பசுக்களுக்கு மலர் மாலை சிசுக்களுக்கு மரண மாலை
பசுக்களுக்கு மலர் மாலை சிசுக்களுக்கு மரண மாலை
உலகப் புகழ் பெற்ற பொய் மன்னன் கோயபல்ஸின் உடன் பிறவா சகோதரன் நரேந்திர மோடி கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் டெல்லிக் கோட்டையில் தேசியக் கொடியேற்றுகையில் கம்பத்தில் ஏறிய கொடியின் கயிற்றை பிடித்து இழுத்ததும் மலர்கள் விழுந்தன. ஆனால் இந்த 71வது சுதந்திர தினமன்று மலர்கள் கொட்டுவதற்குப் பதிலாக மழலைகள் கொட்டின.
ஆம்! பாஜக ஆளுகின்ற உ.பி.யில் கிழக்கு மாநிலமான கோரக்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பி.ஆர்.டி. என்ற பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் 71 குழந்தைகளுக்கு மேல் சுதந்திர தினத்திற்கு முதல் நாள் ஆக்ஸிஜன் இல்லாமல் அநியாயமாக உயிரிழந்தன. அந்த மழலைகளைத் தான் இந்த சுதந்திர தினக் கொடியிலிருந்து உதிரும் மலர்களாகக் கேலிச்சித்திரங்களில் மிகவும் பொருத்தமாகவே உருவகப்படுத்தியிருந்தார்கள்.
கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் மரணமடைந்த இந்தக் கோரச் சம்பவம் இந்திய நாட்டையே உலுக்கியது.
ஆனால் இந்தக் கோர, கொடூர நிகழ்வை ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பவில்லை. இந்தக் கொடூரம் ஒரு பிஜேபி ஆளாத மாநிலத்தில் நடந்திருந்தால் அதிலும் குறிப்பாக மேற்கு வங்கம், கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் நடந்திருந்தால் இதே ஊடகங்கள் அதை வளைத்து வளைத்து வெவ்வேறு பரிமாணங்களில் வித்தியாசமான கோணங்களில் ஒளிபரப்பி நாறடித்திருக்கும்.
ஆனால் இந்தச் சம்பவம் நடந்தது, தங்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசி எறிகின்ற பிஜேபி ஆளுகின்ற மாநிலமான உ.பி. என்பதால் விலை போன விபச்சார ஊடகங்கள் ஊமையாகி, உண்மையை உரத்து முழங்கவும் விரிவாக விளக்கவும் மறுத்து விட்டன. நீதி கேட்டுப் பொங்கி எழுந்து, தன்னெழுச்சியாக வீதிக்கு வந்த போராட்டக் களங்களைக் கூட பக்கவாக மறைத்து விட்டன.
எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஏதோ கொடிய நோயின் பாதிப்பால் இறந்து விட்டன என்று எடுத்துக் கொள்ள முடியாது. உண்மையில், திரை மறைவில் திரவ ஆக்ஸிஜன் நிறுவனத்திடம் பேசிய பேரம் கனிந்து, உரிய கையூட்டுகள் கிடைக்காததால் ஒரு மாநில அரசு தெரிந்தே நடத்திய படுகொலையாகும். பச்சிளங்குழந்தைகள் உயிர்களைப் பறித்த படுகொலை பாதக சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உ.பி. மாநில முதல்வர் ஆதித்யநாத் ராஜினாமா செய்வான் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. காரணம் இவர்கள் மனித வடிவில் திரிகின்ற காட்டு மிருகங்களின் இனத்தைச் சார்ந்தவர்கள். அதனால் இவர்களிடமிருந்து துளியளவும் இது போன்ற நேர்மை, நியாய உணர்வை எதிர்பார்க்க முடியாது.
இருப்பினும் மாநிலத்தை ஆளுகின்ற இந்த ஆதித்யநாத், மத்தியில் ஆளுகின்ற இவனது அண்ணனான மோடியும் மக்களிடம் கள்ள, கபட நாடகம் ஆடுகின்றனர். உத்தம வேஷம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் அந்த வேடத்தைக் களைவது நம் மீது கடமை என்ற அடிப்படையில் இப்போது இந்தக் கோர சம்பவத்திற்குரிய அடிப்படையான இரண்டு விஷயங்களைப் பார்ப்போம்.
- ஊழல்
- தூய்மையின்மை
ஊழலை ஒழிக்க உருவெடுத்த ஒரே ஓர் உத்தமன் மோடி தான் என்றும் ஒட்டுமொத்த ஊழலை ஒழிக்கவும் ஓய்க்கவும் ஒரே ஓர் அமைப்பு பாஜக தான் என்றும் ஒரு போலித் தோற்றம் மக்களிடத்தில் காட்டப்பட்டு வருகின்றது. இந்தக் கள்ளப் பேர்வழிகள் ஆளுகின்ற மாநிலமான மத்திய பிரதேசத்தில் வியாபித்து விரிந்த வியாபம் என்ற ஊழல் இவர்களது போலி பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்தது.
இதுவரை ஆண்ட ஊழல் பெருச்சாளிகளில் இவர்கள் கொஞ்சமும் வித்தியாசமானவர்கள் கிடையாது என்பதை இது தெளிவாக நாட்டுக்கு உணர்த்தியது. இப்போது உ.பி.யில் 71 குழந்தைகளின் உயிரைக் குடித்த பி.ஆர்.டி. மருத்துவமனை இவர்களது ஊழலை மேலும் உலகறிய நாறடித்துக் கொண்டிருக்கின்றது.
ஊழலை ஒழிப்போம் என்று இவர்கள் பேசுவதெல்லாம் மாய் மாலமும் வெறும் வார்த்தை ஜாலமும் ஆகும். சாமியார் ஆதித்யநாத் திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போனது தனக்கு தெரியாது என்று சாதிக்கின்றார். இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதை ஆகஸ்ட் 17 இந்து ஆங்கில நாளேடும் ஆகஸ்ட் 18 தமிழ் இந்து நாளேடும் தோலுரித்துக் காட்டுகின்றன.
கோரக்பூர் மருத்துவமனை முறைகேடுகள் அமைச்சருக்குத் தெரியும் என்ற தலைப்பில் இந்து ஆங்கிலம் மற்றும் தமிழ் இதழ்களில் வந்த செய்தி இதோ:
கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவமனையில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ள நிலையில், அந்த மருத்துவமனையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஆனால், கிடைக்கும் ஆவணங்கள், அவர்களுக்குத் தெரியும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.
மருத்துவக் கல்விக்கான அமைச்சர் அசுதோஷ் தாண்டனிடம், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை குறித்தும், லட்சக்கணக்கான ரூபாய் வழங்கப்படாததால் அந்நிறுவனம் சிலிண்டர் வழங்க மறுப்பது குறித்தும், நிறுவனத்தின் பில்களை ஏற்றுப் பரிந்துரைக்க கமிஷன் கேட்கப்படுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 11-ல் குழந்தைகள் மரணம் பற்றிய செய்தி வெளியாவதற்கு முன்னால், மாலை 4.30 மணிக்கு முதன்மை மருத்துவக் கண்காணிப்பாளர் ரமாசங்கர் சுக்லா, மருத்துவமனை முதல்வர் ஆர்.கே. மிஸ்ராவிடம் ‘திரவ ஆக்சிஜன் கையிருப்பு வேகமாகத் தீர்ந்துகொண்டிருக்கிறது, அந்நிறுவனம் சிலிண்டர் அனுப்ப மறுக்கிறது’ என்று கடிதம் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார். சிலிண்டர்களை வழங்குமாறு விரைந்து நடவடிக்கை எடுங்கள், அப்போதுதான் கவலைக் கிடமான நிலையிலிருக்கும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
குறைந்துவரும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க மாற்று வழிகளை உடனே யோசிக்குமாறும், கோரக்பூர் மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆணையர் ஆகியோரின் உதவிகளை நாடுமாறும்கூட அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆகஸ்ட் 9-ல், அதாவது ஒரே நாளில் 23 குழந்தைகள் இறந்ததற்கு முதல் நாளில் – மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்க ஒப்பந்தம் பெற்றிருந்த ‘புஷ்பா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குநர் மனீஷ் பண்டாரி, அமைச்சர் தாண்டனுக்கு எழுதிய கடிதத்தில் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கிறார். அவரே தான் எழுதிய கடிதங்களின் நகல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி முதலே பல நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஏப்ரல் 6ல் எழுதிய நினைவூட்டல் கடிதம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சுகாதார அமைச்சர் சித்தார்த்தநாத் சிங் ஆகியோருக்கும் கூட அனுப்பப்பட்டிருக்கிறது.
முதன்மை மருத்துவ மேற்பார்வையாளர் அனுப்பிய குறிப்பில் ‘மருத்துவ ஆக்சிஜன் வெகு விரைவில் முற்றாகத் தீர்ந்துவிடும், அதை உடனே நிரப்பியாக வேண்டும், ஆக்சிஜன் வழங்கும் நிறுவனம் இனி சிலிண்டர்களை அனுப்பாது’ என்று தெரிவித்திருக்கிறார்.
ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கிய வகையில் நிலுவைத் தொகை ரூ. 68 லட்சமாகிவிட்டது, பல முறை மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி வாயிலாகவும், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பித் தெரிவித்த பிறகும் மருத்துவமனையோ அரசுத் துறைகளோ தனக்குப் பதிலே தரவில்லை என்று தாண்டனுக்கு எழுதிய கடிதத்தில் பண்டாரி குறிப்பிட்டிருக்கிறார். தடையில்லாமல் சிலிண்டர்கள் கிடைக்க நிலுவையை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த செய்தி, சந்தேகமில்லாமல் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட கமிஷன் கிடைக்காததால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்களுடன் பிஜேபி அரசு விளையாடியிருக்கின்றது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.
அதனால் இவர்களது ஊழலுக்கு எதிரான கோஷம் வெற்றுக் கோஷம், வேஷக் கோஷம் என்பதை இந்தச் சம்பவம் ஐயத்திற்கு அப்பாற்பட்ட முறையில் நிரூபித்திருக்கின்றது. 70க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்கள் பறிபோனதற்குப் பாஜகவின் நாற்றமெடுக்கும் ஊழல் முதல் காரணமாகும்.
இப்போது இரண்டாவது காரணமான தூய்மையின்மைக்கு போவோம்.
தூய்மை இந்தியா என்ற கோஷத்தை மோடி பிரதமர் ஆனதும் முழங்க ஆரம்பித்தார். அதையே ஆதித்தியநாத்தும் மூச்சுக்கு முன்னூறு தரம் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றார். உண்மையில் இதுவும் ஒரு வெற்றுக் கோஷம் தான். இதற்கு இந்த மருத்துவமனையே ஓர் எடுத்துக் காட்டாகும். இந்த ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடும் பகுதியை இந்த சோகம் நடந்தேறிய பிறகு பத்திரிக்கைகள் படம் பிடித்து வெளியிட்டன.
மூக்கைத் துளைக்கும் மூத்திரமும் சாணமும்
தடுப்பூசி போடும் பிரிவில் பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத்தின புனித அன்னையான பசு படுத்துக் கிடக்கின்றது. ஒரு மாடு படுத்துக் கிடக்கும் இடம் எப்படி இருக்கும்? மூக்கைப் பொத்திக் கொண்டு செல்லும் அளவுக்கு நாற்றமடிக்கும் மூத்திரமும் சாணியும் சுற்றி பரவிக் கிடக்கும். கொசுக்கள் முகாமிட்டு முட்டை பொரித்து தன் சந்ததிகளை பல்கி பரவச் செய்கின்ற பண்ணையை வளர்த்துக் கொண்டிருக்கும்.
ஒருவேளை ஆர்.எஸ்.எஸ்.ஸின் சுகாதார சிந்தாந்தப் படி மாட்டு மூத்திரமும் சாணமும் நோய் தடுக்கும் மருந்துகள் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் அங்குள்ள மருத்துவ நிர்வாகம் இதை அனுமதித்திருக்கலாம் போல் தெரிகின்றது. ஒரு மருத்துவமனையின் தடுப்பூசி போடுகின்ற பகுதியின் இலட்சணம் இப்படியிருந்தால் இதர பகுதிகளின் இலட்சணம் எப்படி இருக்கும்? அதையும் பார்ப்போம்.
கூடி நிற்கும் குரங்கு கூட்டம்
மருத்துவமனையின் ஒரு பகுதியை இன்னொரு பகுதியுடன் இணைக்கும் வளாகங்களில் மக்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் உணவுப் பொட்டலங்களை விரித்து நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட முடியவில்லை. காரணம் என்ன? உணவுப் பொட்டலங்களை யாரும் துப்பாக்கி முனையில் தட்டிப் பறிக்கின்றார்களா? என்று கேட்கலாம்! ஆம்! தட்டித் தான் பறிக்கின்றார்கள். இவர்களின் கடவுள்களான குரங்கு கூட்டங்கள் தான் இந்த வேலையைச் செய்கின்றன. இதையும் நாம் சொல்லவில்லை. பத்திரிக்கைகள் தான் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இது என்ன நாட்டில் உள்ள மருத்துவமனையா? அல்லது குரங்குகள் கொட்டமடிக்கும் காட்டில் உள்ள கூடாரமா? என்று பத்திரிக்கையின் படங்கள் நம்மை வியப்புற வைக்கின்றன. விழிப் புருவங்களை விரிய வைக்கின்றன. நோயாளிகளைப் பார்க்க வந்த கோபுரமாய்க் குவிந்துக் கிடக்கும் குப்பைகள், கொசுக்கள் கூடாரமடித்து குடியிருந்து, குடும்பம் நடத்தி குஞ்சு பொறித்து தள்ளுகின்ற கழிவு நீர் குட்டைகள், கோமாதாக்கள் போட்டுச் சென்ற விட்டைகள் என்று கோரக்பூர் மருத்துவமனையின் சுகாதாரப் பெருமை கோபுரமாய் உயர்ந்து கொண்டிருக்கின்றது.
அதிலும் குறிப்பாக இவ்வளவு அலங்கோலங்களும் அசுத்தங்களும் பன்றிக்காய்ச்சல், மூளைக்காய்ச்சல் எப்படிப் பரவுகின்றது என்று விளம்பரப்படுத்தியிருக்கின்ற சுவர்களுக்கு அருகில் காட்சியளிக்கின்றன என்றால், மோடியின் சுவஜ் பாரத்தின் திட்டத்தை அவருடைய தம்பியான மொட்டை சாமியார் ஆதித்யநாத் எப்படி கடைப்பிடிக்கின்றார் என்பதற்கு இவை அற்புதமான சாட்சிகளாக திகழ்கின்றன என்பதை எவரும் எளிதில் புரிந்துக் கொள்ளலாம்.
ஐ.சி.யூனிட்டின் அவலட்சணம்
முரண்பாட்டின் ஒட்டுமொத்த முன்னுதாரணம், முழு உதாரணம் மோடியின் பிஜேபியும் மற்றும் அவரது பரிவாரங்களும் தான் என்பதற்கு இது சரியான எடுத்துக் காட்டாகும்.
ஓர் அவசர சிகிச்சைப் பிரிவுப் பகுதி என்றால் அந்தப் பகுதியில் வருகையாளர்களை செருப்புகளைக் கூட காலில் போட்டு வர அனுமதிக்க மாட்டார்கள். நோய் தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக அதை ஒரு தனித் தீவாகவே பராமரிப்பார்கள்.
ஆனால் அந்த ஐ.சி.யு.வில் எட்டிப் பார்த்த உறவினர் ஒருவர், துப்புறவு பணியாளர்கள் பயன்படுத்திய துப்புறவுத் துணிகள், மெல்லிய மருந்து துணிகள், குழந்தைகளிடமிருந்து கழற்றிய டயாபர்கள், காலி தண்ணீர் பாட்டில்கள், அவ்வப்போது உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டிய அபாயகரமான மருந்துகளின் பைகள் ஐ.சி.யு.வின் தரையில் பரவிக் கிடப்பதைப் பார்த்து மருத்துவமனையின் அசுத்தத்தையும், அதன் அசிங்கத்தையும் வேதனையுடன் பதிவு செய்கின்றார்.
ஒரு மருத்துவமனையின் உயிர் காக்கும் உயர் பகுதியே உயிர் பறிக்கும் பகுதியாக இருந்தால் அந்த மருத்துவமனையின் பிறபகுதி எப்படியிருக்கும்? அதையும் இப்போது பார்ப்போம்.
தெரு நாய்கள் திரியும் அவலம்
71 குழந்தைகள் இறந்ததை ஒட்டி சாமியார் ஆதித்யநாத் வருகையளிப்பதற்கு முன்னால் மருத்துவமனை மறுபிறவி எடுத்தது. தரை கழுவப் பட்டது. தூரத்திலிருந்து வருகின்ற மக்களை வரவேற்கும் விதமாக இருந்த கழிப்பறையின் துர்நாற்றம் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.
சுத்தம், சுகாதாரத்தின் மறுபதிப்பாகத் திகழ வேண்டிய ஒரு மருத்துவமனை அசுத்தத்தின் அவமானச் சின்னமாக இருக்கின்றது என்பதையும் அதே சமயம் அந்த மருத்துவமனையை அரசு முயற்சி செய்தால் நிரந்தரமாகவே சுத்தமாக வைத்திருக்கலாம் என்பதையும் இது துல்லியமாக எடுத்துச் சொல்கின்றது.
சுண்டெலிகளின் சுதந்திர ராஜ்யம்
தொற்று நோய்களைச் சுமந்து திரிவதில் சுண்டெலிகளுக்கும் பங்குண்டு என்று நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் அந்தச் சுண்டெலிகளுக்கு கோரக்பூர் மருத்துவமனையில் சுயராஜ்யம் வழங்கப்பட்டிருக்கின்றது என்று சொல்லுமளவுக்கு சுண்டெலிகளின் சுதந்திர ராஜ்யம் கொடிக்கட்டிப் பறக்கின்றது. திரியும் தெரு நாய்கள், சுற்றி வரும் சுண்டெலிகள் என்று குறிப்பிட்டதும் நாம் கூடுதலாக சொல்கின்றோம் என்ற சந்தேகம் உள்ளங்களில் தலை காட்டலாம்.
ஐஎம்ஏயின் அறிக்கை!
இந்தச் சோக நிகழ்வு நடந்த பிறகு Indian Medical Association (IMA) எனும் இந்திய மருத்துவ சங்கத்திலிருந்து ஒரு மருத்துவர் குழு பாபா ராகவ் தாஸ் மருத்துவமனைக்கு வருகையளித்து, அது ஓர் அறிக்கை வெளியிட்டது.
இந்த மருத்துவமனை வார்டுகளில் சுண்டெலிகளின் தொந்தரவு அதிகமாக உள்ளது; தெரு நாய்களும் மருத்துவமனை வளாகங்களில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன என்றும் மருத்துவமனையின் சுத்தம் திருப்திகரமாக இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. அத்துடன் மருத்துவமனை தனது சக்திக்கு மீறி நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்கின்றது. போதிய குழந்தைகள் நல மருத்துவர்கள் இல்லை. போதிய நர்ஸ்கள் இல்லை.
துணை மருத்துவர்கள் இல்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. மொத்தத்தில் இந்த அறிக்கையின் ஒட்டு மொத்த சாராம்சம் இது ஒரு மருத்துவமனையாக இல்லை என்று தெரிவித்துள்ளது. அதில் அதன் சுகாதார சீர்கேட்டைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
இப்போது சொல்லுங்கள்! இது ஓர் மருத்துவமனையா? அல்லது மரணக் கிடங்கா? என்று தீர்ப்பு சொல்லுங்கள். அதனால் இங்கு வரும் நோயாளிக்கு சுகம், குணம், நிவாரணம் எல்லாம் இரண்டாம் பட்சம் என்று பின்வரும் பத்திரிக்கை செய்தி படம் பிடிக்கின்றது.
மருத்துவமனையா? மரணக் கிடங்கா?
Death is the only certainty here, rest is just a chance என்று தலைப்பிட்டு ஆங்கில இந்து நாளேட்டில் ஒரு செய்தி 20.07.17 வெளியானது. ‘மரணம் மட்டுமே இங்கு நிச்சயம். நிவாரணம் இரண்டாம் பட்சமே’ அதாவது உயிர் பிழைத்து சுகம் கிடைத்தால் உண்டு என்று பிஆர்டி மருத்துவமனையை அழகாக தலைப்பிலேயே நறுக்கென்று படம் பிடித்திருந்தது.
பகாதா என்ற கிராமத்திலிருந்து சுமன், பரமதேவ் யாதவ் என்ற தம்பதியர் தங்களுக்கு 8 வருடங்களுக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளைக் கொண்டு வந்திருந்தனர். ஒரு குழந்தை ஆண், இன்னொரு குழந்தை பெண். 2ஆம்தேதி பிறந்து 3ஆம்தேதி பிஆர்டி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் அதாவது எட்டே நாட்களுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து விட்டன.
சுகமாகத் தான் பிள்ளைகள் பிறந்தன; காய்ச்சல் வந்தது; அவ்வளவு தான். உடனே குழந்தைகளை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தோம். அதற்குப் பின்னால் குழந்தைகளை உயிருடன் பார்க்கவில்லை. அப்புறம் அவர்களைப் பிணமாகத் தான் பார்த்தோம். பிள்ளைகள் வீட்டிற்கு வந்ததும் பெயர் வைத்து இனிப்புகள் வழங்க வேண்டும் என்று இனிப்புகளும் வாங்கி வைத்திருந்தோம். ஆனால் பிள்ளைகள் வீட்டுக்குத் திரும்பவில்லை என்று பிள்ளைகளின் பாட்டி கையில் வைத்திருந்த இனிப்பு டப்பாவை காட்டியவாறு கூறினார்.
பிள்ளைகள் சுவாசக் கோளாறால் இறந்து விட்டன என்று மருத்துவமனை இறப்பு சான்றிதழ் கொடுத்தது. உண்மையில் தன் பேரக்குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தான் ஏற்பட்டதா? என்று அந்தப் பாட்டிக்குத் தெரியாது. காரணம் மருத்துவ நிர்வாகம் மரணத்திற்கான காரணத்தை அவர்களிடம் தெரிவிக்கவில்லை.
தீபக் என்ற 4 வயது பையனை அதே கோரக்பூர் குல்ஹராயா பகுதியிலிருந்து மருத்துவமனைக்கு பஹதுர் நிஷாத் கொண்டு வந்து சேர்க்கின்றார். அன்றைய தினம் முதல்வர் சாமியார் ஆதித்யநாத் ஆஸ்பத்திரிக்கு வருகையளித்ததால் சேர்த்ததிலிருந்து 4 மணி நேரம் பையனை டாக்டர்கள் பார்க்கவில்லை. பிறகு ஆக்ஸிஜன் பைப் இணைப்புக் கொடுத்தார்கள்.
அதிலிருந்து ஆக்ஸிஜன் வந்ததா? என்று தெரியாது. பிறகு ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டு விட்டது என்று தெரிந்தது. இது மாதிரியான நோய் இவர்களுக்கு வர வேண்டும். அப்போது தான் இவர்கள் இதன் வேதனையை உணர்வார்கள் என்று அந்த பெண்மணி கூறினார்.
இதுபோன்ற பல சோக நிகழ்வுகள் மேற்சொன்ன தலைப்பில் அந்தப் பத்திரிக்கையின் பத்திகளில் இடம் பெற்றிருந்தன. பொதுவாகவே இந்த மருத்துவமனையில் 2014 ஆகஸ்டில் 567 குழந்தைகள், 2015ல் 668 குழந்தைகள் 2016ல் 587 குழந்தைகள் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோயால் இறந்திருக்கின்றன. அதாவது இந்த ஆண்டுகளில் ஒவ்வொரு ஆகஸ்டிலும் நாளொன்றுக்கு 18லிருந்து 21 குழந்தைகள் இறந்திருக்கின்றன. மருத்துவ நிர்வாகம் சுதாரிக்கவில்லை.
மேற்கண்ட செய்தியிலிருந்து இந்த மருத்துவமனை மருத்துவமனையாக இல்லை. மழலைகளைக் கொல்கின்ற ஒரு மரணக் கிடங்காக இருந்திருக்கின்றது என்பதற்கு ஒரு சில எடுத்துக் காட்டுகளாகும்.
பசுக்களா? சிசுக்களா?
இந்த மருத்துவமனைக்குக் குழந்தைகளைக் கொண்டு வருவதற்குக் காரணம் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் என்று பார்த்தோம். இந்த நோய் பன்றிகள் மூலமாக குழந்தைகளுக்குத் தாவுகின்றது என்று கண்டறிந்திருக்கின்றார்கள். 1978வது ஆண்டு முதல் தற்போது வரை 25000 ஆயிரம் குழந்தைகள் இந்நோய்க்குப் பலியாகி இருக்கின்றார்கள் என்று ஒரு கணிப்பு தெரிவிக்கின்றது. அப்படியானால் இது எவ்வளவு பெரிய கொடிய நோய் என்பது இதிலிருந்து புலனாகின்றது.
1978லிருந்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி, பாரதீய ஜனதா கட்சி என்று மாறி, மாறி ஆண்ட பல கட்சிகள் இந்த நோய் விஷயத்தில் உரிய கவனம் செலுத்தாமல் சுத்தம், சுகாதாரத்திற்கு இன்றியமையாத கட்டமைப்புகளைச் செய்யத் தவறி விட்டன. சுத்தத்தைப் பற்றி வாய்கிழியப் பேசும் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த மாத்திரத்தில் இதற்கு ஒரு திட்டத்தை உடனே வகுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதில் தனது கவனத்தைச் செலுத்தவில்லை. மாறாக, முஸ்லிம்களை எப்படிப் பழிவாங்கலாம் என்ற திட்டத்தில் இறங்கியிருக்கின்றார்.
இந்நோய்க்கு தடுப்பூசி இருந்தாலும் அது பெரிய அளவு பயன் தர மறுக்கின்றது. சுத்தமான குடிநீர், சரியான கழிப்பறைகள் இல்லாதது தான் இந்நோய் தொற்றுவதற்கு அடிப்படைக் காரணம் என்று மருத்துவர்கள் ஒருமித்துக் கூறுகின்றனர். முதல்வர் ஆதித்யநாத்தும் இதற்கெல்லாம் தீர்வு சுவஜ் பாரத்தில் (தூய்மை இந்தியா திட்டத்தில்) அடங்கியிருக்கின்றது. அதனால் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். நான் 20 ஆண்டு காலமாக நாடாளுமன்றத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தொடர்பாக குரல் எழுப்பி வருகின்றேன் என்று குறிப்பிடுகின்றார்.
சுவஜ் பாரத் என்று முழங்குபவர் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்சிக்கு வந்து விட்டார். வந்ததும் இவர் என்ன செய்திருக்க வேண்டும்? 1978லிருந்து 2017 வரைக்கும் 25000 குழந்தைகளை சுனாமி அலை போல் சுருட்டி இழுத்துப் பலி கொண்ட இந்த நோய்க்கு எதிராகப் போர்க்கால நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். இந்த நோய்க்கு எதிரான போர்க்களத்தில் குதித்திருக்க வேண்டும். ஆனால் இவர் என்ன செய்தார்? சிசுக்கள் கொசுக்கள் போல் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கையில் இவர் பசுக்களுக்கு கோசாலை அமைப்பதற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கின்றார்.
பசுக்களின் உயிர் அளவுக்குக் குழந்தைகள் உயிர்மீது அவருக்கு அக்கறை இல்லையா என்றுதான் நமக்குக் கேட்கத் தோன்றுகிறது! ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதித்யநாத் நடந்த பேரழிவுக்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், பதவிகளுக்காக மத துவேஷத்தை வளர்த்தெடுக்கத் தயங்காதவர்கள், தார்மீகப் பொறுப்பேற்றுப் பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்ப்பதோ அல்லது அப்படிச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதோ நகைமுரணாகத்தான் இருக்கும்.
இவ்வாறு தமிழ் இந்துவில் ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று ‘‘குழந்தைகள் மரணத்தில் உங்களுக்கு பொறுப்பில்லையா? ஆதித்யநாத்?” என்ற தலைப்பில் செல்வப் புவியரசன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
பசுக்களுக்கு கோசாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செயவதுடன் மட்டும் நிற்கவில்லை. இதே பிஆர்டி மருத்துவமனையில் இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாமல் குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு அழுது கொண்டே ஒரு தாய் இரு சக்கர வாகனத்தில் ஒருவருக்குப் பின்னால் அமர்ந்து செல்வதை முக நூல்களில் பார்த்து மக்கள் கண்கள் கலங்கினர்.
ஆனால் சிசுக்களுக்கு ஆம்புலன்ஸ் அமர்த்திக் கொடுக்க முன் வராத இந்தப் பாவிகளோ உலகில் எங்கும் இல்லாத அளவுக்குப் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியை உ.பி.யின் துணை முதல்வர் கெஷவ் பிரசாத் மவ்ரியா கடந்த மே மாதம் துவக்கி வைத்திருந்தார். இது இவர்கள் ஈவு, இரக்கமற்ற மிருகங்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.
இவர்கள் போடுகின்ற சுவஜ் பாரத் என்ற கோஷத்தில் இவர்கள் உண்மையாளர்களா? என்றால் அதிலும் இவர்கள் பொய்யர்கள் என்று நிரூபணம் ஆகியுள்ளது. இதை நாம் சொல்வதை விட செல்வப் புவியரசன் கேட்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
மூளைக் காய்ச்சல்தான் காரணமா?
மூளைக் காய்ச்சல்தான் குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம் என்று சமாளிக்கத் தெரிந்த ‘யோகி’க்கு அந்நோய் எப்படி தொற்றுகிறது என்று தெரியாதா என்ன? பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாமையும் சுகாதாரத்தில் நிலவும் குறைபாடுகளுமே மூளைக் காய்ச்சல் உருவாவதற்கும், பரவுவதற்கும், பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் குடிப்பதற்கும் காரணம்.
குடிநீர், சுகாதார வசதிகளை மேம்படுத்தி தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பில்லையா? நோய் ஏதோ வானிலிருந்து ஏவப்பட்டது போன்றும், அதைத் தடுப்பூசி கொண்டு தடுத்துவிடலாம் என்றும் ஆதித்யநாத் கூறுவது வேடிக்கை என்றாலும் வேதனையின் உச்சம்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டு பல குழந்தைகள் இறந்ததும் உலகமே இந்தக் கயவர்கள் மீது காரி துப்ப ஆரம்பித்ததும் இப்போது 85 கோடி ரூபாய் செலவில் குழந்தைகளுக்கான ஒரு மருத்துவமனையை நிறுவப் போகின்றோம் என்று இந்த கொலைகாரக் கும்பல் அறிவித்திருக்கின்றது. இப்படி ஓர் நடவடிக்கையை இந்த நிகழ்வுக்கு முன்பு அறிவித்திருக்க வேண்டும். இது போன்று சுகாதார நடவடிக்கைக்கு இதுவரை எந்தத் திட்டத்தையும் இவர்கள் கையில் எடுக்கவில்லை.
அதைக் கொண்டு வருவதற்கு எந்த முயற்சியையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை. இதிலிருந்து தெளிவாகக் கூடிய விஷயம் சுவஜ் பாரத் (தூய்மை இந்தியா) ஒரு வெற்றுக் கோஷம் என்பது தான். அதனால் தான் அண்மையில் ராகுல் காந்தி சுவஜ் பாரத் (தூய்மை இந்தியா) வேண்டாம், சஜ் பாரத் (வாய்மை இந்தியா) வேண்டும் என்று பொருத்தமாகக் குறிப்பிட்டார்.
தூய்மை இந்தியாவுக்கு தேவை இஸ்லாமே!
தூய்மை இந்தியாவென்றால் அது வெறும் வாய்ச்சொல் மந்திரமல்ல! வெறும் வாயால் வடை சுடும் வேலையல்ல! தூய்மை இந்தியாவென்றால் அதற்குத் தேவை தூய்மை இஸ்லாம் தான். இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. இன்று மில்லியன் கணக்கில் புனித ஹஜ்ஜுக்காக மக்காவில் குவிந்திருக்கின்றார்கள். ஒருவர் எங்காவது பொதுவிடத்தில் மலம் ஜலம் கழித்து அசுத்தப்படுத்துகின்றாரா? என்று ஒரு குழுவை அனுப்பி பார்க்கச் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் உள்ள கோயில்களைச் சுற்றி சிறுநீர், மலம் கழித்து நாசமாக்குகின்ற மிருகச் செயலைப் பார்க்கின்றோம். மக்காவில் உள்ள அந்தப் புனித ஆலயத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் இதுபோன்ற அசிங்கத்தையும், அசுத்தத்தையும் செய்கின்றார்களா? என்று அந்தக் குழு பார்த்து வந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யட்டும்.
அதனால் தான் எல்லாம் வல்ல திருக்குர்ஆனில் உலக மக்களை இந்த மக்காவை நோக்கிப் பல வழிக்காட்டல்களுக்காகப் பார்க்கச் சொல்கின்றான்.
அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
(அல்குர்ஆன்: 3:96) ➚.)
அந்த வழிகாட்டல்களில் இந்தியாவைக் கவிழ்த்துக் கொண்டிருக்கின்ற இந்த சுகாதாரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
கஅபாவுக்கு வரும் மக்கள் ஏன் பொது வெளியில் மலஜலம் கழிப்பதில்லை.
மக்காவில் மட்டுமல்ல. இந்தியாவிலே கூட இஸ்லாத்தைச் சரியான முறையில் கடைப்பிடிக்கின்ற மக்களும் கண்ட கண்ட இடங்களில் மல, ஜலம் கழிப்பதில்லை. அதற்குக் காரணம் என்ன?
- இஸ்லாம் அசுத்தத்தை அசுத்தமாகப் போதிக்கின்றது. மூத்திரம் என்றால் அது கழிவு நீர். அது வெளியானதும் கழுவ வேண்டும். அதைக் கழுவாமல் தொழக் கூடாது, அதாவது இறை வணக்கம் புரிதல் கூடாது என்று இஸ்லாம் அசுத்தத்தைப் பற்றி ஓர் அடிப்படை அறிவையும் அதன் படி செயல்பட பழக்கியும் விடுகின்றது.
மூத்திரம் என்றால் மனித மூத்திரத்திலிருந்து அனைத்து வகையான விலங்குகள் மூத்திரத்தையும் அசுத்தம் என்று போதிக்கின்றது. ஒரு முஸ்லிம் எந்த வகையான சிறு நீராக இருந்தாலும் ஒரு துளி தெறித்து விட்டாலே அதைக் கழுவதற்குத் தெறித்து ஓடி விடுவான். இப்படிப்பட்ட பண்பாடு ஒரு மனிதன் தன்னையும் தன் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வதுடன் தொற்று நோயையும் துரத்தி அடித்து விடும்.
இது தூய்மையா? அல்லது மாட்டு சாணத்தையும் மூத்திரத்தையும் மருந்தாகப் பார்ப்பது தூய்மையா?
2) சிறுநீர் கழிக்கின்ற ஒரு முஸ்லிம் தன்னையும் சுத்தப்படுத்திக் கொண்டு தான் கழித்த இடத்தில் தண்ணீர் விட்டும் செல்வதால் அந்த இடமும் துப்புறவாகின்றது. இதன் மூலம் தனது சுற்றுப்புற சூழ்நிலையையும் ஒரு முஸ்லிம் காத்துக் கொள்கின்றான்.
3) பொதுவிடத்தில் மலம் ஜலம் கழிக்கும் எந்த ஒரு மனிதனும் வெட்கப்படுவதில்லை. பேருந்துகளில் அல்லது ஓடும் ரயிலில் பயணிப்பவர்கள் தன்னைப் பார்ப்பார்களே என்ற வெட்க உணர்வு ஆண், பெண் இரு பாலர்களுக்கும் சிறிதும் இல்லை. சாலைகள், இரயில் பாதையின் இரு ஓரங்களிலும் சர்வ சாதாரணமாக மலம் ஜலம் கழிக்கின்றார்கள்.
ஆனால் முஹம்மது நபி (ஸல்) ‘ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ (புகாரி: 9) என்று கூறுகின்றார்கள்.
அதனால் இஸ்லாத்தின் பிடிமானத்தில் உள்ள முஸ்லிம்கள் வெட்கமில்லாமல் மலம் ஜலம் கழிப்பதில்லை. இந்த வெட்க உணர்வு வேண்டுமென்றால் அதற்கு இஸ்லாம் மற்றும் இறை நம்பிக்கை வேண்டும். இந்த வெட்க உணர்வு அதாவது இஸ்லாமிய சிந்தனை அனைவருக்கும் ஏற்பட்டு விட்டால் பொது இடங்களில் மலஜலம் கழிப்பது ஒரு முடிவுக்கு வந்து விடும்.
4) இந்த ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமே பன்றி தான். இத்தனை குழந்தைகளின் உயிர்களைக் குடிப்பதற்குக் காரணமாக அமைந்த இந்தப் பன்றிகளை இது வரைக்கும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.
கோரக்பூரில் குழந்தைகளின் சோக நிகழ்வு நடந்த மறுநாள் ஒடிசாவில் 100 பன்றிகள் இறக்கின்றன என்ற செய்தி பத்திரிகைகளில் வெளிவருகின்றது. இது எதைக் காட்டுகின்றது? இந்தியா இன்னும் பாடம் படிக்கவில்லை என்று காட்டுகின்றது.
பன்றிகளைப் பற்றி இந்திய அரசுக்கு எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. அரபு நாடுகளில் இந்தத் தொற்று நோய்க்கு வேலையே இல்லை. அதற்கு காரணம் என்ன? முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உத்தரவு இதோ:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!’ என்று கூறினார்கள். (புகாரி: 2236)
இஸ்லாத்தின் தொலை நோக்குப் பார்வையை கவனத்தில் கொண்டால் இந்தியா இது போன்ற தொற்று நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும்.
5) இஸ்லாம் என்றாலே சுத்தம் தான். காரணம், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ‘‘தூய்மை இறை நம்பிக்கை எனும் கொள்கையில் பாதி” என்று சொன்னார்கள். (முஸ்லிம்: 328)
மூளைக் காய்ச்சல் அசுத்தத்தால் தான் வருகின்றது என்று ஆதித்யநாத் நன்கு விளங்கி வைத்திருக்கின்றார். ஆனால் அந்த சுத்தம் தனி மனிதனின் மனதில் உருவாக வேண்டும். அரசாங்கம் சில பொதுக்கழிப்பறைகளைக் கட்டி விடுவதால் மட்டும் ஏற்பட்டு விடாது.
கழிப்பறைகள் கட்டி வைத்த பின்பு எத்தனை கழிப்பறைகள் பாழடைந்து கிடக்கின்றன. காரணம் மக்கள் மீண்டும் பொதுவெளியில் கழித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் தனி மனித உள்ளத்தில் மாற்றம் ஏற்படாதது தான். அந்த மாற்றத்திற்கு இஸ்லாம் மட்டும் தான் வழியும் வகையும் ஆகும்.