நாளைய ஞானம் நபிக்கு உண்டா?

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

நாளைய ஞானம் நபிக்கு உண்டா?

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! அவனுடைய அதிகாரம், ஆற்றல், பண்பு, ஆகிய எந்த ஒன்றிலும் அணுவளவும் கூட்டு இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை சங்கநாத முழக்கமாகும். இந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்காகத்தான் அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை நியமித்தான்.

நமக்கு இறைவனால் நியமனம் செய்யப்பட்ட தூதர் முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள்.

ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் எந்த மக்களைச் சீர் செய்ய வந்தார்களோ, எந்தக் கடவுள் கொள்கையைக் கண்டிக்கப் புறப்பட்டார்களோ அந்த மக்கத்து இணை வைப்பாளர்களின் கொள்கையை அச்சுப் பிசகாமல் இன்று முஸ்லிம்கள் என்று நாவளவில் சொல்லிக் கொள்ளும் சில இஸ்லாமியர்கள் (?) செய்து வருவதைப் பார்க்கிறோம்.

அவரிடத்தில் பிரார்த்திக்கிறோம், இவரிடத்தில் பிரார்த்திக்கிறோம் என்று கண்டவரிடமும் அல்லாஹ்வுடைய ஆற்றலை பங்கு வைத்த இந்தச் சமூகம், ஏகத்துவத்தைப் போதிக்க அரும்பாடுபட்ட அல்லாஹ்வுடைய தூதரையும் அந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டு வைக்கவில்லை. மறைவான விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது என்பது இஸ்லாத்தின் அசைக்க முடியாத கொள்கை!

ஆனால் இவர்களோ, அவ்லியாக்கள் மரணித்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போயிருந்தாலும் அவர்களுக்கு, மறைவான செய்திகளை அறியும் திறன் இருக்கிறது என்று வாதிடுகிறார்கள். இதே போன்று அல்லாஹ்வுடைய தூதுருக்கும் அந்த ஆற்றல் இருக்கிறது என்று வாதிடுகிறார்கள்.

திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் மறைவானவற்றை அறியும் ஆற்றல் சூனியக்காரன், ஜோதிடக்காரன், குறிசொல்பவன், மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்ட மனிதன் உட்பட யாருக்கும் கிடையாது. அல்லாஹ்வுடைய தூதர்களுக்கும் அந்த ஞானம் கிடையாது என்றும் தன்னுடைய பிரச்சார பயணத்தை ஆரம்ப காலம் முதல் செய்து வருகிறது.

மறைவான ஞானம் என்பது, ஆறறிவால் எதை அறிய முடியாதோ அதுவேயாகும். மறைவானவற்றை அறியும் ஆற்றல் அல்லாஹ்வுடைய தூதர் உட்பட எந்த மனிதனுக்கும், ஜின்கள், வானவர்கள் உள்ளிட்ட யாருக்கும் இல்லை. அது தனக்கு மட்டுமே உரிய ஞானம் என்பதை அல்லாஹ் பல இடங்களில் தெளிவு படுத்தியுள்ளான்.

அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

(அல்குர்ஆன்: 31:34)

ஒரு மனிதன், தான் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்று தன்னைப் பற்றியே அறிய முடியாது எனில் அடுத்தவர்களுடைய நிலையை எவ்வாறு அறிய முடியும்?

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

(அல்குர்ஆன்: 6:59)

“வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 27:65)

மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. இன்னும், நபி (ஸல்) அவர்களுக்கும் மறைவானவற்றை அறியும் ஆற்றல் இல்லை என்பதை குறிப்பிட்டும் இறைவன் கூறுகின்றான்.

“அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும்; மறைவானதை அறிவேன் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப் படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 6:50)

“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 7:188)

ஒரு மனிதன் தனக்கு மறைவான ஞானம் இருந்தால் அவன் தன்னுடைய எதிர்கால வாழ்வை அறிந்து அதில் எந்தத் தீமையும் அமையாமல் அவற்றைத் தடுத்து நிறுத்தி, நன்மைகளை மட்டுமே தன் உடமையாக ஆக்கிக் கொள்வான் மேற்கண்ட வசனத்தில், “நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது” என்று கூறப்படுவதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறியக் கூடியவர்களாக இல்லை என்பது தெளிவாகிறது.

நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தை மக்களுக்கு மத்தியில் கற்றுக் கொடுப்பதற்காக, குர்ஆனை நன்கு மனனம் செய்த எழுபது நபர்களை தயார்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்களை எதிரி நாட்டிற்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுப்பும் போது எதிரிகள் அவர்களைக் கொன்று விட்டார்கள்.

(புகாரி: 1300)

இவ்வாறு கொன்று விடுவார்கள் என்று முன்கூட்டியே அறிந்திருந்தால் நிச்சயம் அந்த நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்களை அனுப்பி வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் அனுப்பப்பட்டு கொல்லப்பட்ட பின் அது நபி (ஸல்) அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக, கடும் கவலையாக இருந்தது.

இன்னும், உஹதுப் போரின் இறுதியில் தோல்வி ஏற்படுவதற்கு அம்பு எய்தும் வீரர்களில் சிலர் செய்யும் தவறு காரணமாக இருக்கும் என்று முன்னரே நபி (ஸல்) அறிந்திருப்பார் களேயானால் அவர்களைச் சரி செய்து போரில் வெற்றிவாகை சூடியிருப் பார்கள். ஆனால் அவ்வாறில்லாமல் அவர்கள் தோல்வியைச் சந்தித்தார்கள்.

(புகாரி: 3039)

மேலும், நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய பாசத்திற்குப் பாத்திரமான சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று அறிந்திருந்தால் அது ஏற்படாமல் தடுத்து நிறுத்தியிருப்பார்கள்.

(புகாரி: 4072)

இந்தச் செய்திகளும், இதுவல்லாத இன்னும் ஏராளமான செயதிகளும் நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான வற்றை அறியும் ஆற்றல் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. அவ்வாறு அறிந்திருப்பார்கள் எனில் இவ்வளவு துயரங்களும் அவர்களின் வாழக்கையில் இடம்பெற்றிருக்கத் தேவையில்லை.

தன்னுடைய வாழ்க்கையில் நடை பெறவிருக்கும் எதிர்கால – மறைவான விஷயங்ளே அல்லாஹ்வுடைய தூதருக்கு சுயமாக அறிந்து கொள்ள முடியாது எனும் போது மற்றவர்களின் வாழ்க்கையின் செய்திகளை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

மேலும், மறுமை நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயமாகும். அதுபற்றி நபிகள் நாயகத்திடம் கேள்வி வரும்போது இறைவன் நபி (ஸல்) அவர்களை அளிக்க சொல்லும் பதிலைப் பாருங்கள்.

“யுக முடிவு நேரம் எப்போது வரும்?” என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். “இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்” என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது” என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

(அல்குர்ஆன்: 7:187)

இறைவனின் மறைவான ஞானம் தனக்கு இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன மற்றொரு நிகழ்வு இதோ:

“இவரது இறைவனிடமிருந்து இவருக்குச் சான்று அருளப்பட்டிருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். “மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. நீங்களும் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 10:20)

இதிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு மறைவான விஷயத்தை அறிய மாட்டார்களோ அது போன்றே நபியும் அறிய மாட்டார்கள் என்பது தெளிவாகிறது.

இன்னும், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு நபியைச் சுற்றி வாழ்ந்து வந்தார்களோ அது  போன்றே முஸ்லிம்களைப் போன்று நடித்து நயவஞ்சகத்தை உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டிருந்த முனாஃபிக்குகளும் எதிரிகளுக்கு சேவை செய்வதற்காக முஸ்லிம்களோடு கலந்து வாழ்ந்து வந்தார்கள்.

உங்களைச் சுற்றியுள்ள கிராம வாசிகளிலும், மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தில் நிலைத்துள்ளனர். (முஹம்மதே!) அவர்களை நீர் அறிய மாட்டீர்! நாமே அவர்களை அறிவோம். அவர்களை இரண்டு தடவை தண்டிப்போம். பின்னர் அவர்கள் கடும் வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்”.

(அல்குர்ஆன்: 9:101)

மறைவான விஷயம் என்பது எதிர்காலத்தை அறியக்கூடிய ஆற்றல் மாத்திரம் இல்லை. அடுத்தவர் உள்ளத்தில் உள்ளதை அறிவதும் மறைவானவற்றை அறிவது தான். நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் எனில் தன்னைச் சுற்றி இருப்பவர்களில் நயவஞ்சகர்கள் யார்? நடிப்பவர்கள் யார்? உண்மை யாளர்கள் யார்? என்று அறிந்திருப்பார்கள். ஆனால் அவர்களால் அதை சுயமாக அறியமுடியவில்லை.

மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது என்பதை உறுதிப்படுத்தும் நபியவர்களின் சொல்லும் செயலும் அடங்கிய ஹதீஸ்களைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறைவானவற்றின் திறவு கோல்(கள்) ஐந்தாகும். அவற்றை இறைவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்

நாளை என்ன நடக்கும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.

(பெண்களின்) கருவறைகளில் என்ன உருவாகும் (பெண்ணா? ஆணா? என்று) யாரும் அறிய மாட்டார்கள்.

எந்த உயிரும் தாம் நாளை எதைச் சாம்பாதிக்கும் என்பதை அறியாது.

எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது.

மழை எப்போதுவரும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)

(புகாரி: 1039)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அறிந்து கொள்ளுங்கள்! என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டு வரப்பட்டு, இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்று சொல்வேன். அதற்கு “இவர்கள் உங்களு(டைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று கூறப்படும்.

(புகாரி: 4625)(ஹதீஸின் சுருக்கம்)

அல்லாஹ்வுடைய தூதர் உயிரோடு இருக்கும் போது மறைவான விஷயத்தை எப்படி அறியாதவர்களாக இருந்தார்களோ அதுபோன்றே மரணித்ததற்குப் பிறகும் அறிய வில்லை என்பது இச்செய்தியிலிருந்து தெளிவாகிறது.

தர்காவாதிகள் சொல்வதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் மரணித் தற்குப் பிறகும் மறைவானவற்றை அறிவார்கள் என்றிருக்குமானால் அவர்கள் தன்னுடைய தோழர்களில் யார் தவறு செய்தவர்கள் என்று அறிந்து கொண்டு அவர்களைப் பார்த்ததும் அவர்களுக்காக இரக்கம் காட்டியிருக்க மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த தற்குப் பிறகு மறைவானவற்றை அறிய மாட்டார்கள் என்பது ஒருபுறமிருக் கட்டும். அவர்கள் உயிரோடு இருக்கும் போதுகூட மறைவான விஷயத்தை அறியக்கூடியவர்களாக இல்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒரு மனிதனே! என்னிடம் நீங்கள் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிடத் தனது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக்கூடும். மேலும், நான் (அந்தச் சாதுர்யமானவரிடமிருந்து) செவியேற்பதற்கேற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கிறேன். ஆகவே, (எவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமையில் சிறிதைத் தீர்ப்பளித்து விடுகின்றேனோ அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் பெயர்த்துக் கொடுக்கிறேன்.

அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)

(புகாரி: 6967)

நபி (ஸல்) அவர்களிடம் சிலர் வழக்குகளைக் கொண்டு வரும்போது அவர்களில் யார் வாதத் திறமை மிக்கவராக உள்ளாரோ அவருக்கே தன்னுடைய தீர்ப்பை வழங்குவதாக அல்லாஹ்வுடைய தூதர் இச்செய்தியில் கூறுகின்றார்கள்.

நபியவர்கள் மறைவானதை அறியக்கூடியவர்களாக இருந்தால் தன்னிடம் வழக்கை எடுத்து வருபவர்கள் வந்த உடனே, உன்னுடைய உரிமை இது, இவருடைய உரிமை இது என்று அவர்களிடம் எதையும் விசாரிக்கா மலேயே சரியான தீர்ப்பை வழங்கி யிருக்க வேண்டும். அல்லது அவர்களிடம் வாதத்தைக் கேட்டு விட்டாவது இதில் யார் பொய்யர், யார் உண்மையாளர் என்பதையாவது அறிந்து அதன்படி தீர்ப்பளிக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறெல்லாம் இல்லாமல் அவர்களுடைய வாதத்தைக் கேட்டு அவர்களில் யார் உண்மையுரைக்கிறார் என்பது தெரியாமல் சில வேளை தவறான தீர்ப்பை அறிவித்துவிடுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தே அவர்கள் உயிரோடு இருக்கும் போதும் மறைவான விஷயத்தை அறியக்கூயடிவர்களாக இல்லை என்பது தெளிவாகிறது.

உயிரோடு இருக்கும்போதே மறைவான விஷயத்தை நபி (ஸல்) அறிய முடியவில்லையென்றால்  மரணித்ததற்குப் பிறகு எவ்வாறு அறிய முடியும்? மறைவானற்றை அல்லாஹ்வுடைய தூதரால் அறிய முடியும் என்று சொன்ன சிறுமிகளைக் கூட நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்கிறார்கள்.

என்னுடைய திருமண தினத்தின் காலையில் நபியவர்கள் என்னிடத் தில் வந்தார்கள். (அப்போது) என்னிடத்தில் இரண்டு சிறுமிகள், பத்ரு போரில் கொல்லப்பட்ட எனது பெற்றோரை (நினைத்து) கவலைப் பட்டு பாட்டு பாடிக் கொண்டிருந்தார்கள். “எங்களிடத்தில் நாளை நடக்கவிருப்பதை அறியும் நபி இருக்கிறார்‘ என்று அதிலே அவ்விருவரும் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு நீங்கள் கூறாதீர்கள். அல்லாஹ்வைத் தவிர நாளை நடப்பதை யாரும் அறிய மாட்டார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ருபைய்யிஃ பின்த் முஅவ்வித்

(இப்னு மாஜா: 1897)

சிறுமிகள் கூறுவதைக்கூட நபி (ஸல்) தடுக்கின்றார்கள் என்றால் எந்த அளவிற்கு மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது. அதில் யாரும் கூட்டில்லை என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை இச்செய்தியிலிருந்து விளங்க முடிகிறது.

இன்று மார்க்க அறிஞர்கள், சமுதாயத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் அல்லாஹ்வுடைய தூதருக்கு மறை வான ஞானம் இருக்கிறது என்றும், இன்னும் ஒருபடி மேலே சென்று நல்லடியார்களுக்கும் அந்த ஆற்றல் இருக்கிறது என்றும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் மறைவான ஞானம் விஷயத்தில் சிறுமிகள் தானே என்று கூட பாராமல் கண்டிக்கிறார்கள் எனில், மார்க்கத்தை கற்றுக் கொண்ட ஆலிம்கள் இவற்றைச் சொன்னால் அது எவ்வளவு கண்டனத்திற்குரியது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மறைவான வற்றை அறிவார்கள் என்று ஒருவன் கூறினால் அவன் பொய்யன் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தமது கண்டனத்தைப் பதிவு செய்கிறார்கள்.

மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர் களிடம் “அன்னையே!  முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஃராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்” என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத் தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்” எனும் (அல்குர்ஆன்: 6:103)வது) வசனத்தையும், “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை.

ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை” எனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், “எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்” என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்” என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை” எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

மேலும், “எவர் உங்களி டம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்துவிடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்து விட்டார்கள்” என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார்” என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்…” எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். பிறகு “(மிஃராஜின் போது நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை) மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்” என்று சொன்னார்கள்.

(புகாரி: 4855)

“அல்லாஹ்வுடைய தூதர் மறைவானவற்றை அறிவார்கள் என்று கூறுபவர் பொய்யரே’ என்று ஆயிஷா (ரலி) கூறுவதிலிருந்து நபியுடன் வாழந்த நபித்தோழர்களுக்கும் இந்த நம்பிக்கை இல்லை என்பதைத் தெளிவுபடுத்தவே இச்செய்தியை இங்கே சுட்டிக் காட்டுகின்றோம். அல்லாஹ்வுடைய தூதருக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உறுதிப்படுத்தினாலும் இங்கே சுட்டிக் காட்டியதே போதுமானதாக உள்ளது.

நபி (ஸல்) அவர்களுக்கு எதிர்காலம், பிறரின் உள்ளத்தில் உள்ள விஷயம் போன்ற மறைவான ஞானம் இல்லையென்றாலும் அல்லாஹ் ஒரு சில இடங்களில் இதற்கு விலக்களிக் கின்றான். மறைவான செய்திகளை தூதர் (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுக்கிறான்.

நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கெட்டவருடன் கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.

(அல்குர்ஆன்: 3:179)

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்தி களை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.

(அல்குர்ஆன்: 72:26-28)

மக்களை நன்மையான காரியங் களின் பால் ஆர்வமூட்டுவதற்காக சொர்க்கம் இன்னும் அதில் வழங்கப்படும் கூலிகள், அவர்கள் தீமையின் பக்கம் செல்லாமல் இருப்பதற்காக நரகம் இன்னும் அதில் உள்ள தண்டனைகள், மேலும் அவர்கள் படிப்பினை பெறுவதற்காக கடந்த கால வரலாறுகள் போன்ற மனிதனுடைய அறிவால் அறிய முடியாத ஒரு சில செய்திகளை மாத்திரம் இறைவன் தனது தூதர்களுக்குத் தெரிவிப்பான். அந்தத் தூதர்கள் நமக்கும் கண்டிப்பாக அவ்விஷயங்களை தெரியப்படுத்தி விடுவார்கள். அவர்கள் அந்த மறைவான விஷயங்களை சரியான முறையில் குறைவில்லாமல் எடுத்துச் சொல்கின்றார்களா என்பதைக் கண்கானிக்க இறைவன் அவர்களைச் சுற்றி வானவர்களையும் ஏற்படுத்தி இருக்கின்றான்.

சாதாரண மனிதர்களுக்கும், நபிமார்களுக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹீ – இறைச்செய்தி வாயிலாக அறிந்து கொள்வார்கள். நாம் அந்த தூதர்கள் வாயிலாக அறிந்து கொள்வோம். அவர்கள் நமக்கு எதை அறிவித் தார்களோ அதைத் தாண்டி அவர்களுக்கும் வேறெதுவும் தெரியாது. நமக்கும் தெரியாது.

இறைவன் இதுபோன்ற கூலிகள், தண்டனைகள் போன்ற ஒரு சில விஷயங்களைக் கூட அறிவிக்க வில்லையென்றால் மனிதன் நன்மையான எந்தக் காரியத்திலும் ஆர்வமில்லாதவனாகவும், எந்த அச்சமுமில்லாமல் பாவங்களில் தான்தோன்றித்தனமாக ஈடுபடுப வனாகவும் மாறிவிடுவான்.

மனிதன் ஒரு விஷயத்தில் ஆர்வம் செலுத்துவதாக இருந்தாலும், ஒரு விஷயத்திலிருந்து விலகுவதாக இருந்தாலும் அதன் விளைவைப் பற்றி தெரிந்து வைத்திருந்தால்தான் விலகுவான். நன்மையாக இருந்தால் ஆர்வம் காட்டுவான். அவ்வாறில்லாமல், பொதுவாக ஒரு ஏவலோ, விலக்கலோ இருந்தால் அதில் மனிதனுடைய ஆர்வமும், அச்சமும் இல்லாமல் போய்விடும்.

ஒரு சில செய்திகளை தூதர்களுக்கு இறைவன் அறிவித்து, அவர்கள் நமக்கு அறிவிப்பார்கள் என்பதற்கு கீழ்க்காணும் செய்தி ஆதாரமாக அமைந்துள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில்  சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்” என்று கூறினார்கள்.

(புகாரி: 1149)

பிலால் (ரலி) சொர்க்கத்தில் இருப்பார்கள் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அதை இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து, அவர்கள் பிலால் (ரலி) அவர்களுக்கு அறிவிக்கின்றார்கள் என்று தான் இச்செய்தியை புரிந்து கொள்ள வேண்டும். அதுவல்லாது, நபி (ஸல்) அவர்களே சுயமாக அறிந்து கொண்டார்கள் என்று புரிந்தால், இஸ்லாத்தின் ஏராளமான ஆதாரங்களுக்கு மாற்றமானதாகும்.

அதுமட்டுமல்லாமல், நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் என்று வாதிடுபவர்களுக்கு இந்த ஹதீஸிலேயே உரிய மறுப்பும் உள்ளது.

ஏனெனில், சொர்க்கத்தில் பிலால் (ரலி) அவர்கள் இருப்பார்கள் என்பதை மட்டும் தான் இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான். அவர்கள் என்ன காரியத்திற்காக சுவர்க்கம் புகுந்தார்கள் என்பது நபியவர்களுக்குத் தெரியாமல் பிலால் (ரலி) அவர்களிடமே அதுபற்றி வினவுவ திலிருந்தே மறைவான ஞானம் நபிக்கு இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது; ஒரு சில விஷயத்தை மாத்திரம் அவர்கள் உயிருடன் இருக்கும் போது வஹீயின் மூலமாக அறிவித்துக் கொடுப்பான். அவர்கள் மரணித்ததற்குப் பிறகு அந்த விஷயங்களும் தெரியாது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இது மட்டுமில்லாமல் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் அல்லாஹ்வுடைய தூதருக்கும்  மறைவான ஞானம் கிடையாது என்பதை அறிவிக்கின்றன. ஆனால், அவ்லியாக்களும் நல்லடியார்களும் மறைவானவற்றை அறிவார்கள் என்று தர்காவாதிகள் வாதிடுகிறார்கள். அதற்கு இஸ்லாத்தில் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.

அல்லாஹ்வுடைய தூதரே மறை வான விஷயங்கள் அனைத்தையும் அறிய முடியாதென்றால் மற்ற மனிதர்களின் நிலை என்ன? என்பதைச் சிந்திக்க வேண்டும். அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய மறைவானற்றின் ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கும், நல்லடியார்களுக்கும் இருக்கிறது என்று ஒருவன் நம்பினால் அது இறைவனுக்கு இணை கற்பிக்கும்  பெரும்பாவமாகும்.