.

ஆதலால்தான், அன்றைய கால மக்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இருக்கும் கண்ணியத்தை நினைவில் கொண்டு செயல்பட்டார்கள். தங்களுக்கு மத்தியில் ஏதேனும் மார்க்க ரீதியாகப் பிணக்குகள் வந்தால் தூதரிடம் கொண்டு சென்றார்கள். அவரின் தீர்ப்புக்கு மதிப்பளித்து வாழ்ந்தார்கள். அவரின் ஆலோசனைகள், அறிவுரைகளை ஏற்றுக் கொண்டார்கள்.

நபியின் தோழமை நமக்கு இருக்கிறது எனும் காரணத்திற்காகத் தங்களுக்குள் சுயமாக முடிவெடுத்து கொண்டு மனம்போன போக்கில் நடக்கவில்லை. அல்லாஹ்வின் தூதரிடமே அழகிய முன்மாதிரி இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் அவர்களின் வாழ்க்கை இருந்தது. இதற்குரிய சான்றாக சில சம்பவங்களை மட்டும் காண்போம்.

இறைவேதம் தொடர்பான பிரச்சனை

திருக்குர்ஆனை ஓதுவது, அதை அணுகுவது, அதன் வசனங்களைப் பயன்படுத்துவது, அதற்கு கண்ணியம் கொடுப்பது போன்ற பல்வேறு விசயங்களில் பல வகையில் கருத்துகள் இருப்பதை மறுக்க இயலாது. இது மாதிரியான நேரங்களில், நபித்தோழர்கள் தங்கள் பிரச்சனையை நபிகளாரிடமே எடுத்துச் சென்றார்கள். அவர்களிடமே அதற்குரிய தீர்ப்பை எதிர்பார்த்தார்கள். அதன் மூலம் எளிதாகத் தெரிந்து கொண்டார்கள்.

அன்சாரிகளில் (குல்ஸும் பின் ஹித்ம் எனும்) ஒருவர் குபா பள்ளிவாசலில் மக்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிப்பவராக (இமாமாக) இருந்தார். (அல்ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப் பின்) ஓதப்படும் அத்தியாயத்தை ஓதி மக்களுக்கு அவர் தொழுவிக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் அந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு முன் “குல் ஹுவல்லாஹு அஹத்‘ (என்று தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தை ஓதியே ஆரம்பிப்பார்; (அதாவது “குல்ஹுவல்லாஹு அஹத்‘ அத்தியாயத்தை ஓதிய) பிறகுதான் மற்ற அத்தியாயத்தை ஓதுவார். ஒவ்வொரு ரக்அத்திலும் அவர் இவ்வாறு செய்வது வழக்கம்.

இது குறித்து அவரிடம் மக்கள், “நீங்கள் இந்த (குல் ஹுவல்லாஹு அஹத்) அத்தியாயத்தை ஓத ஆரம்பிக்கின்றீர்கள். பிறகு அது போதாதென்று மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுகிறீர்களே! ஒன்று இந்த அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள்! அல்லது இதை விட்டுவிட்டு மற்றோர் அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள் (இரண்டையும் ஓதாதீர்கள்)” என்று கூறினார்கள்.

அதற்கு அவர், “நான் இ(ந்த அத்தியாயத்)தை ஓதுவதைக் கைவிடமாட்டேன். நீங்கள் விரும்பினால் இவ்வாறு (ஓதி தலைமை தாங்கித் தொழுவிக்கும் பணியைச்) செய்கிறேன். (இதை) நீங்கள் வெறுத்தால் நான் உங்களை  விட்டுவிடுவேன் (உங்களுக்குத் தொழுவிக்க மாட்டேன்)” என்றார்.

அம்மக்கள் அவரைத் தங்களில் சிறந்தவராகத் கருதிக் கொண்டிருந்தனர். அவரல்லாத மற்றொருவர் தங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தங்களிடம் வந்த நேரத்தில் இந்தச் செய்தியை அவர்களிடம் தெரிவித்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), “இன்னாரே! உங்கள் தோழர்கள் உங்களைப் பணிப்பது போன்று நீங்கள் ஏன் செய்யக்கூடாது? என்ன காரணத்தால் ஒவ்வொரு ரக்அத்திலும் இந்த அத்தியாயத்தை கட்டாயப்படுத்திக்கொண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் இந்த அத்தியாயத்தை நேசிக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அ(ந்த அத்தியாயத்)தை நீர் நேசிப்பது உம்மைச் சொர்க்கத்தில் சேர்க்கும்” என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
(புகாரி: 774)

குர்ஆனை உளூ இல்லாமல் ஓதலாமா? நோயுற்றவர்களுக்கு ஓதி காசு வாங்கலாமா? இறந்தவர்களுக்கு குர்ஆனை ஓதி நன்மை சேர்க்க இயலுமா? என்று பல்வேறு கேள்விகள் பலருக்கும் இருக்கும்.

இவற்றில் சரியான கருத்தைத் தெரிந்து கொள்ள முஃமின்கள் குழப்பம் அடைய அவசியமே இல்லை. இவற்றுள் எதற்கெல்லாம் நபிகளாரின் வழிகாட்டுதல் இருக்கிறது? எப்படி இருக்கிறது? என்று கவனித்துப் பாருங்கள். திருக்குர்ஆன் தொடர்பாக சமூகத்தில் இருக்கும் சடங்குகள் பெரும்பாலும் ஆதாரமற்றவை என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

பொருளாதாரம் தொடர்பான பிரச்சனை

பொருளாதாரம் சம்பந்தமாக எப்போதும் ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன. அனுமதி இருக்கும் வியாபாரம், தடையாக இருக்கும் வியாபாரம், லாபத்தை பெற்றுக் கொள்வது, செலவழிக்கும் வகை, தொழில் நடத்தும் விதம் என்று செல்வம் ரீதியாக எண்ணற்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

இம்மாதிரியான வினாக்களுக்கும் விடையை நபிகளாரிடம் தேடிச் செல்ல வேண்டும். இதை முஸ்லிம் சமுதாயத்தின் முதல் தலைமுறையினர் நன்கு விளங்கி வைத்து இருந்தார்கள். நபிகளார் கொடுத்த பதிலை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.

நானும் என் தந்தையும் என் பாட்டனாரும் நபி (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்று) உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தோம். நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பெண் பேசித் திருமணம் செய்தும் வைத்தார்கள். அவர்களிடம் நான் ஒரு தடவை ஒரு பிரச்சினையைக் கொண்டு சென்றேன். அதாவது, என் தந்தை யஸீத் தர்மம் செய்வதற்காக சில தீனார்களை எடுத்துக் கொண்டு சென்று அதைப் பள்ளிவாசலில் இருந்த ஒருவருக்கு அருகில் வைத்துவிட்டார். நான் சென்று அதை எடுத்து வந்துவிட்டேன்.

உடனே என் தந்தை, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த தர்மம் உனக்கல்லவே” என்றார்கள். உடனே நான் அவரை அழைத்துக் கொண்டு  நபி (ஸல்) அவர்களிடம் வந்து தீர்வு கேட்டேன். அதற்கவர்கள் ” யஸீதே! உமது (தர்ம) எண்ணத்திற்கான நற்பலன் உனக்கு உண்டு; மஅனே! நீர் எடுத்த (பொருளான)து உமக்கே!” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஅன் பின் யஸீத் (ரலி),
(புகாரி: 1422)

எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த கடன் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்து திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு)  எங்கள்  இருவரின் குரல்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன. 

எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். (இதற்காக)  தமது அறையின் திரையை விலக்கி, “கஅப் பின் மாலிக்! கஅப்!”  என்று அழைத்தார்கள். உடனே நான், “இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றேன்.

அப்போது அவர்கள் “உன் கடனிலிருந்து பாதியைத் தள்ளுபடி செய்வீராக‘ என்று சைகை செய்தார்கள். “அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூறினேன். (பிறகு) நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத்தை நோக்கி), “எழுந்து சென்று கடனைச் செலுத்துங்கள்” என்றார்கள்.

அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி)
(புகாரி: 471)

வட்டி, வரதட்சனையை வாங்கலாமா? அதை ஆதரித்து துணை போகலாமா? குத்தகை, அடமானம் ஆகியவற்றை எப்படிக் கையாள்வது? என்றெல்லாம் பொருளாதாரம் பற்றிய சிக்கல்களை தீர்ப்பதற்குரிய போதனைகள் திருத்தூதரின் வாழ்விலே இருக்கின்றன.

முஸ்லிம் சமுதாயத்தில் எத்தனை பேர் இதை நினைவில் வைத்து செயல்படுகிறார்கள்? மனோ இச்சைக்கு இசைவாக நடந்து கொள்வதைக் கைவிட்டு அனைவரும் மாமனிதர் பாதையில் பயணம் செய்ய முன்வர வேண்டும்.

நமக்கு மத்தியில் மார்க்க ரீதியான முடிவுகளில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இதுபோன்ற தருணங்களில், எவ்வாறு மார்க்கச் செய்தியை அணுக வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மார்க்கத்தில் வழிமுறை சொல்லப்பட்டு உள்ளது. எந்த விவகாரமாக இருந்தாலும், இறைத்தூதரின் வழிகாட்டுதல்படி முடிவெடுத்துச் செயல்பட வேண்டும் என்பதே அந்த வழிமுறை!

வணக்கம் தொடர்பான பிரச்சனை

நம்மிடம் இருக்கும் இறை நம்பிக்கையை வெளிப்படுத்தச் செய்யும் வகையில் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகள் வழங்கப்பட்டுள்ளன. தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமைகள் தொடர்பாக மட்டும் விதவிதமான செயல்பாடுகள் முஸ்லிம்களிடம் இருப்பது கண்கூடு. இபாதத் – வணக்க வழிபாடுகள் தொடர்பான சர்ச்சைகள் நிகழும் போது இமாம்கள், பெரியார்கள் போன்ற முன்னோர்களின் செயல்முறையின் பக்கம் படையெடுப்பவர்களே அதிகம் இருக்கிறார்கள். இவ்வாறு தங்களின் சிந்தனைத் தேடலுக்குத் தோதுவாக இருக்கும் முன்னோர்களை நோக்கிச் செல்லும் காலமெல்லாம் இதுபோன்ற பிரச்சனைகள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும்.

அல்லாஹ்வின் தூதரை நோக்கித் திரும்பும் போது மட்டுமே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதைப் பயன்படுத்தி சஹாபாக்கள் தங்களுக்கு மத்தியிலான முரண்பாடுகளைக் களைந்து எறிந்தார்கள் என்பதற்கு சான்றுகளைப் பார்ப்போம்.

என் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருந்தோம்: அபூகத்தாதா இஹ்ராம் கட்டவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம்: அபூகத்தாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெண் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்: “நாம் இஹ்ராம் கட்டியிருக்கும்போது வேட்டையாடப்பட்ட மாமிசத்தை உண்ணலாமா?” என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம்:

பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக்கிறோம்!” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். நபித் தோழர்கள் “இல்லை!” என்றனர். “அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)
(புகாரி: 1824)

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து நான் பெருந்துடக்குடையவனாகி விட்டேன். ஆனால் (குளிப்பதற்கு) எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. (இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?)” என்று கேட்டார். அப்போது (அங்கிருந்த) அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், “நாம் ஒரு (போர்ப்) பயணத்தில் இருந்து கொண்டிருந்தோம்; அதில் நானும் நீங்களும் இருந்தோம்.

அப்போது (பெருந்துடக்கு ஏற்பட்ட நமக்கு குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை ஆகவே) நீங்கள் தொழவில்லை; நானோ (உளூவிற்குப் பதிலாக தயம்மும் செய்வது போன்று குளியலுக்குப் பதிலாக) மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் தரையில் அடித்து அவற்றில் ஊதிவிட்டு அவ்விருகைகளால் தமது முகத்தையும் (மணிக்கட்டுகள் வரை) இரு கைகளையும் தடவிக் காண்பித்து “இவ்வாறு செய்திருந்தால் அது உமக்குப் போதுமே” எனக் கூறியது உங்களுக்கு நினைவில்லையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி),
(புகாரி: 338)

குற்றம் தொடர்பான பிரச்சனைகள்

நம்மைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களுக்குத் துன்பம் தரக் கூடாது; அவர்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது என்று பொதுநலம் போதிக்கும் மார்க்கத்தில் இருக்கிறோம்.

இருப்பினும், தமது நலத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு அடுத்த மக்களிடம் வரம்பு மீறும் மக்கள் இருக்கிறார்கள். இப்படி ஏதேனும் வகையில் எவருக்கு இடையேனும் சண்டைகள் வந்தால் அவற்றைத் தடுத்து நிறுத்தி நீதம் செலுத்தும் வழிகாட்டுதல் நபிகளாரிடம் இருக்கிறது. மாமனிதர் அவர்கள் தலைசிறந்த சட்ட வல்லுநர். அநீதத்தை ஒரு போதும் ஆதரிக்காதவர். ஆதலால்தான் அன்றைய கால மக்கள் தங்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள நபிகளாரிடம் வந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹுதைல்” குலத்துப் பெண்கள் இருவரின் (வழக்கு) தொடர்பாகத் தீர்ப்பளித்தார்கள். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது ஒரு கல்லை எறிய அது அவளுடைய வயிற்றில் பட்டுவி ட்டது. கர்ப்பிணியாயிருந்த அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை அவள் கொன்றுவிட்டாள். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் இந்த வழக்கைக் கொண்டு வந்தனர். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் வயற்றிலிருந்த சிசுக்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது பெண் அடிமையை உயிரீட்டுத் தொகையாகத் தர வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 5758)

நபி (ஸல்) அவர்களிடம் (யமன் நாட்டிலுள்ள) “ஹள்ரமவ்த்” எனும் இடத்தைச் சேர்ந்த மனிதர் ஒருவரும் “கிந்தா” எனும் குலத்தைச் சேர்ந்த இன்னொரு மனிதரும் வந்தனர். அப்போது ஹள்ரமவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்குச் சொந்தமான நிலத்தை இவர் ஆக்கிரமித்து விட்டார்” என்று கூறினார். அதற்கு கிந்தா குலத்தைத் சேர்ந்த அந்த மனிதர், “அது என் கைவசமுள்ள என்னுடைய நிலம்; அதில் நான் விவசாயம் செய்து வருகிறேன்; அதில் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதரிடம், “(உமது வாதத்தை நிரூபிப்பதற்கு) உம்மிடம் ஆதாரம் ஏதும் உண்டா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் இவர் சத்தியம் செய்வதுதான் உமக்கு (வழி)” என்று கூறினார்கள். உடனே ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர் “அவர் (துணிந்து பொய் சொல்லும்) பொல்லாத மனிதர். தாம் எதற்குச் சத்தியம் செய்கிறோம் என்பதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.

எந்த விவகாரத்திலும் அவர் நேர்மையைப் பற்றி யோசிப்பவரில்லை” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதைத் தவிர உனக்கு வேறு வழி கிடையாது” என்று கூறினார்கள். உடனே (பிரதிவாதியான) அந்த (கிந்தா குலத்து) மனிதர் சத்தியம் செய்வதற்காக (குறிப்பிட்ட இடத்திற்கு)ச் சென்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவருடைய செல்வத்தை உண்பதற்காக அநியாயமாக அவர் பொய்ச் சத்தியம் செய்தால், அல்லாஹ் அவரைப் புறக்கணிக்கும் நிலையிலேயே (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
(முஸ்லிம்: 223)

தூதரின் வழியே தூய வழிமுறை

நபித்தோழர்கள் தங்கள் வாழ்வில் வரும் சில வகையான பிரச்சனைகளுக்கு மட்டுமே தூதரிடம் சென்றார்கள் என்று கருதிவிடக் கூடாது. எல்லா விதமான சிக்கல்களுக்கும் தூதரிடமே தீர்வை நாடினார்கள். அதை நிலைநாட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, இறந்த பிறகு ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் மூலம் தங்களுக்கு இடையே வரும் கருத்து வேறுபாடுகளுக்குத் தக்க பதில்களைத் தெரிந்து கொண்டார்கள்.

தாங்கள் மட்டுமல்ல! தங்களை அடுத்து வரும் தாபியீன்களுக்கும் இப்படித்தான் மார்க்கத்தை அணுக வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள். இது கற்பனையான சொந்த கருத்து அல்ல. இந்த உண்மையைக் கீழ்வரும் செய்தியின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, “நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி விட்டேன். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச் சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை” என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், “(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆகவே, நான் திரும்பி வந்து விட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்” என்று கூறியுள்ளார்கள்” என்றேன்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்” என்று சொன்னார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்” என்று சொன்னார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூமூசா (ரலி) அவர்களுடன் சென்று “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்” என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
(புகாரி: 6245)

அப்துல்லாஹ் பின் ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“அல்அப்வா” எனுமிடத்தில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகிய இருவரும் (ஒரு விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டனர். அதாவது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் தமது தலையைக் கழுவலாம்” என்று கூறினார்கள். மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவக் கூடாது” என்றார்கள். இதையடுத்து அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அதைப் பற்றிக் கேட்பதற்காக அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தார்கள்.

நான் சென்றபோது அவர்கள் கிணற்றின் மேல் ஊன்றப் பட்டிருக்கும் இரு மரக்குச்சிகளுக் கிடையே ஒரு துணியால் திரையிட்டுக் குளித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினேன். அவர்கள், “யார் அது?” என்று கேட்டார்கள். “நான் அப்துல்லாஹ் பின் ஹுனைன் (வந்திருக்கிறேன்). “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இஹ்ராம்” கட்டியிருந்தபோது எவ்வாறு தமது தலையைக் கழுவுவார்கள்?” என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார்கள்” என்று சொன்னேன்.

அபூஅய்யூப் (ரலி) அவர்கள் தமது கையைத் திரையின் மீது வைத்து, தமது தலை தென்படும் அளவிற்குத் திரையைக் கீழே இறக்கினார்கள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த மனிதரிடம், “தண்ணீர் ஊற்று” என்றார்கள். அவர் தண்ணீர் ஊற்ற, அபூஅய்யூப் (ரலி) அவர்கள், பின்னிருந்து முன்னாகவும் முன்னிருந்து பின்னாகவும் தம் கைகளைக் கொண்டுச் சென்று தமது தலையைத் தேய்த்துக் கழுவினார்கள். பிறகு, “இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 2278)

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“மூசா (அலை) (அவர்கள் சில ஞானங்களைக் கற்றுக் கொள்வதற்காக ஓர் அடியாரைத் தேடிச் சென்றார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகின்ற) அவர்களுடைய அந்தத் தோழர் யார்? அவர், “களிர்” அவர்கள்தானா என்பது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ என்பாரும் கருத்து வேறுபாடு கொண்டு வழக்காடிக் கொண்டனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அவர், களிர் (அலை) அவர்கள் தான்” என்றார்கள். அப்போது உபை பின் கஅப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள்.

அவர்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்து, “அபுத்துஃபைல் அவர்களே! இங்கே வாருங்கள். நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் யாரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி கேட்டார்களோ அந்தத் தோழர் யார் என்பது தொடர்பாக வழக்காடிக் கொண்டோம். அவரது நிலை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று வினவினார்கள். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்: பனூ இஸ்ராயீல் மக்களின் ஒரு கூட்டத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “உங்களைவிட அறிந்தவர் எவரும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, மூசா (அலை) அவர்கள், “இல்லை (என்னைவிட அறிந்தவர் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை)” என்று சொன்னார்கள். உடனே மூசா (அலை) அவர்களுக்கு, “இருக்கிறார்; அவர்தான் நம் அடியார் களிர் ஆவார்” என்று அல்லாஹ் (வஹீ) அறிவித்தான்.

அப்போது மூசா (அலை) அவர்கள், களிர் அவர்களைச் சந்திக்க வழி கேட்டார்கள். அப்போது அல்லாஹ் மீன் ஒன்றை அவர்களுக்கு அடையாளமாக ஆக்கி, “நீர் எந்த இடத்தில் மீனைத் தவற விடுகிறீரோ அந்த இடத்திலிருந்து (வந்த வழியே) திரும்பிச் செல்லும். அங்கு களிரைச் சந்திப்பீர்” என்று அவரிடம் கூறப்பட்டது. அவ்வாறே மூசா (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய தூரம்வரை (தம் உதவியாளருடன்) நடந்தார்கள். பிறகு தம் ஊழியரிடம் “நமது காலை உணவைக் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.

அதற்கு மூசா (அலை) அவர்களின் உதவியாளர், “கவனித்தீர்களா! நாம் அந்தப் பாறையில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் மறந்து விட்டேன். அதைக் கூறவிடாமல் ஷைத்தான் தான் என்னை மறக்கச் செய்து விட்டான்” என்று கூறினார். மூசா (அலை) அவர்கள், “அதுதான் நாம் தேடிவந்த இடம்” என்று தம் உதவியாளரிடம் சொல்ல, இருவரும் தம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்தவழியே திரும்பிச் சென்றார்கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள்.

(அல்குர்ஆன்: 18:63-65)

பின்னர் அவ்விருவர் தொடர்பாக அல்லாஹ் தனது வேதத்தில் எடுத்துரைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

(முஸ்லிம்: 4746)

அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப்படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)” என்று கேட்டோம்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?” என்று கேட்டார்கள். நாங்கள் “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்” என்றோம். அதற்கு, “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.

அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இன்னொரு நபித்தோழர் அபூமூசா (ரலி) ஆவார்” என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

(முஸ்லிம்: 2004)

நபித்தோழர்கள் மட்டுமல்ல தாபியீன்கள், தபவுத் தாபியீன்கள், இமாம்கள் ஆகியோர் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வழிமுறையை பின்பற்றுவதுதான் மார்க்கம் என்பதில் ஒருமித்தக் கருத்தில் இருந்தார்கள். இதற்குச் சான்றாக இன்னும் ஏராளமான செய்திகள் உள்ளன. இவர்கள் யாருமே தங்களுடன் இருக்கும் சக தோழர்களின் சுய கருத்தை மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை இன்றைய மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தூதரை நோக்கி வாருங்கள்

நபித்தோழகள் முதல் இமாம்கள் வரை அனைவரும் நபிமொழியைக் கவனித்து தங்களுக்குப் புரிந்த வகையில் மார்க்கத்தைக் கடைப் பிடித்தார்கள். அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து எந்தவொரு வஹீயும் வராது. அவர்களிலும் நபிமொழியை சரியாக விளங்கியவர்களும் இருக்கிறார்கள்; தவறாக விளங்கியவர்களும் இருக்கிறார்கள். சில செய்திகளை கூடுதல் குறைவாக விளங்கியவர்களும் இருக்கிறார்கள்.

எனவே, ஏக இறைவனால் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவன் வழங்கிய வேதத்திற்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும்.

 وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا‌ ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْلَمُوْنَ شَيْــٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ‏

“அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

(அல்குர்ஆன்: 5:104)

وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ رَاَيْتَ الْمُنٰفِقِيْنَ يَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًا‌ ۚ‏

“அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.

(அல்குர்ஆன்: 4:61)

சகோதரர்களே, இந்த வசனத்தின் கண்டனத்தைப் படித்த பிறகாவது விரைவாக முடிவெடுங்கள். முன்னோர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் சுய விளக்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனது தூதரை நோக்கி வாருங்கள். அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழியும் மட்டுமே மார்க்கம் என்பதில் நாம் உறுதியோடு இருப்போம். இதற்கு எதிராக இருக்கும் காரியங்களை விட்டும் விலகி இருந்து, சிறப்பாக செயல்பட்டு அல்லாஹ்வின் அருளால் ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.