உணரப்படாத தீமைகள்
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
ஏக இறைவனாகிய அல்லாஹ் தனக்கு இணைகள், துணைகள் எதுவும் இல்லை என்றும், அவ்வாறு இணை இருப்பது ஒரு கடவுளுக்குத் தகுதியானதல்ல என்பதையும் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றான். இதையும் மீறி அல்லாஹ்விற்கு இணையானவர்கள் உண்டு என்று யாராவது நம்பினால் அதற்கு மறுமையில் மிகப் பெரிய தண்டனை காத்திருக்கின்றது என்றும் இறைவன் எச்சரிக்கை செய்கின்றான்.
ஷிர்க் என்று அறிந்து கொள்ள முடியாத வகையில் அமைந்துள்ள சிறிய இணை வைப்புக் காரியங்கள் பல முஸ்லிம்களிடம் மலிந்து கிடப்பதைக் காணலாம். இதுபோன்ற இணைவைப்புகள் அவர்களுக்கு ஒரு பாவமாகவே தெரிவதில்லை. அது இணை வைப்புக் காரியம் என்று தெரியாமலேயே செய்து வருகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் சில நேரங்களில் இதுவும் ஒரு நன்மையான காரியம் என்று கருதியே செயல்படுகிறார்கள். மிகப் பெரிய இணைவைப்பான விஷயங்களை விட்டு எவ்வாறு இஸ்லாமிய சமுதாயம் விலகி இருக்க வேண்டுமோ அதுபோன்று இந்தச் சிறிய இணைவைப்புகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.
“உங்கள் விஷயத்தில் நான் அதிகம் பயப்படுவது சிறிய இணை வைப்பாகும்” என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், “சிறிய இணை வைப்பு என்றால் என்ன?” என்று கேட்க, “முகஸ்துதி (பிறர் போற்ற வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் நற்செயல்கள்)” என்று நபி (ஸல்) அவர்க்ள பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத்
(அஹ்மத்: 23636)
மிகப் பெரிய இணை வைப்பிற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படிப் பயந்தார்களோ அதுபோல் சின்னச் சின்ன இணை வைப்புகளுக்கும் நபியவர்கள் கடுமையாகப் பயந்தார்கள். இணை வைப்பு என்ற இந்த விஷம் எந்த வடிவத்திலும் வந்து விடக்கூடாது என்பதில் நபியவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள்.
சில வகை இணை வைப்புகளைப் பார்த்தாலே தெரிந்து விடும். இன்னும் சிலவற்றை விளக்கிப் புரிய வைத்தால் தான் விளங்கும். அதுபோன்ற சில இணை வைப்புகளைப் இந்த உரையில் தெரிந்துக் கொள்வோம்.
ஒரு யூதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “கஅபாவின் மீது சத்தியமாக என்று கூறுவதன் மூலம் நீங்கள் இணை வைக்கின்றீர்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கஅபாவின் இறைவன் மீது சத்தியமாக” என்று கூறுமாறு நபித்தோழர்களுக்குக் கட்டளை யிட்டார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: குதைலா (ரலி)
(நஸாயீ: 3773, 3713)
அல்லாஹ் அல்லாதவற்றைக் கொண்டு யார் சத்தியம் செய்கின்றாரோ அவர் இணை வைத்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(அபூதாவூத்: 3251, 2829)
யார் சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வைக் கொண்டு மட்டும் சத்தியம் செய்யட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(புகாரி: 2679)
இன்றைக்கு சர்வ சாதாரணமாக, “தாயின் மீது ஆணை’ என்றும் “குர்ஆன் மீது சத்தியமாக’ என்றும் சிலர் சொல்வதைப் பார்க்கலாம். சத்தியம் செய்வது என்றாலே குர்ஆன் மீது தான் சத்தியம் செய்ய வேண்டும் என்றும், அதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறை என்றும் சிலர் நம்பி வருவதைப் பார்க்கலாம்.
ஆனால் இவ்வாறு அல்லாஹ் அல்லாத மனிதர்கள் மீதோ, பொருட்கள் மீதோ சத்தியம் செய்வது இணை வைத்தல் என்று இஸ்லாம் கூறுகின்றது. எனவே இந்த இணை வைப்பிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும்.
பயம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாக உள்ளது தான். தன்னைத் தாக்கக்கூடிய, அழிக்கக்கூடிய எந்த உயிரினத்தைப் பார்த்தாலும் மனிதன் பயப்படுவான். தன்னுடைய மேலதிகாரி தன்னைத் தண்டிப்பார் என்றோ, அவரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்றோ ஒரு மனிதன் பயந்து வேலை செய்வதைப் பார்க்கலாம்.
ஒரு மாணவன், ஆசிரியருக்குப் பயப்படுவான். ஒரு தொழிலாளி, முதலாளியைப் பார்த்துப் பயந்து வேலை செய்வான். இவையெல்லாம் மனிதனுக்கு இருக்கும் யதார்த்தமான அச்ச உணர்வுகள்.
ஒரு மனிதனுக்கோ அல்லது பொருளுக்கோ என்ன ஆற்றல், சக்தி இருக்கின்றதோ அந்த அளவிற்கு ஒருவன் பயப்படுகின்றான் என்றால் அது தவறல்ல! இறைவனுக்குப் பயப்படுவதைப் போன்று சில பொருட்களுக்கோ, சக மனிதனுக்கோ பயப்படுவது தான் இணை வைப்பாக மாறிவிடுகின்றது.
எந்தவித உபகரணங்களும் இல்லாமல் ஒரு மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளது. அவன் நினைத்தால் எந்தவித உபகரணமும் இல்லாமல் ஒரு மனிதனின் கை, கால்களை செயலிழக்கச் செய்ய முடியும். ஆனால் இந்த ஆற்றல் சாதாரண மனிதனுக்கோ, பொருட்களுக்கோ உள்ளது என்று சிலர் நம்புகிறார்கள். இதில் ஜோதிடம் மற்றும் சூனியம் பற்றிய செய்திகளை தனித் தலைப்பில் விளக்கியுள்ளோம். இங்கு நாம் கூறுவது, சில பொருட்கள் மூலம் நமக்கு ஆபத்து ஏற்படும் என்று நம்புவதைப் பற்றியதாகும்.
முஸ்லிமல்லாதவர்களோ அல்லது முஸ்லிம்களில் அறியாமையினாலோ சில பொருட்களைத் திருஷ்டி கழித்து தெருவில் போட்டிருப்பதைப் பார்க்கலாம். பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம், வாழைப்பழம், மல்லிகைப் பூ போன்ற பொருட்களை இதுபோன்று திருஷ்டி கழிப்பதற்குப் பயன்படுத்துவார்கள். இந்தப் பொருட்கள் தெருவில் கிடக்கும் போது அதைத் தாண்டிச் சென்றால் தனது உடலில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்று மனிதன் பயப்படுகிறான். இந்தப் பொருட்களால் மனிதனுக்குத் தீங்கை ஏற்படுத்த முடியுமா? அவற்றுக்கு அந்தச் சக்தி உள்ளதா?
பூசணிக்காய், தேங்காய் போன்ற பொருட்களை சமையலுக்குப் பயன்படுத்தலாம். அதில் தயாரிக்கப் படும் உணவு கெட்டுப் போய் விட்டால் அதனால் பாதிப்பு ஏற்படும். இதைத் தவிர அவற்றுக்கு வேறு என்ன சக்தி இருக்கின்றது? சாதாரண உணவுப் பொருள், அதனுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்று நம்புவது இணை வைப்பு இல்லையா? இறைவனுக்கு உள்ளது போன்ற சக்தி, அந்தப் பொருட்களுக்கு இருப்பதாக நம்புவது இணைவைப்பு இல்லையா?
அல்லாஹ் எப்படி எந்த உபகரணமும் இல்லாமல் மனிதனுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்துவானோ அதுபோன்று இந்தப் பொருட்களாலும் செய்ய முடியும் என்று நம்புவது தானே இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல்!
தனது நேசர்களை ஷைத்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதி யுள்ளவன்.
அல்லாஹ்வை அஞ்சி, அவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாது அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்ன முன் சென்றோரிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. அல்லாஹ் கணக்கெடுக்கப் போதுமானவன்.
இஸ்லாம் மார்க்கத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே இருக்கின்றது. தன்னுடைய இந்த அதிகாரத்தை அவன் வேறு யாருக்கும் கொடுக்க வில்லை. கொடுக்கவும் மாட்டான்.
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.
அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (எவருக்கும்) இல்லை.
மார்க்க விஷயத்தில் தலையிடுவதற்கு இறைவன் வேறு யாருக்கும் அதிகாரம் தரவில்லை.
ஆனால் சிலர் மார்க்க விஷயத்தைத் தீர்மானிப்பதற்கும், ஹலால் ஹராம் விஷயத்தை முடிவு செய்வதற்கும் ஆலிம்கள் மற்றும் இமாம்களுக்கு அதிகாரம் உண்டு என்று கருதுகின்றனர். அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டோ, அவன் தனது தூதர் மூலமாகக் காட்டிய வழிமுறையைக் கொண்டோ ஒரு சட்டத்தை, மார்க்கத் தீர்ப்பை வழங்குவது தவறில்லை.
ஆனால் ஆலிம்களுக்கும், இமாம்களுக்கும் தாங்களாக சட்டம் இயற்றும் அதிகாரம் இருப்பதாக நம்புவது இணை வைத்தல் என்ற குற்றத்தில் வந்து சேர்ந்து விடுகின்றது. அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதையும், அந்த அதிகாரம் தனக்கோ அல்லது தான் பின்பற்றும் இமாமுக்கோ இருப்பதாக எண்ணுவதை இறைவனுக்கு இணை கற்பிக்கும் குற்றமாகவே இஸ்லாம் மார்க்கம் பார்க்கின்றது.
“அல்லாஹ்வே இதைத் தடை செய்தான் என சாட்சியமளிக்கும் உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்!” என்று கேட்பீராக! அவர்கள் (பொய்யாக) சாட்சியமளித்தால் அவர்களுடன் சேர்ந்து நீரும் சாட்சியமளிக்காதீர்! நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, மறுமையை நம்பாதோரின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அவர்கள் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.
“இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது” என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.
ஒரு மனிதனைத் தண்டிப்பதும் மன்னிப்பதும் இறைவனின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளதாகும். அவன் யாரை வேண்டுமானாலும் மன்னித்து சொர்க்கத்திற்கு அனுப்பலாம்; அல்லது தண்டனை கொடுத்து நரகத்திற்கு அனுப்பலாம். இவை இறைவனது தனிப்பட்ட அதிகாரத் திற்கு உட்பட்டது. இதில் நபிமார்கள் உள்ளிட்ட யாரும் தலையிட முடியாது. இறைவன் இதை அனுமதிக்கவும் மாட்டான்.
(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையை உரத்துச் சொல்லும் வசனங்களில் இது முக்கியமான வசனமாகும்.
உஹதுப் போரின்போது இவ்வசனம் அருளப்பட்டது. இப்போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு தாடையும் பிளக்கப்பட்டது. அவர்களின் முகத்திலிருந்து இரத்தம் பீறிட்டு ஓடியது. “தமது நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்” என்று வேதனை தாள முடியாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது தான் “அதிகாரத்தில் உமக்குப் பங்கில்லை” என்ற இவ்வசனம் (அல்குர்ஆன்: 3:128) அருளப்பட்டது.
தாங்க முடியாத துன்பம் ஏற்படும் போது மனிதர்கள் இது போன்ற வார்த்தைகளைக் கூறி விடுவதுண்டு. நீ உருப்பட மாட்டாய் என்று சாபம் இடுவார்கள். பாதிக்கப்பட்டவனின் வாயில் இத்தகைய வார்த்தைகள் வெளிவருவதை அல்லாஹ்வும் மன்னிப்பான் என (அல்குர்ஆன்: 4:148) வசனம் கூறுகிறது.
ஆனால் இறைவனின் தூதர் இவ்வாறு கூறினால் ஒருவரை வெற்றிபெற வைக்கவும், தோல்வியுறச் செய்யவும் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதோ என்ற கருத்தை அது தந்து விடும். எனவே தான் “எனக்கு இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்?” என்று வேதனை தாளாமல் இறைவனின் தூதர் கூறியதை இறைவன் கண்டிக்கிறான்.
“நான் நினைத்தால் உம்மைத் தாக்கியவர்களுக்குக் கூட வெற்றியளிப்பேன்; அல்லது அவர்களை மன்னித்தும் விடுவேன்; எனது அதிகாரத்தில் தலையிட நீ யார்?” என்ற தொனியில் இவ்வசனம் அமைந்துள்ளது.
இறைவனின் அதிகாரம் தமக்கு இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்க மாட்டார்கள் என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இது போன்ற வார்த்தைகள் கூட இறைவனுக்குக் கோபம் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவது, இறைவனின் தன்மையில் தனக்குப் பங்கிருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதுவும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயலாகவே கருதப்படுகின்றது. இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இதுபோன்ற இணை வைப்பை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப் பட்டார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை” என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்துவிட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்துவிட்டான்” என்று கூறினார்கள்.
காரிஜா பின் ஸைத் அல் அன்சாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உம்முல் அலா (ரலி) அவர்கள் எங்கள் (அன்சாரிப்) பெண்களில் ஒருவராக இருந்தார்கள்; நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்திருந்தார்கள்.
அவர்கள் எனக்குத் தெரிவித்த தாவது: “முஹாஜிர்களை யாருடைய வீட்டில் தங்க வைப்பது‘ என்று அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது (எங்கள் வீடு) உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுடைய பங்காக வந்தது. ஆகவே, அவர்கள் எங்களிடம் தங்கினார்கள். அவருக்கு நோய் ஏற்பட்ட போது நாங்கள் அவரை கவனித்துக் கொண்டோம்.
இறுதியில், அவர் மரணித்து விட்ட போது அவரை அவரது துணிகளில் வைத்து (கஃபனிட்டு) விட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். (நான் உஸ்மான் பின் மழ்வூனை நோக்கி), “அபூ சாயிபே! அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி சொல்கிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தெரியாது. என் தந்தையும், என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! உஸ்மானுக்கோ மரணம் வந்துவிட்டது. நான் அவருக்கு நன்மையையே விரும்புகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் “அவரிடம் எப்படி நடந்து கொள்ளப்படும்; (மறுமையில் அவரது நிலை என்னவாகும்?)’ என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் பிறகு நான் யாரையும் பாராட்டிக் கூறுவதேயில்லை. நபியவர்கள் இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு, நான் உறங்கினேன். அப்போது கனவில் உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுக்கு (சொர்க் கத்தில்) ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நீருற்று (கொடுக்கப்பட்டு) இருப்பதாகக் கண்டேன். அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அந்தக் கனவைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் “அது அவருடைய (நற்)செயல்” என்று கூறினார்கள்.
இறைவனின் அதிகாரத்தில் தலையிடுவதைப் போன்று சில சமயங்களில் நம்மையும் அறியாமல் எதார்த்தமாகப் பேசி விடுகிறோம். ஆனால் அதைத் தெரிந்தே, வேண்டுமென்றே செய்யும் போது அது இறைவனின் வல்லமையில் நாம் தலையிட்டு, அவனுக்குச் சமமாக நம்மைக் கருதுகிறோம் என்றாகிவிடும்.
அதனால் தான் இந்த ஹதீஸை அறிவிக்கும் உம்முல் அலா (ரலி) அவர்கள், இனிமேல் யாரையும் இப்படிப் புகழ்ந்து பேசமாட்டேன் என்று முடிவு செய்கிறார்கள். எனவே இறைவனுடைய ஆற்றலில் வேண்டுமென்றே தலையிடுவது இணைவைப்புக் கொள்கையைச் சார்ந்ததாகும்.
ஓர் ஊரில் மழை பொழிந்தால், “எங்கள் ஊரில் எல்லோரும் நல்லவர்களாக வாழ்கிறார்கள்; அதனால் தான் மழை கொட்டுகின்றது’ என்ற ரீதியில் சர்வசாதாரணமாக மக்கள் பேசிக் கொள்வதைப் பார்க்கலாம். மழை பொழியவில்லை என்றால் ஊரில் ஏதோ ஒரு பாவி இருக்கின்றான்; அதனால் தான் மழையே இல்லை என்று சொல்வதையும் பார்க்க முடிகின்றது.
இதைச் சிலர் விளையாட்டாகவும், சிலர் உண்மையாகக் கருதியும் பேசுவார்கள். ஆனால் எப்படிப் புரிந்து கொண்டு இவ்வாறு பேசினாலும், எழுதினாலும் இது மார்க்க அடிப்படையில் இது இணைவைத்தல் என்ற பாவத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும்.
அவர்கள் நம்பிக்கையிழந்த பின் அவனே மழையை இறக்குகிறான். தனது அருளையும் பரவச் செய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன்.
அவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான்.
இதுபோன்று ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன.
மழை பொழிவதற்கு அல்லாஹ் அல்லாத மற்றவற்றை நாம் காரணம் காட்டினால் அது இறைவனையே மறுப்பதாகும். இதோ நபியவர்கள் மிகக் கடுமையாக எச்சரிப்பதைப் பாருங்கள்:
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹுதைபியா‘ எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். -அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர்.
அப்போது “என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். “அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது‘ எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்‘ என இறைவன் கூறினான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே இதுபோன்ற சிறிய, பெரிய இணைவைப்புக் காரியங்களை விட்டும் நாம் விலகி, சுவனத்தைப் பெறக் கூடிய நன்மக்களாக ஆவோம்.
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.