கடன் ஓர் அமானிதம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

கடன் ஓர் அமானிதம்

நிச்சயமாகக் கடன் நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதம். அதை கண்டிப்பாக சரியான முறையில் திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

 اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا‏ 

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:58)

அமானிதங்களை ஒப்படைத்து விட வேண்டும் என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகின்றான்.

وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ‏
وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رٰعُوْنَ

திருக்குர்ஆனின்(அல்குர்ஆன்: 23:8, 70:32)ஆகிய வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அமானிதங்களை நிறைவேற்றுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே அமானிதங்களை நிறைவேற்றுவது ஈமானிய பண்புகளில் உள்ளதாகும்.

நம்மில் பெரும்பாலோர் கடனை ஓர் அமானிதமாகவே கருதுவது கிடையாது.

அதனால் அதைத் திரும்பக் கொடுப்பதைப் பற்றிக் கவலைப்படுவதும் கிடையாது. கவலைப் படுவது ஒருபுறம் இருக்கட்டும். அலட்டிக் கொள்வது கூட கிடையாது. இன்னும் சொல்லப் போனால் கடன் வாங்கியவர் தான் கடன் கொடுத்தவர் போல் நடந்து கொள்வார். வாங்கிய கடனைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், காலரை உயர்த்தி விட்டு நடமாடுவார்.

கடன் கொடுத்தவன் உள்ளம் பதறும். இந்த நம்பிக்கை துரோகம் யாருடைய குணம் தெரியுமா?

நம்பிக்கைத் துரோகம் செய்வது நயவஞ்சகனின் பண்பு

அமானிதத்தை நிறைவேற்றாமல் நம்பிக்கைத் துரோகம் செய்வதை முனாஃபிக்குகளின் பண்புகளில் ஒன்றாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ

நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான். வாக்களித்தால் மீறுவான். நம்பினால் துரோகம் செய்வான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 33)

மேற்கண்ட ஹதீஸில் இடம் பெற்றுள்ள நயவஞ்சகனின் பண்புகளில் மூன்று பண்புமே கடன் வாங்கியவரிடம் குடி கொண்டு விடுகின்றன. கடன் வாங்கியவர்களின் இந்தப் போக்கால் வசதியானவர்கள் கடன் எனும் இந்த வாசலையே அடைத்து விட்டார்கள். கையில் பணம் வந்தவுடன், கடனை உடனேயே அடைக்கும் குணம் நம்மிடம் இருந்தால், கடன் என்பது எளிதான ஒன்றாக இருக்காதா? நாம் நிறைவேற்றுகிறோமா?

கடனை உடனே நிறைவேற்றுதல்

கடன் வாங்கியவருக்குக் கொஞ்ச நாளில் ஒரு வசதி வந்து விடும். அப்படி ஒரு வசதி வந்ததும், அவர் வாங்கிய கடனை மருந்துக்கு கூட நினைத்துப் பார்ப்பதில்லை. அவசியம், கட்டாயம், இன்றியமையாத செலவு என்றிருந்தால் அதை நிறைவேற்றுவதில் ஒரு நியாயம் இருக்கும். ஆனால் அவசியமில்லாத ஒரு செலவைச் செய்து விட்டு, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தாமதப்படுத்துவதை நாம் பார்க்கிறோம்.

مَا أُحِبُّ أَنَّهُ تَحَوَّلَ لِي ذَهَبًا، يَمْكُثُ عِنْدِي مِنْهُ دِينَارٌ فَوْقَ ثَلاَثٍ، إِلَّا دِينَارًا أُرْصِدُهُ لِدَيْنٍ

நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹது மலையைப் பார்த்த போது, இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரைக் கூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்ப மாட்டேன். கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
(புகாரி: 2388),(முஸ்லிம்: 1654)

தன்னிடம் உஹது மலை அளவுக்குத் தங்கம் கிடைத்தால் அதில் கடனை அடைப்பதற்காக மட்டும் தீனாரை எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள அனைத்தையும் தர்மம் செய்து விடுவேன் என்று கூறுகின்றார்கள். இதன் மூலம் வசதி வரும் போது கடனுக்கு என்றுள்ள தொகையை ஒதுக்கி வைத்து விட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழி காட்டுகின்றார்கள்.

அதே சமயம் எவ்வளவு முயற்சி செய்தாலும் பெற்ற கடனை குறிப்பிட்ட நாளில் செலுதத முடியாத சூழல் ஏற்படலாம். அப்போது கடன் கொடுத்தவர் கடுமையாக பேசினால், அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.