பறவைகளின் பல மைல் பயணம்
பறவைகளின் பல மைல் பயணம்
படைத்த நாயனின் ஓர் அற்புதம்
அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றைக் கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.
16:79 اَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ مُسَخَّرٰتٍ فِىْ جَوِّ السَّمَآءِ ؕ مَا يُمْسِكُهُنَّ اِلَّا اللّٰهُؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ
ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன
பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அவை ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டுள்ளன. உமது இறைவன் தான் அதை வசப்படுத்தி இருக்கின்றான் என்று இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
இதில் மிகப்பெரிய அறிவியல் உண்மை உள்ளடங்கி இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்தப் பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்காக அது செல்லும் வேகம் மணிக்கு 1,07,000 கி.மீ. ஆகும்.
மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் பூமி வேகமாக நகரும்போது, பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்தப் பறவைகள் மீது பூமி மோத வேண்டும். ஆனால் அவ்வாறு மோதுவதில்லை.
பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை இருப்பதால் முன்பக்கம் இருக்கும் பறவையை தள்ளிக் கொண்டும் பின்பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக் கொண்டும் பூமி நகர்கிறது. முன்பக்கம் பறக்கின்ற பறவையைத் தள்ளாமல் இந்தப் பூமி வேகமாகச் சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது, பூமியில் மோதி செத்து விடும். இந்தப் பேருண்மையைத் திருக்குர்ஆன் அற்புதமான சொற்களால் குறிப்பிடுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாகும்.
திருக்குர்ஆனின் இந்த இரு வசனங்களிலும் ஆகாய அந்தரத்தில் பறக்கின்ற பறவைகள் தனது அற்புதங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவியல் என்ன கூறுகின்றது? புரியாத புதிர் என்று கூறுகின்றது.
(12.11.2017.) அன்று தமிழ் இந்து நாளேட்டில் இந்தியாவுக்கு பறவைகள் வரத்து குறைந்ததற்குக் காரணம் என்ன என்ற கோணத்தில் பறவைகள் பற்றிய ஒரு கட்டுரை வெளியானது. அதில் பறவைகளின் பயணத்தைப் பற்றிய அற்புதத்தைக் காண முடிந்தது. மேற்கண்ட இந்த இரு வசனங்களின் வெளிச்சத்தில் அந்த அற்புதத்தைக் காண ஒரு பயணத்தை இந்த கட்டுரையில் மேற்கொள்வோமாக!
வடக்கிலிருந்து தெற்கே வலசை வரும் பறவைகள்: ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைவது ஏன்?
பறவைகள் வலசை செல்வது குளிர்காலம் தொடங்கியதும் உலகெங்கும் நடக்கும் முக்கிய நிகழ்வு. அந்த வகையில், தற்போது பறவைகளின் வலசை தொடங்கியிருக்கிறது.
பொதுவாக உலகின் வடபகுதியிலிருந்து தென் பகுதிக்கு பறவைகள் வலசை வருகின்றன. குளிர்காலத்தில் வடபகுதியிலுள்ள நீர்நிலைகள் பனியால் உறைந்து விடும். இதனால், அங்கு மீன், பூச்சி, பழங்கள் உள்ளிட்ட உணவுகள் பறவைகளுக்குக் கிடைக்காது. இதனால், காடுகள், சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளைச் சார்ந்து வாழும் பறவைகள் குளிர் காலத்தில் மிதவெப்ப மண்டல நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன.
மத்திய ஆசிய வான்வழி பாதையில்..
உலகெங்கும் பறவைகளின் வான்வழி வலசைப் பாதைகள் பன்னிரண்டுக்கும் மேல் உள்ளன. இந்தியாவுக்கு வரும் பறவைகள் கிழக்கு ஐரோப்பா, மத்திய ரஷ்யா, தென் சீனா, உஸ்பெகிஸ்தான், கசகிஸ்தான், மங்கோலியா வழியான மத்திய ஆசிய வான்வெளி வலசைப் பாதையையே தேர்ந்தெடுக்கின்றன. 1980-லிருந்து இந்தியாவுக்கு வலசை வரும் வெளி நாட்டுப் பறவைகளின் வருகை வெகுவாக குறைந்து வருவதாக அச்சம் தெரிவிக்கும் பறவையியல் ஆர்வலர்கள், நமது சுற்றுச்சூழல் வேகமாக சீர்கெட்டு வருவதே இதற்கு காரணம் என்கிறார்கள்.
அக்டோபர் தொடங்கி மார்ச் வரை வெளிநாட்டுப் பறவைகள் தமிழகம் உள்ளிட்ட தென் பகுதிகளில் தங்கி இருக்கும். அதன்படி, தற்போது வெளிநாட்டுப் பறவைகள் தமிழகம் நோக்கி வரத் தொடங்கிவிட்டன. மதுரை மாவட்டம் சாமநத்தம், அவனியாபுரம், வெள்ளக்கல், அரிட்டாபட்டி, கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, நேசநேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு வெளிநாட்டு பறவைகள், கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன.
நட்சத்திரங்கள் அமைப்பை வைத்து..
இது குறித்து பறவையியல் ஆர்வலரான மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது:
கடந்த காலங்களை ஒப்பிடுகையில் சில வகைப் பறவைகள் இப்போது நம் பக்கம் வருவதே இல்லை. வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களைக் கடந்து இந்தியாவுக்கு வருகின்றன. அப்படி வரும்போது வழியில் தேவையான உணவு கிடைக்காமல் போகலாம் என்பதால், வலசை கிளம்பும் போதே வழக்கத்தைவிட கூடுதலான உணவை உண்டு உடம்பில் கொழுப்பை ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றன. உள்ளான் இனப் பறவைகள், காட்டு வாத்துகள், சிலவகைக் குருவி இனங்கள், கொக்கு – நாரை இனங்கள் இவற்றோடு கழுகு இனங்களும் இந்தியாவுக்கு வலசை வருகின்றன.
இவற்றில் சில பறவைகள் பகலில் இடம்பெயரும்; சில இரவில் பறக்கும். சூரிய வெப்பத்தால் சக்தி இழந்து சோர்ந்து விடாமல் இருக்கவே சில பறவைகள் இரவு நேரப் பயணம் மேற்கொள்கின்றன. இவைகள் இரவில் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து, தாங்கள் செல்ல வேண்டிய திசையை எளிதாக அறிகின்றன” என்றார்.
எவரெஸ்ட்டைக் கடக்கும் ரகசியம்
சில பறவைகள், ஒரு நாளைக்கு ஐம்பது கி.மீ தூரம் பறக்கும். ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு மீண்டும் அடுத்த இலக்கை நோக்கிப் பறக்க ஆரம்பிக்கும். சிலவகைப் பறவைகள், எத்தனை ஆயிரம் கிலோ மீட்டரையும் தொடர்ச்சியாக பயணித்து இலக்கை அடைந்துவிடும். கோண மூக்கு உள்ளான் போன்ற பறவைகள் இரண்டு மூன்று நாள்கள்கூட தொடர்ச்சியாகப் பறக்கும் திறன் கொண்டவை. வாத்து இனங்கள் ஒரு நாளில் 150 கி.மீ பறந்தால் அடுத்த ஒரு வாரத்துக்கு எங்காவது ஓரிடத்தில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.
இதுகுறித்தும் பேசிய ரவீந்திரன் நடராஜன், “வலசைப் பாதையில் பறவைகளின் பறக்கும் சக்தியை மனித அறிவால் துல்லியமாக அளவிட முடியாது. உதாரணமாக வரித்தலை வாத்து மங்கோலியாவில் இருந்து கிளம்பி இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் மேலாகப் பறந்து தென் இந்தியப் பகுதிகளை வந்தடைகிறது. உறையும் பனி சூழ்ந்த இமய மலையை இந்தப் பறவை ஐந்தரை நாட்களில் சர்வசாதாரணமாய் கடக்கிறது. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு மனிதனுக்கு எத்தனையோ உயிர்க்காப்புச் சாதனங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், இவையெல்லாம் இல்லாமல் இந்த வாத்துகளும், சில வகை கொக்குகளும் எவரெஸ்ட் சிகரத்தைக் கடக்கின்றன.
இந்தப் பறவைகளால் மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது என்பது இதுவரை விஞ்ஞானிகளுக்கே விளங்காத புதிர்! பறவைகளின் வலசைப் போக்கை வைத்தே, நாம் எத்தகைய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கணிக்க முடியும்.
எங்கிருந்தோ ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் கடந்து இங்கு வந்துவிட்டுப் போகும் பறவைகள் நமது இயற்கைச் சூழலை துளியும் கெடுத்துவிட்டுப் போவதில்லை. ஆனால், பிறந்தது முதல் இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையைக் கண்டபடி பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதன் தாக்கம் தான் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது” என்றார்.