கொஞ்சி விளையாடி…

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

கொஞ்சி விளையாடி…

சம்பாதிக்கின்ற இடங்களில் ஆண்களுக்குப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்களின் நிம்மதி குலைந்து விடுகிறது. வெளியில் பலவிதமான சூழ்நிலையில் உள்ள கணவன், வீட்டிற்கு வந்தவுடன் நிம்மதியாகலாம், மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் வெளியிட தாக்கம் குறைந்து மனது இலகுவாகிவிடும் என்று நினைத்து வந்தால், வந்தவுடனே சண்டையென்றால் வீட்டிலும் நிம்மதியை இழக்கிறான் ஒரு ஆண். இதனால் அவனது இரவுத் தூக்கம் கலைந்துவிடும். நியாயத்தைக் கூட பேசமுடியாத நிற்கதியான நிலையில் தள்ளப்படுகிற ஆண்களின் பரிதாபத்தைப் பார்க்கிறோம்.

நியாயத்தைப் பேசும்போது கூட, மனைவி வந்ததும் அவளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறாயா? என்று அம்மா கேட்பாள். இதனால் மனைவி செய்கிற அநியாயத்திற்கும் தாய் செய்கிற அநியாயத்திற்கும் தலையாட்டுகிறவனாக வாழ்கிற இழிநிலையைப் பார்க்கிறோம்.

தாய் தந்தையுடன் வாழ்கிற, திருமணம் முடித்த, 35 வயதுக்குட்பட்ட ஆண்களிடத்தில் கேட்டுப் பார்த்தால், அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாமியார் மருமகள் பஞ்சாயத்தில்தான் கழிகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இப்படியான சூழ்நிலையில் வாழ்கிற ஆண்கள் தொழில் செய்வதில் திருப்திப்பட மாட்டார்கள்; நிம்மதிக்காகவே ஏங்குவார்கள்; வியாபாரத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். இவர்களில் சிலர் தவறான பாலியல் உறவுகளுக்குக் கூட ஆளாகி விடுகிறார்கள். அல்லது போதை போன்ற தவறான பழக்க வழக்கங்களுக்குள் சிக்குண்டு விடுகிறார்கள்.

எனவே மாமியார் மருமகள் என்ற இரு நிலை, ஒவ்வொரு பெண்களுக்கும் கிடைக்கிறது. மருமகள் அவளது பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும். அதேபோன்று மாமியார் என்ற பொறுப்பை சுமப்பவர்களும் தங்களின் பொறுப்புணர்நது செயல்பட வேண்டும்.

ஆனால் இதில் பெரும்பாலும் மாமனார் கொடுமை கிடையாது. நமது மனைவிதான் மருமகளைக் கொடுமைப்படுத்துகிறாள் என்று உணர்ந்து வாழ்கிற மாமனார்கள் தான் அதிகம். அப்படியெனில் பெண்களின் இந்தக் குணம் தவறு என்பது தெளிவாக விளங்குகிறது. எனவே மாமியார்கள் தங்களது மருமகளை, தனது மகளைப் போன்று கவனித்துப் பாதுகாத்திட வேண்டும்.

அடுத்ததாக, குடும்பத்திலுள்ள ஆண்கள் மிஷின் மாதிரி செயல்பட்டு, எந்திரத்தைப் போன்று இறுக்கமாக வாழக் கூடாது. மாறாக, பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுவது, மனைவியிடம் சந்தோஷமாக இருப்பது, கேலி செய்து கொள்வது போன்ற காரியங்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

ஏனெனில் வீட்டிற்கு வெளியே அலுவலகப் பணியில், வியாபாரத்தில் மிஷின் வாழ்க்கையாக வாழ்கிறோம். அதில் ஏற்பட்ட சோர்வு, வீட்டிற்குள் வந்து கலகலப்பாக இருக்கும் போது, விளையாட்டாக இருக்கும் போது தீர்ந்துவிடுகிறது. மனதாலும், உடலாலும் புத்துணர்வு பெற்று விடுகிறோம். இப்படியெல்லாம் இருந்தால்தான் இல்லற வாழ்க்கை இனிக்கும். இதையெல்லாம் மார்க்கம் கவனித்து வழிநடத்துகிறது.

எந்தளவுக்கு எனில் ஆண்கள் தங்களது நண்பர்களிடம் எவ்வாறெல்லாம் கேலி, கிண்டல் செய்து கொள்வார்களோ, எப்படியெல்லாம் சிரிப்பூட்டி விளையாட்டுத்தனமாக நடந்து கொள்வார்களோ அதுபோன்று கணவன் மனைவி தம்பதிகளும் தங்களுக்கிடையில் சிரிப்பை ஊட்டிக் கொள்வதை மார்க்கம் வலியுறுத்துவதை நபிவழியில் பார்க்கிறோம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்து விட்டார்கள். (இறக்கும்போது) ‘ஏழு பெண் குழந்தைகளை’ அல்லது ‘ஒன்பது பெண் குழந்தைகளை’ விட்டுச் சென்றார்கள். ஆகவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மண முடித்துக் கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “ஜாபிரே! நீ மணமுடித்துக் கொண்டாயா?’’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று சொன்னேன். அவர்கள், “கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?’’ என்று கேட்டார்கள். நான், “இல்லை;  கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)’’ என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் சிரிப்பூட்டி மகிழ்ந்து கொள்ளலாமே!’’ என்று சொன்னார்கள்….

(புகாரி: 5367, 6387)

ஆக தேவையான நேரங்களில் கண்டிப்புடன் நடந்து கொண்டாலும், வீட்டிற்குள் குடும்பத் தலைவர் கலகலப்பாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா பின் அர்ரபீஉ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, “ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்கள். நான், “ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்’’ என்று சொன்னேன். அதற்கு “அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கு நான், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்‘’ என்று சொன்னேன்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்‘’ என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்’’ என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?’’ என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்’’ என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்’’ என்று மூன்று முறை கூறினார்கள்.

(முஸ்லிம்: 5035, 5036)

ஆக இதுபோன்ற ஆதாரங்கள் கணவன் மனைவி தங்களுக்கிடையில் குதூகலமாகவும் சிரிப்பூட்டியும் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விளங்கமுடிகிறது. இந்த நபிவழியைப் பேணுவதற்கு மாப்பிள்ளையின் தாயாரான மாமியாரும் தடையாக இருந்துவிடக் கூடாது. மாறாக இப்படியெல்லாம் இருந்தால்தான் நமது மகனுக்கும் நமது மருமகளுக்கும் இடையில் நல்ல இணக்கம் ஏற்படும். அதனால் இந்தக் குடும்பம் தழைத்தோங்கும் என்று நினைத்து மாமியார்கள் செயல்பட வேண்டும்.

இதையெல்லாம் சொல்லக் காரணம், ஓர் ஆண் வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தால், அவனது மன உளைச்சல்கள், கோபதாபங்கள், மனச் சங்கடங்கள் அவமானங்கள் அத்தனையும் மனைவியின் நெருக்கத்தால், விளையாட்டால், சிரிப்பூட்டுதலால் களையப்பட வேண்டும். வீட்டிற்குள் வந்தால் நிம்மதியை ஆண்கள் அடையும் விதத்தில் மனைவியும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் நடந்து கொள்ள வேண்டும். இதுவெல்லாம் இஸ்லாமியக் குடும்பத்தின் ஒழுங்குமுறையாகும். ஒருவருக்கு ஒருவர் அனுசரனையாக நடப்பதே முக்கியம்.

தபூக் அல்லது கைபர் யுத்தம் முடிந்து நபியவர்கள் (வீட்டிற்கு) வந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் அலமாரியில் திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது காற்றடித்து அத்திரையின் ஒரு பகுதி விலகி ஆயிஷா அவர்களின் விளையாட்டுப் பொம்மைகள் (பிள்ளைகள்) வெளியில் தெரிந்தது. அப்போது நபியவர்கள், ‘‘ஆயிஷாவே இது என்ன?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘எனது பொம்மைகள் (பிள்ளைகள்)’’ என்று கூறினார்.

அவைகளுக்கிடையில் நபியவர்கள் இரண்டு இறக்கையுள்ள குதிரையைக் கண்டார்கள். அப்போது நயிவர்கள், ‘‘நடுவில் இருக்கிற இது என்ன?’’ என்று கேட்டதற்கு, ஆயிஷா (ரலி), குதிரை என்றார்கள். ‘‘அதற்கு மேலிருப்பது என்ன?’’ என்று கேட்டதற்கு, இறக்கை என்று பதிலளித்தார்கள். உடனே நபியவர்கள் ‘‘குதிரைக்கு இறக்கைகள் இருக்குமா?’’ என்று கேட்டதற்கு, ‘‘சுலைமான் நபியவர்கள் வைத்திருந்த குதிரைகளுக்கு இறக்கை இருந்தது என்பதைக் கேள்விப்பட்டதில்லையா?’’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். அதனைக் கேட்ட நபியவர்கள், அவர்களது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(அபூதாவூத்: 4284)

இந்தச் செய்தியில் குதிரைக்கு இறக்கை இருக்கவா செய்யும்? என்று நபியவர்கள் கேட்டதற்கு, சுலைமான் நபியவர்களின் குதிரைக்கு இருந்ததாக அவர்கள் கேள்விப்பட்டதைப் பதிலாகச் சொன்னதை ரசித்ததினால் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள்.

வீட்டிலுள்ள பெண்கள் அவர்களுக்குப் பிடித்த வகையில் பொருட்களை வைத்திருப்பார்கள். அவற்றையெல்லாம் பெரிதாக ஆண்கள் கண்டு கொள்ளக் கூடாது. சில பெண்கள் பல்லாங்குழி வைத்திருப்பார்கள். பொம்கைள் வைத்திருப்பார்கள். கொண்டைக்கு அணிகிற பல வகையான சாமான்களை வைத்திருப்பார்கள். இது பெண்களுக்கான தனி உலகம். அப்படி மனைவிமார்கள் சின்னச் சின்ன விஷயத்தில் ஈடுபாட்டுடன் இருந்தால், அதை நாம் கலங்கப்படுத்திவிடாமல் ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஊனப்படுத்தாமலாவது நடந்து கொள்ள வேண்டும்.

நம்மில் பலர், ‘கல்யாணம் முடித்துப் பிள்ளை குட்டியெல்லாம் பெற்றுவிட்டாய். ஏழு கழுதை வயதாகிவிட்டது. இன்னும் பல்லாங்குழி விளையாட்டு கேட்குதா? பொம்மையை வைத்து விளையாடுகிறாயே? அறிவில்லையா? அப்படியா? இப்படியா?’ என்றெல்லாம் மனைவியின் சிற்சில சந்தோஷத்தையெல்லாம் கண்டிக்கிறேன் என்ற பெயரில் கலங்கடித்து விடுவதைப் பார்க்கிறோம்.

இன்றைய சமூகக் கட்டமைப்பில் மாமியார்கள் இதையெல்லாம் ஏற்கத் தயாராக இருக்கிறார்களா? இல்லை. ஆனால் பெண்ணின் இதுபோன்ற விளையாட்டுத்தனங்களை சட்டை செய்யாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டால், அதுவே இஸ்லாமியக் குடும்பம்.

இந்தச் செய்தியில் தபூக், கைபர் என்று வருவதைப் பார்க்கும் போது, இதுவெல்லாம் ஆயிஷா (ரலி) திருமணம் முடித்து, இல்லறக் கடமையை நிறைவேற்றி, ஹதீஸ்களை விளங்கி பிறருக்கு அறிவிக்கிற பக்குவமான, பெரிய, குடும்பப் பெண்ணாக இருக்கும் போதுதான் ஆயிஷா (ரலி) அவர்கள் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதாகப் புரிய முடிகிறது.

அப்படியெனில் இதுபோன்று நாமும் எல்லாவற்றையும் கவனித்து, மனைவியின் விருப்பங்களில் விட்டுக் கொடுத்துப் போனால் குடும்ப உறவு இனிமையானதாக அமையும். குதூகலம் குறையாமல் வாழமுடியும்.