வீணானதை விட்டும் விலகுவோம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

வீணானதை விட்டும் விலகுவோம்

பொதுவாக முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் வீணான, தேவையற்ற காரியங்களை விட்டும் விலகி இருப்பார்கள். அவர்களின் பேச்சிலும், நடத்தையிலும் பெரிய மாற்றம் தென்படும். சின்னத்திரை, சினிமா படங்கள் மற்றும் பாடல்களின் ஓசைகள் ஒடுங்கியும் அதிர்வுகள் அடங்கியும் வீடுகள் அமைதியாய் இருக்கும். தொழுவது, குர்ஆன் படிப்பது, திக்ரு செய்வது போன்ற இபாதத்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

இப்படி ஒரு மாதம் மட்டுமல்ல! மற்ற நாட்களிலும் முஃமின்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பொய்யான நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து பண்பட்டவர்களாக வாழ்வது அவசியம். ஏனெனில், ஒழுக்க நெறியோடு இருப்பது நம்பிக்கையாளர்களிடம் எப்போதும் இருக்க வேண்டிய பண்பாக ஏக இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.

وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏

திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார். அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.

(அல்குர்ஆன்: 25:72)

பொதுவாக, நல்லவைகளைக் காட்டிலும் தீமைகள் ஷைத்தானால் அழகாகவும் ஈர்ப்பாகவும் காட்டப்படும். இதனால் அதிகமானோர் அவற்றின் பக்கம் படையெடுத்துச் செல்வார்கள்; அவற்றில் அதீத ஆர்வம் காட்டுவார்கள். இத்தகைய நபர்களை விட்டும் அவர்கள் வரம்பு மீறும் வீணான செயல்களை விட்டும் அகன்று கொள்வதற்கான வழிமுறையை வல்ல ரஹ்மான் விளக்கியுள்ளான்.

وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَاۤ اَعْمَالُنَا وَلَـكُمْ اَعْمَالُـكُمْ سَلٰمٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِى الْجٰهِلِيْنَ‏

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். “எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்’’ எனவும் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 28:55)

இந்த வசனத்திற்குக் கட்டுப்பட்ட நிலையில் நமது வாழ்க்கை இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது. சமூகத்தில் இருக்கும் சிந்தனைகள், செயல்கள் என்று அனைத்திலும் கலப்படங்கள் மிகைத்து விட்டன; பொய்யானவை அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன.

எனவே, எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும் அதன் மூலம் நமக்கோ அல்லது பிறருக்கோ ஏதேனும் பயனுள்ளதா என்று கவனிக்க மறந்து விடக் கூடாது. எப்போதும் எதிலும் பயன் தரும் பாதையில் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமென அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நமக்கு அறிவுரை பகன்றுள்ளார்கள்.

«الْمُؤْمِنُ الْقَوِيُّ، خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللهِ وَلَا تَعْجَزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ، فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ قَدَرُ اللهِ وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ»

பலமான இறை நம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும், அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே.

உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல். ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே” என்பதைச் சுட்டும்) “லவ்” எனும் சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 5178) 

படைத்தவனிடம் கையேந்தும் போதெல்லாம் நமக்குரிய பல்வேறு விதமான கோரிக்கைகளை, தேவைகளை முன்வைக்கிறோம். அப்போது, அவற்றின் பயனைப் பெறுவதற்கான முழு வாய்ப்பையும் வழங்குமாறு கேட்பது சிறந்தது.

வெறுமனே செல்வத்தை மட்டும் கேட்காமல், அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றித் தரும்படியும் கேட்க வேண்டும். நீண்ட ஆயுளை மட்டும் கேட்காமல் சுய தேவையைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத தள்ளாத வயதை விட்டும் பாதுகாவல் தேட வேண்டும். கல்வியை மட்டும் கேட்காமல் அக்கல்வி அர்த்தமுள்ளதாக, பயன் தருவதாகக் கேட்க வேண்டும்.

குறிப்பிட்டுக் கூறுவதாயின், அனைத்து வகையான வீணான அம்சங்களை விட்டும் காப்பாற்றுமாறு அல்லாஹ்விடம் மன்றாடும் பழக்கம் இருப்பது மிகவும் நல்லது. இதற்கான அழகிய முன்மாதிரியை மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்வில் காணலாம்.

لَا أَقُولُ لَكُمْ إِلَّا كَمَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: كَانَ يَقُولُ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ، وَالْكَسَلِ، وَالْجُبْنِ، وَالْبُخْلِ، وَالْهَرَمِ، وَعَذَابِ، الْقَبْرِ اللهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا»

அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி வந்ததைப் போன்றுதான் நான் உங்களிடம் அறிவிக்கிறேன்” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:

அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி, வ அதாபில் கப்ர். அல்லாஹும்ம! ஆத்தி நஃப்சீ தக்வாஹா, வ ஸக்கிஹா, அன்த்த கைரு மன் ஸக்காஹா. அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா. அல்லா ஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்-ஷஉ, வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ மின் தஃவத்தின் லா யுஸ்தஜாபு லஹா.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்தில் இருந்தும், கருமித்தனத்தில் இருந்தும், தள்ளாமையில் இருந்தும், மண்ணறையின் வேதனையில் இருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன். இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியில் இருந்தும், உன்னை அஞ்சாத உள்ளத்தில் இருந்தும், திருப்தியடையாத மனதில் இருந்தும், ஏற்கப்படாத பிரார்த்தனையில் இருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)

நூல்: (முஸ்லிம்: 5266) 

كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلاَءِ الكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ المُعَلِّمُ الغِلْمَانَ الكِتَابَةَ وَيَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْهُنَّ دُبُرَ الصَّلاَةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ»،

அம்ரு பின் மைமூன் அல் அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல, சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்:

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி – 

“இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்;  மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; புதை குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்’’ என்று கூறிவிட்டு, “இந்த விஷயங்களில் இருந்தெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்’’ என்றும் அவர்கள் கூறினார்கள்.

நூல்: (புகாரி: 2822) 

நாம் இந்த உலகில் இன்பமாக இருப்பதற்கும் மறுமை வெற்றிக்குத் தயாராகிக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் எண்ணற்ற அருட்கொடைகளை அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.

அவற்றின் அருமை பெருமைகளை விளங்காமல் அநேக மக்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தளவிற்கெனில் ஒரு முறை இழந்தால் மீண்டும் பெற்றுக் கொள்ளவே முடியாத மிக முக்கியமான விஷயங்களையும் கூடப் பாழடித்து விடுகிறார்கள். இதோ நபிகளார் கூறுவதைக் கேளுங்கள்.

نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்கொடைகளின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். (அவை:) 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: (புகாரி: 6412) 

இந்தச் செய்தி நூற்றுக்கு நூறு சதவீதம் இன்றைய காலத்திற்குப் பொருந்திப் போகிறது எனலாம். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று சமூக வலைதளங்களில் விழுந்து பொன்னான நேரங்களை வீணடிக்கிறார்கள். இரவு பகல் பாராது அரட்டை அடித்து ஆரோக்கியத்தை அழித்துக் கொள்கிறார்கள்.

அவதூறு கூறுதல், புறம் பேசுதல் உட்பட வெட்டியான பேச்சுக்களிலே திளைப்போர் ஏராளம். இத்தகைய நபர்கள் பின்வரும் செய்தியை அறிந்த பிறகாவது தங்களை சீர்செய்து கொள்ள வேண்டும்.

 ثُمَّ لَـتُسْـَٔـلُنَّ يَوْمَٮِٕذٍ عَنِ النَّعِيْمِ

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 102:8)

إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ: عُقُوقَ الأُمَّهَاتِ، وَوَأْدَ البَنَاتِ، وَمَنَعَ وَهَاتِ، وَكَرِهَ لَكُمْ قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةَ المَالِ

(பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சுக்கள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஅபா (ரலி),
நூல்: (புகாரி: 2408) , 5975

சமூக வலைத்தளங்களின் வலை விரிப்பில் பெரியவர்கள் சிக்கிக் இருப்பது போன்று, சிறியவர்களும் பல வகையான வீடியோ கேம்களுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். இதனால் படிப்பையே  கெடுத்துக் கொள்வோரும் உண்டு. இதனால், பல சமயங்களில் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் கூட மறந்து விடுவதை மறுக்க முடியாது. இந்த மாதிரி இருப்பவர்கள் இரட்சகனைப் பயந்து தங்களை திருத்திக் கொள்ளட்டும்.

وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا۟ اۨنْفَضُّوْۤا اِلَيْهَا وَتَرَكُوْكَ قَآٮِٕمًا‌ ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ‌ ؕ وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ

“(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்’’ எனக் கூறுவீராக!.

(அல்குர்ஆன்: 62:11)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு (வாணிப) ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்று விட்டனர். பன்னிரெண்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சி இருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், “அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்’’ (அல்குர்ஆன்: 62:11) என்ற வசனம் இறங்கியது.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: (புகாரி: 936) , 2064

அனுமதிக்கப்பட்ட வியாபாரத்திற்காகக் கூட ஜுமுஆத் தொழுகையை விட்டுவிடுவதை அல்லாஹ் கண்டிப்பதில் நமக்குப் பெரும் பாடம் இருக்கிறது. மார்க்கம் தடுத்த வீணான நிகழ்வுகளில் பொழுதைக் கழித்து, கடமையான தொழுகை போன்ற வணக்கங்களில் கவனக்குறைவாக இருப்பவர்கள் இச்சமயம் ஒரு கணம் சிந்திக்கக் கடமைப்பட்டு உள்ளனர்.

இன்னும் சொல்வதாயின், சில காரியங்களை எந்தவொரு சிரமும் இல்லாமல் இலேசாகச் செய்துவிட முடியும். சில காரியங்களை கடினமாக மட்டுமே செய்ய வேண்டிய நிலை இருக்கும்.

சிலவற்றை எளிமையாகவும் செய்ய இயலும்; கஷ்டப்பட்டும் செய்ய இயலும். இதுபோன்று இரண்டு நிலை இருக்கும் போது வீண் சிரமம் எடுப்பதைத் தேர்வு செய்து விடக் கூடாது. எந்தவொரு காரியத்திலும் வீணான முயற்சியே எடுக்கக் கூடாது எனும் போது, வீண் காரியங்களைச் செய்து வாழ்வைக் கழிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

كُنَّا عِنْدَ عُمَرَ فَقَالَ: «نُهِينَا عَنِ التَّكَلُّفِ»

உமர் (ரலி) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது அவர்கள், ‘வீண் சிரமம் எடுத்துக்கொள்ளக் கூடாது என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: (புகாரி: 7293) 

இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, (கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள்.

இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 39) 

மறுமையில் சொர்க்கத்தில் நுழைவிக்கும் காரியங்கள் பற்றியும் நரகத்தில் தள்ளும் காரியங்கள் குறித்தும் தெள்ளத் தெளிவாக மார்க்கத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவ்வுலகில் வாழும் போது வெட்டியான விஷயங்களில் மூழ்கித் திளைத்திருப்பதை நரகத்தில் சேர்த்துவிடும் குற்றமாக அல்லாஹ் எச்சரிக்கிறான்.

 فَوَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّـلْمُكَذِّبِيْنَۙ

பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். அவர்கள் வீணானவற்றில் (மூழ்கி) விளையாடிக் கொண்டிருந்தனர்.

(அல்குர்ஆன்: 52:11)

 وَمِنَ النَّاسِ مَنْ يَّشْتَرِىْ لَهْوَ الْحَدِيْثِ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ‌ۖ وَّيَتَّخِذَهَا هُزُوًا ‌ؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ

அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவுபடுத்தும் வேதனை உள்ளது.

(அல்குர்ஆன்: 31:6)

மறுமையில் ஒருவரைக் குற்றவாளியாக நிறுத்துகிற, தண்டனையைப் பெற்றுத் தருகின்ற அனைத்து நம்பிக்கைகளும் பாவமான செயல்களும் வீணானவை என்பது மறுக்க முடியாத ஒன்று.

இதைப் புரிந்து கொள்ளாமல் பலர் இறைமறுப்பு, இணைவைப்பு மற்றும் பித்அத்தான காரியங்களில் வீழ்ந்து கிடக்கிறார்கள். கண்மூடித்தனமாக மூடத்தனமான சடங்குகளை செய்கிறார்கள். ஹராமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.

பெரும்பாலும் ஒரு மணி நேர வேலையாயினும் ஊதியமின்றி செய்வதற்கு யாரும் சம்மதிக்க மாட்டார்கள். ஆனால், கொஞ்சமும் யோசிக்காமல் மறுமையில் கைசேதமளிக்கும் விஷயங்களுக்காகத் தங்களது பொருளாதாரத்தை, உடல் உழைப்பை இழந்து கொண்டிருக்கிறார்கள். மறுமை வெற்றியை நாசப்படுத்திக் கொள்கிறார்கள்.

وَالَّذِيْنَ كَفَرُوْا فَتَعْسًا لَّهُمْ وَاَضَلَّ اَعْمَالَهُمْ‏

(ஏக இறைவனை) மறுப்போருக்குக் கேடு தான். அவர்களது செயல்களை அவன் அழித்து வீணானதாக்கி விட்டான்.

(அல்குர்ஆன்: 47:8)

قُلْ كَفٰى بِاللّٰهِ بَيْنِىْ وَبَيْنَكُمْ شَهِيْدًا ‌ۚ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ ؕ وَالَّذِيْنَ اٰمَنُوْا بِالْبَاطِلِ وَكَفَرُوْا بِاللّٰهِ ۙ اُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏

எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். அவன் வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அறிகிறான். வீணானதை நம்பி அல்லாஹ்வை மறுப்போரே நட்டமடைந்தவர்கள் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 29:52)

اَوَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا حَرَمًا اٰمِنًا وَّيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ‌ ؕ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَةِ اللّٰهِ يَكْفُرُوْنَ

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

(அல்குர்ஆன்: 29:67)

இனியாவது இவர்கள் சுதாரித்து, குர்ஆன் ஹதீஸைப் பின்பற்ற முனைய வேண்டும். அதன் வழியில் தங்களது கவனத்தையும் முயற்சியையும் அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அப்போதுதான் வீணான அம்சங்கள் எதுவுமில்லா சொர்க்க வாழ்க்கையைப் பெற்றிட இயலும்.

 يَـتَـنَازَعُوْنَ فِيْهَا كَاْسًا لَّا لَغْوٌ فِيْهَا وَلَا تَاْثِيْمٌ

அங்கே ஒருவருக்கொருவர் குவளைகளை மகிழ்ச்சியால் பறித்துக் கொள்வார்கள். அதில் வீணானதும் குற்றம் பிடிப்பதும் இருக்காது.

(அல்குர்ஆன்: 52:23)

لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَغْوًا وَّلَا تَاْثِيْمًا ۙ‏

அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 56:25)

لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَـغْوًا وَّلَا كِذّٰبًا‌ ۚ‏

அங்கே வீணானதையோ, பொய்யையோ செவியுற மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 78:35)

அன்பார்ந்த சகோதர்களே! சொர்க்கத்தில் மட்டும் தான் எந்தவொரு வீணான அம்சமும் இல்லை; அதற்கான வாய்ப்பும் இல்லை.

ஆனால், இவ்வுலகில் அவையே அதிகமதிகம் இருக்கின்றன. கொஞ்சம் அசந்தால் அவை மறுமையை மறக்கடித்து மார்க்கத்தை விட்டு நம்மை தூரப்படுத்தி விடும். பெயரளவு முஸ்லிம்களாக மாற்றிவிடும். இதை உணர்ந்து பயனற்ற விஷயங்களை விட்டும் விலகி இருந்து ஈருலகிலும் வெற்றி பெறும் வகையில் செயல்படுவோமாக. அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக.