கந்துவட்டி கொடுமை!
கந்துவட்டி கொடுமை!
கருகிய உயிர்கள் உருகிய உள்ளங்கள்
2017 அக்டோபர் 23ஆம் தேதி அன்று தென்காசி காசிதர்மத்தைச் சார்ந்த இசக்கிமுத்து, சுப்புலட்சுமி தம்பதியர், தங்களது குழந்தைகள் நான்கு வயது மதுசரண்யா, இரண்டு வயதைக்கூட எட்டிப் பிடிக்காத பால்குடி மாறாத பதினெட்டு மாத அட்சய பரணிகா ஆகிய இருவருடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்க வந்தனர். மனுக் கொடுக்க வந்தவர்கள் தங்கள் மீதும் கள்ளம் கபடமறியாத தங்களது பிஞ்சுக் குழந்தைகள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளித்தனர்.
பற்றி எரிகின்ற நெருப்பில் அவர்கள் – குறிப்பாகப் பச்சிளம் குழந்தைகள் கதறி அழுத காட்சி பார்ப்பவர் அனைவரையும் பதறவும், பதைபதைக்கவும் வைத்தது. அருகில் நின்றவர்கள் மட்டுமல்லாமல் தூர இருந்து தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவே இல்லை என்று சொல்லுமளவுக்கு அந்த சோக நிகழ்ச்சி அனைவரின் உள்ளங்களில் ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிந்து விட்டது.
இதில் வேதனை என்னவென்றால் தங்கள் தேகங்களுக்குத் தீ வைத்து விட்டு அலறித் துடித்த தம்பதியரையும், கொழுந்து விட்டு எரியும் தழலில் தாங்கள் எதற்காக எரிகின்றோம் என்று எதுவுமே தெரியாத இளம் மொட்டுக்களையும் காப்பாற்ற அவசரம் காட்டாமல் ஆசுவாசமாகத் தங்கள் கைப்பேசிகளில் படம் பிடித்துக் கொண்டிருந்த ஈவு இரக்கமற்ற ஈன ஜென்மங்களை நினைத்து துக்கத்தில் நெஞ்சம் அடைக்கின்றது.
இரக்கமுள்ளவர்கள் தீயை அணைக்க முன்வந்த நேரத்தில் மொத்தத் தீயும் முழு உடல்களையும் பதம் பார்த்து முடித்து விட்டது. உயிர் பிழைக்க முடியாத அளவுக்கு ஆர்த்தெழுந்த அக்கினியின் அகோரப் பசிக்கு அவர்கள் நால்வரும் இரையாகி விட்டார்கள்.
தங்களை மட்டுமல்ல! ஒரு பாவமும் அறியாத தங்கள் பச்சிளம் குழந்தைகளையும் பற்றி எரிகின்ற தீக்குப் பசியாற வைத்ததற்கும், பலியாகக் கொடுத்ததற்கும் காரணம் என்ன? இந்தக் கோர முடிவுக்கு அவர்களைக் கொண்டு சென்ற காரியம் என்ன? அதற்குரிய ஒரு வரிப் பதில். கந்து வட்டி தான்!
இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலெட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த முத்துலெட்சுமி என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய வட்டியைக் கட்டாமல் இல்லை. வாங்கிய பணத்தை விட இரு மடங்காக 2 லட்சத்து 34 ஆயிரம் கட்டியுள்ளார். கந்துவட்டி கதாநாயகியின் காசு வெறி அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். வாழ்நாள் முழுவதும் வட்டி கட்டியே சாகனுமா? என்ற தாளாத வேதனையில் அருகில் உள்ள அச்சன்புதூர் காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் கொடுத்தனர்.
காவல் நிலையத்தில் அந்தக் கூலித் தொழிலாளியின் குரல் எடுபடவில்லை. அதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனு ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மீண்டும் அச்சன்புதூர் காவல் நிலையம் என்று சுற்றி, சுற்றி வந்தது தான் மிச்சமே தவிர முத்துலெட்சுமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாட்டுகின்ற கந்து வட்டியிலிருந்து மீட்டுகின்ற வழிவகை சுப்புலட்சுமி குடும்பத்திற்குப் பிறக்கவில்லை.
மாறாக, இசக்கிமுத்து குடும்பத்தினர் மிரட்டப்படுகின்றனர். இருப்பினும் மனம் தளராத தம்பதியினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆறு தடவை படையெடுத்து வந்து மனு கொடுத்துள்ளனர். அதன் பின்னும் கந்து வட்டிக்குத் தான் விடிவு காலம் பிறக்கவில்லை. அதனால் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டனர்.
நான்கு உயிர்கள் பறி போன பிறகு தான் கந்து வட்டியை நோக்கி அரசாங்கம் கண் திறந்து பார்க்கின்றது. அவர்களது மரணம் கந்து வட்டியின் அகோர ஆட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கருகி செத்துப் போன நான்கு உயிர்கள் இதுவரை கண்டு கொள்ளப்பட்ட அல்லது கண்டும் காணாமல் இருந்த பல கொடூர நிகழ்வுகளை வெளி உலகத்திற்குக் கொண்டுள்ளது. ஒளிந்து கிடந்த உண்மைகளை ஊடகங்கள் ஒட்டு மொத்தமாக ஊர் மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளன.
அந்தக் கொடூர நிகழ்வுகளையும், ஒளிந்து கிடந்த உண்மைகளையும் எடுத்துக் காட்டி, இஸ்லாம் வட்டியை எதிர்த்துப் போர் பிரகடனம் செய்வதற்கான காரணம் என்ன என்பதையும், இஸ்லாம் மட்டுமே வட்டிக்கு ஒரே தீர்வு என்பதையும் இந்தக் கட்டுரை விரிவாக விளக்க உள்ளது.
இஸ்லாம் கூறும் தீர்வைப் பார்ப்பதற்கு முன்னால் கந்து வட்டியினால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலில் பார்ப்போம். கந்து வட்டிக் கொடுமையால் தங்களையே மாய்த்து, சாய்த்துக் காலியானவர்களில் இசக்கிமுத்து சுப்புலட்சுமி தம்பதியினரும் சின்னஞ்சிறு குழந்தைகளும் முதலாமவர்கள் கிடையாது.
தற்கொலை செய்த பொற்கொல்லர்
சில ஆண்டுகளுக்கு முன்பு அதே திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சார்ந்த கோபால் ஆசாரி தனது குடும்பத்தினர் 6 பேர்களுடன் சயனைட் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு பொற்கொல்லர். இவரும், இவரது குடும்பத்தினரும் தற்கொலை செய்து இறந்ததற்குக் காரணம் கந்து வட்டி தான்.
விஷம் அருந்திய பள்ளி ஆசிரியர்
இவர்களுக்கு முன்பு அந்தச் சோக வரலாற்றுப் பதிவில் இதே திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சார்ந்த பள்ளிக்கூட ஆசிரியர் பாபு இளங்கோ (48) பதிவாகியுள்ளார். அவர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர். இருபத்தைந்து வயதுள்ள ஓர் இளைஞரிடம் வட்டிக்கு வாங்கியிருந்தார். தவணைகளில் பணத்தைச் செலுத்த முடியவில்லை. வட்டிக்கார இளைஞன் ஆசிரியரை வீட்டுக்கு வந்து அன்றாடம் வாட்டியெடுக்கின்றான். வாய்க்கு வந்தபடி வார்த்தைகளில் திட்டித் தீர்க்கின்றான். அத்துடன் நிற்கவில்லை.
அவருடைய பருவ வயது மகள் முன்னிலையில் நடுவீட்டில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கின்றான். அவனது அடாவடித்தனமும், அத்துமீறிய அநாகரீக ஆட்டமும் அவரை ஆறாத துயரத்தில் தள்ளுகின்றது. அவரது ஆறாத ரணத்திற்கு விஷமே மருந்தானது. ஆம்! விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
சிலந்தி வலையில் சிக்கிய தையல் தொழிலாளி
புதுக்கோட்டையைச் சார்ந்த தையல் தொழிலாளி கண்ணியமான தொழில் நடத்தி வந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக அவர் கந்து வட்டி வலையில் விழுகின்றார். சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியைப் போன்று அவரது நிலை ஆனது. கடைசியில் அவரும், அவரது மனைவியும் திருவண்ணாமலையில் தற்கொலை செய்து இறக்கின்றனர். இப்படி கந்து வட்டியால் கருகியவர்கள், காலியானவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.
கடந்த 6 மாதக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கந்து வட்டிக் கொடுமையால் 47 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர். ஒட்டு மொத்த தமிழகத்திலும் கடந்த 7 ஆண்டுகளில் 823 பேர் கந்து வட்டியின் பாதிப்பால் இறந்திருக்கின்றனர் என்று புள்ளி விவரம் கூறுகின்றது. அரசாங்கம் கண் திறந்து பார்க்கவே இல்லை.
இத்தனை உயிர்கள் பலியான பிறகும் பாடம் படித்திருக்க வேண்டும். படிப்பினை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவற்றை அரசாங்கம் பொருட்படுத்தவே இல்லை. அவற்றின் மூலம் பாடம் கற்றுக் கொள்ளவுமில்லை. அதனுடைய எதிர் விளைவும் எதிர் வினையும் தான் இசக்கி முத்து, சுப்புலட்சுமி தம்பதியினரின் தீக்குளிப்பு நிகழ்வு.
கந்து வட்டிக்குக் காரணம் என்ன?
வாழ்க்கையில் எத்தனையோ இன்றியமையாத தேவைகள் ஏற்படும் போது தவிர்க்க முடியாத செலவினங்கள் உண்டாகும். பிள்ளைகளின் பள்ளிப் படிப்பு, சீருடை வாங்குதல், பின்னர் அவர்களை மருத்துவம், பொறியியல், கலை போன்ற உயர் கல்விக்காக கல்லூரியில் சேர்ப்பதற்கும் ஒரு கணிசமான அளவில் பணச் செலவு ஏற்படுகின்றது. இது கல்வி வகைக்கான செலவாகும்.
அடுத்து, குடும்பத்தார்களில் யாரேனும் ஒருவருக்கு சில அசாதாரணமான நோய்கள் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவமனைக்கு ஒரு பெருந்தொகையைக் கட்ட நேரிடும். இது மருத்துவ செலவாகும்.
வியாபாரத்தில் திடீரென்று ஏற்படுகின்ற இறக்கம், அதை உடனே ஈடு கட்ட ஒரு பெரிய தொகை தேவைப்படும். இது தொழில் ரீதியான செலவு. இதற்கு எடுத்துக் காட்டாக பத்திரிக்கையில் வந்த சில செய்திகளைப் பார்ப்போம்.
காய்கறி வியாபாரி மாரிமுத்து:
நான் கடந்த 10 ஆண்டுகளாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்கிறேன். வியாபாரத் தேவைக்காக வாரத்துக்கு ரூ.10 ஆயிரம் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்குவேன். தினமும் வட்டியுடன் சேர்த்து ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்துகிறேன். வட்டி அதிகமாக வாங்குகிறார்கள் என்று தெரிந்தே தான் வாங்குகிறேன். வங்கிக்குக் கடன் வாங்கச் சென்றால் பல்வேறு ஆவணங்களைக் கேட்கின்றனர். அத்துடன் தேவையின்றி அலைய விடுகின்றனர். தினமும் வங்கிக்கு அலைந்தால் வியாபாரம் பாதிக்கிறது. எனவே, வேறு வழியின்றி கந்துவட்டிக்குக் கடன் வாங்கி வியாபாரம் செய்கிறேன்.
பூ விற்கும் பெண்:
நான் வியாபாரத்துக்காக தினமும் தண்டல் மூலம் கடன் வாங்குகிறேன். தினமும் காலையில் 900 ரூபாய் கடன் வாங்கி மாலையில் அதற்கு 100 ரூபாய் வட்டியுடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் திருப்பிச் செலுத்துவேன். ஒருநாள் தவணைத் தொகை செலுத்தத் தவறினால் மறுநாள் வட்டிக்கு வட்டி சேர்த்து கட்ட வேண்டும். தவறினால் அடியாட்கள் வந்து மிரட்டுவார்கள். இப்பகுதியில் எங்களை வியாபாரம் செய்ய விடமாட்டார்கள்.
கந்து வட்டியை வியாபாரிகள் ஏன் நாடுகின்றார்கள்? அதனால் அவர்கள் என்ன? என்ன பாதிப்புக்குள்ளாகின்றார்கள் என்று இச்செய்திகள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இது போன்ற இன்றியமையாத காரணங்களுக்காக மக்கள் கந்து வட்டி என்ற நரகப் படுகுழியில் போய் விழுகின்றனர். மீண்டு வர முடியாத அளவுக்கு அதிலேயே மாண்டும் விடுகின்றனர். கல்யாண வகைச் செலவுக்காகவும் கந்து வட்டியை நோக்கி நகர்கின்றார்கள்.
நள்ளிரவு வரும் நடமாடும் வங்கி
மேலே கோயம்பேடு வியாபாரி, பூக்காரி ஆகியோர் வங்கியில் கடன் வாங்க முடிவதில்லை. காரணம் வங்கியின் வட்டி குறைவான சதவிகிதத்தில் இருந்தாலும் அதை வாங்கச் சென்றால் பல்வேறு விதமான ஆவணங்களைக் கேட்டு வங்கி அதிகாரிகள் பாடாய் படுத்தி விடுகின்றார்கள். அலைய விட்டு அலைக்கழிக்கின்றார்கள்.
(இஸ்லாத்தில் குறைந்த வட்டி, அதிக வட்டி என்ற பாகுபாடு கிடையாது. அனைத்து விதமான வட்டியையும் இஸ்லாம் தடை செய்கின்றது.)
வங்கி வாசலின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி, பாதங்கள் வீங்கி விடுகின்றன. அதே சமயம், கந்து வட்டிக்கார்கள் நமது வாசல்களுக்கு வந்து கதவு தட்டிக் காசு கொடுத்து விட்டுப் போகின்றார்கள் என்று இந்தக் கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
கந்து வட்டியின் தலைநகர் என்றழைக்கப்படும் மதுரை செல்லூரில் கந்து வட்டிக்காரர்கள் உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு நள்ளிரவில் கூட இலட்சக்கணக்கில் கொடுத்து விட்டு போகின்றார்கள். ஏடிஎம்மில் கூட இந்த வசதி கிடையாது. கந்து வட்டிக்கார்கள் ஒரு நடமாடும் வங்கியாகச் செயல்படுகின்றனர். மொபைலில் கூப்பிட்டால் பைக்கில் வந்து பணத்தைத் தந்து விட்டு போய்விடுகின்றார்கள். இந்த வசதி வங்கியில் கிடைப்பதில்லை. கந்து வட்டி செழிப்பதற்கும், கொழிப்பதற்கும் இது முக்கியக் காரணமாக அமைகின்றது.
இல்லாமை, இயலாமை
குறிப்பாக, பெண் மக்களைத் திருமணம் முடித்துக் கொடுப்பதற்காக வரதட்சணை, நகை நட்டு, சீர் சீராட்டு என பெரும் பொருளாதாரச் செலவு ஏற்பட்டு விடுகின்றது. (ஆனால் திருமணங்கள் தூய இஸ்லாமிய அடிப்படையில் அமைந்து விட்டால் அதற்காகக் கந்து வட்டியென்ன? சாதாரண வட்டியில்லாத கடன் கூட வாங்க வேண்டிய அவசியம் இருக்காது).
இப்படிப்பட்ட செலவுகள் காரணமாகத் தான் கந்து வட்டியை நோக்கி மக்கள் படை எடுக்கின்றனர். சரியான வேலை வாய்ப்பு, தொழில் இருந்தால் மக்கள் கந்து வட்டிக்காரர்களை நோக்கி பயணிக்கத் தேவையில்லை.
மழையில்லாததால், தென் தமிழகத்தில் விவசாயம் படுத்து விட்டது. விளைச்சல் நிலம் வானம் பார்த்த பூமியாகி விட்டது. வறட்சி, பஞ்சம் விவசாயத்தில் உள்ளவர்களை வேறு தொழில் துறைகளை நோக்கி விரட்டுகின்றது. வேறு தொழில்களோ இவர்களை இங்கு ஏன் வந்தீர்கள் என்று வினா தொடுக்கின்றது. கட்டுமானத் தொழில் காற்றாடுகின்றது.
இந்தச் சூழலில் இந்திய நாட்டின் பிரதமரின் கையாலாகாத தனம் ஏழை மக்களை வறுமையின் உச்சத்திற்கே கொண்டு போய்விட்டது. அவரது கண் மூடித்தனமான பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் ஜி.எஸ்.டி வரி விதிப்பும் மக்களிடமிருந்த கொஞ்ச நஞ்ச வாழ்வாதாரத்தையும் பறித்து அவர்களை வீதிக்குக் கொண்டு வந்து விட்டது. இப்படிப்பட்ட இக்கட்டுகள் தான் கந்து வட்டிக்காரர்களுக்கு சாதக அம்சங்களாகி விடுகின்றன.
கடனை அடைக்க கிட்னி விற்பனை
கடனுக்காக இசக்கிமுத்து தம்பதியர், அவர்களின் பிள்ளைகள் தங்கள் இன்னுயிரைப் பலியாக்கியுள்ளார்கள் என்று பார்த்தோம். வட்டிக்கு வாங்கிய கடனைத் திருப்பி அடைப்பதற்காக தங்களது கிட்னியை விற்கவும் ஏழை மக்கள் தயாராகி விடுகின்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சம்பூர்ணம் என்ற பெண் தனது கணவரைப் பற்றி ஒரு புகார் அளிக்கின்றார். அந்த புகாரைப் பார்ப்போம்.
எனது கணவர் ரவி, குடும்ப வருமானம் பற்றாக்குறையால், சில இடங்களில் கடன் பட்டுள்ளார். கடன் கொடுத்தவர்களுக்குப் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாமல் வட்டி மட்டுமே கொடுத்து வந்தார். இந்நிலையில், எங்கள் குடும்ப வறுமையைத் தெரிந்து, அவிநாசியைச் சேர்ந்த ஒருவர் எனது கணவர் ரவியை அணுகி, உனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தால் ஐந்து லட்சம் ரூபாய் வாங்கித் தருவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து என் கணவர் என்னிடம் தெரிவித்த போது, பணத்துக்காக சிறுநீரகத்தைக் கொடுக்கக் கூடாது என நான் தடுத்தேன். இருப்பினும் அக்டோபர் 22ஆம் தேதி இரவு, அவிநாசியைச் சேர்ந்த அந்த நபருடன் எனது கணவர் சென்று விட்டார். எனது கணவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருப்பது, 23ஆம் தேதி இரவுதான் எனக்குத் தெரியவந்தது. மருத்துவமனையில் தனக்குத் திருமணமாகவில்லை எனக்கூறி, எனது மாமனார் மூலம் கையெழுத்து போட வைத்துள்ளனர். எனவே, தாங்கள் தலையிட்டு, என் கணவரை மீட்டுத்தர வேண்டுகிறேன் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
நமது நாட்டில் ஏழைகளின் மனுக்களுக்கு மரியாதை கிடையாது. ஆனால் இந்த மனு எப்படியோ ஆட்சியரின் பார்வையைப் பிடித்தது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எர்ணாகுளம் காவல்துறைக்குத் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவ மனைக்குத் தகவல் போகின்றது. ஒருவாறாக, கணவர் ராஜ்குமாரை அவரது ஆப்ரேஷன் நடப்பதற்கு முன்னால் காப்பாற்றி விடுகின்றார்கள். இந்த முயற்சியின் காரணமாக அவரது கிட்னி பறிபோகாமல் தடுக்கப்பட்டுள்ளது. கந்து வட்டி எப்படியெல்லாம் மக்களைச் சுரண்டுகின்றது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ராஜ்குமார் என்பவர் ஒரு நெசவாளர். அவர் கடன்பட்டிருக்கின்றார் என்று தெரிந்து அவரிடம் ஏஜெண்ட் ஒருவர் 5 லட்சம் தருகின்றேன். உங்கள் கிட்னியை தானம் செய்யுங்கள் என்று கூறித் தான் அவர் எர்ணாகுளம் சென்றார். இப்படிக் கடன்பட்ட நெசவாளர்கள் ஏராளமாக உள்ளனர். உடனே அத்தகையவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி, கிட்னியை அபகரிப்பதற்காக ஏஜண்ட்டுகள் என்ற பெயரில் ஒரு கொள்ளைக் கூட்டம் ஊரைச் சுற்றிக் கொண்டு அலைவதை இந்நிகழ்வு நமக்கு தெரிவிக்கின்றது.
ஈவு இரக்கமற்ற ஈன ஜென்மங்கள்
மனிதனுக்கு இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுவது இயற்கை. கஷ்டத்தில் உழல்கின்ற கையறு நிலையில் உள்ள அந்த மனிதனை நோக்கி இரக்கம் சுரக்க வேண்டும். தன்னால் இயன்றதை ஈந்து உதவ வேண்டும். இரங்கி, எதையும் கொடுக்க மனமில்லையேல், கடனாவது கொடுத்து உதவ வேண்டும். அதற்கும் இயலவில்லையேல், இப்படிப்பட்டவர்களுக்கு உதவ முடியவில்லையே என்று எண்ணி இதயம் வாட வேண்டும்; வருந்த வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டு விட்டு சோதனையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கறக்க வேண்டும், அனைத்தையும் சுரண்ட வேண்டும் என்று நினைப்பவன் உண்மையில் ஈவு, இரக்கமில்லாத ஈன ஜென்மமாகத் தான் இருப்பான் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
இரு காசோலைகளில் கையெழுத்துகள்
ஒருவன் தனது கஷ்ட நிலையில் வட்டிக்குக் கடன் கேட்கின்றான். வட்டி கொடுப்பவன் அவனது கையறு நிலையைப் பயன்படுத்தி அவனை கறவை மாடாக்கும் அரக்கனாகவும், அக்கிரமாக்காரனாகவும் ஆகிவிடுகின்றான்.
இந்த அக்கிரமக்காரன் அவனிடத்தில் இரண்டு காசோலைகளை நீட்டுகின்றான். இரண்டிலும் கையெழுத்து வாங்கி விடுகின்றான். ஒரு காசோலையில் வாங்கிய தொகை நிரப்பப்பட்டிருக்கும். அந்தக் காசோலை அசலுடன் வட்டியையும் சேர்த்து திருப்பிக் கொடுக்கும் வரை கடன் வாங்கியவனிடம் இருக்கும். இன்னொரு காசோலை தொகை நிரப்பப்படாமல் வட்டிக்கு கொடுத்தவனிடமே இருக்கும்.
அசலுடன் பன்மடங்காகக் குட்டி போட்ட வட்டியையும் சேர்த்துக் கட்டிய பிறகு அப்பாடா சனியன் தொலைந்தது என்று வீட்டில் உட்கார்கின்றான். மறுவாரம் வட்டிக்குக் கொடுத்தவனிடமிருந்து வக்கீல் நோட்டீஸ் வருகின்றது. வாங்கிய தொகைக்கு போலிக் காசோலையைத் தந்து ஏமாற்றி விட்டாய்! அதனால் உன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப் படுகின்றது என்று அந்த வக்கீல் நோட்டீஸ் கதை வாசிக்கின்றது.
அவ்வளவு தான்! தான் ஏமாற்றப்பட்டோம் என்று வட்டிக்கு எடுத்தவன் அதிர்கின்றான். அனல் புழுவாகத் துடிக்கின்றான். வேறு வழியில்லாமல் அணுஅணுவாக ஒவ்வொரு நிமிடமும் துடித்து சாவதை விட ஒரே நிமிடத்தில் ஒரேயடியாக அனல் தீயில் வெடித்து சாவது மேல் என்று தன் மீது தீ வைத்துக் கொண்டு வட்டிக்கணக்குடன் வாழ்க்கைக் கணக்கையும் முடித்துக் கொள்கின்றான். அந்த அளவுக்குக் கந்து வட்டியின் கோரப் பிடி நீண்டு செல்கின்றது.
பணம் படைக்கும் பண முதலைகள்
இரு விதமான போலி காசோலைகளில் கையெழுத்து வாங்குவது என்பது கற்பனைக் கதை அல்ல! உண்மையில் நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளாகும். அண்மையில், முகன்சந்த் போத்ரா என்பவன் Central Crime Branch மத்திய குற்றவியல் பிரிவு மூலம் கைது செய்யப்படுகின்றான். இவன் திரை உலகத்திற்கே வட்டிக்கு விடுகின்ற திமிங்கலம். பட உலகத்திற்குப் பல கோடி ரூபாய்களை வட்டிக்கு விட்டு பன்மடங்கு லாபத்தை ஈட்டுகின்ற பணமுதலை. கொள்ளை லாபத்திற்கு வட்டிக்கு விடுதல், வாடிக்கையாளர்களைக் கொடுமைப் படுத்துதல் போன்ற குற்றச்சாட்டில் தான் இவன் கைது செய்யப்படுகின்றான். கூடவே சந்தீப், ககன் என்ற அவனது இரு மகன்களும் இதே விதமான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுகின்றார்கள்.
மணி என்பவருக்கு இந்தக் கொள்ளைக்காரக் கும்பல் 21 லட்சத்தை வட்டிக்கு விடுகின்றது. அதற்காகப் பின்தேதியிட்டு, தொகை நிரப்பாத 24 காசோலைகளில் மணியிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கின்றார்கள். சில காலி பிராமிஸரி நோட்டுகளிலும் கையெழுத்து வாங்கிக் கொள்கின்றார்கள். எதிர்பார்த்தது போலவே மணிக்கு பணத்தை திரும்பக் கொடுக்க முடியவில்லை. உடனே, இந்த வழிப்பறிக் கும்பல் 20 லட்சம், 35 லட்சம் என்று காலி பிராமிஸரி நோட்டுகளில் நிரப்பி விட்டு வழக்கு தொடுக்கின்றார்கள். வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமா? ஒரு கோடி ரூபாய் கொடு என்று மிரட்டுகின்றார்கள். இது தான் இந்த வழிப்பறிக்காரர்களின் வழக்கமான தொழில் நடவடிக்கை என்று தெரிய வருகின்றது. இந்த மோசடிக்காகத் தான் இந்த கும்பல் கைது செய்யப்படுகின்றது.
உ.பி. காவல் துறையுடன் ஒரு கொள்ளை ஒப்பந்தம்
இது போன்று இன்னொரு வழக்கு. டாக்டர் சுதீர் (வயது 57) சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றுபவர். இவர் 2011ல் கல்விச் செலவுக்காகவும், வீடு கட்டுவதற்காகவும் புரசைவாக்கத்தைச் சார்ந்த காமராஜ் என்பவனிடம் 20 லட்சம் வட்டிக்கு வாங்குகின்றார். காமராஜ், நீட்டிய வெற்றுக் காசோலைகளிலும் வெற்று பிராமிஸரி நோட்டுகளிலும் காட்டிய இடங்களில் டாக்டர் சுதீர் கஞ்சத்தனமின்றி கையெழுத்துக்களைப் போடுகின்றார். வாங்கிய தொகையை வட்டியுடன் கட்டிக் கொண்டிருந்தும் வாட்டியெடுக்கின்றான்.
காமராஜின் தொந்தரவையும், தொல்லையையும் தாங்க முடியாமல் சட்டத்தின் துணையை நாடுகின்றார் சுதீர். டாக்டர் சுதீருக்கு காமராஜின் சாம்ராஜ்யம் உ.பி வரை விரிந்து கிடக்கின்றது என்பது தெரியாது. அவரை உ.பி. லக்னோ காவல்துறை தமிழகத்திற்கு வந்து கைது செய்கின்றது. கையெழுத்துப் போட்ட காலி காசோலைகள், பிராமஸரி நோட்டுகளை வைத்து கட்டப் பஞ்சாயத்து பேசி கதையை முடிக்கின்றது.
அரசியல்வாதிகளின் தலையீடின்றி அறவே நடக்க முடியாது என்பதையே இது நமக்கு உணர்த்துகின்றது. கல்லூரியில் படித்துக் கொடுக்கின்ற பட்டதாரிக்கு இந்தக் கதி என்றால் படிக்காத, பள்ளி வாசனையே தெரியாத பாமர கைநாட்டு மக்களின் கதி என்ன? என்று ஒரு கணம் சிந்திக்க வைக்கின்றது.
சூறையாடப்படும் சொத்து பத்துகள்
வட்டி வாங்கியவன் வட்டியைக் கட்ட இயலவில்லை என்றால் அவனிடம் அவன் வசிக்கின்ற வீட்டை எழுதி வாங்கி விடுகின்றான். காலிமனை ஏதுமிருந்தால் அதைக் கபளீகரம் செய்து விடுகின்றான். விவசாய நிலமிருந்தால் அதை ஆட்டையைப் போட்டு விடுகின்றான். இப்படி வட்டிக்கு வாங்கியவனின் சொத்துபத்துகள் கந்து வட்டியால் சூறையாடப்பட்டு விடுகின்றன.
வசிக்கும் வீடுகளையும், வைத்திருந்த நிலபுலன்களையும் வட்டிக்காரனுக்குத் தாரை வார்த்து விட்டு ஊரை விட்டுக் காலி செய்தவர்கள் பலர் உள்ளனர். வட்டிக்கு வாங்கியவன் அரசு ஊழியனாக இருந்தால் அவனிடத்தில் உள்ள ஏடிஎம் கார்டுகளைப் பிடுங்கி வைத்துக் கொள்கின்றான்.
அலுவலர்கள் முதல் துப்புரவு தொழிலாளர்கள் வரையில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அத்தனை பேர்களும் கந்து வட்டிக் கொடுமையில் கவிழ்ந்து கிடக்கின்றனர். இதில் துப்புரவுத் தொழிலாளர்கள் அதிகமான பாதிப்புகளுக்குள்ளாகி உள்ளனர். இந்த நாடு அதள பாதாளத்தை நோக்கி அசுர வேகத்தில் பயணிக்கின்றது என்பதைத் தான் இந்தக் கோர நிகழ்வு நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
பணம் கொடுத்தவனின் பாலியல் சேட்டைகள்
வட்டிக்கு வாங்கிய பாவத்திற்காக அவன் வட்டிக்காரனிடமிருந்து வாங்கி கட்டிக் கொள்கின்ற வசவு மழைகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது. காது கொடுத்துக் கேட்க முடியாது. அவனை மட்டும் திட்டினால் போதாது என்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் திட்டித் தீர்க்கின்றான். தேள் கொடுக்காகக் கொட்டித் தள்ளுகின்றான். திட்டியது போக மனைவியின் கண் முன்னாலேயே கணவனை அடித்து உதைக்கின்றான். பான் பராக்கை மென்று விட்டு வீடு தோறும் துப்பி விட்டு அடுப்பில் கொதிக்கின்ற உலையிலும் துப்பி விடுகின்றான்.
கன்னிப் பெண்களின் முன்னிலையிலேயே படுக்கை அறைகள் மற்றும் பூந்தொட்டிகளில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்துகின்றான். குழந்தைகள் செல்லமாக விளையாடுகின்ற பொம்மைகளைப் போட்டு உடைக்கின்றான். மீன் தொட்டிகள் இருந்தால் அந்தத் தொட்டிகளை உடைத்து மீன்களைத் தரையில் போட்டு துடிக்க விட்டு வேடிக்கை பார்க்கின்றான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டுப் பெண்களிடம் திரைப்பட பாணியில் பாலியல் சேட்டைகளில் இறங்குகின்றான்.
இதையெல்லாம் பார்த்து விட்டு மானமுள்ள ஒருவன் உயிருடன் வாழ முடியுமா? தூக்கில் தொங்கத் தான் முடியும்! அதைத் தான் இன்றைக்கு வட்டி வாங்கியவன் செய்து கொண்டிருக்கின்றான்.
வாட்டியெடுக்கும் வட்டியின் வகைகள்
ஏழைகள் மாட்டித் தவிக்கின்ற, வாட்டி யெடுக்கின்ற வட்டியின் வகைகள் தான் எத்தனை? எத்தனை?
மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, நாள் வட்டி, வார வட்டி, வட்டிக்கு வட்டி, தண்டல் என்ற பல்வேறு பெயர்களில் கந்து வட்டி தனது காட்டுத் தர்பாரை நடத்தி வருகின்றது.
ரன் முதல் ராக்கெட் வட்டி
பணத்திற்கு மணிக்கணக்கு போட்டு வாங்கும் வட்டிக்கு பெயர் ரன் வட்டி. 1000 ரூபாய் பணம் வாங்கிவிட்டுத் தினம் 100 வீதம் வட்டி கட்டிவிட்டு பத்தாவது நாள் முடிவில் 1000 ரூபாய் திருப்பி தருவது ராக்கெட் வட்டி.
கம்ப்யூட்டர் வட்டி
ஒரு வாரத்திற்கு 10 ஆயிரம் கடன் வாங்கினால் அதில் 2 ஆயிரம் எடுத்துக்கொண்டு 8 ஆயிரம் கொடுப்பார்கள். ஒரு வாரத்தில் திருப்பிச் செலுத்தும் போது 10 ஆயிரம் செலுத்த வேண்டும். இதற்குப் பெயர் கம்ப்யூட்டர் வட்டி. 10000 ரூபாய் வட்டிக்கு வாங்குகின்றான் என்றால் அந்த 10000 ரூபாயை கண்ணில் பார்க்க முடியாது, கையில் அந்தத் தொகையை முழுமையாக வாங்க முடியாது. ஏனெனில், அது கையில் வரும் போதே 9 ஆயிரமாகத் தான் வரும். அந்த அளவுக்கு கந்து வட்டியின் கோர அராஜகம் கொடி கட்டிப் பறக்கின்றது.
கொழிக்க வைக்கும் கொள்ளை லாபம்!
திருநெல்வேலியில் ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் கொள்ளை லாபம் கொட்டுகின்ற கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுடன் வேறு சில சாதியினரும் இந்தத் தொழிலில் கைகோர்த்துக் களமிறங்கினர். பின்னர், இது இரு சாதியினர் மோத வழி வகுத்தது. கலவரம் வெடித்தது. நெல்லை மாவட்டம் ரத்தக் களறியானது. கள்ளச் சாராயத்திற்கு எதிராகக் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்தது. இனிமேல், கள்ளச் சாராயம் கைகொடுக்காது என்று நம்பிக்கை இழந்த அந்த சாதியினர் கையில் எடுத்த தொழில் கந்து வட்டித் தொழில்!
சோதனை முயற்சியிலேயே சாதனை கண்ட அவர்கள் அதிலேயே காலூன்றி விட்டனர். திரை உலகத்தினருக்கும் கந்து வட்டிக்காரர்களின் கடைக்கண் பார்வையும், அவர்களின் கடாட்சமும் தேவைப்பட்டது. மொத்த வியாபாரிகளுக்கும் இவர்களது தயவு தேவைப்பட்டது. நல்லாவே கல்லாக் கட்டுகின்றார்கள். கள்ளச் சாராயத்தில் பார்க்காத காசு பணத்தை பல மடங்காக இதில் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
திருநெல்வேலி கந்து வட்டிக்காரர்களின் கொள்ளைத் தொழில் சாம்ராஜ்யம் சென்னை, மதுரை, கோவை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, அந்தமான் நிக்கோபர் தீவுகள் வரைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று திருநெல்வேலியில் ஒரு மூத்த காவல் துறை அதிகாரி கூறுகின்றார்.
கந்து வட்டித் தொழிலில் அரசாங்கத்திலிருந்து ஓய்வூதியம் பெறுகின்ற அலுவலர்களும் ஈடுபடுகின்றனர். அந்த அளவுக்கு இது பணமழை பொழியும் வருவாய் துறையாக உள்ளது. அரசாங்கம் இதைக் கண்டு கொள்ளவில்லை.
காவல் துறையின் கள்ளக் கூட்டு
கந்துவட்டிக்காரர்களுடன் உள்ளூர் காவல் துறை கைகோர்த்துச் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கந்துவட்டித் தொழிலில் ஈடுபடுவோர் பலர் அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி ரீதியாக முக்கியப் பிரபலங்களாக இருப்பதால் போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை கந்துவட்டிக் காரர்களிடம் தொடர்ச்சியாகப் போலீஸார் மாமூல் பெறுவதும், கந்துவட்டிக் கொடுமையை நீடிக்கச் செய்கிறது.
கடன் வாங்கியவர்களுக்கு சாதகமாகப் பேசுவது போல செயல்படும் போலீஸார், வட்டி கட்ட முடியாதவர்களின் சொத்தையே விற்று கந்து வட்டிக்காரர்களுக்குக் கொடுக்கும் அளவுக்கு கட்டப் பஞ்சாயத்து செய்வதாகத் தெரிகிறது. இதனால், சமீபகாலமாகத் தென் மாவட்டங்களில் பல தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மொத்ததில் கந்து வட்டி நீடிப்பதற்கும் நிலைப்பதற்கும் சாதி, அரசியல், காவல் துறை ஆகிய மூன்று காரணிகள் தான் என்பதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஏழைகளுக்கு உதவாத 2003 ஆண்டு சட்டம்
2003ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கந்து வட்டிக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றியது. அதற்கு ‘ தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டித் தடுப்புச் சட்டம்’ என்று பெயர். அதன்படி, வரம்பு மீறிய வட்டித் தொகை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆண்டுக்கு 18 சதவீதத்துக்கு மேல் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது தடை, அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கலாம்.
இந்தச் சட்டத்தின் கீழ் வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிக்கும் வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இச்சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வட்டித் தொழிலே ஒரு வரம்பு மீறல்
அரசின் இந்தச் சட்டம் வட்டியில் வரம்பு மீறக் கூடாது என்று சொல்கின்றது. ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் வட்டியே ஒரு வரம்பு மீறிய வருவாயாகும். மது, திருட்டு, கொள்ளை, விபச்சாரத்தின் வருவாய் எப்படியோ அது போன்று வட்டியும் தடை செய்யப்பட்ட ஒரு பாவகரமான, மக்களின் சாபத்திற்குரிய வருவாயாகும் என்று இஸ்லாம் கூறுகின்றது.
வட்டியை நோக்கி ஒரு சமூகம், ஓர் அரசாங்கம் இந்தப் பார்வையைப் பார்க்காத வரை வட்டியை ஒழிக்க முடியாது. வட்டி என்பது ஒரு விஷ மரமாகும். அதில் இத்தனை சதவிகிதம் அனுமதி; இத்தனை சதவிகிதம் தடை என்பது மனிதனைச் சாகடிக்கின்ற விஷத்தில் சதவிகிதக் கணக்கு போடுவதற்கு சமமாகும். அதனால் தான் இஸ்லாம் வட்டியை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்து விடுக்கின்றது.
இஸ்லாத்தின் இந்தக் கடுமையான பார்வை இல்லையேல் அது இசக்கிமுத்து, சுப்புலட்சுமி தம்பதியர்களைப் போல் பல உயிர்களைச் சாய்க்காமலும் மாய்க்காமலும் விடாது. அத்துடன், உலகத்திலேயே தற்கொலை சாவு முஸ்லிம்களிடம் தான் மிக மிகக் குறைவு. அதற்குக் காரணம் இஸ்லாம் விதியை நம்ப வைத்து, மனிதன் விரக்தி நிலைக்குச் செல்வதை விட்டும் அதன் உச்சக்கட்டமாக உயிரை மாய்ப்பதை விட்டும் தடுக்கின்றது.
எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல! தற்கொலை செய்தால் நிரந்தர நரகம் கிடைக்கும் என்று திருக்குர்ஆன் ஓர் உயரிய உண்மையான நம்பிக்கை ஊட்டுகின்றது. அதன் பலனால் முஸ்லிம்கள் தற்கொலையை நோக்கிப் போவது கிடையாது.
அது மட்டுமல்லாமல், சக மனிதனின் ரத்தத்தைக் குடிக்கின்ற வட்டி எனும் பாவத்திற்கும் நிரந்தர நரகம் என்ற நம்பிக்கை அடிப்படையில் ஒரு முஸ்லிம் வட்டித் தொழில் ஈடுபடுவதை விட்டும் தடுக்கின்றது. அதனால் தமிழகத்தை மட்டுமல்ல! ஒட்டு மொத்த இந்தியாவையும் வட்டியை விட்டும் காக்க வேண்டுமாயின் அதற்கு இஸ்லாம் மட்டுமே தான் தீர்வாகும்.