மரணத்திற்கு முன்..

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் கொள்கை ரீதியாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர். எத்தனை கருத்து வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில் ஒன்றிணைவது, “அனைவரும் மரணிக்கக் கூடியவர்கள்” என்ற ஓர் உண்மையில் தான்.

கடவுள் நம்பிக்கையில் இருக்கும் ஆத்திகனாயினும், கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகனாயினும் கண்களால் அனுதினமும் கண்டு கொண்டிருக்கின்ற இப்பேருண்மையை மறுக்காமல் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், மரணத்திற்குப் பிறகுள்ள மறுமை வாழ்வு விஷயத்தில்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து தெரிவிக்கின்றனர்.

மறுமை வாழ்வு என்பது இவ்வுலகில் மனிதன் செய்த செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்பட்டு நன்மை புரிந்தோர் சுவனத்திலும் தீமை புரிந்தோர் நரகத்திலும் பிரவேசித்து நிரந்தரமாக வாழ்கின்ற வாழ்க்கையாகும். இத்தகைய மறுமை வாழ்வை நம்புபவர்களே முஃமின்கள் ஆவார்கள்.

பிறக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணிக்கக் கூடியதே என்பதை ஒப்புக்கொள்ளும் மனிதன், அந்த மரணம் எப்போதும் வரலாம் என்றும் அதற்குள் நன்மைகளை விரைவாகப் புரிய வேண்டும் என்றுமில்லாமல் மரண சிந்தனையற்று பாராமுகமாக இருப்பதினால் இஸ்லாம் மரணத்தை அதிகமாக நினைவூட்டுகிறது. மரண சிந்தனையோடு சில கடமைகளை நிறைவேற்ற மார்க்கம் வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட கடமைகளைப் பற்றி சில தகவல்களை இந்த உரையில் காண்போம். 

அனைவருக்கும் வரும் மரணம்
كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ ثُمَّ اِلَيْنَا تُرْجَعُوْنَ‏

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

(அல்குர்ஆன்: 29:57)

எந்த மனிதரும், தான் எப்போது? எங்கே? எப்படி மரணிப்பார் என்பதை அறிந்து கொள்ள முடியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான ஞானம்.

اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ‌ ۚ وَيُنَزِّلُ الْغَيْثَ‌ ۚ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ‌ ؕ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا‌ ؕ وَّمَا تَدْرِىْ نَـفْسٌۢ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ‌ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ

யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

(அல்குர்ஆன்: 31:34)

எந்த மனிதனும் தன்னை மரணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது
اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ

“நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.

(அல்குர்ஆன்: 4:78)

இத்தகைய மரணம் வருவதற்கு முன்னால் ஒவ்வொரு மனிதனும் தன் மறுமை வாழ்வை செம்மையாக்கிக் கொள்வதற்காக இறைவன் சொன்ன நன்மையான காரியங்களைச் செய்து முடித்துவிட வேண்டும்.

அவ்வாறில்லாமல் நல்ல செயல்களையும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யாமல் அலட்சியமாக இருந்தால் அது மறுமையில் மிகப்பெரும் கைசேதத்தை ஏற்படுத்தும்.

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏

وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ

“உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே’’ என்று அப்போது (மனிதன்) கூறுவான். எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்”

(அல்குர்ஆன்: 63:10,11)

حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏
لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ؕ كَلَّا‌ ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!’’ என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்: 23:99,100)

وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ

“எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம்‘’ என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். “படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை’’ (என்று கூறப்படும்)

(அல்குர்ஆன்: 35:37)

தொழுகை உள்ளிட்ட வணக்கங்களையும் நாம் செய்த பாவங்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுதல் போன்ற அனைத்து நன்மையான காரியங்களையும் மரணத்திற்கு முன்பாக நாம் நிறைவேற்றிவிட வேண்டும். இல்லையேல் அது மறுமையில் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மேற்படி வசனங்கள் எடுத்துரைக்கின்றன.

அதே போன்று மரணத்திற்கு முன்னால் சக மனிதனுக்கு நிறைவேற்ற வேண்டிய சில கடமைகள் இருக்கின்றன. அதை விட்டும் நம்மில் பலர் அலட்சியமாக இருக்கிறோம்.

கடனை அடைப்போம்

பிறரிடமிருந்து கடன் வாங்குவதற்கு இஸ்லாம் அனுமதியளித்திருக்கிறது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُ ؕ وَلْيَكْتُبْ بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِالْعَدْلِ

நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும்.

(அல்குர்ஆன்: 2:282)

கடன் கொடுக்கல் வாங்கலுக்கு அனுமதியளிக்கும் இஸ்லாம் அந்தக் கடனை எழுதிக் கொள்ள வேண்டும் என்றும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனையிடுகிறது. இந்த நிபந்தனைகளில் இன்றைக்குக் கவனம் செலுத்துபவர்கள் மிக குறைவானவர்களே.

லட்சக்கணக்கான மதிப்புள்ள கொடுக்கல் வாங்கல் தங்களுக்கு மத்தியில் இருந்தாலும் அதை இன்றைக்கு எழுதிக் கொள்வதும் கிடையாது, சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வதும் கிடையாது. நிபந்தனையுடன் கடனுக்கு இஸ்லாம் அனுமதியளித்தாலும் கடனைப் பற்றி அதிகம் எச்சரிக்கையும் செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனிடத்தில் அதிகமாகப் பாதுகாவல் தேடியது கடனை விட்டுத்தான்.

 عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَتْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا، وَفِتْنَةِ المَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ ” فَقَالَ لَهُ قَائِلٌ: مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ المَغْرَمِ، فَقَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ، حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ»

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்’’

இறைவா! மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “தாங்கள் கடன் படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்?’’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்’’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: (புகாரி: 832)

கடன் வாங்குபவன் பொய் பேசுபவனாகவும், வாக்குறுதி மோசடி செய்பவனாகவும் மாறி விடுகிற காரணத்தினால் தான் கடனிலிருந்து அதிகமாக நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். கடன் என்று ஒரு வாசலைத் திறந்துவிட்டால் அது பல பாவங்களுக்கான வழியாக அமைந்துவிடுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உணவுக்கும் அத்தியாவசிய தேவைக்கும் கஷ்டப்பட்ட காலத்தில் கூட அதிகமாகக் கடனிலிருந்து பாதுகாவல் தேடியுள்ளார்கள். ஆனால் இன்றைக்குக் கடன் என்பது அத்தியாவசியத் தேவைக்கு, சிரமம் ஏற்படும் போது கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை மாறி அடுத்தவரைப் போன்று தானும் வாழ வேண்டும் என்ற பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் கடன் வாங்குகின்ற சூழ்நிலை இருக்கிறது.

கடனை வாங்குபவர்கள் அதைத் திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணமில்லாமல் மரணம் வரை அலட்சியமாக இருந்து மரணித்து விடுகின்றனர். கடன் இருக்கும் நிலையில் மரணித்துவிட்டால் அது இறைவனால் மன்னிக்கப்படாத மிகப்பெரும் பாவமாகும்.

 عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إِلَّا الدَّيْنَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த்தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன; கடனைத் தவிர.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: (முஸ்லிம்: 3832)

ஷஹீத் என்பது இஸ்லாத்தில் ஆகச்சிறந்த காரியமாக இருக்கிறது. அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் அந்தஸ்தைப் பெற்றுத்தரும் செயல். அவரது அனைத்து பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அத்தகையை ஷஹீத் கடன் இருக்கும் நிலையில் மரணித்துவிட்டால் அவருக்கு அதன் பாவங்கள் மன்னிக்கப்படாது என்றால் மரணத்திற்கு முன்னரே நிறைவேற்ற வேண்டிய காரியங்களில் கடன் முதன்மையானதாக இருக்கிறது.

மனம் திருந்தி மன்னிப்பு கேட்போம்

ஒரு மனிதன் மற்றொரு மனிதனை ஏதேனும் விதத்தில் சார்ந்திருப்பவனாக இருக்கிறான். அவ்வாறு சார்ந்திருக்கும் போது ஒருவர் மற்றவரை சர்வ சாதரணமாகப் புண்படுத்திவிடுகின்றனர். உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ, சொல்லாலோ அல்லது செயலாலோ மற்றவர்கள் புண்படும் படி நடந்துகொள்கின்றனர்.

இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டவர்கள் அதற்காக சம்பந்தபட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, தமது தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்கின்றனர். இவ்வாறு சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர் மன்னிக்கும் வரை அல்லாஹ் மன்னிப்பு வழங்குவதில்லை. மறுமையில் மிகப்பெரிய கைசேதமும் ஏற்படும்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ، وَصِيَامٍ، وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார்.

ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)” என்று கூறினார்கள்.

நூல்: (முஸ்லிம்: 5037)

இதுபோன்று மறுமையில் மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் காரியத்திலிருந்து நாம் பாதுகாப்பு பெற்றுக் கொள்வதற்காக நாம் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் நமது மரணத்திற்கு முன்னால் அவர்களிடம் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும். இதை கவுரவக் குறைச்சலாக எண்ணக் கூடாது. அவ்வாறு எண்ணி மன்னிப்பு கேட்காமல் இருந்துவிட்டால் நிலையான வாழ்க்கையாகிய மறுமையில் மிகப்பெரும் அவமானமாகவும் இழப்பாகவும் மாறிவிடும்.

வஸிய்யத் (மரண சாசனம்) செய்வோம்

வஸிய்யத் என்பது ஒருவர் மரணத்தை நெருங்கும் போது தன்னுடைய பொருளாதாரத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அடுத்தவர்களுக்கு ஒதுக்கிவிட்டுச் செல்வதாகும்.

كُتِبَ عَلَيْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَيْرَا  ۖۚ اۨلْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ بِالْمَعْرُوْفِۚ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَؕ‏

உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

(அல்குர்ஆன்: 2:180)

இந்த வசனத்தில் ‘பெற்றோர் மற்றும உறவினர்களுக்கு’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது மாற்றப்பட்டுவிட்டது. பெற்றோருக்கும், வாரிசு முறையில் சொத்து பங்கீட்டில் உள்ளவர்களுக்கும் வஸிய்யத் என்பது கிடையாது.

 (அல்குர்ஆன்: 4:11,12) ஆகிய வசனங்களில் யாரையெல்லாம் வாரிசுதாரர்கள் பட்டியலில் இறைவன் சேர்த்து விட்டானோ அவர்களுக்கு வஸிய்யத் செய்ய கூடாது. அவர்கள் அல்லாத மற்ற உறவினர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் வஸிய்யத் செய்யலாம்.

வஸிய்யத் செய்ய வேண்டும் என்பதற்காக எந்த வரம்புமின்றி அனைத்துப் பொருளாதாரத்தையும் வஸிய்யத் செய்வதற்கும் மார்க்கம் அனுமதிக்கவில்லை.

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي عَامَ حَجَّةِ الوَدَاعِ مِنْ وَجَعٍ اشْتَدَّ بِي، فَقُلْتُ: إِنِّي قَدْ بَلَغَ بِي مِنَ الوَجَعِ وَأَنَا ذُو مَالٍ، وَلاَ يَرِثُنِي إِلَّا ابْنَةٌ، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَيْ مَالِي؟ قَالَ: «لاَ» فَقُلْتُ: بِالشَّطْرِ؟ فَقَالَ: «لاَ» ثُمَّ قَالَ: «الثُّلُثُ وَالثُّلُثُ كَبِيرٌ – أَوْ كَثِيرٌ – إِنَّكَ أَنْ تَذَرَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ، خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ،

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விடைபெறும்  ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நான் மரணத் தறுவாயை அடைந்துவிட்டேன்.  நான் தனவந்தன்; எனது ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்துவிடட்டுமா?’’ எனக் கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘வேண்டாம்’  என்றார்கள்.  பின்னர் நான் ‘பாதியைக் கொடுக்கட்டுமா?’ எனக் கேட்டேன்.  அதற்கும் நபி (ஸல்)  அவர்கள் ‘‘வேண்டாம்: மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம் தான்; ஏனெனில் உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு செல்வதைவிட தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது’’ என்று கூறினார்கள். 

நூல்: (புகாரி: 1295) (ஹதீஸின் சுருக்கம்)

நமது சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் வஸிய்யத் செய்யக் கூடாது என்றும் மூன்றில் ஒரு பங்கு செய்வதே அதிகம் என்றும் இந்தச் செய்தியிலிருந்து நமக்குத் தெளிவாகிறது.

வஸிய்யத் செய்கிறோம் என்கிற பெயரில் ஒட்டுமொத்த சொத்தையும் மரண சாசனம் செய்துவிட்டு வாரிசுகளுக்கு ஒன்றுமில்லாமல் ஆக்குவதும் பாவமாகிவிடும்.

ஒருவர் வஸிய்யத் செய்திருக்கிறார் எனில் அவர் மரணித்த பிறகு சொத்து பங்கீடு செய்வதற்கு முன்னால் அவருக்கு ஏதேனும் கடனோ, அல்லது அவர் யாருக்கேனும் வஸிய்யத் செய்திருந்தாலோ அதை நிறைவேற்றிய பிறகுதான் சொத்தைப் பங்கிட வேண்டும்.

….بَعْدِ وَصِيَّةٍ يُّوْصٰى بِهَاۤ اَوْ دَ يْنٍ ۙ غَيْرَ مُضَآرٍّ‌ ۚ وَصِيَّةً مِّنَ اللّٰهِ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَلِيْمٌ ؕ‏

 تِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ ؕ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ وَذٰ لِكَ الْفَوْزُ الْعَظِيْمُ‏

وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَتَعَدَّ حُدُوْدَهٗ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَا وَلَهٗ عَذَابٌ مُّهِيْنٌ

செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். இவை அல்லாஹ்வின் வரம்புகள்.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன்: 4:12,13,14)

இவ்வாறு அதிகம் வலியுறுத்திக் கூறியுள்ள வஸிய்யத் செய்வது சில சமயம் அவசியமாகிறது.

உதாரணமாக, ஒருவர் மரணத் தருவாயில் இருக்கிறார். அவருக்கு வாரிசுகள் இருக்கிறார்கள். அவரது மகனோ அல்லது மகளோ தந்தையாகிய இவர் இறப்பதற்கு முன்னால் இறந்து விட்டனர் என வைத்துக் கொள்வோம். அந்த இறந்த மகன் அல்லது மகள் வழியாகப் பேரன், பேத்தி போன்ற உறவுகள் இவருக்கு இருக்கிறது.

இந்நிலையில் சொத்திற்கு சொந்தக்காரர் இறந்து விட்டால் ஏற்கனவே இறந்து விட்ட இவரது மகன் வழியாக உள்ள பேரக்குழந்தைகளுக்கு வாரிசு முறையில் எந்தப் பங்கீடும் கிடைக்காது. ஏனெனில் சொத்திற்குச் சொந்தக்காரர் இறந்த பிறகுதான் அந்தச் சொத்தில் பங்கீடு ஏற்படும். அவர் இறப்பதற்கு முன்னால் அவரது மகன் அல்லது மகள் இறந்துவிட்டால் அவர்களுக்கு இவரிடமிருந்து எந்தப் பங்கும் கிடையாது.

இவ்வாறு தந்தைக்கு முன்னால் இறந்த பிள்ளைகளுக்கு எந்தப் பங்கும் கிடைக்காதென்றால் அவர்கள் வழியாகவுள்ள பேரக்குழந்தைகளுக்கும் எந்தப் பங்கும் கிடைக்காது. இந்தச் சூழ்நிலையில் சொத்திற்குச் சொந்தக்காரர், தான் இறப்பதற்கு முன்னால் தனது பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு அவர்களைப் பரிதவிக்க விட்டுவிடாமல் அவர்களுக்கு தனது சொத்திலிருந்து வஸிய்யத் செய்வது அவசியமாகிறது.

இதுபோன்று வாரிசுதாரர்களின் பட்டியலில் தன்னுடைய உறவினர்களுக்கு வஸிய்யத் செய்வது மிக அவசியமானதாக இருக்கிறது. ஆனால், இவ்வாறு வாரிசுரிமையில் சொத்தில் பங்கீடு பெறாத தன்னுடைய குடும்பத்தாருக்கு வஸிய்யத் செய்வதை விட்டும் பலர் அலட்சியத்துடன் இருக்கின்றனர். இதுவும் நம்முடைய மரணத்திற்கு முன்னால் செய்ய வேண்டிய அவசியமான காரியங்களில் உள்ள ஒன்றாகும்.

எப்போது மரணம் வரும் என்று தெரியாத நாம் இதுபோன்ற மரணத்திற்கு முன்னால் செய்ய வேண்டிய காரியங்களை விரைவாகச் செய்து முடித்துவிட வேண்டும். இதபோன்ற காரியங்களில் அலட்சியத்துடன் இருந்து இறைவனிடத்தில் குற்றவாளியாக மாறிவிடக்கூடாது. இறைவனிடத்தில் நன் மக்களாய் நாம் அனைவரும் இருப்போமாக.! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.